Monday, December 13, 2004

முருங்கை மரங்கள்

பாலையில் சோலை தேடும்
பாசமிகு நண்பர்களே!
இரண்டாம் வீட்டிர்க்குள்
முதலாம் வீட்டைத் தேடும்
பகல் கனவு பிரியர்களே!
பாலைவன சொந்தங்களே!

சோலைகள் கிடைத்தாலும்
பாலையை விட மனமில்லை
சோகமும் ஒரு சுகம்தானே!
உறுமீன் வருமளவும்
காத்திருந்த காலம் போய்
ஓடுமீன் ஓடட்டும் என்று
வாழுகின்றோம் நண்பர்களே!

இங்கே வெய்யிலுண்டு வியர்வை இல்லை!
வீதியுண்டு மனிதர்களில்லை!
வீரமுண்டு ஆனால் களமில்லை!
இயந்திர மனிதர்களாய்
இயங்குகின்றோம் நண்பர்களே!

ஆறுண்டு, கையில் வலை உண்டு
ஆனால் நீரில்லை
ஏடுண்டு, கையில் எழுத்தாணி உண்டு
ஆனால் வார்த்தைகளில்லை
வானுண்டு, வானில் நிலவுண்டு,
ஆனால் கண்ணில் ஒளியில்லை
ஆணுண்டு, அருகில் பெண் உண்டு,
ஆனால் காதலில்லை

தேடுகின்றோம் நண்பர்களே!
தேடிக்கொண்டே இருக்கின்றோம்
தொலைத்தது என்னவென்று
தெரியாமல் தேடுகின்றோம்!

இளமையில் கல் என்பார்,
இங்கே முதுமையிலும் கல்தான்!
அசைக்கமுடியுமா?
மாதம் இரு மொட்டை அடித்தாலும்
மயங்கமாட்டோம் நாங்கள்.
கற்களாய் வாழுகின்றோம்
கல்லுக்குள் ஈராமாய் அழுகின்றோம்

விமானத்தில் பறந்து வந்த
வெளிநாட்டுக் கைதிகளே!
வேகமாய் விலைபேசி
விழுந்தடித்து வந்து சேர்ந்தோம்
விலை போனது தெரியாமல்
வீரம் பேசி வாழுகின்றோம்.

முருங்கை மரங்களய்யா நாங்கள்,
ஒரு வேரில் ஒன்றாக வாழ்ந்த நாம்
காலத்தின் அறுவடையில்,
குடும்பத்தின் நலிவு நீங்க
வெட்டிய கிளைகளாய், வேரற்ற உடல்களாய்
வற்றிய மனதுடனும் வாடிய முகத்துடனும்
புதிய வேர்களைத்தேடி வந்த
முருங்கை மரங்களய்யா நாங்கள்

1 comment:

அபுல் கலாம் ஆசாத் said...

அக்பர்,

வருக இன்னும் நிறைய தருக. முருங்கை - முறுங்கை அல்ல.

வாழ்த்துகள்

அன்புடன்
ஆசாத்