Saturday, June 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - முன்னுரை

'ராபினை நாங்கள்தான் கொலை செய்தோம்.. இப்போது ஷரோனையும் கொலை செய்வோம்' என்ற வரிகள் இஸ்ரேலில் குடியேறிய (Settlers) கூட்டத்தினர் வசிக்கும் பகுதிகளில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தது. (1). இஸ்ரேல் நாட்டினுள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறியவர்கள், பாலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் சமதான ஒப்பந்தந்தை எதிர்த்து தங்களது கோபங்களை இவ்வாறு தாம் வாழ்ந்து வரும் பகுதிகளின் சுவர்களில் எழுதி எச்சரிக்கை செய்து வருகின்றனர். ராபினை கொன்றவன் இந்த பகுதியைச் சார்ந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதனால் இந்த யூதர்களின் எச்சரிப்பும் எரிச்சலும்?

இஸ்ரேலிய பத்திரிக்கையாளர் ஒருமுறை இவ்வாறு கூறினார். 'பாலஸ்தீனர்களின் பிரச்சனை இல்லை என்றால், இஸ்ரேல் இந்நேரம் ஒரு சிவில்வாரைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கும்'. ஏன் அந்தப் பத்திரிக்கையாளர் அவ்வாறு கூறினார்?

வாழ்வதற்கு தனக்கென்று ஒரு பூமி வேண்டும், அதுவும் தங்களது இதயங்களில் எந்நேரமும் தகித்துக் கொண்டிருக்கும் ஜெருசெலத்தின் அருகில் வேண்டும் என்று வந்தவர்கள். அதாவது பாலஸ்தீனத்தில் ஒரு கானி இடம் போதும் என்று ஆசைப்பட்டு, திட்டமிட்டு, இனி இந்த கிறிஸ்துவ நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சித்திரவதைப் படுவதைவிட ஒரு குடிசையிலாவது வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வந்தேறிய இஸ்ரேலிய மக்கள் தற்போது மண்ணிற்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனர்களிடம் ஒட்டும் கூடாது, உறவும் கூடாது என்று சமாதான பேச்சு வார்த்தைக்கு குறுக்கே நிற்பதன் காரணம் என்ன?

இஸ்ரேலியர்கள் எங்கு சென்று வசித்தாலும் பிரச்சனைக்கு உள்ளக்கப்படுகிறார்களா? அல்லது பிரச்சனைகளை உருவாக்குகிறார்களா? வரலாறு என்ன சொல்கிறது?

நான் எழுதப் போவது இந்த உலகின் உன்னத உயற்விற்கும், அதே சமயம் மோசமான வீழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்த யூத சமுதாயத்தின் வரலாறுதான். நான் எழுத இருக்கும் யூத சமுதாயத்தின் வரலாறு அவர்களுடைய வேதமான 'பழைய ஏற்பாடு' அதாவது 'தோரா' என்று அழைக்கபடும் யூதர்களின் வேதத்திலிருந்தும், அடுத்து 'பைபிள்' அதாவது 'இஞ்ஜீல்' என்று அழைக்க்கப்ட்ட வேதத்திலிருந்தும். அது மட்டுமல்லாமல் வேறு பல ஆரய்ச்சி நூல்களிலிருந்தும் இறுதியாக இஸ்லாமிய இறுதி வேதமான 'திருக் குரானிலிருந்தும்' திரட்டப்பட்டவைகள். எத்தனையோ பேர் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்கள், அவர்களில் கடைவரிசையில் நிற்கக் கூடியவனாகிய நான் இந்த வரலாற்றை எஞ்சியிருக்கக் கூடிய வேத புத்தகங்களின் வழியாக என்னால் இயன்ற அளவிற்கு தொகுத்து எனது பார்வைகளுடன் வழங்க இருக்கிறேன். இம்முயற்சி தொடங்கியது கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முன்பாக. ஆனால் இதை முதல் முறையாக எழுத்து வடிவமாக்கி பிறர் படிப்பதற்கு ஏற்றார் போல் அமைத்துக் கொடுக்க இருக்கிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் முக்கியமான அரசியல் மாற்றத்திற்கான வித்திடப்பட்டது. அது உலக வரலாற்றிற்கு புதியதொரு பரிமானத்தை கொடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன் இருந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு இந்த உலகின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ளமுடியும். அவ்வாறு அந்த பின்னோக்கிய வரலாற்றை தெரிந்துக் கொள்வதன் மூலம் இனி வரும் எதிர்காலத்தையும் அதில் நடக்க இருக்கின்ற மாறுதல்களையும் ஓரளவு அனுமானிக்க உதவும்.


இந்த உலகின் எல்ல நிலைகளிலும் பின்னி பினைந்த ஒரு ஒப்பற்ற சமுதாயமாக இருந்து வந்திருக்கிற யூத சமுதாயம் இவ்வுலகிற்கு ஏற்படுத்திய உயர்வுகளும், வீழ்ச்சிகளும் வேறு எந்த சமுதாயத்தினராலும் ஈடு செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் பன்முக பங்களிப்புகள் வரலாற்றில் எங்கு நோக்கினாலும் சிதறிக் கிடக்கின்றன.

வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதன் மூலம் நமது முன்னோர்கள் செய்த தவறுகளை செய்யாமல் நம்மையும் நமக்கு பின்னால் வரும் சமூகத்தையும் காப்பாற்ற முடியும்.

யூத - முஸ்லீம் - கிறிஸ்துவ போராட்டங்கள் என்பது காலம் காலமாக நடந்துவரும் நிகழ்வுகள். இந்நிகழ்வுகள் கடவுள் ஏற்புடையவர்களுக்கும், அல்லது மறுப்பாளர்களுக்கும் இன்னும் யாராக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. வரலாற்று பிண்ணனிகளைப் பார்த்தால் சில நேரங்களில் இந்த போராட்டங்கள் உலகை பலமாக உலுக்கியிருக்கின்றன. முழங்கால் வரை இரத்த ஆறுகளை ஓட வைத்திருக்கின்றன. கடவுளின் பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திய அந்த வாழ்க்கை முறைகளை படிக்கும்போது.. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இந்த மனித குலத்திற்கு அவசியமா? என்று கேட்கத் தோன்றும்.

'அநியாயம் செய்யக் கூடிய ஒரு சமூகத்திற்கு எதிராக இன்னொரு சமூகத்தைக் கொண்டு நாம் தடுக்கிறோம்' என்று இறைவன் திருக்குரானில் சொல்வது போல் இவ்வுலகில் இருக்கக் கூடிய சமூகங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு கால கட்டத்தில் அநியாயம் செய்யக் கூடிய சமூகமாக இருந்திருக்கின்றன அல்லது இருக்கின்றன. நியாயத்திற்காக போராடத் தொடங்கிய எத்தனையோ கூட்டங்கள் பிற்காலத்தில் தான் தொடங்கிய அந்த பாதையை மறந்துவிட்டு அறிந்தோ அறியாமலோ அநியாயம் செய்யக் கூடிய கூட்டமாக, சமூகமாக மாறியிருக்கின்றது. இதில் எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல.

ஆகவே 'வரலாற்றில் சில ஏடுகள்' என்ற இந்த படைப்பு வரலாற்று நோக்கில் வழங்கப்படும் ஒரு படைப்பே தவிர்த்து எனது விருப்பு வெறுப்புகளை சுமந்து வரும் படைப்பாக இருக்காது.

'இந்த மூன்று பிரிவினர்கள்தான் இவ்வுலகத்தின் வாரிசுகளாவார்கள்: யார் இந்த இஸ்ரேலிய (பாலஸ்தீனத்தில்) மண்ணில் வாழ்கின்றார்களோ அவர்களும்; யார் தனது மகவுகளை கொண்டு (கடவுளின் விதிகளை) சட்டங்களை படிக்க வைக்கிறார்களோ அவர்களும்: யார் சப்பாத் தினங்களை ஒட்டி திராட்சை பழ ரசங்களைக் கொண்டு சம்பிரதாய வழிபாடல்களை மறுபடியும் திரும்பத் திரும்ப செய்து ஆசிர்வதிக்கப்படுகின்றனரோ அவர்களும்' (தல்மூத் பி'சாச்சிம் 113, பகுதி 1)

யூதர்களின் இந்த வேத வரிகள் எவ்வாறு இஸ்ரேலியர்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஒன்று சேர்க்கிறது என்றும் இந்த உலகின் rightful citizen நாம்தான் என்பதில் எவ்வாறு அவர்கள் இறுமாந்து இருக்கிறார்கள் என்பதையும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

(இந்தத் தொடர் எத்தனை இருக்கும் என்னால் தற்போது சொல்ல இயலவில்லை. இந்த வரலாற்று தொடர் சம்பந்தாமாக உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.)

1) Uri Avenery - Buying Off the Settlers, Arab News June 2, 2005

No comments: