Wednesday, August 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 6

யூத குலத்தின் தொடக்கம் - பக்கா (மக்கா)

இதுநாள்வரை அறிந்திராத ஒரு புதிய இடத்திற்கு ஆப்ரஹாம் தன் மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் பயணம் தொடர்ந்தார். (இப்னு கதிர் எனும் சரித்திர வல்லுனர் இஸ்மாயில் பால்குடி மாறாத பாலகனாக இருந்தபோதுதான் ஹாஜிராவும் ஆப்ரஹாமும் 'பக்கா' என்று அழைக்கப்படும் வரண்ட சமவெளிக்குப் பயணம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இஸ்மாயிலின் வயது என்ன என்று சரியான குறிப்பு இல்லை. ஆதியகாகம் இஸ்மாயிலுக்கு 13 வயது இருக்கும்போது பக்கா சென்றார் என்று அறிவிக்கிறது).

அவர்கள் இந்த புது இடமான பக்காவிற்கு வரக்காரணம் சாராவைவிட்டு ஹாஜிரா தூரமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் தனது மகன் இஸ்மாயிலுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற மனக்கவலையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. அதாவது இஸ்மாயில் இளமைப்பருவம் அடையும்வரை அவர்கள் பாலதீன் தேசத்தைவிட்டு தள்ளி இருப்பதே நல்லதென்ற முடிவுடன் பக்காவை வந்தடைகின்றனர் ஆப்ரஹாமின் குடும்பத்தினர்.

பக்கா என்ற இந்த இடம்தான் பிற்காலத்தின் மக்காவென்று பெயர் மாற்றமடைந்து ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதிய பரிமானத்தையும் பரினாமத்தையும் அளிக்கும் இடமாக மாறுகின்றது. மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக அந்த இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமாக திகழ்கிறது. (1) அக்காலத்தில் வர்த்தகர்கள் கடந்து செல்லும் ஒரு பாதைதானே தவிர்த்து இந்த வரண்ட பூமியில் அப்போது எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை அல்லது வாழ்வதற்கேற்ற எந்த சூழலும் இல்லை.

மலை முகடுகளின் மத்தியில், வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களற்ற பூமியின் உச்சத்தில் நின்ற ஒற்றை மரத்தின் நிழலை நாடி கால்நடையாக வந்து சேர்ந்தார்கள் கணவனும், மனைவியும் மற்றும் அவர்களது பால்குடி மாறாத பச்சிளம் மகனும். வாழ்க்கையில் தேடல் என்பது சில நேரங்களில் சுகமானதாகத் தெரியும். ஆனால் பல நேரங்களில் இந்த தேடல் புரியாத பல வட்டங்களில் சுழலும்போது அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் விவரிக்கமுடியாத அளவிற்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். அப்படி ஓர் வேதனையின் பிடிகளில் சிக்கி இருந்தனர் அந்த தம்பதியினர். நாள் கணக்கில் நடந்து வந்த பயணத்தின் இறுதியாக காட்சியளித்தது அந்த மலைமுகடுகளுக்கு மத்தியில் வரண்டு நின்ற அந்தப் பகுதி. பச்சை நிறம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு புல் பூண்டுகள் இல்லாத தண்ணீருக்கான எந்தவித ஆதாரமுமற்ற வரண்ட பூமியில் சிறிது இளைப்பாறிவிட்டு ஆப்ரஹாம் புறப்படத் தயாரானார்.

அன்பு மனைவியையும், அருமை குழந்தையையும் அங்கேயே விட்டுவிட்டு வந்த வழியே திரும்ப நடந்தார் ஆப்ரஹாம்! கணவன் தன்னை விட்டு செல்வதை அறிந்த ஹாஜிரா ‘எங்களை விட்டு எங்கே செல்கிறீர்கள்?’ என்று பின்னால் தொடர்ந்தவாறு வந்து கேட்க, பதில் சொல்லாதவராக முன்னால் நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். பலமுறை கேட்டும் பதில் வராததால் ‘இது இறைவனின் கட்டளையா?’ கண்ணீர் மல்க கேட்டார் மனைவி. ‘ஆம்’ என்ற பதிலை கூறிவிட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். ‘அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிட மாட்டான்’ என்று சொல்லிவிட்டு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்த தன் மகவை நோக்கி திரும்பி நடந்தார் ஹாஜிரா.

கணவன் தன் மனைவியையும் அன்புடனும் பாசத்துடனும் தூக்கி வளர்த்துக் கொஞ்சி மகிழ்ந்த, அதிலும் இனி பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று தளர்ந்துப் போன வயதில் வாழ்க்கையில் மகிழ்வூட்ட வந்த இளம் மகனையும் தனியே விட்டுவிட்டு கண்ணீர் மல்க திரும்பி நடந்துக் கொண்டிருந்தார்.

கையில் உள்ள தோல்பையில் சிறிது தண்ணீரும், கண்கள் முழுக்க கண்ணீரும், நெஞ்சம் முழுக்க இனி எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையுடனும் தூரத்தில் நடந்து செல்லும் கணவன் ஆப்ரஹாமைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் ஹாஜிரா எனும் மங்கை. தாயின் கையைப் பிடித்தவாறு வந்த வழி திரும்பிச் செல்லும் தந்தையையும் தவித்து நிற்கும் அன்னையையும் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் இஸ்மாயில் எனும் பாலகன்.

தியாகத்தின் முதல் கட்டம் தொடங்கியது. தந்தையைப் பிரிந்து நின்றார் தனையன். கணவனைப் பிரிந்து நின்றார் மனைவி. ஏன் இப்படி ஒர் பிரிவு... யாருக்காக... இந்த ஒரு நிலை. எல்லாம் கேள்விக் குறியாய் நிற்கும் இவ்வேளையில் யார் இவர்களுக்கு ஆதாரம்?

கணவன், மனைவி, பிள்ளைகள் இன்னும் என்னென்ன உறவுகள் உள்ளதோ அவை யாவும் இவ்வுலகில் ஏற்படும் பிணைப்புகள். வாழ்க்கையை நடத்திச் செல்ல தேவையான உறவு அம்சங்கள். எப்படி அந்த பிணைப்புகள் ஏற்பட்டதோ அப்படியே அவை யாவும் ஒரு நாளில் உதிர்த்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கும் இந்த சரித்திர நிகழ்ச்சி ஒன்றே ஒன்றை மட்டும் முழுமையாக சந்தேகமின்றி தாங்கி நின்றது... அதாவது இறைவன் என்ற ஓர் உன்னத மாபெரும் சக்தி ஒன்று மட்டுமே மனிதனை எந்த இக்கட்டிலும் வழிகாட்ட வல்லது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மட்டுமே நித்தியமானது அதுமட்டுமல்லாமல் இறைவனே போதுமானவன் என்பதை உணர்த்தி நின்றது இந்த முதல் தியாகம்.

ஆன்மீக வட்டத்தின் மையத்தை உலகிற்கு எடுத்துக் காட்டப்போகும் தியாகத்தின் ஆரம்பம் அவர்களை அறியாமலே அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இதுநாள்வரை காத்து அருள் செய்து கொண்டிருந்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களை ஈர்த்தது. இறைவனே போதுமானவன், இனி வருவதை எதிர் கொள்வோம் என்று தாயும் மகனும் ஆப்ரஹாம் திரும்பிச் செல்வதை விழிகள் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நெடுதூரம் நடந்து வந்த ஆப்ரஹாம் தன் மனைவியும், குழந்தையும் பார்வையிலிருந்து மறைந்தவுடன், இருகரம் ஏந்தி கண்கள் நீர் பொழிய படைத்த இறைவனிடம் பிரார்த்தித்தார். தன் மனைவியும் மகனும் வளமற்ற இந்த இறைவனின் வீட்டின் அருகாமையில் விட்டுச் செல்கின்றேன் அவர்களுக்கு இறைவா நீயே பாதுகாப்பு.. இவ்வழியே செல்லும் மனிதர்களின் உள்ளங்களில் கருணையை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வழி செய் இறைவா என்று பிரார்த்தித்தார்கள்.(2)

இஸ்லாத்தின், ஏக இறைவனின் சிறப்புமிக்க ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம், மண்ணில் வாழ் மனிதர்களுக்கு மீண்டும் ஓர் வழிகாட்டுதலுக்கான ஆரம்பம் ஆதரவற்ற மண்ணில் அமைதியாக அமர்ந்திருந்தது.

பக்காவில் தாயும் மகனும் தாகத்தால் தவித்தனர். சிறுவன் இஸ்மாயிலின் தாகம் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகையாக மாறி பின்பு கதறலாக உருவெடுக்க ஹாஜிரா செய்வதறியாது தவித்தார். கண்ணுக் கெட்டிய தூரம் வரை தண்ணீருக்கான அறிகுரியோ அல்லது யாரவது வழிப் போக்கர்களின் வருகையோ தெரியாமல் இருக்க, இரு மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மகனின் தாகம் போக்க மாறி மாறி அலைந்து தேடலானர் தாய் ஹாஜிரா. இரு பக்கத்திலும் இருந்த குன்றின் மீதேறி ஏதேனும் தெரிகிறதா அல்லது யாராவது வருகிறார்களா என்று மாறி மாறி ஓடலானர். சிறுவன் இஸ்மாயிலோ உயிர்போகும் அளவிற்குக் கதறிக் கொண்டிருந்தார்.

(இவ்வாறு தான் அலைந்து ஓடியதை ஹாஜிரா பிற்காலத்தில் தனது கணவர் ஆப்ரஹமிடம் தெரிவிக்க அந்த இரு மலைகளான சபா மற்றும் மர்வா என்ற இரண்டுக்கும் இடையில் ஏழு முறை நடப்பது என்பதை ஹஜ்ஜின் ஒரு கிரியையாக ஆப்ரஹாம் அவர்கள் நிலை நிறுத்தினார்கள். ஹஜ் செய்யும் முஸ்லீம்கள் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு செய்துவருகின்றனர்).

