Friday, April 13, 2012

வேருடன் வாழும் மனிதர்கள் வீழ்வதில்லை.

சிந்தனைத் துளிகள் - வேர்களைத் தேடி


விடியலில் தொடங்கும் மனிதர்களின் அன்றாடப் போராட்டங்கள் விளக்குகள் அனைந்தபின்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்போது மறந்தோம் அல்லது எப்போது ஓய்வு கொண்டோம் என்று தெரியாமலே ஒவ்வொரு நாளும் நாம் தற்காலிக மரணத்திற்குள் எல்லாவற்றையும் புதைத்துவிட்டு உறங்கிவிடுகின்றோம். விடியலில் அவைகளை மீண்டும் தோண்டி எடுத்து பழகிய களங்களில் போராட்டத்தை தொடர்கின்றோம்.

இவ்வகையானப் போராட்டங்கள் யாவும் நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரங்களை ஆக்கிரமித்துவிடுவதொடு நமது தன்னம்பிக்கையையும் ஆட்டம் காண வைத்துவிடுகின்றன. போராட்டம் பழையதாக இருந்தாலும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளில் இப்போராட்டங்கள் பெரும்பாலும் புதிதாகவே தோற்றமளிப்பதோடு நம்மை சோர்வடய செய்து தோல்விகளையும் சந்திக்க வைத்து விடுகிறது. ஆனால், இப்படி போராட்டங்களையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட அல்லது சூழலின் காரணமாக மாறிவிட்ட மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் என் மனதில் தோன்றுவது 'கொதிக்கும் உலையை நிறுத்த எரியும் அடுப்பை' எப்படி அனைப்பதென்பதே. அதிலும் சமகாலத்தில் நாம் எல்லாவற்றிற்கும் எல்லா நிலைகளிலும் போராடும் சூழலில் கொதிக்கும் உலைகளைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு எரிகிற அடுப்பை மறந்துவிட்டவர்களாக வாழ்ந்து வருகின்றோம்.

தத்துவார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால் வேர்களைத் தேடித் தேடி தேய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதெ உண்மை. இதில் தேய்ந்து கொண்டிருப்பது நமது திறமையும் அறிவும் துணிவுமட்டுமல்ல. நமது உறவுகளும், மனித நேயங்களும் இன்னும் எதிர்கால வளங்களையும் சேர்ந்தே இழந்து கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் அடிப்படைகளை மறந்துவிட்டு அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைக்குள் நம்மை தொலைத்துவிட்டதனால்தான்.

மனித மனங்களுக்கு கேள்வி கேட்கத் தெரிந்த அளவிற்கு பதில்கள் சொல்லத் தெரிவதில்லை. ஆச்சர்யங்கள், அதிசயங்கள், மனமார்ச்சயங்கள், புதிர்கள், அதிர்ச்சிகள் மற்றும் இவைகளுக்கெல்லாம் மேலாக அறியாத பல விஷயங்கள் சூழ்ந்திருக்கும உலகில் மனிதர்களிடம் பதில்களைவிட கேள்விகளே மிஞ்சி நிற்கின்றன. விடைதெரியா கேள்விகள் அதிலும் குறிப்பாக எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்படும் காலங்களில் மனிதர்கள் வெகுவேகமாகவே சோர்வடைந்துவிடுகின்றனர். சவால்கள் ஒரு பக்கமும், விடை தெரியா வினாக்கள் மறுபக்கமுமாக வாழ்க்கைச் சுழற்சியின் வேகத்தில் நாம் வேர்களை மறந்துவிட்டு வெற்றிடத்தில் வாழ்கிறோம்.

உலக வெற்றிக்காக பல வேடங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் நாம் பிற்காலத்தில் அவ்வேடங்களை களைக்க முடியாமல் வேடதாரிகளாகவே வாழும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். பல நேரங்களில் பொய்களுக்குள்ளேயெ நமது பொழுதுகளை கழித்துவிட்டு அணிந்த வேடத்தை களைக்க விரும்பாமல் அவதியில் வாழ்வதும் பழக்கமாகிவிடும்போது எப்படி நமது வேர்களை நாம் தேட முடியும்? உண்மைகளை உணரவும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவும் தைரியமும் துணிச்சலும் தேவைப்படும்போது நாம் வேர்களை மறந்தவர்களாக வேடமிட்டு அலைகின்றோம். இப்படி இருக்கும்போது எவ்வாறு நமது வேர்களின் அடித்தளங்களை அடையாளம் காணமுடியும்? எவ்வாறு கொதிக்கும் உலையை நிறுத்தமுடியும்? உண்மைகளை உணரவும் ஏற்றுக் கொள்ளவும் துணிவற்ற காரணத்தினால்தான் பெரும்பாலும் நமது வாழ்க்கை நமக்கே வெற்றிடமாகத் தெரிகிறது. எங்கே போகிறொம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

குப்பைத் தொட்டிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நாய்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அறிவைப் போல், நாமும் அவ்வப்போது நமது சூழலையும் நிலையையும் நினைத்து வருத்தப்பட்டு அதோடு விட்டுவிடுகின்றோம். இறுதியாக எல்லாவற்றிற்கும் காரணம் நமது சூழலும் அடுத்தவர்களும் என்று நமது வேடங்களை களைக்க விரும்பாமல் வெற்றிடங்களில் நமது வேர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

காரை நிறுத்திவிட்டு சாலை ஓரத்து பூங்காவின் எழிலிற்குள் என் மனதை சிறிது நேரம் வாடகைக்கு விட இறங்கி நடந்தேன். பல வண்ண மலர்கள் ஒன்றாகக் கூடி காற்றுடன் கதை பேசிக் கொண்டிருந்தன. என் விழிகளுக்குத் தெரியாத காற்று அம்மலர்களுக்கு என்ன கதை சொல்கிறதோ தெரியவில்லை, மலர்கள் அவ்வப்போது தலையசைத்து சிரித்து மகிழ்வதைப் பார்க்க என் மனமும் இலேசாகி காற்றுடன் கை சேர்த்து மிதக்க ஆசைப்பட்டது.

இந்த மலர்கள்தான் எத்தனை மகிழ்வுடன் வாழ்கின்றன. மஞ்சளும், வெண்மையும், சிவப்பும், ஊதாவும் இன்னும் பல வண்ணங்களில் வித்தியாசமாக இருந்தாலும் எல்லா மலர்களும் ஒன்று சேர்ந்து ஒன்றோடு ஒன்று கொஞ்சியும் குலாவியும் உரசியும் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. காலையில் பூத்து மாலையில் மரணிக்கும் இவ்வண்ண மலர்கள் மரணங்களை மறந்துவிட்டு வாழும் மனிதர்களைப் பார்த்து கேளிக்கை செய்கின்றனவா? அல்லது தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து பரிகாசிகின்றனவா? அல்லது வேடங்களையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களைப் பார்த்து இறக்கப் படுகின்றனவா?

வேர்களை நாம் வேரெங்கும் தேட வேண்டியதில்லை. நம்மிடம்தான் தேட வேண்டும். தேடுவது ஒன்றும் சிரமமில்லை, தேடவேண்டும் என்ற தாகம் ஏற்படும்வரை.

நமக்கு மட்டுமே தெரிந்த நம்மை, வேடங்களை களைந்துவிட்டு, உண்மையான நம்மை தினமும் கொஞ்ச நேரம் இவ்வுலகில் சுற்றிவரச் செய்தால் நமது வேர்களின் அடையாளங்களை காண முடியும். முதலில் நமக்கு நாமே உண்மையானவர்களாக வாழ முயற்சித்தால் நமது வேர்களின் சுவடுகள் தெரிய வரும். நமக்கு மட்டுமே உண்மையாக வாழும் நாம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சார்ந்தவர்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் உண்மையாக வாழ ஆரம்பித்தால் நமது வேர்களும், அவற்றின் ஆழமும் தெரியவரும். வேர்களின் ஆழங்கள் தெரிந்தால் மனதில் வினாக்கள் எழுவதற்கு முன்னே விடைகளும் தெரியவரும். விடைகள் தெரிய ஆரம்பித்தால் வாழ்வின் போராட்டங்களும் குறைந்து விடும். எஞ்சியிருக்கும் போராட்டங்கள்கூட பாரமாகத் தெரியாமல் வாழ்வின் அங்கமாகவும் வெற்றிப் படிகளாகவும் மாறிவிடும்.

வேர்களை இழந்த மலர்கள் வாழ்வதில்லை. வேருடன் வாழும் மனிதர்கள் வீழ்வதில்லை.