Monday, July 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 5

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

மனித வரலாற்றின் விசித்திரமே மனித மனங்களின் 'நேரிடை அனுபவத் தேடல்தான்'. ஒவ்வொரு மனிதனும் நன்மை எது, தீமை எது என்பதைத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் அத்தீமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை பெறாத வரை அவர்கள் அதை தெரிந்ததாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு நேரிடை அனுபவத்தேடலில் இருப்பவர்களில் சிலர் பிறரது அனுபவத்தை தனக்கு கிடைத்த அனுபவமாக எண்ணி செயல்படுவார்கள். பிறரது அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், அக்குறைவானவர்களே இந்த உலகத்தின் தலை எழுத்தை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் தலை எழுத்தை மாற்றியவர்களில் பலர் நல்வழியை நோக்கியும் சிலர் தீய வழியை நோக்கியும் இந்த உலக ஓட்டத்தை திசை திருப்பி இருக்கின்றார்கள்.

இவ்வுலக ஓட்டத்தை நல் வழியில் திருப்பிய பெரும் மனிதர்களில் ஆப்ரஹாம் என்ற தச்சுத் தொழிலாளியும் ஒருவர். அவர் இறைவனின் திருத்தூதராக இருந்து இவ்வுலக தலை எழுத்தை மாற்றிய பெரும் மனிதர்களில் ஒருவர். அவருக்கு இறைவன் போதுமான வழிகாட்டுதல்களை கொடுத்து அவரது அனுபவத்தேடல்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தான். அந்த இறைவனின் துணையுடன் அவர் செய்த செயல்களில் மிக முக்கியமானது மறைந்து அல்லது மறந்து போன ஆன்மீகத் தொடரை, மையத்தை கண்டுபிடித்தது. அதுமட்டுமல்லாமல் அதைப் புதுப்பித்து உலக ஆன்மீகத் தேடலில் ஒரு அழியாத தடத்தினை ஏற்படுத்தினார். எந்த இறைத்தூதருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆப்ரஹாமிற்கு இறைவனால் வழங்கப்பட்டது. அதுதான் இறைவனின் (அல்லாவின்) நண்பர். கலீலுல்லாஹ் என்று அரபி வார்த்தையில் சொல்லப்படக்கூடிய சொல்லின் பொருள் இறைவனின் தோழர் என்பதே.

தோழன் என்று சொல்லும்போது நாமெல்லாம் நன்றாக புரிந்துக் கொள்ளமுடியும் அதன் மகத்துவத்தையும் அதன் பலனையும். நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளும் எத்தனையோ விஷயங்களை பெற்ற தாயிடமோ அல்லது நம்பி வந்த மனைவியிடம் கூட பரிமாறிக் கொள்ளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் 1426 வருடங்களுக்கு முன்பாக இவ்வுலகின் தலைவிதியை மாற்றி அமைத்த முகம்மது (சல்) அவர்கள் இதை சாதித்தது தனது தோழர்களின் உதவியால்தான். அந்த வகையிலே இறைவனின் தோழராக இருந்து இந்த உலக மக்களின் ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதுப் புரட்சிக்கு வித்திட்டவர் இந்த ஆப்ரஹாம்.

மனித வாழ்க்கை இரண்டுவிதமான ஆதாரங்களுக்காக அல்லது ஆதாரங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒன்று வாழ்வதற்கான ஆதாரம் - பொருள். இன்னொன்று வாழ வேண்டியதற்கான காரணம் - ஆன்மீகம். அதில் பொருள் தேடல் - மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை. ஆன்மிகத் தேடல் - வாழ வேண்டியதற்கான காரணம். ஆன்மீகத் தேடலும், பொருள் தேடலும் ஒன்றாக ஒன்றை ஒன்று சார்ந்து பயணிக்கும்போது அது அதன் இலக்கை எளிதாகவும் எளிமையாகவும் அடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் ஒன்றை ஒன்று மறந்து பயணிக்கும்போது வாழ்க்கை எளிமையில் இருந்து மாறி இடர்களில் சென்று சேர்கிறது. காலப்போக்கில் இரண்டும் வெவ்வேறு பாதையில், வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு வெவ்வேறு திசையில் செல்லும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குபின் ஒன்றை ஒன்று முற்றிலும் அறியாமல், ஒன்றாகத் தொடங்கிய அந்த பதிவுகள்கூட மாறி இரண்டும் இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகளாக அறியப்படுகிறது.

இந்த இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகள் இன்னும் சில படிகள் மேலே சென்று ஒன்றை ஒன்று அழிக்கவும் முற்படுகின்றன. இந்த வினைகள், எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சுழற்சி முறைகளில் மாறி மாறி மனித வரலாற்றில் அறியப்பட்டு வந்தாலும் மனிதனின் அனுபவத்தேடலுக்கே உரிய விசித்திர குணாதியசத்தால் இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் மாறி மாறி நடந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் முற்றிலுமாக ஒன்றை ஒன்று அறியாமல் ஒன்றை ஒன்று அழிக்க முயற்சித்த அந்த கால கட்டத்தில்தான் ஆப்ரஹாம் அவர்கள் இறைவனின் தூதராக தோன்றுகிறார். இரு தேடல்களின் ஆரம்ப விழுதுகளைத் தேடி அதைப் புதுப்பிக்கின்றார். உலகின் ஆன்மீகத் தேடலுக்கான ஒருமித்த அந்த இலக்கை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். இவை யாவும் அவர் முன் கூட்டியே அறிந்து அல்லது தானாக திட்டமிட்டு செய்தாரா? நிச்சயமாக இல்லை. இறைவனின், படைத்தவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

ஆப்ரஹாமின் இந்த மாபெரும் ஆன்மீக புரட்சிக்கு அவருக்கு தேவைப்பட்டது 'தேடல்' என்ற 'புலம் பெயருதல்'. அதில் அவருக்கு உதவியாக அவரது மனைவியர்களான சாரவும், ஹாஜிராவும் மற்றும் லூத்தும் இருந்தார்கள். இந்த காலத்தில் இருப்பது போல் நவீன தகவல் தொடர்போ அல்லது செய்திகளை பரிமாறிக் கொள்ளவோ எந்தவித வாய்ப்பும் இல்லாத கிட்டத்தட்ட 5000 வருடத்திற்கு மேற்பட்ட கால கட்டத்தில் லூத்தும் ஆப்ரஹாமும் தனித்தனியே இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வெவ்வேறு நாடுகளில் தங்களது இறைப்பணியை செய்து வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் ஒருவரை எப்போது சந்தித்தனர் அல்லது இல்லையா என்ற விபரங்கள் வரலாறுகளில் தெளிவாக இல்லை.

ஆப்ரஹாமின் புலம் பெயருதல் ஒரு புதிய தியாகத்தை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு அவரை உள்ளாக்கியது.

ஹாஜிரா.. கருத்தரிந்து ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தார். ஆப்ரஹாமிற்கு முதல் வாரிசு இந்த உலகில் உருவானது. ஆண்மகவிற்கு இஸ்மாயில் (இஷ்மாயில்) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ஆப்ரஹாமிற்கு சுமாராக 86 வயது என்று மதிப்பிடப்படுகிறது. இந்த இஸ்மாயிலின் வம்சம்தான் பிற்காலத்தின் அரபு குலமாக அரேபிய தேசம் என்ற பெயர் தாங்கி மத்திய கிழக்குப் பகுதியில் அறியப்படுகிறது.

இஸ்மாயிலின் பிறப்பு ஏற்கனவே புகைச்சலில் இருந்த சாரா - ஹாஜிரா உறவில் இன்னும் விரிசல்களை அதிகமாக்கியது. தினம் தினம் இவ்விருவரின் பிரச்சனைகள் அதிகமாக ஆப்ரஹாமிற்கு இது ஒரு கவலைக்குரிய விஷயமாகிப்போனது. ஆப்ரஹாம் வணங்கியும் வாழ்ந்தும் வந்த ஜெருசலத்தின் இறை ஆலயத்தில் அவருடைய வாழ்க்கைக்கு எதிர்காலத்திற்கு வழி தேட முற்பட்டார். சாரா ஹாஜிராவின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி தேடலானர். இந்நிலையில் ஆப்ரஹாமிற்கு இறைவன் மீண்டும் ஒரு நற்செய்தி வழங்குகின்றான். சாராவிற்கு ஒரு குழந்தையை அளிப்பதாக வாக்களிக்கின்றான். அந்த குழந்தைக்கு இஸ்ஹாக் (ஐசக்) என்று பெயரிடுமாறு நற்செய்தி அளிக்கின்றான்.

இச்சூழலில் இஸ்மாயிலின் வளர்ப்பும் வாழ்க்கையும் தந்தையின் அரவனைப்பில் சிறப்பாக இருந்தது. ஆனால் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஒருப் பெரிய திருப்பத்திற்கான காரணமாக அமைந்தது குழந்தை இஸ்மாயிலின் வாழ்க்கை. சாரா உடலாலும், மனதாலும் பெரும் நோய்க்குள்ளானார். ஹாஜிராவை தனது இல்லத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆப்ரஹாமின் வாழ்க்கையிலிருந்தே அகற்ற விரும்பினார். தனக்கு இரண்டாவது மகன் பிறக்க இருக்கும் மகிழ்ச்சியில் ஆப்ரஹாம் இருந்தாலும், தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலையை இழந்துவிடுவானோ என்று அஞ்சினார்.

ஒரு நாள் சாரா ஹாஜிரா பிரச்சனை உச்சத்தை எட்டவே.. சாரா ஆப்ரஹாமிடம் ஹாஜிராவையும், இஸ்மாயிலையும் இந்த வீட்டை விட்டு மல்லாமல் இந்த நாட்டைவிட்டே தூரமாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கை வைக்கவே, ஆப்ரஹாம் மிகப்பெரும் கவலைக்குள்ளானர். சாராவிடமிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவும் மற்றும் ஆரம்பகால கஷ்டங்களில் சாராவின் ஒத்துழைப்பு மற்றும் பங்கை நினைக்கும்போது ஆப்ரஹாமல் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினார்.

மிக நீண்ட ஆலோசனைக்கும், பிரார்த்தனைக்குப் பிறகு தனது இரண்டாவது மனைவி ஹாஜிராவையும் அன்பிற்கினிய பாலகன், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு கன் ஆனிலிருந்து (பாலஸ்தீனிலிருந்து) அறியப்படாத ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டார்.

இது நாள்வரை தானும் தனது மனைவியருமாக நடத்தி வந்த புலம் பெயருதல் இப்போது தனது இரண்டாவது மனைவி ஹாஜிரா மற்றும் அன்பு மகன் இஸ்மாயிலுக்காக அவர்களை எங்காவது சாராவின் தொடர்பில்லாத ஒரு இடத்தில் விட்டுவிடுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் பயணம் தொடர்ந்தார்.

பெரும் தியாகத்தின் அடித்தளம் ஒன்று எழுப்பப்பட்டது.

(தொடரும்)

6 comments:

நல்லடியார் said...

//அப்போது ஆப்ரஹாமிற்கு சுமாராக 86 வயது என்று மதிப்பிடப்படுகிறது.//

சகோதரர் அக்பர் பாஷா, தற்கால மனிதனின் அதிகபட்ச வயது 100 க்குள் அடங்கி விடுகிறது. முந்தைய மனிதர்களின் வயது 200 க்கும் மேற்பட்டு அறிய முடிகிறது. இதற்கு அறிவியல் பூர்வமான ஏதாவது சான்றுகள் இருந்தால், உங்களின் இக்கட்டுரைக்கு வலு சேர்ப்பதாக இருக்கும் என நம்புகிறேன். சிரமத்திற்கு மண்ணிக்கவும். நன்றி

மாயவரத்தான் said...

வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

Akbar Batcha said...

அன்பு AR

கிலாபத் தொடர்பான விஷயங்களை எழுத வேண்டுமென்றால் அதற்கென்று சில ஆய்வுகள் செய்ய வேண்டும். தற்போது என்னால் இயலாத காரணத்தால் உங்களின் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

Akbar Batcha said...

அன்புள்ள நல்லடியார்

சில ஆயிரம் வருடங்கள் முன்பாக மனிதர்கள் 200 வருடங்களைத் தாண்டி கூட வாழ்ந்துள்ளார்கள் என்பது சரித்திரங்கள் மூலமாக அறிகின்றோம். அதற்கு அறிவியல் பூர்வமாக என்ன காரணம் என்பதைப் பற்றி விபரங்கள் திரட்டவேண்டும் என்று தற்போதுதான் தோன்றுகிறது. அவ்வாறு விபரங்கள் கிடைத்தவுடன் நான் தெரிவிக்கிறேன். அதே நேரம் உங்களுக்கு ஏதேனும் அறிவியல் விபரங்கள் கிடைத்தால் தயவு செய்து தெரிவியுங்கள்.

Akbar Batcha said...

அன்பு மாயவரத்தான்.

உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. 'எந்த மாதிரியான' என்பதற்கு முடிந்தால் விளக்கம் கொடுங்கள்.

Abu Umar said...

//அன்பு மாயவரத்தான்.

உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.//

கீழ்கண்ட செய்தியைப் படித்தால் புரியும்.


http://pari.kirukkalgal.com/?p=138