அப்போது இறைவன் ஹாஜிராவை அழைத்து வானவர் மூலமாக அச்செய்தியை அறிவித்தான். 'ஹாகரே உன்னை துயருத்துவது எது? பயப்படாதே' என்று அறிவித்து இஸ்மாயில் இருக்கும் இடத்தில், அவரின் பாதம் இருந்த இடத்தில் ஒரு நீரூற்று உருவானது (3). 'இறைவன் பிள்ளையின் குரலை கேட்டான்' என்ற அறிவிப்பும் ஹாஜிராவை வந்தடைந்தது.

அந்த நீரூற்றுதான் ஜம்ஜம் என்ற பெயருடன் இன்றுவரை குறைவில்லாமல் கஃபாவின் அருகில் சுரந்துக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் அதை புனித நீராக பருகுவதும் மக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பும்போது தங்களால் முடிந்த அளவிற்கு அதை எடுத்துச் சென்று மக்கா வர இயலாதவர்களுக்கு வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த ஜம்ஜம் நீரூற்றைப் பற்றி பழைய ஏற்பாடு என்று அறியப்படும் யூதர்களின் வேதத்தில் ஆதியாகமத்திலும் சங்கீதத்திலும் (4) அறிவிப்பு செய்யப்ப்ட்டுள்ளது. அந்த நீரூற்றுதான் ஹாஜிராவிற்கும் மற்றும் இஸ்மாயிலுக்கும் வாழ்வாதாரமாகியது. இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரை பாதுகாத்து வழிப் போக்கர்களுக்கு விநியோகம் செய்து அதிலிருந்து தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை பகரமாக பெற்றுக் கொண்டார்கள். இந்த நீருற்று இஸ்மாயிலின் காலத்திற்கு பிறகு அவர்களின் வழி வந்த பரம்பரையினரால் உரிமைக் கொண்டாடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நீரூற்றுக்காக பிற்காலத்தில் போர்கள் கூட நடந்திருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த போரின் காரணத்தால் இந்த நீரூற்றை யாருக்கும் தெரியாமல் மூடி வைத்திருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இதன் பிறகு இஸ்மாயிலின் நபித்துவமும், தந்தையைப் போல் மக்களை ஏக இறைவனின் பக்கம் அழைக்கும் பணி செய்வதும், அதைத் தொடர்ந்து பக்காவில் தந்தை ஆப்ரஹாமுடன் பிற்காலத்தில் ஒன்று சேர்ந்து கஃபா எனும் ஆலயத்தை கட்டி எழுப்புவதுமாக இஸ்மாயிலின் வாழ்க்கை வேறொரு பாதையில் செல்கிறது. இஸ்மாயிலின் சந்ததியினரே அரபுகள் என்று அழைக்கப்படும் கூட்டமாக பிற்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறது.

இஸ்மாயிலை தொடர்ந்து அவரது சமூகத்தில் எந்த இறைத்தூதரும் வரவில்லை என்றும் வரலாற்றில் அறியப்படுகிறது. இஸ்மாயிலின் பக்கா வாழ்க்கை இங்கே அவசியமில்லாதாதால் இதை இத்துடன் நிறுத்திவிட்டு யூதர்களின் பிதாவான இஸ்ஹாக் என்று அறியப்படும் ஆப்ரஹாமின் இரண்டாவது மகன் பிறந்த வரலாற்றையும் அதைத் தொடர்ந்து வந்த யூத குலத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.

திருக் குரானில் இஸ்ஹாக் மற்றும் இஸ்மாயில் தொடர்பான வேறு சரித்திரக் குறிப்புகள் காணக்கிடைக்காததால் அவர்களுக்கு மத்தியிலே என்ன தொடர்பு இருந்தது என்று திருக் குரான் வாயிலாக சொல்ல இயலவில்லை. ஆனால், ஆதியாகாமத்தில் இஸ்மாயிலின் மகளை இஸ்ஹாக்கின் (மூத்த) மகன் (இசாயு) மணந்துக் கொண்டதாக செய்தி அறியப்படுகிறது.(4)

(தொடரும்)

1. திருக் குரான் (3:96)

2. திருக் குரான் (14: 37)

3. ஆதியாகாமம் (21:17-20)

4. சங்கீதம் (84: 5-6)

5. முஹம்மத் (பக்கம் 5, ஆசிரியர் மார்டின் லிங்ஸ்)

1 comment:

நல்லடியார் said...

சகோதரர் அக்பர் பாட்சா,

ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின் அரிய வரலாற்றுக் குறிப்புகளை பதிவு செய்கிறீர்கள். ஒவ்வொரு கட்டுரையின் சாராம்சத்தை குறிக்கும் வகையிலும் தனித்தனி தலைப்பு கொடுத்தால்,வாசகர்கள் புதிய பதிவை எளிதில் அடியாளம் கொள்ள முடியும் என்பது அனது தாழ்மையான ஆலோசனை. நன்றி.