Sunday, August 07, 2005

அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?

ஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது?

ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அணு ஆயுதம் என்பது ஏதோ ஒருசில தனிச் சிறப்புகளை உருவாக்கித்தரும் ஒரு ஆயுதமாக நினைத்து அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீன மற்றும் ரஷ்யா நாடுகள் அதை பெருமையாக நினைத்து சேமித்து வைத்தன. இப்பொது அந்த தொழில் நுட்பத்தை தங்களது பொருளாதார முன்னேற்றங்களுக்காக பயன்படுத்த துவங்கியிருப்பது அணு ஆயூதத்தை வேகமாக பரவச் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

'அணு ஆயுதம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், நான் மிகவும் பொறுப்பானவன், நான் அதை அநியாயத்திற்கு பயன்படுத்த மாட்டேன். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றெல்லம் உலகத்திற்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாடுகள், அணு ஆயுதத்தை அடையத்துடிக்கும் நாடுகளைப் பார்த்து, 'உனக்கு இதை வைத்துக் கொள்ளத் தெரியாது, நீ பொறுப்பற்றவன், உன்னிடம் இதைப் பாதுகாக்கும் அறிவு இல்லை.. நீ அயோக்கியன் என்று பேசுவதே' இந்த அணு ஆயுதப் பரவலுக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அணு ஆயுதம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? எனக்கும் அதை உருவாக்கத் தெரியும்.. நீ யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று ஒரு சில நாடுகள் அணு ஆயுதத்தை எப்படி அடைவது என்ற முயற்சியில் இறங்கியுள்ளன.

அணு ஆயுதம் இருந்தால் அதைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருசில நாடுகள் கிறுக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டும் செயல்படுகின்றன, உதாரணத்திற்கு வட கொரியாவைச் சொல்லலாம். உடைந்து போன சோவியத் யூனியனில் இருந்த நாடுகளிடம் அவரவர்கள் பங்கிற்கு கிடைத்த அணு ஆயுதங்களை எல்லம் விலை கொடுத்து வாங்கிய அமேரிக்கா அவைகளில் சிலவற்றை அழித்து மீதியை தனது கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்தக் கொள்கையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி சில அரசியல் நலன்களை அடையத் திட்டமிடுகிறது வட கொரியா.

இன்னும் சில நாடுகள், தன்னிடம் அணு ஆயுதம் இருந்தால் அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னை தாக்காது என்று அணு ஆயுதத்தை எப்படிப் பட்டாவது அடைந்துவிட வேண்டும் என்று போராடுகின்றன. உதாரணம் ஈரான். மத்தியக் கிழக்கு நாடுகளில் நாலா பக்கத்திலும் அமேரிக்கா ராணுவத் தளங்களை அமைத்து ஈரனிற்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதை உடைக்க ஒரே வழி அணு ஆயூதம்தான் என்று ஈரான் அதை அடைந்துவிடத் துடிக்கிறது.

என்ன காரணமாக இருந்தாலும் அணு ஆயுதம் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1950களில் பிரிட்டன் யாருக்கும் தெரியாமல் அணு ஆயுதம் தயார் செய்வதற்கான 20 டன் கன நீரை இஸ்ரேலுக்கு விற்றது தற்போதுதான் தெரியவந்துள்ளது. எந்த நாடு யாருக்கு இந்த அணு ஆயுதம் தொடர்பான தகவல்களையும், சாதனங்களையும், தொழில் நுட்பத்தையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பது அமேரிக்காவிற்கு தெரிய வந்தாலும் தனது அராஜக நிலையின் காரணமாக அமேரிக்காவின் பிரசங்கத்தை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

அமேரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் என்பது தற்போது ஒரு பாதுகாப்பாகத் தெரியவில்லை. உலகில் இருக்கும் துக்கடா நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை எல்லோரிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் பொழுது விடிந்து பொழுது போனால் எவன் எங்கு என்னப் பிரச்சனை செய்வானோ என்று பயம். போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கேட்டால் இது 'பிரிஎம்டிவ் ஆக்ஷன் (pre-emptive action) என்ற தத்துவத்தை சொன்னாலும் கேட்பதற்கு இப்போது எந்த நாட்டிற்கும் திராணியில்லை. கூடவே இங்கிலாந்தும் சேர்ந்து ஜால்ரா அடிக்கும். அணு ஆயுதம் அமேரிக்காவிற்கு பாதுகாப்பு என்பதைவிட பிரச்சனையாகத்தான் தெரிகிறது.

ஈரானைப் பொறுத்தவரை அணு ஆயுதம் அந்த நாட்டிற்கு பாதுகாப்பாகத் தெரிகிறது. யார் கண்டது, அதுவே அந்த நாட்டிற்கு இன்னுமொரு போரை உருவாக்கி வைத்தாலும் வைக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது ஒரு 'வேஸ்ட்' என்றுதான் தெரிகிறது. வல்லரசு நாடுகள் எதுவம் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் இந்த அணு ஆயுதம் உலகிற்கு பிரச்சனையே. இதை ஒழித்துக் கட்டி நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா இந்த அரசியல் மேதாவிகள்? ஹிரோஷிமாவில் நடந்தது வேறு எங்கும் நடக்காமல் இருக்க பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடியும்?

2 comments:

அதிரைக்காரன் said...

//போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை//

புஷ் செஞ்சாலும் செய்வார் ;-)

Amar said...

//இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. //

WRONG.
The above is perhaps the most IGNORANT commen ever made.


There is a Communist China threatening Indian interests in almost ALL aspects.

India went nuclear only because of CHINA, and its threat to Indian sovereignity.