Wednesday, June 01, 2005

உரிமையே உன் நிலை என்ன?

'எனது சுதந்திரம் என் மூக்கின் நுனிவரைதான்' என்ற தனி மனித உரிமைக்கான விளக்கம் தற்போது தடம் மாறி, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் நான் எது வேண்டுமானலும் செய்வேன் அது எனது உரிமை என்று ஒழுக்க மீறல்களும், வரம்பு மீறல்களும் மற்றும் உரிமை மீறல்களும் இன்று பரவலாக நடைபெற்று வருகின்றன.

உரிமைக்காக போராடிய காலம் போய், கிடைத்த உரிமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய காலமும் முடிந்து தற்போது உரிமை மீறல்களிலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

உரிமையை செயல்படுத்தத்தான் சுதந்திரமே தவிர்த்து, சுதந்திரத்திற்கு புது அர்த்தங்கள் கண்டு பிடித்து தனிப்பட்ட, அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அரங்குகளில் அதை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலை சுதந்திரம் என்ற பெயரால் செய்யப்படும் உரிமை மீறல்கள். உரிமை மீறல்கள் காலப்போக்கில் வரம்பு மீறுவதில் தவறில்லை என்ற மனோநிலையை தோற்றுவித்து அதை தொடர்ந்து ஒழுக்க மீறல்கள்களில் போய் நின்று விடுகின்றது.

தனிமனித உரிமை மீறல்கள், ஒரு கூட்டாக மாறும்போது அது ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தின் மீது தொடுக்கும் அடக்குமுறைகளாகவோ அல்லது அநீதமாகவோ மாறிவிடுகின்றது. ஒரு புறத்தில் ஒரு சாரார் உரிமையற்றவர்களாகவும், இன்னொரு புறம் மறு சாரார் அளவுக்கதிகமான உரிமைகள் பெற்றவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். வளர்ந்து வரும் நாடுகள், அதிலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் உரிமைகள் குறைவாகவும் அல்லது இல்லாததாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். உலகின் இன்னொரு பக்கமான ஐரோப்பிய அமேரிக்க நாடுகளில் உரிமைகள் என்ற பெயரில் சுதந்திர சுரண்டல்கள் எல்லா நிலைகளிலும் நடந்து வருகின்றது.

மதங்களின் பெயர் சொல்லி மக்களின் நியாயமான உரிமைகளை தட்டிப் பறிக்கும் ஒரு கூட்டம் மத போதனைகள் என்ற பெயரில் தனது மன போதனைகளை விற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு கூட்டமோ மதமாவது, பூதமாவது என்று கடவுள் கொள்கைகளை கடை நிலைக் கொள்கைகளாக மாற்றி வைத்துவிட்டு சுதந்திரம் என்ற பெயரால் அபரிதமான உரிமை மீறல்களை நிகழ்த்தி வருகிறது. இரண்டுமே எதிர் எதிர் முனைகளில் உலகத்தை இழுத்துக் கொண்டிருக்கின்றன. மதங்களின் பெயர் சொல்லி அதை ஒரு சுமையாக மனிதர்களின் மேல் சுமத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அதே தருணத்தில் உரிமைக்கும் ஒழுக்க மீறலுக்கும் வேறுபாடு இல்லாமல் உலகை சின்ன பின்னா படுத்தும் இரு கலாச்சார முற்றுகைகள்தான் இன்றைக்கு உலகை எதிர் நோக்கி இருக்கும் இரு பெரும் பிரச்சனைகள்.

மதத்தின் பெயர் சொல்லி மனித வெடிகுண்டுகளையும், சுதந்திரத்தின் பெயர் சொல்லி விமான ஏவுகனைகளையும் கொண்டு அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள். இரண்டிற்கும் இடையிலே அனாதையாக செத்து மடிகிறது 'தனி மனித உரிமைகள்'. இரண்டு கூட்டங்களும் பயன் படுத்தும் நூதன முறைகள் இறுதியாக சித்திரவதைகளை outsource செய்யக்கூடிய அளவிற்கு தனது தேவைகளை globalization வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றன.

இந்த போரட்டத்தில் அதிகதிமாக பாதிக்கப்படுவது பெண்னினம் மட்டுமே. பெண்களின் நிலையை அந்த பெண் வர்க்கங்கள் கூட சரியாக புரிந்து வைத்திருகிறார்களா என்றால் அதுவும் சந்தேகமே!

பெண்கள் இரண்டு விதத்திலும் அதாவது மேலே சொல்லப்பட்ட இரண்டு கூட்டத்தினராலும் ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது 'காலாச்சாரத் தூண்கள்' என்று ஆண்களுக்கு பிடிக்காத அல்லது ஆண்களால் சுமக்க இயலாத அத்தனை சுமைகளையும் மதம், இனம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெயரால் பெண்களின் மேல் சுமத்திவிட்டு ஆண் வர்க்கங்கள் மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கூட்டமோ பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவர்களது ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு அவர்களது பலவீனங்களை சந்தைகளில் விற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆடைக் குறைப்பைப் பொறுத்து அந்த பெண்ணுடைய சுதந்திரத்தன்மையை எடை போடும் அளவிற்கு சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப் படுகிறார்கள். குறிப்பாக முஸ்லீம் பெண்கள். அவர்களுக்கு உரிமைகளும் கிடையாது, அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அதை அனுபவிக்கும் சுதந்திரமும் கிடையாது. 1400 வருடங்களுக்கு முன்பே, உலகின் எல்லா பாகங்களிலும், பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களா என்று ஆரய்ச்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு உரிமையளித்து அவர்களுக்கு சமுதாயத்தில் உன்னத நிலை அளித்தது நாங்கள்தான் என்று முஸ்லீம்கள் மார் தட்டிக் கொண்டால் மட்டும் போதாது. பெண்களின் உரிமைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் சமுதாயப் பங்களிப்பு பிற சமுதாயத்திற்கு எப்படி உதாரணமாக இருக்க வேண்டும் என்று முன்னிலையில் இருக்க வேண்டிய இந்த முஸ்லீம் சமுதாயம் கடந்த போன வரலாற்றை பெருமையாக பேசி இன்னும் பாதாளத்தில்தான் வாசம் செய்து கொண்டிருக்கிறது. நபிகாளாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகளாரின் தோழர்கள் கூட சென்று மத, மார்க்க சம்பந்தமான ஆலோசனைகள் கேட்டிருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனை முஸ்லீம் பெண் அறிஞர்கள் இந்த முஸ்லீம் சமுதாயத்தில் உருவாகி இருக்கின்றார்கள்?

எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பொதுவாகவே பெண்களின் நூற்றாண்டு கால அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் காரணம், ஆண்களின் இயற்கையான 'ஆளுமை சக்தியும்' அதை தனது சுய நலத்திற்கு மட்டும் பயன்படுத்தும் குரூர மனப்பான்மையுமே.

பெண்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் பெண்கள் ஒரு தவறான அளவுகோலை பயன்படுத்தி வருகிறர்கள். அந்த அளவுகோல், ஆண்களுடன் தன்னை 'ஒப்பீடு' செய்வதே. ஆண்கள் செய்வதை தாங்களும் செய்வதுதான் உரிமைக்கும் சுதந்திரத்திற்குக் அடையாளம் என்ற தவறான ஒப்பீட்டு முறையே. பெண்கள் ஆண்கள் செய்யக் கூடியதை தானும் சாதிக்கும்போது அத்துடன் தனது லட்சியம் பூர்த்தியடைந்ததுபோல் தனது வளர்ச்சியை அல்லது சிந்தனை வளர்ச்சியை அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்களும் ஆண்களும் இறவன் முன்னால் சமமானவர்களே! இன்னும் சொல்லப் போனால் தாயின் காலடியில்தான் சொர்க்கம் நபிகளார் உள்ளடக்கி எத்தனையோ பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். யாரும் தந்தையின் காலடியில் சொர்க்கம் இருப்பதாக சொல்லியதில்லை. ஆனால் பெண்கள் இயற்கையிலேயே தங்களிடம் உள்ள பொறுமை மற்றும் மன்னிக்கும் தன்மையை தங்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் ஆண்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தி வருகிறார்களே தவிர்த்து அவ்விரு குணங்களால், ஆண்களின் ஆளுமை சக்தியை தோற்கடிக்க முடியும் என்று செயல்படுத்தியதில்லை. அங்கங்கே ஏதாவது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

பெண்கள் இரண்டு கூட்டத்திலிருந்தும் விடுபட்டாக வேண்டும். அதற்கு மிக முக்கியமானது அவர்களின் மன நிலையில் மாற்றம் வேண்டும். வெறும் cat walk செய்வதிலும், பேஷன் மாடல்களிலும், அடுப்பறையில் வெந்து புழுகுவதிலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இரு கூட்டத்திலும் அகப்பட்டு திண்டாடும் மனித சமுதாயத்தை மாற்றவல்ல அடிப்படை காரனிகள் இந்த பெண்களே. அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களில் ஆண்களின் ஆளுமை சக்திக்கு தன்னை அடகு வைத்துவிடாமல், பொறுமையையும், மன்னிப்பையும் நேர்மறையாக பயன் படுத்தினால் தன்னை மட்டுமல்லாமல், ஆண் வர்க்கத்தையும் மாற்றிவிடலாம். இல்லையெனில் இன்றைய குரூர போராட்டத்தில் ஆண்கள் முதல் பலியாக பயன்படுத்தப் போவதும் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பெண்களையே.

உரிமைகளை வெல்ல பெண்களை விலையாக கொடுக்க வேண்டுமெனில் அப்படிப்பட்ட உரிமைகள் இந்த ஆண் சமுதாயத்திற்கு அவசியமா?

2 comments:

Chandravathanaa said...

அக்பர் பாட்ஷா
மிகத் தேவையான கருத்துக்களை சரியான முறையில் முன் வைத்துள்ளீர்கள்.
அருமையாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள்.
நன்றி.

Akbar Batcha said...

ஆண் பெண் வர்க்க போராட்டங்கள் என்பது பெரும்பாலும் ஆண்கள் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறுதான் வடிவமைத்து நடந்து வருகிறது. பெண் இனம் ஆண் இனத்திற்கு சமம் என்ற சிந்தனையை விடுத்து பெண் இனம் ஆண் இனத்தைவிட சிறந்தது என்ற சிந்தனையில் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்