Thursday, December 09, 2004

குப்பைத்தொட்டி

போர்க் லிப்ட்டின் ஸ்டீரிங்கை இடதும் வலதுமாக தேவையில்லாமல் வளைத்து அரசு பேருந்தை ஓட்டுவதுபோல் கற்பனையில் மிதந்தவாறு ஓட்டிக்கொண்டிருந்தான் அலி. அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டிற்காக வந்து இறங்கும் சாமன்களை டிரக்கிலிருந்து இறக்கி வைப்பது அலிக்கு மிகவும் குஷியான வேலை. காய்கறிகள் தொடங்கி அலங்காரப் பொருட்கள் வரை எல்லா லாரிகளும் காலையிலேயே சாமன்களை இறக்க வந்துவிடும். சாமன்களை இறக்கிய கையோடு அழுகிய காய்கறிகள், காலாவதியான உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக பிரட் மற்றும் பால், தயிர் வகைகளை திருப்பி எடுத்து செல்ல வந்திருக்கும் லாரிகளில் அவைகளை ஏற்றி அனுப்பிவைக்க வேண்டியது அலியின் அதிகாலை வேலை. வேலை சற்று கடினம்தான் என்றாலும், போர்க் லிப்ட் ஓட்ட வாய்ப்பு கிடைப்பதால் அலி ஏற்றுக்கொண்டான்.

'பென் புதா?' (எங்கே பொருட்கள்?) என்ற குரலை கேட்ட அலி பேருந்திலிருந்து போர்க் லிப்டிற்கு மாறினான்.

'ஈஜி..ஈஜி..' (வருது வருது) என்று முழங்கியவாறு குரல் வந்த திக்கை தாண்டிப்போனான் அலி.

குரலுக்கு சொந்தக்காரியான ருக்கையா பதிநான்கு வயதே நிறைந்த சிந்தி இனத்தை சேர்ந்த இந்தியனா அல்லது பாகிஸ்தானா என்று ஒரு விபரமும் சொல்ல முடியாத பெண். அவளுடைய கொள்ளு தாத்தா காலத்தில் இந்த நாட்டிற்கு வந்ததாக சொல்வார்கள்.

ருக்கையாவிற்கு தன் தோழிகளின் உரையாடலில் கவனம் செல்லவில்லை. கிழிந்த புர்காக்கவை இழுத்து மார்பை மூடியவாறு அருகில் இருந்த குப்பைத்தொட்டியை ஒரு முறை திரும்பிப் பார்ததாள். சஞ்சலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மனதில் தம்பி இத்ரீஸ் நொண்டிக்கையுடனும், காலுடனும் வந்து நின்றது குபுக்கென கண்ணில் நீரை வரவழைக்க, வேகமாக முகத்தை புர்காவினால் மூடி சத்தமின்றி அழ ரம்பித்தாள். 'என்று இந்த நிலை மாறும் இறைவா?' என்று கதறும் மனதை கட்டுப்படுத்தி கண்களை துடைத்து முகத்துணியை அகற்ற சற்று நேரம் பிடித்தது.

சர்க்கரை நோயில் விழுந்ததிலிருந்து வலது கால் விரல்கள் அனைத்தும் அழுகிப்போக எந்த வேலையும் பார்க்க இயலாமல் வீட்டோடு விழுந்து கிடந்தான் தகப்பன் மூசா. இதில் மூன்று மனைவிமார்கள் வேறு. நான்கு வருடம் முன்னால் வரை ஒரு கான்டிரக்டிங் கம்பேணி வேர்ஹவுசில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவன் நிரந்தர மாத வருமானம் வரும் திமிரில் மூன்று திருமணங்களை முடித்து தனது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டான். ஆணும் பெண்ணுமாக சேர்த்து மொத்தம் பதினைந்து பிள்ளைகள், ஆனால் மூன்று குடும்பங்களையும் ஏறக்குறைய பிச்சை எடுக்க வைத்துவிட்டதோடு தினமும் அடி உதை என்று தெருச்சண்டைக்கு குறைவில்லை. பார்த்த வேலையையும் இழந்து, கால்களும் சரியாக நடக்க முடியாமல் பிறருக்கு சுமையாகிப் போனான்.

விடிந்ததும் நான்கு சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு பெப்சி கேன் பொறுக்க கிளம்பிவிடுவாள் தாய் ஜொகரா. அண்ணன்மார்கள் இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் வாளியைக் கட்டிக்கொண்டு தெருத் தெருவாக கார் கழுவ போயவிடுவார்கள். எங்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு கூட்டிற்கு வந்து சேரும் பறவைகள் போல் துங்குவதற்கு மட்டும் வந்து சேர்ந்துவிடுவார்கள். யாருக்கும் குடும்பத்தைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ஒருவனும் செலவிற்கென்று எதுவும் கொடுப்பதுமில்லை அல்லது வாங்கித்தருவதுமில்லை. அவரவருக்கு பசிக்கும்போது வயிறு நிறைந்தால் போதும், அடுத்தவர் வயிரைப் பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. கேட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ள காசு சேர்க்கிறேன் என்பார்கள். நாடோடி வாழ்க்கை வாழும் இந்த நாதியற்ற கூட்டத்திற்கு கல்யாணம் ஒரு கேடு. சற்று வாய் விட்டே திட்டினாள். என்னை கல்யாணம் செய்துகொள்ள வருபவன் எனக்கு எவ்வளவு பணம் தரப்போகிறானோ.. வெறுமையுடன் சிரித்தவள் போர்க் லிப்டின் சத்தம் கேட்டு குப்பைத் தொட்டிப்பக்கம் பார்த்தாள்.

காலைப் பொழுதில் பள்ளிக்குச் செல்லும் வேன்களையும் கார்களையும் தவிர்த்து ரோட்டில் வேறு எந்த ஆரவரங்களும் இல்லை. சீருடை அணிந்த சிறுவர்கள் கார்களிலும் வேன்களிலும் தூங்கிவிழுந்து செல்வதை பார்க்க பார்க்க ருக்கைக்யாவிற்கு ஒரு நாளைக்காவது பள்ளிக்கூடம் சென்று ஒரு வகுப்பறையில் உட்கார்ந்துப் பார்க்க ஆசை. நடக்கிற காரியமா? வயதிற்கு வரும் வரை ருக்கையாவிற்கு டிராபிக் சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்பதுதான் வேலை. தற்போது அந்த வேலையை தங்கை சபியாவிற்கு கொடுத்துவிட்டு தோழிகளுடன் சேர்ந்து இப்படி சூப்பர் மார்க்கெட்டில் அலைய ஆரம்பித்தாள்.

'என்ன ருக்கையா? பகல் கனவா? சல்மான் கான இல்லை ஷாருக் கானா?'

கேள்வி கேட்டவள் ருக்கையாவின் தொழி, ஆப்பிரிக்கா இனத்தை சார்ந்தவள். ஹிந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பவள். ருக்கையாவுடன் பழகுவதற்கு அதுவும் ஒரு காரணம். ஓசியில் படம் பார்க்கலாம். அது என்ன விந்தையோ தெரியாது இந்தியப்படங்களுக்கு மட்டுமே உள்ள ஈர்ப்பு பார்ப்பவர்களை இந்த உலகத்தைவிட்டு கற்பனை உலகத்திற்கு சுலபமாக அழைத்து சென்றுவிடும். காலுக்கும் அரைக்கும் பிச்சை எடுக்கும் சமுதாயம் மொழி தெரியாவிட்டாலும் இந்திப் படங்கள் என்றால் உலகத்தை மறந்து உட்கார்ந்து பார்ப்பார்கள். இருக்கட்டும் கற்பனையிலாவது கொஞ்சம் சந்தோஷப்படுவோமே!

'ஏய் குட்டிங்களா? என்னாங்கடி.. ' சத்தமிட்டவாறு போர்க் லிப்டை விர்ரென்று ஓட்டி சென்றான் அலி. இவன் என்ன பேசுகிறான் என்று அவர்களுக்கு புரியாததால் இவன் இஷ்டத்திற்கு தமிழில் அவர்களை கிண்டலிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அவனுக்கு.

இந்த கேடு கெட்ட வாழ்க்கைக்கு எப்போது முடிவு வரும் என்ற நினைத்தவாறு குப்பைத் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்கையா? அவள் வயது வந்த காலத்திலிருந்தே இப்படி விபரீதமான சிந்தனைகள் வர ரம்பித்துவிட்டது. நியாமானவைகளை சிந்திப்பதென்பது அவளது குடும்பத்தை பொறுத்தவரை வழக்கில் இல்லாத ஒன்று. அண்ணன்களுக்கும் அம்மாவிற்கும் சில நேரங்களில் இவள் பேசுவதே புரியாது. மானம் அவமானம், குடும்பம், உறவுகள், நட்பு, நல்லது கெட்டது என்று தேவை இல்லாமல் இவள் நிறைய பேசுகின்றாள் என்று அவ்வப்போது வீட்டில் சந்தி சிரிக்கும். தம்பி இத்ரீசை பார்ததிலிருந்து ருக்கையா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

'அக்கா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல .. யாருமே எங்கிட்ட நல்லாவே பேச மாட்டேங்கிறாங்க. நான் நொண்டியா இருக்கிறதுனால எனக்கு சோறு போடனுமேன்னு பயப்படறாங்க பொல இருக்கு'

'டேய் நான் இருக்கன்ல'

'எததனை நாளைக்கு'

'நான் உயிரோட இருக்கிற வரைக்கும்'

'அது சரி..' இழுத்தான் 'நேத்து அண்ணன் இழுத்துப் போட்டு உதைக்கும் போது நீயும்தான சேர்ந்து அடி வாங்குன'

'தலையெழுத்து அப்படி'

'சரி நான் என்ன பன்னினேன். ஏன் என் காலையும் கையையும் ஒடைச்சு ஈனாமாக்கி இப்படி பிச்சை எடுக்க வைச்சானுங்க' சொல்லிவிட்டு தேம்பினான் இத்ரீஸ்.

'நான் கானப் போனவுடன.. நீங்க யாரவது என்ன ஒழுங்க தேடிப்பாத்தீங்களா' தேம்பல் அழுகையாக மாறியது. 'என்னத்தையோ திங்க கொடுத்தானுங்க.. மயக்கம் தெளிஞ்சு பார்தப்போ என் கை¨யும் காலும் பேன்டேஜ் போட்டு இருந்தது.'

'போதுன்டா, ஏன் அதையே சொல்லி சொல்லி மனசை கஷ்டப்படுத்துற'
குப்பைத்தொட்டியைப் பார்த்தவாறு நேற்று இரவு நடந்த உரையாடலை அசை போட்டாள் ருக்கையா.

ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு நாள் இத்ரீஸ் அவன் வயது சிறுவர்களுடன் வெளியே சென்றவன் திரும்பி வரவே இல்லை. சென்ற வாரம் சபியா சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்கும்போது இத்ரீஸ் அங்கு நின்று பிச்சை எடுப்பதைப் பார்த்தவள், ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் அவனை மறைத்து வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டாள்.

அவன் காணமல் போனதும், எங்கேயோ பக்கத்து தெருவில் ஏழைகளுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்லி இரண்டு கருப்பு மனிதர்கள் இவனை அழைத்துச் சென்றதும் எதையோ சாப்பிட கொடுத்து மயக்கமடைய வைத்து இவனது கையையும் காலையும் வெட்டி விட்டார்கள் என்று சொன்னதையும் கேட்க உடல் நடுங்கிப் போனது ருக்கையாவிற்கு. அவனைப் பார்த்து பார்த்து அன்று முழுவதும் எல்லோரும் அழுததுதான் மிச்சம்.

கடந்த நாலு மாதமாக சிக்னலில் நின்று பிச்சை எடுத்து சம்பாதித்து கொடுப்பதுதான் அவனது வேலை. தினமும் எவ்வளவு கிடைக்குமோ அத்தனையும் மணிக்கொருமுறை காரில் வந்து வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் இந்த பிச்சைக்கார தொழில் நடத்துக் கூட்டம். மாலை எட்டு மணிக்கெல்லாம் அங்கங்கே நின்று பிச்சை எடுக்கும் இந்த கூட்டத்தை திரும்ப அழைத்து சென்றுவிடுவார்கள். தினமும் ஒரு சிக்னல், ஷாப்பிங் சென்டர், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என்று இடத்தை அவ்வப்போது மாற்றிவிடுவார்கள். ஊனமுற்ற அதிலும் குறிப்பாக சிறுவர்களாக இருக்கும் போது இரக்கம் நிறைந்த தனவான்கள் நிறையவே தருமம் செய்வார்கள். குறைந்தப் பட்சம் தினமும் நூறு ரியால்களாவது கிடைத்துவிடும். அதிர்ஷ்டம் இருந்தாள் நூறுக்கு மேலும் கிடைக்கும். அதிகம் கிடைத்தால் அன்றைக்கு இரவு நல்ல சாப்பாடும் கிடைக்கும், இல்லையென்றால் குப்சும் தயிரும்தான் தினசரி சாப்பாடு. அவ்வப்போது அடி உதைக்கும் பஞ்சமுமில்லை. தீக் காயங்களும் கூட உண்டு. காரணம் இந்த சிறார்களை எப்போதும் பயத்துடனேயே வைத்திருக்க வேண்டும் என்பது அவர்களின் தொழில் நியதி. நிறைய கண்காணிப்புகள் வேறு.

இத்ரீஸ் சொல்ல சொல்ல ருக்கையாவிற்கு உண்மையிலேயே பயம் உண்டாகிப் போனது. பொதுவாகவே ருக்கையா தெருவிலேதான் வளர்ந்ததும் வாழ்ந்ததும் என்றாலும் இவ்வளவு கொடூரமாகவும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்துப் பார்க்கும் போது குறைந்தப் பட்சம் அண்ணன்களும் அப்பனும் செய்வது ஒன்றும் அத்தனை பெரிதாக தோன்றவில்லை.

பாசமும், பரிதாபமும் இத்ரீஸ் வந்த அன்றும் மறுநாளும்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாளிலிருந்து இந்த நொண்டிப் பையனை வைத்து நாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். அம்மாவிற்கு அடுத்த நாளே தினமும் ஒவ்வொரு மசூதியாக அழைத்துச் சென்று அவனது உடல் ஊனத்தைக் காட்டி வசூல் செய்ய விருப்பம். ஆனால் சோம்பேறி தகப்பன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டான். பொது இடங்கள் என்றால், இவனை வைத்து சம்பாதித்த கும்பலிடம் இவன் திரும்பவும் மாட்டிக் கொள்வான் என்று கொஞ்ச நாட்களுக்கு இத்ரீசின் பிச்சைத்தொழில் அண்ணன்களின் அறிவுரையால் தள்ளிப் போடப்பட்டது.

ருக்கையாவிற்கு இத்ரீசை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று ஆர்வம். ஆனால் வெளியே சொல்ல தைரியம் இல்லை. காரணம் இங்கே இலவச படிப்பு என்பது இந்த நாட்டு குடிமக்களுக்கு மட்டும்தான். ருக்கையாவிற்கோ நாம் எந்த நாட்டு குடிமக்கள் என்று ஒரு தெளிவில்லாத நிலை.

நீண்ட பெருமூச்சுடன் குப்பைத்தொட்டியை நோட்டமிட்டாள் ருக்கையா. அங்கே பத்து பதினைந்து பூனைகள் குப்பைத்தொட்டிக்குள் ஏறுவதும், குதிப்பதுமாக தனது வயிற்று ஜீவனுக்காக போராடிக் கொண்டிருந்தன. குப்பைத் தொட்டியை நோக்கி வரும் வேகமான போர்க் லிப்டின் சத்தத்தில் எல்லா பூனைகளும் விழுந்தடித்து சிதறி ஓட ருக்கையாவும் அவளது தோழிகளும் திடீரென எழுந்து குப்பைத் தொட்டியை நோக்கி விழுந்தடித்து ஓடினார்கள்.

பூனைகளைவிட வெகு வேகமாக குப்பைத்தொட்டிக்குள் பாய்ந்து குதித்து அங்கே கொட்டப்பட்ட குப்பைகளுக்கு மத்தியில் தனது வாழ்வாதரங்களை தேட ஆரம்பித்தார்கள். அழுகிய காய்கறிகள், காலவதியான பால் தயிர் மற்றும் பிரட்கள், வீணாகிப் போன மாமிசங்கள் என்று முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளிலும் தனது புர்காவிலும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதுவரை போர்க் லிப்டில் குஷியாக சுற்றி வந்து கொண்டிருந்த அலி, பூனைகளுடன் சேர்ந்து போராடும் ருக்கையாவையும் அவளது தோழிகளையும் பார்த்து முகம் வாடி குப்பைத்தொட்டியை விட்டு துரமாக போய்க்கொண்டிருந்தான்.

No comments: