Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 9

யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.

இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.

முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.

திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.

ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.

ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.

ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.

12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.

ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.

தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)

(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).

தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.

ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.

அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.

மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)

வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.

(தொடரும்)

1. Holy Quran (12:3)

2. Genesis (29)

3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir

4. Genesis (30)

5. Genesis (32)

No comments: