Wednesday, February 02, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும்

'முஸ்லீம்களின் ஒரு தலைமுறை அழிக்கப் பட்ட பிறகுதான் இந்துக்களான நாங்கள், எதை புரிந்துக் கொள்ள வேண்டுமோ அதை புரிந்துக் கொள்ளப் போகின்றோம்'. 'இந்திய முஸ்லீம்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?' என்ற ஒரு கேள்விக்கு, ஒரு நாடறிந்த சமூக அறிவியலர், மனோதத்துவ நிபுணர் சொன்ன மறுமொழிதான் இது. (அவரின் பெயர் இங்கே குறிப்பிட விரும்பவில்லை).

அந்த நிபுணரின் கருத்து கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும், பொதுவாகவே அவர் இப்படி எல்லாம் பேசக்கூடியவர் அல்ல என்பதால் அவருடைய பதிலை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம் தற்போது இந்திய முஸ்லீம்கள் அப்படி ஒரு எதிர்பாரத சூழலில் சிக்கி நிற்பது உண்மையே. மாற்றார்கள், முஸ்லீம்களை மாற்றார்களாக்கி வைத்திருப்பதும் அதற்கு ஒருசில முஸ்லீம்கள் துணை இருப்பதும்தான் இந்த அவலச் சூழலுக்கு காரணம். அப்படி முஸ்லீம்கள் மாற்றார்களாகவே இருக்க வேண்டியது மற்றவர்களுக்கு அவசியத் தேவையாகவும் இருக்கின்றது.
முஸ்லீம்கள் ஒரு இக்கட்டான காலச்சூழலை கடந்து கொண்டிருக்கிறர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகின் எல்லா பாகங்களிலும், முஸ்லீம்கள் பெரும் துன்பத்திற்க்கு ஆளாகி வருகின்றார்கள்.

பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும் முஸ்லீம்கள் உள்ளும் புறத்திலும் விமர்சனங்களினாலும் அல்லது விஷமத்தனமான பிரச்சாரங்களினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதார மற்றும் உயிர் சேதங்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

ஒருசிலர் இதை தவறாக புரிந்துக் கொண்டு இஸ்லாம் ஒரு கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள், முஸ்லீம் எழுத்தாளர்களையும் சேர்த்துதான். இஸ்லாமிய மதத்தில் குறைபாடுகள் என்று விரிவான ஊடக விவாதங்கள் கூட நடந்து வருகின்றன. இன்னும் ஒரு சிலர் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான குரானை, முஸ்லீம்களின் புனித மறையை மாற்றி அமைக்க ஆலோசனை தருகின்றனர். இதற்கு காரணமாக குரானில் உள்ள ஒருசில கருத்துக்கள் காலத்திற்கு முரன் பட்டதாகவும், வளர்ச்சி அடைந்த இந்த உலகச் சூழலில் அவைகள் ஒத்துப் போகாது என்றும் அறிவுரை கூறுகின்றனர். இன்னும் ஒரு சாரார், இஸ்லாத்தை அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று இரண்டாகப் பிரித்து முஸ்லீம்களை குறைந்தப் பட்சம் ஆன்மீக இஸ்லாத்தோடு நிறுத்திவைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்களும், வசை மொழிகளும் இன்னும் இடையுறாமல் செய்யப்படும் பிர்ச்சார தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது போன்ற பிரச்சாரங்களும், தாக்குதல்களும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் இதைவிட இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. நபிகள் நாயகம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை மாற்றார்களிடம் எடுத்து வைக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை இது தொடர்கிறது, இன்னும் இந்த உலகம் உள்ள வரை ஓயவும் போவதில்லை. ஆனால் முஸ்லீம்கள் அவ்வப்போது தங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டியதும், இப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான பழிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. அதேநேரம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களைப் பற்றிய மாற்றாரின் தவறான சிந்தனைகளையும் பார்வைகளையும் களைய வேண்டியது முஸ்லீம்களுக்கு கடமையாகிறது. மாற்றாரின் அரசியல் அரங்கில் பகடைக் காய்களாக உருட்டப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முஸ்லீம்களின் செயல்பாடுகள் விவேகமுள்ளதாக இருக்கிறதா என்றால் மிகப் பெரிய கேள்விக் குறிதான் முன்னால் நிற்கிறது.

முஸ்லீம்கள் செய்வது எல்லாம் இஸ்லாம் இல்லை - இஸ்லாத்தில் சொல்லப் பட்டவைகள் அனைத்தையும் முஸ்லீம்கள் பின்பற்றுவதுமில்லை. இது எதார்த்த நிலை, ஆனால் முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம் அடையாளப் படுத்தப்படுவது வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் இல்லாத ஒரு நிலை. இந்த நிலைக்கு மிகப்பெரும் காரணம் முஸ்லீம்களே. தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது. இது ஒருபுறம் இருக்க முஸ்லீம்கள் எல்லாம் நம்மை போன்ற மனிதர்கள்தான், ஆனால் அவர்கள் பின்பற்றுகிற மார்க்கம்தான் அவர்களை அப்படியெல்லாம் செய்ய வைக்கிறதென்று இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பிரிக்கின்ற வேலையும் மும்முறமாக நடைபெறுகிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கணக்கில் விடை தவறாக இருப்பதற்க்கு காரணம் பார்முலாவை சரியாக பயன்படுத்தாமல் கணக்குப் பாடத்தையே தவறு என்று சொல்வது போல் இருக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வை தன்னிடத்திலே கொண்டுள்ளது. முஸ்லீம்கள் அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதுதான் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை மற்றும் பரிட்சை எல்லாம். இஸ்லாம் ஒரு போதும் தன்னை பரிட்சித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள்தான் தன்னை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். இஸ்லாம் இந்த உலக வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு போதுமான வழிகாட்டுதல்களை குரான் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழ்க்கை நடைமுறை மூலமாக கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் மாற்றாரை குறை கூறுவதற்கு முன்னால் முஸ்லீம்கள் தங்களை சுய சோதனை செய்து கொள்வதும் தாம் பயணம் செய்கிற பாதையை அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது.

தற்போது உலகில் மிக ஆர்வமாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதும், சாமனிய மனிதர்களின் சராசரி சிந்தனைகளை கவர்ந்திருப்பதும் 'பயங்கரவாதம்' என்கிற விஷயம்தான். இதையே தனது மிகப்பெரும் பிரச்சனையாக முன்னால் வைத்து உலகம் அனைத்தையும் தன்பால் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனக்குத் தேவையானதை சாதூர்யமாக அடைந்து கொண்டுமிருக்கிறது அமேரிக்க அரசாங்கம். கடந்து மூன்று வருட காலமாக நடக்கக்கூடிய பயங்கரவாத்திற்க்கு எதிரான போர் வேறு எதற்கோ எதிராகவும் மற்றும் வேறு எதையோ பாதுகாக்கவும் நடைபெறுவது நன்றாக புரிய வரும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க பயங்கரவாதம்தான் சரி என்று தொடங்கிய இந்த யுத்தம் முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று தற்போது உடலே ரணகளமாகிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத்தின் அன்னை தீவிரவாதம் என்றும், தீவிரவாதம் தோன்றியது அடிப்படைவாதத்தில் என்றும், அடிப்படைவாதத்தின் உயிர்நாடி இஸ்லாம் என்று அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறது இஸ்லாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில டிஷ்னரியில் கூட அடிப்படைவாதம் என்றால் மதத்தின் அடிப்படை அம்சங்களை முறையாக பின் பற்றுவது என்றும், அதற்கு பைபிளை காரணங் காட்டிவிட்டு, அடிப்படைவாதி என்றால் முஸ்லீம் என்று அடையாளப் படுத்துகிறது. அடிப்படைவாதி என்றால் ஒன்றும் அசிங்கமான வார்த்தை இல்லை, ஆனால், அப்படி ஒரு மாயை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அறிவியலின் அடிப்படை தெரிந்தவனை, அதில் சிறப்பாக செய்பவனை விஞ்ஞானி என்று சிறப்பிக்கும் இந்த ஊடக உலகம், மதத்தின் அடிப்படை தெரிந்தவனை மனித நேயத்திற்க்கு எதிரானவனை போல் சித்தரிக்கிறது. சமீபத்தில் இந்தியாவையே கண்ணீர்விட வைத்த சுனாமி பேரழிவில் உடல் உருவம் பார்க்காமல், சாதி மதம் பாராமல் வேலை செய்ததில் முன்னிலை வகித்தவர்கள், அடிப்படைவாதிகள், மனித நேயத்திற்க்கு எதிரானவர்கள் என்று பறைசாற்றப்பட்ட TMMK, RSS என்ற மதவாத அமைப்புகள்தான்.

ஆனால் உலகம் முழுவதும் அடிப்படைவாதி, தீவிரவாதி இன்னும் பயங்கரவாதி என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்டு நிற்பவர்கள் முஸ்லீம்களே. ஏன் இப்படி? எங்கிருந்து தொடங்கியது இந்த போராட்டம். சாமுவேல் ஹண்டிங்டன் சொன்ன 'clash of civilization' தொடங்கிவிட்டதா? அல்லது பாரத முன்னாள் ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் சொன்னது போல் ' நாகரீகங்கள் ஒரு காலத்திலும் மோதிக் கொள்வதில்லை, அவை எப்போதும் ஒன்றை ஒன்று உயர்விக்கவே செய்கின்றன. மோதிக்கொள்வதெல்லாம் காட்டு மிராண்டித் தனங்கள்தான்' என்றாரே அதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறதா?


(தொடரும்)

6 comments:

ROSAVASANTH said...

தொடர்ந்து எழுதுங்கள். நிச்சயம் கவனமாய் படிப்பேன்.

ஆனால் இஸ்லாத்தில் மாற்றம் குறித்த எந்த விவாதமும் தேவையில்லை என்ற முன்தீர்மானத்துடன் இருப்பது அடிப்படைவாதம்தானே!

அடிப்படைவாதி என்பது அடிப்படை தெரிந்தவர் என்ற அர்தத்துடன் சொல்லப்படுவதல்ல. அடிப்படைகள் மாறாதது என்று விடாப்பிடியாய் நம்புவதை குறிப்பிடுவது. இதை விஞ்ஞானத்துடன் நீங்கள் சொல்வது போல் ஒப்பிடமுடியாது. விஞ்ஞானம் என்பது முற்று முழுதாய் மாற்றம் தேவையில்லாததாய் நிலைத்துவருவது அல்ல. விஞ்ஞான அடிப்ப்படி தெரிந்தவரின் பார்வை மட்டுமல்ல, விஞ்ஞானத்தின் அடிப்படையே காலத்துக்கு காலம் மாறக்கூடியதே. மாறிக்கொண்டிருக்கிரது. அதை எல்லா காலத்துக்குமான வாழ்க்கை விளக்கம் சமுகத்துகான சட்டதிட்டங்கள் (ஆன்மீக விளக்கம் அல்ல) ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது, அதில் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கும் மத அடிப்படைவாதத்துடன் ஒப்பிடமுடியாது.

ROSAVASANTH said...

மேலே சொன்னது இந்த பதிவுடனான ஒரு முரண்பாடு மட்டுமே. மற்றபடி இந்த பதிவின் பொதுவான தொனியுடன் வெகுவாக ஒத்துபோகிறேன்.

அல்வாசிட்டி.சம்மி said...

நல்ல விளக்கம் அன்பரே, ஆதிக்க அமெரிக்காவால் இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே துன்புருத்தப்படுவது உண்மை.

ஆனால் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் ஆதிக்க வர்க்கத்தை எதிற்கிறோம் என்று கூறி தீவிரவாதத்தை கையிலெடுத்து தன் சொந்த மக்களள கொல்வதை நீங்கள் நியாயப்படுத்த மாட்டிகள் இல்லையா?

அத்தகைய சிலரின் நடவடிக்கையால் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் பாதிக்கப்படுவது தான் அதிகம் நடக்கிறது.

சன்னாசி said...

http://www.time.com/time/covers/1101050207/
இது காலாவதியாகும் இணைப்பு என்பதால், விரைவில் பார்த்துவிடுவது உசிதம்.

அபூ முஹை said...

சம்மியின் நடுநிலை நோக்கம் மனிதத்தை பிழைக்க வைக்கிறது.

Abu Umar said...

///முஸ்லிம்கள் தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது.///

சரியாகச் சொன்னீர்கள்