Saturday, April 13, 2019

முச்சந்தியில் தமிழகம் - 2019 பாராளுமன்ற தேர்தல்

இரண்டு பெரும் அரசியல் தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் தற்போது களம் கண்டு வருகிறது.

அம்மாவின் உண்மையான வழி தோன்றல்கள் யார் என்ற போட்டியை முன்வைத்து இரட்டையர்கள் ஒருபுறமும், ஒற்றை மனிதனாய் பட்டுக்கோட்டையார் மறுபுறமுமாக களத்தில் இறங்கியுள்ளனர்.  என்றாவது ஒரு நாள் இரண்டு கூட்டமும் ஒன்றாக சேர்ந்து இசைபாடும் நிலை வரலாம் என்று இரு கூட்டமும் ஒருவரை ஒருவர் அதிகம் வசை பாடாமல் களத்தில் தங்களின் செல்வாக்கை உரசிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றிரண்டு தொகுதிகளில் அமமுக வென்றால் அது அவர்களுக்கு போனஸ். அதிமுக வெறும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டும் வென்றால் அது அவர்களுக்கு பெரும் இழுக்கு. எனவே இந்த இரு பிரிவுகளும் விரைவில் ஒன்றாக சேரும் வாய்ப்புகள் பலமாகவே இருக்கின்றன.  இங்கே கொள்கை என்றால் அது அதிகாரத்தை எப்படி எப்போதும் கையில் வைத்துக் கொண்டிருப்பது என்ற ஒன்றே தவிர அதைத்தாண்டி இரு கூட்டத்தினருக்கும் தமிழகத்தின் மேல் அப்படி ஒன்றும் பெரும் காதலில்லை.

மறு பக்கத்தில் அண்ணவால் முடுக்கிவிடப்பட்டு, கலைஞரால் தொடர்ந்து செப்பனிடப்பட்ட திமுக, தானியங்கி விசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் தலைவரானாலும் தானியங்கி விசையில் செல்லும் காரணத்தால் ஒரு பெரிய வித்தியாசம் தற்போது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த தானியங்கி விசை முடிவுக்கு வரும்போது தற்போதைய தலைமையின் திறன் வெளிவர ஆரம்பிக்கும். அப்படி ஓர் முச்சந்தியில் திமுக தற்போது இல்லை.  காரணம், மோடி மற்றும் இரட்டையர்களிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் அரசு செயல்பாடுகளின் மூலம் எழுந்த எதிர்ப்பலையில் திமுக கரை சேரும் வாய்ப்பிருப்பதால் ஸ்டாலின் பிழைத்துக் கொள்வார்.

ஆனால், இரண்டு கருப்பு குதிரைகள் களத்தில் ஒரு மாற்று அரசியலை முன்னிருத்தி மக்களை திராவிட ஊறுகாயை சுவைத்தது போதுமென்று  உசுப்பிக் கொண்டிருக்கின்றனர்.  சீமான் தனது தமிழின ஆவேசப் பேச்சால் தமிழர்களுக்கே உரித்தான உணர்வு அரசியலை சீண்டிக் கொண்டிருக்கின்றார்.  கமல் தனது அழுத்தாமன பேச்சால் தமிழர்களின் அறிவுச் சாலையை அகலப்படுத்தப் பார்கின்றார். இருவருக்கும் தமிழகத்தின் தற்போதைய அரசியலைப் பற்றிய நியாயமான கோபம் இருந்தாலும் அவர்களின் கோபத்தை புரிந்துக் கொண்டு இருவரின் பின்னாலும் தமிழக மக்கள் அரசியல் பயணம் செய்ய தாயாராகின்றார்களா என்பது இந்த தேர்தலின் மூலம் தெரியவரும்.

தமிழகத்தில் புதிய நான்கு தலைமைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டாலின், தினகரன், சீமான் மற்றும் கமல். இந்த நால்வரும் குறைந்தபட்சம் அடுத்த பத்து வருடத்திற்கு தமிழகத்தின் அரசியல் சதுரங்கத்தில் முன்னின்று விளையாடும் பெருமக்களாக இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

வைகோ, விஜயகாந்த், திருமா இவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கும் பட்சத்தில் இளைஞர்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் சீமான். பெண்கள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜெபி, காங்கிரஸ் இவர்களின் வாக்கு வாங்கிகளில் ஒரு பகுதி மற்றும் இளைஞர்களின் மறு பகுதியை ஈர்த்துக் கொண்டிருக்கிறார் கமல்.

காங்கிரசும், பிஜேபியும் வட இந்திய அரசியலை முன்னிலைபடுத்தி அரசியல் செய்யும் காரணத்தால் தென்னிந்தியாவில் பெரும் செல்வாக்கை ஒருபோதும் அவர்களால் பெற முடியாது. யாருடைய முதுகிலாவது சாவாரி செய்துதான் தமிழகத்தில் அவர்களால் பயணம் செய்ய முடியும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார். அப்படியே வந்தாலும் அவரால் போராட முடியாது. வைகோ, அன்புமணி, திருமா போன்றவர்கள் மூன்றாம் நிலை அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. முச்சந்தியில் நின்ற தமிழக அரசியல் தற்போது மாற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.

மத இனவாத அரசியலுக்குள் இந்தியா முழுமையாக நுழைந்த இந்த மோசமான நேரத்தில் இந்தியாவை மாற்று அரசியலுக்கு இழுத்துச் செல்லும் முக்கிய பங்கு தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்து இருக்கின்றது. காரணம் தலைவர்களால் இல்லை, தமிழகத்தின் தொன்மையான கலாசாரம் மற்றும் பண்பாடுகளால்.  தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளுடன் மாறுபடும் எந்த கட்சியும் அல்லது தலைவர்களும் தமிழகத்திலிருந்து புறந்தள்ளப் படுவார்கள். இதுதான் உண்மை.

No comments: