Wednesday, August 10, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 7

யூத குலத்தின் தொடக்கம் - இஸ்ஹாக்கின் பிறப்பும் ஆப்ரஹாமின் மறைவும்
ஆப்ரஹாமின் இல்லத்திற்கு அவருக்கு அறிமுகமில்லாத ஒரு சிலர் வருகை தந்தனர். அவர்களை விருந்தினர்களாக வரவேற்று, ஒரு கொழுத்த கன்றுக் குட்டியை உணவாக்கி அவர்களை உபசரிக்கிறார் ஆப்ரஹாம். ஆனால் வந்தவர்கள் அந்த உணவை உண்ணாமல் அல்லது அவர்களது கைகள் உணவுகளை நாடிச் செல்லாமல் இருக்க ஆப்ரஹாம் அதிர்ச்சியுற்று, வந்தவர்களின் மேல் பயம் கொள்கிறார். இதை கண்ணுற்ற விருந்தினர்கள், 'பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளோம்' என்று அறிவித்து, ஆப்ரஹாமிற்கும் சாரவிற்கும் ஒரு ஆண்மகவு பிறக்கும் என்று அறிவித்தார்கள் (1)

இதே செய்தி பைபிளில்(2) இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் விருந்தினர்கள் (தேவ தூதர்கள்) உண்ணுவதைப் போல் நடித்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த அந்த உணவு மறைந்த்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேசங்களும் ராஜாக்களும் அந்த மகனிலிருந்து உருவாகுவார்கள் (3) என்றும் கூறுகின்றது.

இதைக் கேட்ட ஆப்ரஹாமும் சாரவும் திகைத்து நின்றனர். இந்த வயதான காலத்தில் அதிலும் 100 வயதைத் தாண்டிய ஆப்ரஹாமும் 90 வயதை நெருங்கிய சாராவும் எப்படி பிள்ளைப் பேறு பெறமுடியும் என்று ஆச்சர்யப்பட்டனர்.

நல்லவர்களில் வழிகாட்டியாக இஸ்ஹாக் இருப்பார் என்று இறைவன் ஆப்ரஹாமிற்கு நற்செய்தி கூறினான். ஆப்ரஹாமின் மீதும் இஸ்ஹாக்கின் மீதும் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். அவர்களின் சந்ததியிலிருந்து நல்லவர்களும் தீங்கிழைத்துக் கொள்வோரும் இருப்பார்கள் என்று தெரிவித்தார்கள் (4)

இறைவனின் இந்த வாக்கு ஆப்ரஹாமிற்கு மகிழ்வை தந்தது. ஆனால் அதன் இறுதியில் அமைந்த 'சில வழிகேடர்களும் இருப்பார்கள்' என்ற வார்த்தை பிற்காலத்தில் வர இருக்கும் குழப்பத்திற்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டதைப் போல் இருந்தது. வழிகேட்டில் இருந்தவர்கள், தங்களுக்கு தங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள், காலப்போக்கில் பிறரை வழி கெடுப்பவர்களாக மாறியதோரு நில்லாமல் தான் வந்த வழியை மறந்தவர்களாகவும் ஆனார்கள் என்பதை இந்த வரலாற்றின் வளர்ச்சியில் பார்க்கலாம்.

ஒரே குடும்பம், ஒரே சிந்தனை, ஒரே வணக்கம், ஒரே கடவுள் என்று ஆப்ரஹாமின் குடும்பம் இறைச்சேவையில் தங்களை முழுதாக இணைத்துக் கொண்டு தான் வசித்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களை ஓர் இறைவன் பக்கம் அழைத்தவர்களாக வாழ்ந்தார்கள். நல்லதை ஏவுவதும் தீமையைத் தடுப்பதுமாக வாழ்ந்த ஆப்ரஹாமின் குடும்பத்திலிருந்தே இறைவன் இறைத் தூதர்களை தான் வாக்களித்தவாறு உலகிற்கு அனுப்பி வைத்தான். ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவராக இறைவன் ஒருவனே என்ற கொள்கையைச் சுமந்து இறைப்பணி செய்தவர்களாக ஆப்ரஹாமின் வம்சம் பெருகத் தொடங்கியது.

ஆப்ரஹாமும் அவரது குடும்பத்தினரும் அவர்களது சந்ததியினரும் இறைவனின் பாதையில் தங்களை வழிநடத்திச் செல்லும்வரை அவர்களுக்கு இறைவனின் பாதுகாப்பு முற்றிலும் இருந்தது. அவ்வாறு இல்லாதபோது அவர்களின் இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இல்லாமல் போனது மட்டுமல்லாமல் அவர்கள் உலகில் அலைக்கழிக்கப்பட்ட அவலம் யூதர்களின் வரலாற்றில் நிறைந்து கிடக்கிறது. அதனைத்தான் மேற்கூறிய திருக் குரானின் இறைவசனத்தில் அவர்களின் சந்ததியினரில் வழி கெட்டுப் போனவர்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(யூதர்கள் என்று பிற்காலத்தில் அறியப்படுகிறவர்களின் தோற்றுவாயான ஆப்ரஹாமின் வரலாற்றையும், யூதர்களின் பிதா என்று அழைக்கப்படுகிற இஸ்ஹாக்கின் வரலாற்றையும் அறியாமல் யூதர்களின் வரலாற்றை முழுமையாக தெரிந்ததாகச் சொல்ல முடியாது. இவ்விருவரும் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்கள் என்பதை முழுமையாக ஆய்ந்து நோக்கினால் இன்றைக்கு பிரிந்துக் கிடக்கிற உலகச் சமுதாயத்தின் அடிப்படை எங்கிருந்து தோன்றியது என்பதையும் உணரமுடியும். யூதர்கள் முதல் கிறிஸ்துவர்கள் வழியாக இன்னும் இன்று பெருகி இருக்கின்ற முஸ்லீம்கள் வரை எல்லா மக்களும் ஒரே பிரிவிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதை புரிந்துக் கொள்வது அவசியமாகிறது. ஆனால் இதில் உள்ள ஒரு சில பிரிவினர் இந்த மூலத்தை உதாசீனப்படுத்துவதன் மூலம் தனித்துவம் என்று தேவையற்றை இடைச் செருகல்களையும் கொள்கைகளையும் உருவாக்கி தங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், இவ்வுலகின் அதிபதிகள் இன்னும் வாழத் தகுதியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்ற மனித விரோதக் கொள்கைகளை செயல்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இறை பாதையை விட்டு விலகிச் சென்றவர்களே!

ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும்தான் இந்த உலக மக்கள் பல்கிப் பெருகி பல்வேறு கோத்திரங்களாகவும், குலங்களாகவும் இன்னும் பல சமுதாயங்களாகவும், நாடுகளாகவும் வளர்ந்திருப்பதை வரலாறுகள் மூலம் தெரிந்துக் கொள்வது மனித வர்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அதற்கு ஆப்ரஹாமின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக் கொள்வது மிக மிக அவசியம்).

இக்காலக்கட்டத்தில் ஆப்ரஹாம் திரும்பவும் பக்காவிற்கு வருகை தந்து தனது இரண்டாவது மனைவியான ஹாஜிராவுடன் சிறிது காலம் வாழ்கிறார். அங்கே அவரும் அவரது மூத்த புதல்வன் இஸ்மாயிலுடன் சேர்ந்து பக்காவில் இறைவனின் ஆணைக்கிணங்க கஃபா எனும் ஆலயத்தை புதுப்பித்து அதை உலகில் மனிதர்களுக்கான முதல் ஆலயமாக வணங்குமிடமாக செய்கின்றார்கள்.(5)

இந்த ஆலயம் இவ்வுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து அதாவது இந்த பூமியும் சொர்க்கமும் படைக்கப்பட்ட தினத்திலிருந்தே உருவாக்கப்பட்டது என்றும், இந்த உலகம் உள்ளலவும் இது அவ்வாறே இருக்கும் என்றும் கூறப்படுகிறது (6)

பெரும்பாலோர், இன்னும் முஸ்லீம்கள் கூட கஃபா என்பது இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களால் கட்டப்பட்டது என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கஃபா என்பது ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்ற செய்தி கூட ஒரு சிலருக்கு அதிசயமாக இருக்கின்றது.

கஃபா புதுப்பிக்கப்பட்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்தபின்பு ஜெருசலத்தில் இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் (யாகூப்) இறைத்தூதரால் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் இன்னுமொரு இறை ஆலயம் எழுப்பப்படுகிறது.(7) பைபிளிலும் இந்த அக்ஸாவின் ஆலயம் ஜேக்கப் எனும் இறைத்தூதரால் கட்டப்பட்டது என்று சொல்ல்ப்படுகிறது.

இஸ்லாம் என்பது முஹம்மது நபி (சல்) அவர்களால் இந்த உலகிற்கு கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்ற தவறான சிந்தனை உள்ளவர்கள் இந்த மார்க்கம் ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்ட மார்க்கம் என்பதை அவரது வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புரியலாம்.

ஆப்ரஹாமின் மனைவி சாரா தனது 127வது வயதில் மரணமடைந்ததாக பைபிள் மூலம் அறியமுடிகிறது. சாராவின் மரணத்திற்கு பிறகு ஆப்ரஹாம் கண்டூர எனும் மற்றொரு பெண்ணை மணமுடித்தாகவும் அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (8) அது மட்டுமல்லாமல் ஹாஜூன் எனும் இன்னொரு மனைவி மூலம் அவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்ததாகவும் அதே வரலாற்றுக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது. (9)

ஆப்ரஹாம் தனது 175வது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார். அவரை அவரது முதல் இரண்டு புதல்வர்கள் இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் இருவரும் சேர்ந்து ஹிப்ரோன் எனும் இடத்தில் அவரது முதல் மனைவி சாராவின் அடக்கத்தலத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்விக்கின்றனர். அதே இடத்தில்தான் இஸ்ஹாக் மற்றும் அவரது மகன் ஜேக்கப் அவர்கள் மரணடைந்தவுடன் அடக்கம் செய்யப்பட்டதாவும், அந்த அடக்கத்தலங்களை சாலமன் (சுலைமான்) நபியவர்கள் புதுப்பித்துக் கட்டியாதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அவர்களின் அந்த அடக்கத் தலங்கள் தற்போது 'கலீல் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆப்ரஹாமின் மறைவிற்குபின் இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப்பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை. இஸ்ஹாக் தனது நாற்பதாவது வயதில் பிதுயில் என்பவரின் மகளான ரெபெக்கா (Rebekah) அல்லது ரிஃப்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.(10) அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் அல்லது இரு குழந்தைகள் பிறக்கின்றன என்றும் பைபிள் மூலம் தெரிய வருகிறது.(11)

முதல் மகனின் பெயர் இசாயு (அரபு வழக்கில் அல்-அய்ஸ்), இரண்டாவது மகனின் பெயர் ஜேக்கப் (அரபு வழக்கில் யாகூப்). இசாயுவின் சந்ததியினர் ரோமர்கள் என்றும் ஜேக்கபின் சந்ததியினர் யூதர்கள் என்றும் வரலாற்றின் மூலம் சொல்லப்படுகிறது.

இஸ்ஹாக் தனது மூத்த புதல்வனான இசாயுவை அதிகம் நேசித்ததாகவும் அவரது மனைவி ரெபக்கா இரண்டாவது மகனான ஜேக்கபை அதிகம் நேசித்ததாகவும் பைபிள் சொல்கிறது. இந்த அதீத நேசத்தின் காரணமாக பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க மோசடி ஒன்று நடந்ததாக பைபிள் கூறுகிறது. அது என்னவென்று அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

1. திருக் குரான் (11:69-73)

2. ஆதியாகாமம் (18)

3. ஆதியாகாமம் (17)

4. திருக் குரான் (37:111-112)

5. திருக் குரான் (3:96-97)

6. முஸ்லீம் ஹதீத் தொகுப்பு

7. புகாரி ஹதீத் தொகுப்பு (ஆபூ தர்)

8. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

9. அத்தாரிஃப் வல் ஆலம் (அப்துல் காசிம் அல் சுஹைலி)

10. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

11. Genesis 24 (Bible)

1 comment:

அனாமதேயம் said...

திண்ணையில் 'அரவிந்த நீலகண்டன்' என்ற பெயரில் எழுதியவன் தான் பின்னர் நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் வலைப்பதிவுகள் தொடங்கி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிக்கிறான். திண்ணையின் கோப்புகளைத் தேடிப்பார்த்தால், அரவிந்த நீலகணடனின் எழுத்து நடையும், நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் எழுதுபவனின் எழுத்து நடையும் ஒரே மாதிரி இருப்பது தெரியும். இவனுக்கும், டோண்டு, மாயவரத்தான், ரஜினி ராம்கி போன்றவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் சில நேரங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாய் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பம்மாத்து தான்.

இணையப் புலனாய்வு அதிகாரி