Tuesday, June 21, 2005

அத்வானியின் அக்கினி பிரவேசம்

அதிகாரம் இல்லாத அரசியல்வாதிக்கு அக்கம் பக்கம் எல்லாம் இருட்டாகத்தான் தெரியும் என்பதற்கிணங்க இன்றைய எதிர்க் கட்சியான பா.ஜா.கா. வின் தலைவர்கள் எல்லாம் இருட்டில் யார் மீது கரியை பூசுகிறோம் என்று தெரியாமல் ஒருவரை மாற்றி ஒருவர் அவர்களின் மேலேயே பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

The Hawk என்று ஆங்கிலத்தில் பெருமையுடன் அழைக்கப்படும் பா.ஜா.கா.வின் தலைவர் அத்வானி தற்போது ஒரு அக்கினி பிரவேசம் செய்து கொண்டிருக்கிறார். சீதையின் மேல் பிறர் கலங்கம் சொன்ன போது ராமன் தன் மனைவியை அக்கினியில் குளித்து வர அனுமதித்ததுபோல் தற்போது அத்வானி அவர்கள் ஜின்னாவை பற்றி பேசியதற்காக அக்கினி பிரவேசம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அத்வானி ஓர் ராம பக்தர் அல்லவா? ராம ராஜ்யத்தை நிறுவத் துடிக்கும் அவரின் வாழ்க்கையில் ராமருக்கு நேர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.

செக்குலரிசம் என்றாலே ஒரு அருவருக்கத்தக்க வார்த்தை என்று காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட்கள் வரை செக்குலரிசம் பேசிய எல்லோரையும் திட்டித் தீர்த்து வைத்த இந்த பரிவாரக் கும்பல்கள் இப்போது திடீரென்று செக்குலரிசம் என்றால் ஏதோ ஒரு புனிதமிக்க வார்த்தையைப் போன்று அதை எப்படி அத்வானி 'ஜின்னாவை ஒரு செக்குலரிஸ்ட்' என்று அழைக்கலாம் என்று பிடி பிடி என்று அத்வானியை நிம்மதியாக தூங்கவிடாமல் செய்துவருகிறார்கள்.

உண்மையிலேயே அத்வானி ஜின்னாவைப் பற்றி சிறப்பாக பேசிய காரணத்தால் இந்த அக்கினி பிரவேசம் செய்து தன்னை ஒரு இந்துத்துவ தலைவர்தான், தான் அப்படி பேசியது தவறுதான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா அல்லது தனது அரசியல் வாழ்க்கையில் தான் 'நம்பர் இரண்டு' என்ற அந்த பிரமையை களைக்க வேண்டி பாகிஸ்தான் விஜயத்தில் ஜின்னா பற்றிய பேசி அதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து அக்கினி பிரவேசம் செய்தாரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அத்வானி அவர்கள் இரண்டு அக்கினிபிரவேசங்களை செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையும் இன்னும் நான்கு வருடத்திற்கு பிறகு அமையப்போகிற அரசியல் எதிர்பார்ப்பையும் வைத்து பார்க்கும்போது அத்வானி அவர்கள் தன்னைச் சுற்றி ஒரு புதிய அரசியல் வியூகத்தை அமைக்க வேண்டியதுள்ளதை புரிந்துக் கொள்ள முடியும். சில நேரங்களில் அரசியல் விளையாட்டுக்கள் புரியாததாக தோன்றலாம் அல்லது புரியாத விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த விளையாட்டைத் தொடங்கிய அந்த அரசியல்வாதிக்கு அதிலும் அத்வானி போன்ற பழுத்த ஒரு ராஜ தந்திரிக்கு நன்றாகவே புரியும், புரிந்துதான் இந்த விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் அத்வானி

அத்வானியின் உழைப்பில் யார் யாரோ அரசியல் செல்வாக்கை சுவைக்கும்போது (வாஜ்பேய் அவர்களையும் சேர்த்துதான்) இன்றைய பா.ஜா.காவின் உயற்விற்கு பெரிதும் காரணமாக இருந்த அத்வானி பிரதமராக வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? அவர் நினைத்ததில் தவறில்லை. ஆனால் தற்போதைய இந்திய அரசியல் அதவானியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம். நான்கு வருடம் கழித்து இருக்கும் இந்திய அரசியலில் ராமரை மட்டும் நம்பி ஓட்டு வாங்குவதென்பது நடக்கக் கூடிய காரியம் இல்லை. ராமர் என்றால் யார் என்று இளைஞர் பட்டாள ஓட்டர்கள் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு பாப் கலாச்சாரமும் மேலைநாட்டு 'மாடர்ன் வாழ்க்கையும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது'. அத்வானி அவர்கள் எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாடரேட் அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். இதை அவர் இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் செய்ய முடியாது. தனது அரசியல் பாதையில் முக்கியமான திருப்பத்தில் நின்றுக் கொண்டிருக்கும் அத்வானியின் அரசியல் வியூகம் ஆச்சர்ய தர்மேந்திரா, அசோக் சிங்கால் மற்றும் தொகாடிய போன்றவர்களுக்கு வேண்டுமானல் பிடிக்காமல் இருக்கலாம்.

சரஸ்பூர் ராமர் கோவிலின் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி வாக்கு சேகரிக்கப் போனால் எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று அத்வானிக்கு தெரியும். அதனால்தான் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி அத்வானியை ஒரு 'விலைமாதை விட கேவலமானவர்' (1) என்றும் பேசினாலும் அத்வானி கண்டு கொள்ளமல் இருக்கிறார். இந்த விலைமாது உவமையை துவங்கி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் அவர்கள்தான். (பா.ஜா.கா.வின் மூக்கணாங்கயிறு கையைவிட்டு போய்விடுமோ என்ற கவலை அவருக்கு).

'அடுத்தமுறை ரத யாத்திரையை அத்வானி அவர்கள் இஸ்லாமாபத்திலிருந்து தொடங்கட்டும்' (2) என்று கூக்குரலிட்ட ஆச்சார்ய தர்மேந்திராவின் அரசியல் செல்வாக்கும் சொல்வாக்கும் அத்வானியை பிரதமராக்கிவிடமுடியுமா?

இந்துத்துவ பரிவாரத்தின் பலமே ஆளாளுக்கு ஒன்று பேசி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வதே. அதில் அவர்கள் கைவந்தவர்கள். அதைப் போன்றதொரு குழப்பத்தை இப்போது தனது பரிவாரக் குடும்பங்களில் உருவாக்கி தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவராக காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் அத்வானி. வாஜ்பெய் அவர்களைப்போல் நேரத்திற்கு ஒன்று பேசிவிட்டு அதை தானே விழுங்கும் கலையும் வேண்டும், அதே நேரம் தான் சர்தார் பட்டேலைப் போல் ஒரு இரும்பு மனிதர் என்ற பெயரும் வேண்டும் என்று தான் வகுத்துள்ள இந்த அரசியல் வியூகத்தில் முதலில் தனது வீட்டை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் அத்வானி.

அவர் அதில் வெற்றி பெறுவாரா அல்லது தான் விதைத்த விதையின் விளையே வலையாக மாறி அதில் தன் நீண்டகால அரசியல் கனவான பிரதமர் பதவியை இழக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்களையும் நாட்டைப் பற்றியும் யாருக்கும் கவலையில்லை.


References:

1. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-2.cms

2. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-1.cms

2 comments:

Akbar Batcha said...

Raja,

You got the right point. Advani would be satisfied once he become the PM. Till than he will not allow anyone to outsmart him including RSS

ஜென்ராம் said...

அவன் பட்டுத் துணிக்காக கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன. வரிக்குதிரையின் உடலில் இருந்து வரிகள் போகாது. சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் நீங்குவதில்லை. எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் அத்வானியை மக்கள் ர(த்)த யாத்திரையோடுதான் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள்.
http://stationbench.blogspot.com