Tuesday, May 31, 2005

ஏன் & எப்படி

மழைக்காலத்தின் மெல்லிய தூறல்கள் சிந்தும் கருத்த ஒரு காலைப் பொழுதில் ஒரு சிறுவன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, மழை ஏன் பொழிகிறது?" என்று ஆவலுடன் கேட்டான். சில்லென்று சிதறி விழும் மழைத் துளிகளை கையில் பிடிக்க முயற்சித்தவாறு தந்தை பதில் சொல்லத் தொடங்கினார்.

"மகனே, கடலிலும், ஆறுகளிலும், ஏரிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் சூரியனின் வெப்பத்தில் ஆவியாகி, பின்னர் மேகங்களாகி வானிலே அங்கங்கே முற்றுகை இட்டு வைக்கப்பட்டுள்ளது, பின்னர் அந்த மேகங்கள் கரைந்து, மழையாக மாறி பூமிக்கு திரும்பவும் வந்து சேருகிறது.. இதுதான் மழை மற்றும் இந்த சுழலுக்குப் பெயர்தான்.. வாட்டர் சைக்கிள் என்பது" என்று விளக்கமளிக்கவே, சிறுவன் வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

"சரி அப்பா, இடியும் மின்னலும் ஏன் வருகிறது?" என்று வினா எழுப்பவே, தந்தைக்கு சொல்ல முடியாத ஆனந்தம். மகன் எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறான் பார்... என்று. "மகனே! மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் இடியும் அதிலிருந்து உருவாகும் எலக்ரோ மேக்னடிக் அலைகளால் மின்னலும் உருவாகின்றன" என்று அறிவியல் கண்டுபிடிப்புகளை எடுத்துச் சொல்ல மகனுக்கு தன் தந்தை எல்லாம் தெரிந்தவர் என்று பெருமையுடன் பார்த்தான்.

அழகான கேள்விகள், பதில்களும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இந்த பதில்கள் அந்த சிறுவன் கேட்டக் கேள்விகளுக்கான சரியான பதில்களா?
சிறுவன் எல்லாவற்றையும் ஏன் வருகிறது என்று கேட்டான். தந்தையோ எல்லாவற்றிற்கும் எப்படி வருகிறது என்று பதில் சொன்னார். இது நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்வுகள்.

ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில்கள்.

அறிவியல் எத்தனையோ விஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. பல புரியாத விந்தகைளை நமக்கு புரிய வைத்திருக்கிறது. ஏன் என்றும், எப்படி என்றும் பல்வேறு தெளிவுகளை அளித்துள்ளது. ஆனால் அறிவியல் "ஏன்" என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளதா?

பூகம்பம் ஏன் வந்தது / வருகிறது என்று யாராவது சொல்வார்களா? யாரும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஏன் வருகிறது என்ற கேள்விக்கு எப்படி வருகிறது என்று பதில் சொல்வார்கள். பர்மா பிளெட் மேலெ வந்து இந்திய பிளேட் கீழே போனாதால் சுமத்ராவில் பூகம்பம் உண்டாகி அதானால் சுனாமி வந்தது என்று நிகழ்ந்ததை நமக்கு சொல்லிக் காட்டுவார்கள். அதைக் கேட்டுவிட்டு நமது உண்மையான கேள்வியை நாமே மறந்துவிட்டு தலையை ஆட்டிக் கொண்டு சென்று விடுவோம்.

மழை ஏன் வருகிறது என்று யாரவது சொல்வார்களா? எப்படி வருகிறது என்று சொல்வதைத்தான் ஏன் வருகிறது என்பதற்கு பதிலாக எடுத்துக் கொள்கிறோம்.

நாம் எல்லோரும் "ஏன்" என்ற கேள்விக்கு "எப்படி" என்ற பதிலைக் கேட்டு கேட்டு ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதிலில் சமாதானம் அடைந்துவிடுவது வழக்காமாகிவிட்டது, பழகியும் விட்டது. நம்மில் எத்தனை பேர் ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில் கிடைக்கும்போது.. அய்யா போதும் நிறுத்து நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொல் என்று கேட்கிறோம்.

எத்தனையோ கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. என்றாலும் கிடைத்த பதிலை வைத்துக் கொண்டு சமாதானமடைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் நமது சிந்தனைகளும் அதன் விதமும் வெகுவாக பாதிக்கப்படுவது பெரும்பாலான நேரங்களில் நமக்குத் தெரிவதேயில்லை. இந்த மனித பலவீனத்தைப் பயன்படுத்தி வளர்ந்தவிட்ட வர்க்கங்கள் வளரும் வர்க்கத்தை அடக்கி வைத்திருப்பதும் பலருக்குத் தெரிவதில்லை. இந்த சிந்தனை, அதாவது ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில் சொல்லி மக்களை வாயடைத்து வைத்திருக்கும் கலையை தற்போது ஊடகங்களிலும் அதிகமாக பார்க்கலாம். ஊடகங்கள் ஒரு காலத்தில் இதை உடைத்தெரிய முற்பட்டன என்பது உண்மையே. ஆனால் போகப் போக ஆளும் வர்க்கத்தின், அதிகாரக் கூட்டங்களின் கைகளுக்குள் தங்களை முடக்கிக் கொண்டு இந்த "எப்படி" என்ற பதிலைக் கொண்டு சாமனிய மனிதர்களை சமாதனப் படுத்தி வருகிறது. எதையோ கேட்கப் போய் எதற்கோ பதில் கிடைத்து பிறகு நாமும் குழம்பிப் போய், சரி விட்டுத் தொலை என்று மறந்துவிட்டு அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்துவதென்பது நமக்கு பழக்கமாகிவிட்டது.

முன்பெல்லாம் மருத்துவரிடத்தில் சென்றால், வியாதி இதனால்தான் உண்டானது, இனிமேல் கவனமாக இருந்து கொள் என்று ஒரு லெக்ட்சரே கொடுத்துவிடுவார், நாமும் அதை கவனமாகக் கொண்டு செயல்படுவோம். ஆனால் இப்போதெல்லாம் மருந்துகளை சாப்பிடு சரியாகிவிடும் என்று இருக்கிற பார்மசியை நம் தலைமேல் சுமத்தி அனுப்பிவிடுவார்கள், நாமும் சரியாகிவிடும் என்று வந்துவிடுவோம். அட நோயாளிதான் கேட்கவில்லை, நாமவது சொல்லி அனுப்பிவைப்போமே என்றெல்லாம் நினைக்கும் மருத்துவர்கள் குறைந்துவிட்டார்கள். என்ன காரணம்? வியாபார நோக்கம் என்பது வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஊடுருவிக் கொண்டதுதான் காரணம். அதே காரணம்தான் இந்த ஏன் & எப்படி என்ற விதிக் குழப்பங்களும் அதைப் பயன்படுத்தி நமது சிந்தனைகளை திசை திருப்புவதும். We are conditioned to accept the answers of "how" instead of "why".

ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகலாம், அதில் தவறில்லை. ஆனால் அதற்கு எப்படி என்ற பதிலை சொல்லும்போது தவறான செய்திகள் மனிதர்களை சென்றடைவதும் அதன் மூலம் பல பிரச்சனைகள் உருவாகுவதும் இயல்பாகிவிட்டது.

பகுத்தறிவு என்பது எல்லா விஷயங்களிலும் சாத்தியமல்ல என்ற உண்மையை எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறார்கள்? பகுத்தறிவு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுவிடுகிறது. உதாரணத்திற்கு மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்கு ஆண் பெண் விந்துக்கள் ஒன்றாக சேரும்போது உருவாகிற கருத்தோற்றத்தினால் பிறக்கிறான் என்ற "எவ்வாறு பிறக்கிறான்" விளக்கத்தைத்தான் பகுத்தறிவு கொடுக்கிறதெ தவிர்த்து ஏன் பிறக்கிறான் என்று பகுத்தறிவு விளக்குவதில்லை.

ஏன் இந்த செயற்கை ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த சேர்க்கை யாரால் நிர்ணயிக்கப் பட்டது அல்லது நிர்ணயிக்கப் படுகிறது, இது ஏன் காலம் காலமாக நடந்து வருகிறது, யார் எழுதியது இந்த அழியா "நிரலியை". இந்த நிரலி ஏன் (எப்படி) வெறும் சாதாரண இரு விந்துக்களிலிருந்து தொடர்ந்து "transfer" ஆகிக் கொண்டிருக்கிறது. மனித உடலில் உள்ள குரோமோசோம்ஸ் எனப்படும் இந்த நுண்ணிய செல் வகைகள் ஏன் (எப்படி) இந்த மனித பழக்க வழக்கங்களை சுமந்து செல்கிறது என்ற கெள்விகள் எல்லாம் புதிராகவே இருக்கிறது.

நானும் எத்தனையோ மனிதர்களைப் போல் "நான் ஏன் பிறந்தேன்" என்ற கேள்வியுடன் தான் வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைந்தேன். அதைத் தேடும் படலத்தின் ஒரு பாகமாக பல்வேறு வேத நூல்களையும், தத்துவ விளக்கங்களையும் அறிய முற்பட்டபோது, என் கண்ணில் தென்பட்டது மனிதன் எவ்வாறு பிறந்தான் என்று சொல்லும் குரானின் வாசகங்கள். மனித உருவாக்கத்தைப் பற்றி இறைவன் சொல்லும்போது, இவ்வாறு கூறுகின்றான்.

நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம்; பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாக படைத்தோம்; பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம்; பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர், நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம்; (அல் மு·மினூன் 12-14, அல் குரான்).

மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்று அல்லாஹ் தான் வழங்கிய வேதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடுவது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அறிவியலுடன் அழகாக ஒத்துப் போகும் இந்த வசனங்களில் நான் ஆச்சர்யப்பட்டாலும், எனது கேள்வி ஏன் படைக்கப்பட்டான் என்பதனால், அதற்கான விளக்கம் தேடி எனது பயணம் தொடர்ந்தது. அதே வேதத்தில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான் என்பதையும் குறிப்பிடுகின்றான். குரானை விளங்கிப் படித்தவர்களுக்கு அது புரியலாம்.

உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான். (அல் முல்க், வசனம் 2, அல் குரான்)

இந்த இரண்டு வரி வசனங்கள் மனிதர்கள் ஏன் படைக்கப்பட்டார்கள் என்பதை சாதரணமாக சொல்லிவிட்டது. வேறு பல வேதப் புத்தகங்களிலும் இப்படிப்பட்ட கருத்துக்கள் நிறைந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் இதில் புதைந்துக் கிடக்கும் தத்துவ விளக்கங்களை, உண்மையின் தேடல்களை அனுபவத்தில்தான் புரிந்துக் கொள்ளமுடியும் என்பதை விளங்கிக் கொள்ள எனக்கு பல காலம் பிடித்தது.

ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கு எல்லா நேரங்களிலும் பதில் இல்லை என்றாலும், ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதிலைக் கேட்டு சமாதானம் ஆகாமல் ஏன் என்ற கேள்விக்கான விடை தேட முற்பட்டோமானால் பல தெளிவுகள் நமக்கு கிடைக்கும். அதைத்தான் இறைவனும் விரும்புகிறான். "சிந்திக்க மாட்டீர்களா" என்று மனித வர்க்கத்தைப் பார்த்து இறைவன் கேட்பதும் இதைத்தான்.

அறிவியலின் "எவ்வாறு" என்ற விளக்கமும் ஆன்மீகத்தின் "ஏன்" என்ற தத்துவார்த்த வினாக்களும்தான் இந்த உலகை இயக்கிச் செல்லும் அறிவுக் காரணிகள். இதைச் வயிற்றுப் பிழைப்புக்காக பயன்படுத்தும் போதுதான் அதனுடைய நோக்கம் மாசுபட்டு தேவையில்லாத குழப்பங்களெல்லாம் உருவாகின்றன.

இந்தக் குழப்பங்களை தீர்க்க வேண்டுமெனில் சிந்தனைகளில் மாற்றம் வர வேண்டும். அந்த சிந்தனை மாற்றங்கள் வராதவரை சீர்திருத்தங்கள் எதுவும் நிகழாது. எல்லாம் வெறும் வெற்றுக் காகிதங்களும் வார்த்தைகளுமாகத்தான் இருக்கும்.

Mere acquirement of knowledge is not the end. People often satisfied with acquirement of knowledge only and very few of them apply in their practical life. Application of mind (knowledge) is the key to understand the world.

Sunday, May 29, 2005

நான் யார்?

இலக்கணத்தில் உலகமைத்து
இலக்கியத்தில் மறையளித்த
இறைவனுக்கே எல்லா புகழும்

தமிழ்மணத்தின் தாரகைககள் மத்தியிலே
இன்று நான் இவ்வார நட்சத்திரம்.
நான் யார் என்ற கேள்விக்கு
இப்படியும் ஒரு பதில் உண்டோ?

தாயின் கைகளில் தவழ்ந்த போது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
தந்தையின் விரல் பிடித்து நடை பயின்றபோது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
ஆசிரியன் அறிவுப் பட்டறையில்
என்னை நான் யார் என்று கேட்டதில்லை

மங்கையின் விழி மின்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்
மாந்தர்களின் மதி இன்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்

உண்மையில் நான் யார்?

விழுதுகளை சுற்றிவந்த நான்
வீணே அதை மரம் என்றெண்ணி
ஆணி வேர்களைத் தேடி
மண்ணுக்குள் என்னை மறந்துவிட்டேன்

உச்சிவான் கூரைக்குள்ளே
உறைந்து நிற்கும் மேக விளிம்புகளில் நின்று
உலகைப் பார்க்க எண்ணி
கற்பனைக்குள் என்னை கறைத்துவிட்டேன்

இளமையின் சலனத்தில்
இருளின் மையத்தில்
விடியாத பொழுதைத் தேடி
விளக்குகளின் திரியைத் தீர்த்துவிட்டேன்

உண்மையில் நான் யார்?

விடியலைப் பார்த்துக் கேட்டேன்
விதியின் விளையாட்டில் விளைந்த
வித்தகன் நீ என்றது
ஓலியைப் பார்த்துக் கேட்டேன்
ஓங்கார நாதம் கமழும்
ஓலியின் ஓர் அங்கம் என்றது

கவியைப் பார்த்துக் கேட்டேன்
கலைஞனின் பட்டறையில் வார்த்த
ஒர்கவிதையின் சிதறல் என்றது
ஓளியைப் பார்த்துக் கேட்டேன்
ஓரிறை அரசாட்சியின்
நாடகப் பாத்திரம் என்றது

உண்மையில் நான் யார்?

உன்னிலிருந்து உன்னைத் தேடு
என்றான் என் நண்பன்
என்னிலிருந்தும் என்னை வழிகாட்டும்
என் இறைவனிடம் தேடுகின்றேன்

என்னைச் சுற்றி நிற்கும் ஒளியில் தேடுகின்றேன்
என்னை மறைக்கத் துடிக்கும் இருளில் தேடுகின்றேன்
என்னால் பிறர் சிரிப்பதில் என்னைத் தேடுகின்றேன்
என் அழுகையில் என்னைத் தேடுகின்றேன்

என் அனைப்பில் மயங்கும் மங்கையில் தேடுகின்றேன்
என் கைப்பிடித்து நடக்கும் என் மழலையில் தேடுகின்றேன்
என் தோள் தொட்டு நடக்கும் என் நண்பணிடம் தேடுகின்றேன்
என்னை மறந்து என்னைத் தேடுகின்றேன்

தேடுகின்றேன், மரணம் என்னைத் தேடும் வரை.