என்னைத் தொட்ட தென்றல்தான் உன்னையும் தொடுகிறது
என் விழிகளில் விழுந்த வெளிச்சம்தான் உன் விழிகளில் மிளிர்கிறது
எனக்கு குளிரும் தென்றல் உனக்கு ஏன் சுடுகிறது?
ஒற்றை வான் கூரைக்குள்ளே இத்தனை விரிசல் ஏன் நமக்குள்
எங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோம்
களி மண்ணில் படைத்தான் கடவுள்
இரத்தமும் சதையும் சேர்ந்த இம்மானிடப் பதரை
தோற்றங்கள் வெவ்வேறாயினும் தோன்றுதல் ஒன்றுதானே
எனக்காக நீ சிரித்தாய் உனக்காக நான் அழுதேன்
இருந்தும் ஏன் இத்தனை இடைவெளி
விரைந்து வா நண்பா வேர்களைத் தேடுவோம்!
பூக்கள் பலவானாலும் பச்சை கிளைதானே உயிர்நாடி
இச்சைகளின் போராட்டம் எத்தனையோ நமக்குள்ளே
இருளை போர்வையாக்கி இரவிலே மரணித்தெழுந்தோம்
பகலிலே இரவைத்தேடி பாதியை நடித்தே கழித்தோம்
மீதி என்னவென்று யாருக்கு தெரியும் நண்பா
வீதிகள் பலவாறாயினும் சேருமிடம் ஒன்றுதான்
சேர்ந்தே தேடுவோம் வா சோதனை ஒன்றுதானே!
ஒரு பொய் வாங்கினால் நூறு பொய்கள் இனாம் என்றான்
பொய்களின் (பொருளாதார) சந்தைக்குள் போலீஸ் கட்டுப்பாடு
உண்மையின் வீதியிலே ஒருவனும் அங்கில்லை
பொய்களின் புதர்களிலே உண்மை ஒளிவதில்லை
பொய்களை விற்றா உண்மையை வாங்கமுடியும்?
பொய்களின் வீதிகளில் நமக்கென்ன வேலை நண்பா
போகட்டும் பழைய கதை புதையலை தேடலாம் வா!
நீர்கள் ஓடும் வழியெல்லாம் ஆறுகள் அமைவதில்லை
ஆழக்கடல் நண்பா அங்கே அலைகளுக்கு வேலையில்லை
கடமையை மறந்துவிட்டு சுதந்திரம் கேட்கிறோம் நாம்
அட நேரமில்லை நண்பா நம் சோகம்தனை புலம்ப!
பசித்தவன் உணவைத் தேடுவதுபோல்
படைத்ததன் பலன் தேடலாம் வா!
(தொடரும்)
No comments:
Post a Comment