Thursday, June 02, 2005

உலக வங்கியின் உலகம்

இன்றைக்கு இந்தியாவிலிருந்தும் இன்னும் பிற வளரும் நாடுகளிலிருந்தும் ஏராளமாக இளைஞர்கள் ஐரோப்பாவிற்கும், அமேரிக்காவிற்கும் வேலை தேடிச் செல்வதும், குடிபெயர்ந்து செல்வதும் ஒரு சாதாரண காட்சியாக இருக்கிறது. Brain Drainage என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளரும் நாடுகளின் சிறந்த மனித வளங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. Brain Drainage ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கத்தில் வளரும் நாடுகளின் பெருளாதாரமும் குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் குடிபெயருகிறதா? கேள்வி எழலாம். அதற்காக பதில்தான் இந்த உலக வங்கியின் உலகம் என்ற ஆய்வுக் கட்டுரை.

இரண்டாம் உலகப்போரில் நேர்ந்த ஐரோப்பிய நாடுகளின் சீரழிவுகளை சரி செய்ய, புனரமைக்க அமேரிக்காவும் பணக்கார ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய வர்த்தக நிறுவனமான உலக வங்கி 1943ம் ஆண்டு ஹாரி டெக்ஸ்டர் ஒயிட் என்னும் அமேரிக்கா பொருளாதார வல்லுநர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. அது மட்டுமால்லாமல் IMF என்ற சர்வதேச நிதி கண்கானிப்பு அமைப்பையும் அவர்தான் உருவாக்க காரணமாக இருந்தார்.

இந்த உலக வங்கியில் அதிகமான முதலீடு செய்து அதன் தலைமைப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அதில் அதிக ஓட்டுரிமையையும் பெற்றுக் கொண்டதன் மூலம் அமேரிக்கா உலகப் பொருளாதாரத்தை ஆள்வதற்கான அடிப்படையை அமைத்துக் கொண்டது.

உலக வங்கி என்றதும் அது ஏதோ உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமைத்த ஒரு நிதி வங்கி என்றும் அது ஏழை நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனம் என்ற எண்ணமும் தோன்றும். ஒரு சில மாதங்களுக்கு முன்பாக பால் ஓல்பிட்ச் எனும் அமேரிக்கரை தலைவராக நியமித்தபோது ஊடகங்களிலும், ஒரு சில நாடுகளிலும் இவரை ஏன் நியமிக்கிறார்கள் என்று கூப்பாடு போடப்பட்டது.

ஒரு நிறுவனத்தின் முதலாளி யாரை வேண்டுமானலும் அந்த நிறுவனத்தின் மேலாளராக நியமிக்க உரிமை இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற அதிருப்திகள் என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் புரிந்தது இந்த உலக வங்கியைப் பற்றிய ஏழை நாடுகளிடம் இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகள் என்னவென்று. ஏழை நாடுகளின் எதிர்பார்ப்புகள் நியாயம்தான் என்றாலும், உலகப் பொருளாதரத்தை சுரண்டும் நோக்குடன் செயல்படும் உலக வங்கியின் கொள்கைகளை யாரலும் மாற்ற முடியாது என்பதே உண்மை.

அமேரிக்க டாலரின் உலக ஆளுமை ஏற்படுவதற்கு அடிகோலியவர் இந்த ஒயிட் என்பவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் இந்த உலக வங்கி அமேரிக்காவின் கையில் இருக்கக் கூடிய ஒரு குரூர கருவியாக மாறிவிடும் என்று யாரும் ஒருபோதும் நினைத்ததில்லை.

நிறைய பேர் இந்த உலக வங்கி என்பது பிரிட்டனின் பொருளாதார வல்லுநர் ஜான் மைனர்ட் கெய்னஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த உலக வங்கியின் அமைப்பிற்கு அதிகம் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர் என்பதையும் இங்கே தெரிந்துக் கொள்வது நல்லது.

ஐரோப்பாவின் கட்டுமானப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கி, காலப்போக்கில் இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டும் கருவியாக மாறிப்போனது. 1950ல் மார்ஷல் பிளேன் என்ற திட்டத்தின் மூலமாக இந்த உலக வங்கியின் பார்வை, அதாவது முதலீடுகள் வளரும் நாடுகளின் பக்கம் திரும்பியது. இனி ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் உலக வங்கியில் குவிந்துக் கிடக்கும் பணத்தை வைத்து எப்படி பணம் செய்வது என்ற முயற்சியினால் உருவானதுதான் இந்த மார்ஷல் பிளேன்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் அமேரிக்காவினால் அதிகம் நேசிக்கப்பட்ட மெக்னமார என்ற முன்னாள் உலக வங்கித் தலைவர். உலக வங்கியின் முதலீடுகளில் பெரும்பகுதியை அணைகள் கட்டவும், சாலைகள் போடவும் இன்னும் விமான நிலையங்கள் நிர்மானிக்கும் பணிகளுக்கு மாற்றிய பெருமை இவரையேச் சேரும். சுகாதார, கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான முதலீடுகளை நிறுத்தியதும் இவர்தான்.

நில சீர்திருத்தம், நிலப் பங்கீடு போன்ற முதலீடுகளால் உலக வங்கிக்கு லாபம் கிடைக்காது என்றதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட முதலீடுகளால் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் மேட்டுக்குடி சமூகத்தின் அதிகாரத்தை பாழ்படுத்தும் என்று வழக்காடியவர் இந்த மெக்னமாரதான். அதற்கு பதிலாக புதிய நிலங்களை உருவாக்க வேண்டும் அதற்கு ஒரே வழி இருக்கின்ற காடுகளை அழிப்பதும், ஈர நிலங்களை வற்ற வைப்பதுமான பல்வேறு நாசகர வேலைகளுக்கு தூபம் இட்டவரும் இவர்தான்.

இந்தோனேஷியாவிலும் அமஜோன் காடுகளிலும் அழிக்கப்பட்ட மனித உயிர்கள் எல்லாம் இந்த உலக வங்கியின் நயவஞ்சக முதலீடுகளினால்தான்.
எந்தெந்த ஏழை நாடுகளில் இந்த உலக வங்கி முதலீடு செய்ததோ அந்த நாடுகள் எல்லாம் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன்சுமையிலும், ஏழ்மையிலும் உழன்று கொண்டிருக்கின்றன. உலகவங்கியின் முதலீட்டிற்கு தடங்களாக இருக்கும் நாடுகளில் ஆட்சிமாற்றம் செய்து அமேரிக்காவின் எடுபிடிகளை சர்வாதிகார ஆட்சியாளாராக அமர்த்தி தனது முதலீடுகளில் லாபம் ஈட்டிக் கொண்டது. உதாரணம் இந்தோனேஷியாவன் சுகார்தோ.

பால் வோல்பிட்ச் தலைவராக நியமிக்கப்பட்ட அன்று உலக வங்கி லாவோஸ் நாட்டில் அணை கட்டுவதற்கு முதலீடு செய்ய முடிவெடுத்தது. அதன் மூலம் 6000க்கு மேற்பட்ட மக்கள் தனது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். 120,000 மேற்பட்ட கால்நடைகள் அழிய இருக்கிறது. அந்த நாட்டின் ecosystem அழிய இருக்கிறது. இவை அனைத்தும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மின்சாரம் லாவொஸ் நாட்டிற்கு அல்ல. பக்கத்தில் இருக்கக் கூடிய தாய்லாந்து நாட்டிற்காக.

இந்த உலக வங்கியின் கோரத்தாண்டவத்தினால், அநியாயமான முதலீட்டினால் என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையில் எழுத முடியாது. ஜாம்பியா நாட்டில் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களும் அரசாங்கத்தை பணிய வைத்து அந்த நாட்டில் மக்களுக்கு கிடைத்து வந்த சுகாதார சலுகைகளை எல்லாம் நிறுத்திய பெருமை இந்த உலக வங்கிக்குத்தான் சேரும். அந்த நாட்டு மக்களின் life expentancy 54 லிருந்து 40 ஆக குறைந்தது எத்தனை பேருக்கு வருத்தத்தை அளித்தது, அல்லது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் இந்த உலக வங்கியின் பங்கு கனிசமானது.

பொலிவியா நாட்டின் முக்கியமான விவசாயத் தொழிலான கொக்கோவா பயிர்களை 'war on drugs' என்ற பெயரில் அதை அழித்து 5 மில்லியன் பொலிவியா ஏழை விவசாயிகளை இன்னும் மோசமாக வாழ்க்கை நிலைக்கு பின் தள்ளியது இந்த உலக வங்கிதான். அத்தோடு இல்லாமல் பொலிவியாவின் குடிநீர் வளங்களை அமேரிக்காவின் பெக்தல் நிறுவனத்திற்கு விற்க வைத்ததும் இந்த உலக வங்கியே. பெக்தல் நிறுவனம் பொலிவியாவின் குடிநீர் விநியோகத்தை கையில் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 200% விலையைக் கூட்டியது. எத்தனையோ குழந்தைகள் நல்ல குடிநீர் கிடைக்காமல் அந்த நாட்டில் திண்டாட பெக்தல் போன்ற கம்பேனிகள் வரிச்சலுகையை அனுபவித்து வந்தன. பன்னாட்டு நிறுவனங்கள் பொலிவியாவில் உள்நாட்டு நிறுவனங்களைவிட 50% குறைவாகவே வரிகள் செலுத்தி வருகின்றன. (பொறுத்தது போதும் பொங்கி எழு மக்களே என்று அந்நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் பெயரில் ஆர்பாட்டத்தில் இறங்க அந்நாட்டு ஜனாதிபதி கரோலஸ் மெசா ராஜினாம செய்ய நேர்ந்தது இன்னொரு கதை).

தற்போதைய உலக வங்கியின் முதலீடுகளில் 94% ஆயில் மற்றும் நிலக் கனிமங்களில்தான் செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான முதலீடுகளின் மூலமாக 82% ஆயில் மற்றும் நில கனிமங்கள் ஐரோப்பிய மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது.

எப்படி கிழக்கிந்திய கம்பேனி இந்தியாவின் நில வளங்களை சுரண்டி பிரிட்டனை வளப்படுத்தியதோ அதே போன்று இப்போது உலக வங்கியும், IMF ம் ஏனைய உலக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி அமேரிக்கவையும் ஐரோப்பாவையும் வளப்படுத்தி வருகின்றது.

நாமும் கொஞ்சம் கொஞ்சமாக நமது வளங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமே கூலி வேலை செய்ய விசா கேட்டு அந்நாட்டு தூதரங்களில் காத்துக் கிடக்கிறோம்.

5 comments:

contivity said...

அன்பின் அக்பர்,

நல்ல தகவல்கள் பொதிந்த கட்டுரை.. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை நிர்மாணிக்க உலக வங்கி கடன் அளித்ததாகவும், அதைப் பலர் ஏப்பம் விட்டுவிட்டதாகவும் சில நாட்கள் முன்னதாக செய்திகள் கேட்டதாக நினைவு.. ஒரு சின்ன சந்தேகம்.. இந்தியாவின் கடன் சுமை (ஒரு பேச்சுக்கு) பத்தாயிரம் கோடி என்றால் ஒவ்வொரு இந்தியரும் ஆயிரம் ரூபாய் செலுத்தி அடைத்து விடலாமே!. சற்று முடிந்தால் விளக்குங்கள்... நன்றி...

அபூ முஹை said...

ஆமாங்க அக்பர்!
contivity சொன்னது போல் கடன் சுமை தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் கட்டுகிற வட்டிப் பணத்தைக் கணக்கிட்டால் அத் தொகையை வைத்து இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்து விடலாம்.

ஆனால், ஆட்சியாளர்கள் மறுபடியும் கடன் வாங்காமல் இருக்க வேண்டுமே இருப்பார்களா?

ரங்கா - Ranga said...

ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, ஆதாரங்களோடு எழுதியிருக்கிறீர்கள். இதில் இன்னும் ஒரு விஷயம். உலக வங்கியின் கணக்கு வழக்கு எழுதும் அலுவலகம் இப்போது சென்னையில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு இந்தியர்கள் இதில் வேலை பார்க்கிறார்கள்.

நல்லடியார் said...

இதைப் படித்ததும் ஒரு வேடிக்கையான கதை நினைவுக்கு வருகிறது. நம் நிதியமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலா 4000 ரூபாய் உலக வங்கியிடம் கடனுள்ளது என்றார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஒரு அப்பாவி விவசாயி, நிதியமைச்சரை தனியாக அழைத்து ஒரு 4000 ரூபாயை கொடுத்து விட்டு, இனி உலக வங்கியிடம் என்னைக் கேட்காமல் கடன் வாங்கக் கூடாது என்றாராம்.

Akbar Batcha said...

நன்றி ரங்கா,

உங்களின் செய்தி எனக்கு புதிது.

உலக வங்கியில் இன்னும் இந்தியா சரியாக சிக்கவில்லை என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. காரணம் இந்திய அரசியலில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்களின் எதிர்கால கணிப்பினால். உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், திருப்பிச் செலுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற கவனமும்தான் இந்தியாவின் உலக வங்கித் தொடர்பு ஓரளவு சமாளிக்கக் கூடிய அளவில் உள்ளது.

சிதம்பரம் அவர்கள் மிகுந்த போராட்ததினூடேதான் இந்திய நிதிப் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரின் இன்னுமொரு சரியான கொள்கை முடிந்தவரை பன்னாட்டு முதலீட்டை அதிகப்படுத்த வேண்டுமென்பது. அவ்வாறு செய்யும்போது உலக வங்கியிடம் கடன் வாங்க வெண்டும் என்ற நிர்பந்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. உலக வங்கி என்று வரும்போது அரசியல் நிர்பந்தங்களும் அதிமாகிறது. பன்னாட்டு முதலீடு எனும்போது அந்த நிர்பந்தங்கள் ஓரளவு குறைவாக இருக்கிறது.

இந்திய இன்னும் கொஞ்சம் அதிகமாக ஹோம் வொர்க் செய்தால் அரேபிய நாடுகளிலிருந்து தேவையான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிதம்பரம் அவர்கள் அடிக்கடி இந்த நாடுகளுக்கு பயணம் செய்தால் நல்லது. அரேபிய நாடுகளில் தற்போது தேங்கிக் கிடக்கக்கூடிய நிதி ஆதாரங்களுக்கு நம்பகமான முதலீட்டுத் திட்டங்கள் தேவை. இந்திய முதலீடு அதற்கு சரியான பதிலாக இருக்கும்.