Saturday, May 10, 2014

விதியென்னும் வீதியில்

விதியைப் பற்றி பலவாறாக பல சித்தாத்தங்களும், தத்துவங்களும், கொள்கைகளும், மதங்களும், வேதப்புத்தகங்களும் மனிதர்களுக்கு விளக்கமளித்துள்ளன.  ஆனால், அவைகளை படிப்பதன் மூலம் நாம் புரிந்துக்கொண்ட அறிவைவிட, வாழ்க்கையில் அவைகளை அனுபவித்து தெளிந்துக் கொள்ளும் அறிவு உண்மையானது, பலனளிக்க வல்லது. பொதுவாக விதி என்பது மனிதனின் நம்பிக்கைகளை தகர்த்தெரியும் ஒரு எதிரியைப் போன்றுதான் பெரும்பாலனவர்களின் அணுகுமுறை இருக்கிறது.  இன்னும் சிலருக்கு விதி மனிதனை இறுக்கிப்பிடித்திருக்கும் மூக்கணாங்கயிறு போல் தோன்றுகிறது. 

விதி என்பது இறை நம்பிக்கையின் ஒரு அங்கம்.  மனிதகுலம் மட்டுமல்லாமல் மற்ற படைப்பினங்கள் அனைத்தையும் சேர்த்து தன்னுள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தின் ஒட்டு மொத்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட விதிமுறைகள்தான் விதி.  அதனுள் அடங்கியதுதான் நமது வாழ்க்கை. அதில பல விஷயங்கள் நமது அறிவிற்கு அப்பாற்பட்டு இருப்பதால் விதியை புரிந்துக் கொள்வதோ அல்லது இந்த உலக ஒட்டுமொத்த இயக்கத்தில் மறைந்து கிடப்பவைகளை அறிந்துக் கொள்வதோ எளிதில் சாத்தியமில்லை.

நிகழ்பவைகள் அனைத்தும் ஏதாவது ஒன்று அல்லது பல காரணங்களின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன.  நடப்பவைகளில் பல விஷயங்கள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டுதான் நடக்கின்றன. எப்போதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் நமது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிகழ்வதும் உண்டு.  நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் செயல்கள், அதன் விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டு சமதானமாவதும் அல்லது ஏன் இப்படி நிகழ்கின்றன என்று அதை ஏற்றுக் கொள்ளாமல் மன அமைதியை இழப்பதும் மனிதர்களின் இயற்கை.  ஏற்றுக் கொளவதும் மறுப்பதும் விளைவுகளின் தன்மைக்கேற்பவும் மற்றும் அது நிகழும் சூழ்நிலைகளை பொறுத்தே நாம் முடிவு செய்கின்றோம்.  ஆனால் எதுவுமே காரணங்கள் இல்லாமல் நிகழ்வதில்லை. எல்லாவற்றிர்க்கும் காரணங்கள் இருக்கின்றன. 

மனிதன் பொதுவாக நிகழ்வுகளுக்கான காரணங்களை தேடுவதில் அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான்.  இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று நடக்கும் அல்லது நடந்த நிகழ்வுகளுக்கான காரண கர்த்தா யார், ஏன், இதன் பின்புலங்கள் என்ன, எங்கிருந்து இது உருவாகிறது என்ற ரகசியத்தை தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் தேடல்.  இது இயற்கையாகவே நமக்குள் இருக்கும் உயர்நிலை தேடலின் ஒரு அம்சம்.  இரண்டாவது நடந்த அல்லது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் நமது விருப்பங்களுக்கு எதிராக நிகழும் போது அதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள மறுப்பது.  இரண்டுமே ஆன்மீகத் தேடலுக்கான இருவித அணுகுமுறைகள்.  முதலாவது நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை முன்னிறுத்தி அதாவது வாழ்வின் அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து தேடுவது.  இரண்டாவது வாழ்வாதரங்களை அடிப்படையாக முன்னிறுத்தித் தேடுவது. இரண்டுமே ஒரே பலனை நோக்கி நம்மை நகர்த்தி செல்லக் கூடியதுதான்.  ஒன்று ஆசிரியர் சொல்வதை ஏற்று, நல்லமுறையில் படிக்கும் மாணவனின் நிலை.  இன்னொன்று ஆசிரியர் சொல்வதை ஏற்காமல் கவனத்தை சிதறவிட்டு பிறகு தேர்வு நேரத்தில் வெளியில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று அதிகப்படியான பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து மன உளைச்சல்பட்டு நிற்கும் மாணவனின் நிலை.

இரண்டுமே மனிதனை பக்குவப்படுத்தக்கூடியதுதான் என்றாலும் முதல் காரணம் மனதை அகிம்சை வழியில் கொண்டு சென்று பக்குவப்படுத்தும் தன்மை கொண்டது, நோக்கம் சரியாக இருந்தால். ஆனால் தேடலின் பாதையில் நோக்கம் திசைமாறவும் வாய்ப்புள்ளது.  தேடுபவர்களின் அறிவு, அனுபவம், சிந்தனை ஒழுக்கம், சிந்தனை பலம் மற்றும் தேடலுக்கான ஆதாரங்களை பொறுத்து நோக்கம் செம்மையாகவும் அல்லது திசைமாறவும் செய்யும். அவ்வாறு திசைமாறும் வெளையில், தெளிவிற்கு பதிலாக குழப்பம் ஏற்பட்டு மன அமைதியை இழந்தாலும், பாதை சற்று சுலபமாக அமையும்.

பெரும்பாலான மனிதர்கள் இரண்டாவது காரணத்திற்குள் அகப்பட்டுக் கொண்டு நிம்மதி இழந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்வுகளும் விளைவுகளும் நன்மை தருகின்ற போது அவைகள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நிகழ்ந்தாலும் நாம் காரணங்களை தேடிக் கொண்டிருக்க மாட்டோம். சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம்.  மேலும் அதை அதிர்ஷ்டம் என்றொ அல்லது படைத்தவனின் அருள் என்றொ புரிந்துக் கொண்டு தேடலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஆனால் நிகழ்வுகளும் விளைவுகளும் நமக்கு எதிராக அமையும் போது அதிலும் அவைகள் நமது கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும்போது நாம் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. 

இங்குதான் விதியின் தன்மைகளை ஆராயத் தொடங்குகின்றோம்.  நல்லவைகள் நடக்கும்போது நாம் விதிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.  ஆனால் தீயவைகள் அல்லது நமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும்போது விதிகளின் ஆராய்ச்சிகளில் மூழ்கிவிடுகின்றோம். விதியை எதிரியாக சித்தரித்து அதனுடன் போராடத் தொடங்கிவிடுகின்றோம். விதி என்பது இரண்டிற்குமே பொருந்தும்.  நடப்பவைகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டுதான் நிகழ்கின்றன, அதற்கான காரணங்கள், அதன் அமைப்பு, தன்மைகள் அனைத்தும் அவ்வாறே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

விதியின் நிகழ்வுகள் யாவும் இறந்தகால செயல்களின் தொடர் மற்றும் எதிர்வினைகளாகவும் அல்லது புதிய விளைவுகளுக்கான வித்தாகவும் அமைகின்றன.  ஒட்டு மொத்த உலக இயக்கத்தில் நாம் ஒரு அங்கம்.  ஆகவே இயக்கம் இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் நாம் இயக்கப்படுகின்றோம். நாம் ஒத்துழைத்தாலும் அல்லது மறுத்தாலும் இயக்கம் தன் இலக்கை நோக்கி செல்வதில் எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை.  விதியை நாம் ஏற்றுக் கொண்டால், உலக இயக்கத்திற்கு நாம் முழு ஒத்துழைப்போடு அதன் இலக்கை நோக்கிச் செல்ல உதவுகின்றோம்.  இல்லையென்றால் விதியுடன் மாறுபட்டுக் கொண்டு வேண்டாவிறுப்பாக, வேறு வழியில்லாமல் அதனுடன் கூட சேர்ந்து நடக்க வேண்டியிருக்கும்.  ஒட்டுமொத்த இயக்கத்தில் குறைகாணும் அறிவோ அல்லது ஆற்றலோ நமக்கு இல்லாதபோது ஏன் விதியின் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்?  விடை சுலபமானதுதான் என்றாலும் அதை உங்களின் சிந்தனைக்கு விடுகின்றேன்.

மகிழ்ச்சியை பாராட்டும் அதே நேரத்தில் சோகங்களை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்? தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுக்கும்போது சோகங்கள் இரட்டிப்பாகின்றன. மகிழ்ச்சி சோகம் இரண்டுமே விதிகளுக்கு உட்பட்டதுதான்.  இரண்டுமே நிர்ணயிக்கப்பட்டவைகள்தான்.  இரண்டுமே வாழ்வின் முக்கிய அம்சங்கள்.  இரண்டுமே வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான காரணிகள்.  மகிழ்ச்சியை ஆராதிக்கும் நாம் சோகங்களை ஏன் ஏற்றுக் கொள்வதில்லை.  உண்மை என்னவென்றால் எப்போது சோகங்களை உடனடியாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியைப் போன்று ஆராதிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மனதளவில் ஏற்றுக் கொள்கின்றோமோ அப்போது சோகங்கள் விரைவில் மறைந்து போய்விடுகின்றன.  அதை நாம் ஏற்றுக் கொள்ளாமல் அநாதையாக விட்டு வைத்தால் அவைகள் நம் கால்களை சுற்றிக் கொண்டுதான் இருக்கும்.

சோகங்கள்தான் மனிதனை அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு அதிலும் வெற்றியை நொக்கி எடுத்துச் செல்லும் திறன் பெற்றது.  சோகங்கள் இல்லையென்றால் முன்னேற்றமில்லை. உலகில் வெற்றிபெற்ற மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியைவிட சோகங்களில்தான் அதிகமான நாட்களை வாழ்ந்திருக்கின்றார்கள்.  பொருளாதார வெற்றியோ அல்லது சமூக வெற்றியோ, ஆன்மீக வெற்றியோ அல்லது அரசியல் வெற்றியோ, வெற்றி பெற்றவர்கள் எல்லோரின் வாழ்விலும் சோகங்கள்தான் அதிகமாக ஆக்கிமிரத்திருக்கும். ஆனால் அவர்கள் எல்லோரும் சோகங்களின் உன்னதங்களை புரிந்துக் கொண்டு அதன் மூலம் கிடைத்த அறிவை, பாடத்தை தங்களின் வெற்றிகளுக்கான காரணிகளாக மாற்றிக் கொண்டு முன்னேறியுள்ளார்கள்.

வாழ்க்கையில் விதியின் செயல்களை சோதனையாக நாம் எடுத்துக் கொள்ளும் போது அதெ விதியின் நிகழ்வான மகிழ்ச்சியையும் ஏன் நாம் சோதனையாக எடுத்துக் கொள்வதில்லை?  மகிழ்ச்சியும் சோதனைதான். மகிழ்ச்சி மூலம் கிடைக்கும் சிற்றின்பம் மற்றும் பேரின்பம் இரண்டும் புத்துணர்ச்சி தருவதற்காக நடக்கும் நிகழ்வுகள் மட்டுமல்ல.  மகிழ்ச்சியை கொண்டாடும் அச்சூழலிலும் மனிதன் சோதிக்கப்படுகின்றான்.

அதே நேரம் நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும் நாம் நேரடியாக ஏற்றுக் கொள்ளும் போதும் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் விதியை எதிர்த்து மனதளவில் போராடி தோற்கும்போதும் நமக்கு சில பயிற்சிகள் கிடைக்கின்றன. அப்பயிற்சியின் மூலம் மகிழ்வையும் சோகங்களையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கின்றது.  விதியை எதிர்த்து நின்று நாம் ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை.  ஆனால் விதியை ஏற்றுக் கொள்வதன் மூலம் அமைதியான முறையில் நம்மை செம்மையாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.  விதியின் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்பவன் புத்திசாலி மட்டுமல்ல வீரனும் கூட.  ஏற்றுக் கொள்ளாமல் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பவன் தனது பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துக் கொள்ளாதவன். 

விதியை ஏற்றுக் கொள்ளும்போது அதே விதியை வைத்து எப்படி வெற்றி பெறமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடியும். விதியென்னும் வீதியில் மகிழ்ச்சியுடன் நடக்கும்போது வீதியின், வாழ்க்கையின் வனப்புகளை ரசிக்க முடியும். இல்லையென்றால் கடநதுவந்த பாதையில் வெறும் முட்கள் மட்டுமே நினைவில் நிற்கும்.

1 comment:

Srinivasan Devarajan said...

எவ்வளவுதான் என்னை பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பார்கள். விதி வலியது போன ஜென்மத்து கர்மபலன் போல இந்த ஜென்மத்திலும் தொடரும் என்பார்கள். சோகத்தையும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பார்ப்பது ஒரு ஞானியின் நிலை. அதை நடைமுறைக்கு பழக்கப்படுத்த வேண்டும்... சோர்ந்து போதல் கூடாது. தான் பெற்ற தோல்விக்கு ஏதோ ஒரு காரணம் சொல்வதற்காக விதியின் மேல் பழி போடப்படுகிறது...