Tuesday, May 13, 2014

மனிதானக வாழ்வோம்

சாலையின் இரு மருங்கிலும் தலையசைக்கும் தென்னங்கீற்றுகள், பரபரக்கும் மனிதர்களைப் பார்த்து 'மனிதனே! ஏன் இப்படி தலை தெரிக்க ஓடுகின்றாய், எதை தேடுவதற்கு இப்படி அலைகின்றாய்' என்று கேட்பது போல் தோன்றியது. வாழ்க்கையை நிதானமாக நகர்த்தி செல் என்று அறிவுறுத்துவது போல் எனக்குத் தோன்றியது. 

கடற்கரையில் எனது ஊர்தியில் நான் ஊர்ந்து கொண்டிருந்தேன்.  இன்று என் மனம் சலனில்லாமல் கொஞ்ச நேரம் மரணிக்க ஆசைப்பட்டது.  இல்லாமல் போக நினைத்தது.  இல்லாமல் போவதற்கு என்னிடத்தில் அதிகாரமில்லை, ஆனால் இயற்கையுடனும், இறைவனின் அளவிலா சக்தியுடனும் என்னை நான் உரசிப் பார்த்தால் ஒருவேளை எனது சிறுமையை உணர்வதன் மூலம் நான் இல்லாமல் போகலாம்.  மனம் முயற்சித்தது.

உரசி உறவாடும் மரங்களைப் பார்க்கும்போது, மனிதர்களுக்கிடையே ஒற்றுமையை போதிப்பதுபோல் தோன்றியது.  ஒரு மரத்தின் கிளைகள் மற்றொரு மரத்தின் கிளைகளுடன் கை கோர்த்து நின்று வழிப் போக்கர்களுக்கு நிழலை மட்டும் அளிக்கவில்லை, வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றிணைந்து இருப்பது போல் மனிதர்களே நீங்களும் ஒற்றுமையாக வாழுங்கள் என்று பேசுகின்றதோ என்னவோ!
தனித்து ஓர் மரம் ஆர்பாட்டம் இல்லாமல் மற்ற மரங்களை போல அசைந்து கொண்டிருந்தது.  தனிமையில் இருந்தாலும் தலை தூக்கி நின்று கொண்டிருந்தது.  தனிமைப் படுத்தப் பட்டாலும் தன்மானம் இழக்காமல், தனது உனனத குணாதிசயங்களை இழக்காமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது என்னைப் போல் தனிமனிதாய் போராடும் மனிதர்களுக்கு ஆறுதலாக தெரிந்தது.

அருகில் சென்று அள்ளத் தூண்டும் பற்பல வண்ணங்களுடன் நறுமணம் செரியும் பூச்செடிகள்  பூங்காவனத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தன. அருகில் சில முட்செடிகள், நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று வண்ணப் பூச்சோலையை அரங்காத்து நிற்பது போல் அலங்கோலமாய் நின்றாலும், வேற்றுமையில் ஒற்றுமையை போதித்துக் கொண்டிருந்தன.

எங்கிருந்தோ ஒரு தேனிக்கள் கூட்டம் இளயராஜாவின் இன்னிசையைப் பாடிக் கொண்டு குதுகலாமாய் வந்து சேர்ந்தன.  ஒரு தேனி தேர்ந்தெடுத்த மலருடன் மற்றொரு தேனி போட்டியிடாமல் அடுத்து தனித்திருக்கும் வேறொரு மலரைத் தேடிச் சென்றன. விட்டுக் கொடுத்து வாழும் கலையை நமக்கு அழகாய ரீங்காரமிட்டு சொல்லிச் சென்றன. ஆளுக்கொரு பூக்களுடம் சங்கமம் தொடங்கியது. 

நேற்றைய மாலைப் பொழுதில் பூங்காவின் அழகை ரசித்து, அமைதி கொண்டு, உறவினர்களின் ஆராவாரத்துடன் பொழுதைக் கழித்த மக்கள் கூட்டம் சிதறி எறிந்த உணவுப் பொருட்கள் மற்றும் விட்டுச் சென்ற குப்பைகளை கடைநிலை தொழிலாளிகள் தூய்மை செய்து கொண்டிருந்ந்தனர்.  ஒரு மனிதக் கூட்டத்தின் ஒழுக்கமின்மை இன்னொரு மனிதக் கூட்டத்திற்கு வாழ்வாதாரம். 

பறவைகள் கூட்டம் ஒன்று அணியணியாக வந்தமர்ந்தன. இன்றைக்கு என்ன உணவு கிடைக்கும் அது எங்கே கிடைக்கும் என்று ஒருநாளும் முன்கூட்டி அறிவதில்லை என்றாலும், அவைகளின் விழிகள் ஒரு போதும் கண்ணீரால் நனைந்ததில்லை.  அப்பறவைகளின் விழிகளில் இருக்கும் குறுகுறுப்பான பார்வைகளும், கவலையற்ற தேடல்களும், கிடைக்கும் என்ற நம்பிக்கைகளும் என் போன்ற மனிதர்களை நாணம் கொள்ளச் செய்தன.  படைத்தவன் மேல் அவைகள் கொண்ட நம்பிக்கைகள், தர்க்கம் பேசி தலைகனம் கொண்டு நடக்கும் மனிதர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவதுபோல் தோன்றியது.

சூரியன் சுட்டுக் கொண்டிருந்தான். கடலலைகள் கரைகளை மோதிக் கொண்டிருந்தன.  அலைகள் கரை மேல் கொண்ட காதல் மோகம் ஒரு நாளும் குறைந்ததில்லை.  அவைகள் கரைகளை மோதாத நேரமில்லை.  கரை என்னும் காதலி ஒரு நாளும் அலையென்னும் காதலனை விரும்பியதுமில்லை.  அவனின் அசராத மோதலைப்பற்றி பெரிதாக கவலை கொண்டதுமில்லை.  வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத காலமில்லை.  ஆனால் மனிதர்கள் சளித்துக் கொள்ளாத நேரமில்லை.  என்றாவது அலைகள் கோபம் கொண்டு கரைகளையும் தாண்டி களோபரம் செய்வதுண்டு.

எத்தனை ஆச்சர்யங்கள் இயற்கையில். எல்லா இயற்கை அம்சங்களும் ஒரு சேர ஒன்றை ஒன்று ஆமோதித்து, ஒன்றுடன் ஒன்று கலந்து ஆனந்தமாய் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் ஏதோ ஒன்றை மனிதர்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால் மனிதன் மட்டும் தனித்துவிட்டான்.  இயற்கையிலிருந்து மாறுபட்டு இல்லாத ஒன்றைத் தேடி தன்னையும் வருத்தி தன்னை சார்ந்தவர்களையும் காரணமின்றி தண்டித்துக் கொண்டிருக்கின்றான்.  மனிதனின் சுதந்திரத் தன்மையும், பிரித்தரியும் அறிவும் அவனை பெருமை கொள்ள செய்துவிட்டன.  உண்மைகளை பிரித்தரியாமல் பொய்களுடன் உறவு கொண்டு பொய்யாக மாறி எல்லாம் மாயை என்று தன்னைத் தானெ ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்.  எதுவும் மாயையல்ல, ஆனால் நிரந்தரமற்றவைகள்.  எல்லாம் உண்மையை உணர்த்தும் காரணிகள்.

வானத்தில் எங்கிருந்தோ ஒரு வெண்ணிற மேகக் குவியல் திசைமாறி வந்துவிட்டது போல் தனியாக வந்து கொண்டிருந்தது.  பார்ப்பதற்கு மலை போல் தோன்றியது, இல்லை ஒரு யானை போல் தோற்றமளித்தது. இல்லையில்லை எதையோ மறைத்து பாதுகாப்பாக எடுத்துச் செல்வது போல் தோன்றியது.  வாழ்க்கை மாயையல்ல, உண்மை.  நாம்தான் உணர்வதில்லை.  காரணம் தர்க்கம் செய்வதில் பெருமை கொண்டு, அறிவைத் தேடுவதை விட்டுவிட்டு இருக்கின்ற சொற்ப அறிவை விலை பேசிக் கூவிக் கொண்டிருக்கின்றோம்.

கடல் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் தவழ்ந்து கொண்டிருந்தது. இறைவன் சிரித்துக் கொண்டிருந்தான்.  மனிதர்களை சிந்திக்க தூண்டிக் கொண்டிருந்தான். தனது அத்தாட்சிகளை மனிதன் சரிவர புரிந்துக் கொண்டு தன்னிடம் அவர்கள் சரணடைகின்றார்களா என்பதை சோதித்துக் கொண்டிருந்தான். நான் கடலை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.  கடல் பூமியில் ஆக்கிரமித்திருக்கும் பரப்பளவையும் அதை அவ்வாறு படைத்து காத்துக் கொண்டிருக்கின்ற இறைவனின் அளவிலா பராக்கிரமத்தையும் ரசித்துக் கொண்டிருந்தேன். கடல் நீரை பூமியிலிருந்து அண்டத்தில் சிதறிவிடாமல் எது தடுத்து நிறுத்தி வைத்துள்ளது?  புவியீர்ப்பு விசை என்று அறிவியல் சொல்லும். அறிவியல் காரணத்தைத்தான் சொல்லும், காரணத்திற்க்கான வித்துகளை சொல்வதில்லை. புவியீர்ப்பு விசையும் ஒரு படைப்புதான்.

எதுவும் மாயையல்ல, ஆனால் நிரந்தரமற்றவைகள்.  கடல்நீர் முழுவதும் மையாக மாற்றி இறைவனின் கருணையை எழுத முற்பட்டால், எழுதி முடியாது. இதுபோன்று இன்னொரு கடலை கொண்டுவந்தாலும் சரி.  இதை நான் சொல்லவில்லை.  அளவிலா தன் கருணையை இறைவன் தனது வேதப் புத்தகமான திருக் குரானில் மொழிந்ததுதான்.

இறைவன் சிரித்துக் கொண்டிருக்கின்றான்.  இயற்கையும் தான்.  மனிதர்களே, இயற்கையும் நமக்கெதிராய் சாட்சி சொல்லாமல் இருக்க மனிதானக வாழ்வோம்.

No comments: