Thursday, December 30, 2004

கடல் கண்ணீர்

நொடியில் கிளர்த்தெழுந்த கடல்நீர் அலைகள்
கொடிபோல் என்னருகில் கிடந்த குடல்வாய் மகவை
தடிகொண்டு தாக்கினவோ, தரைமேல் இழுத்தனையோ - அய்யகோ
அடிவயிறும் அழுகையிலே கடல்நீராய் கரைந்தனையே!

நாடு பல கடந்து நல்லாரும் பொல்லாரும்
சேர்த்திழுத் தணைத்து செப்ப ஒரு மொழியின்றி
கோர்த்து மரணத்தை கொடுங்கோலாய் மாற்றினையே
நேற்றுவரை புன்சிரித்த என்கடல்நீர் காரிகையே!

காற்றும் கடல்நீரும் எம்வாழ்க்கை ஊற்றுக்கள்
போற்றியதன் புகழ்பாடி உன்வாசலிலே வாழ்ந்துணர்ந்தோம்
ஆற்றுநீர் போதாதென்றோ அழுகைநீர் கேட்டுவந்தாய்
ஆறப் பொறுக்குதிலையே எமதழுத நெஞ்சங்கள்!

உன் சீர்கொண்டு வாழ்ந்தோம் - பொல்லா
உன் சீற்றம் கொண்டு மடிந்தோம்
ஏற்றமிகு இறைவனின் விதிதான் இதுவென்றால்
போற்றிஅவன் காலடியில் பொறுமையினை தேடிடுவோம்.

No comments: