Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 8

யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம்

யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).

ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.

மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).

ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.

உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)

யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!

இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.

ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.

இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?

ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.

(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)

ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)

இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.

இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.

ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)

இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.

உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.

(தொடரும்)

1. Genesis (27:1)

2 & 3. Gnesis (21:1-38)

4. Songs (84: 5-6)

5. Genesis (28:13)

No comments: