Saturday, April 13, 2019

நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?

நான் ஒரு இந்திய குடிமகன், மதத்தால் இஸ்லாம், இனத்தால் தமிழன். வாக்களிக்கும் உரிமை பெற்றவன். ஆனால் நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
கடந்த ஐந்து வருடத்தில் என் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக இந்த அரசாங்கம் என்ன மாற்றங்களை அல்லது உதவிகளை செய்துள்ளது? எனது படிப்பை எந்தவித அரசு பொருளாதார உதவியுமில்லாமல் படித்தேன். வேலையில்லாமல் தெருக்களில் அலைந்து, எனது சுய முயற்சியால் தொழில் தொடங்கியபோதும் எந்தவித அரசு உதவியும் எனக்கில்லைசெய்த தொழிலுக்கு வரி செலுத்தினேன். வருமானம் போதவில்லை என்று வெளிநாட்டில் வேலைக்குச் சென்றேன். அங்கிருந்து அந்நிய செலாவனியை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தேன். என் குடும்பத்துடன் சேர்ந்து அரசும் பயன்பெற்றது..  ஆனால் இந்த அரசால் எனக்கென்ன பயன்நான் ஏன் வாக்களிக்க வேண்டும்
எனது வருமானத்திற்கு வரி செலுத்துகின்றேன். எனது கணக்குகளை வங்கி மூலமாக பண பரிமாற்றம் செய்கின்றென். எனது வாகனத்திற்கு சாலை வரி முதல தினமும் நான் பயன்படுத்தும் எரிபொருளுக்கும் வரி செலுத்துகின்றேன். அரசால் எனக்கென்ன பலன்? என்னிடமிருந்து கிடைத்த (சொற்ப தொகையாகானலும்) வருமானத்தில் நான் வாக்களித்து ஆட்சியில் அமர்ந்தவர்கள் என்னை அடிமையைப்போல் பார்க்கின்றார்கள். நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
எனது வருமானத்திற்கு கணக்கு கேட்கும் அரசு, எனக்கு கிடைத்த வருமானத்தை எப்படிப் பெற்றேன், எங்கெ செலவு செய்தேன் என்று ஆதரங்களை சமர்ப்பிக்க சொல்லும் அரசு, என் மூலம் கிடைத்த வருமானத்தை எப்படி செலவு செய்தோம் என்று எனக்கு கணக்கு காட்ட மறுக்கிறது? நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் நான் அவர்களுக்கு எனது தொகுதியில் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று மேடையில் முழங்கி எனக்கு என் மதத்தை ஞாபகப்படுத்தும் அமைச்சர் பொதுவான ஒரு தலைவராக இருப்பார் என்று எப்படி நான் நம்புவதுநான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மோடி அவர்களே! உங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினால், நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்து 2ஜி ஊழலை மறந்துவிட்டீர்களா என்று எதிர் கேள்வி கேட்டு குற்றத்தை மறுக்காமல் குதர்க்கம் பேசும் அரசியல்வாதிகளை நம்பி நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
தேசத்தை காக்க கோடான கோடி ராணுவ வீரர்கள் தம் ஆருயிர் குடும்பத்தைத் துறந்து வெயிலிலும் பனியிலும் பணி செய்வதோடல்லாமல் தம் இன்னுயிரையும் இழக்கும்போது என்னைத்தவிர இந்த நாட்டை பாதுகாக்க திறன் பெற்றவர்கள் யாருமில்லை நான் ஒருவன் மட்டுமே 130 கோடி மக்களை காப்பாற்றும் திறமை பெற்றவன் என்று மறைமுகமாக மக்கள் அனைவரையும் திறமையற்றவர்கள் என்று ஒரு அரசியில்வாதி கூக்குரலிடும்போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலில்லாமல் அலைமோதுகின்ற நேரத்தில் என் மனதின் இன்னொரு மூலையிலிருந்து ஒரு குரல் நீ வாக்களிக்க வேண்டும் என்று ஓங்கி சத்தமிடுகிறது.
அபூபக்கர் (ரலி) அவர்களின் கைபிடித்து மதீனாவின் மக்கள்உங்களை நாங்கள் கலீபாவாக ஏற்றுக் கொள்கின்றொம் என்று உறுதி அளித்தபோது அந்த கால கட்டத்தில் அதுதான் ஜனநாயகத்தின் வாக்களிக்கும் முறை. இயந்திரத்தின் மூலமாக விரும்பியவரை தேர்ந்தெடுத்தல் இக்காலத்தின் இன்றைய ஜனநாயக முறை. என்வே எனது ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை நான் செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது கடமையில் நான் தவறியவனாகின்றேன். என்னைப் படைத்த இறைவனின் முன்னால் நான் குற்றவாளியாக நிற்க வேண்டும் என்பதால் நான் வாக்களிக்க வேண்டும். 
என்னுடைய ஒரு ஓட்டின் மூலம் இந்தியாவின் தலையெழுத்தே மாறும் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும் என்பதற்காக நான் வாக்களிக்க வேண்டும்.
டீ விற்றவரின் மகன் பிரதமராக வந்த நாட்டில் ஒரு செருப்புத் தொழிலாளியின் மகனும் பிரதமராக வருவதற்கு வாய்ப்புள்ள ஜனநாயக மரபை காப்பாற்ற நான் வாக்களிக்க வேண்டும்.  

வாக்களிப்போம் வாருங்கள்!!!

No comments: