Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 10

இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப்.

ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.

இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)

எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.

ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)

புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.

இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.

ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)

ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.

ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.

தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.

தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).

இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.

அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.

இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).

அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.

எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)

ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.

இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.

கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)

பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).

ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.

(தொடரும்)


1. Genesis (33)

2. Genesis (34)

3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir

4. Holy Quran (12:4-6)

5. Genesis (37)

6. Holy Quran (12:11-14)

7 & 8. Holy Quran (12:15-18)

9. Holy Quran (12:19-22)

10. Genesis (37)

No comments: