அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
இந்தியாவின் ஆட்சிப்பாதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது. ‘மக்கள் எவ்வழியொ மன்னன் அவ்வழி’ என்பதை மாற்றி ‘மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி’ இருக்க வேண்டும் என்ற அசாத்திய கொள்கைகளுடன் களம் காணும் பி.ஜெ.பி கட்சி ஒருபுறமும், பி.ஜே.பி கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மதவாத, ஜாதிய மற்றும் ஏற்றத்தாழ்வின் வெறுப்பிலும் வன்முறையிலும் நாடு சிதைந்துவிடும் என்ற ஒரு காரணத்தை மட்டும் (இதுவரை) முன்னிருத்தி காங்கிரஸ் மறுபுறத்திலும், மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டால் இந்தியா ஒருபோதும் வளர்ச்சி அடையாது என்று ஒரு சில மாநில கட்சிகள் இன்னொரு புறம் என்று மூன்று அணிகளாக களமிறங்கி உள்ளன.
புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கற்காலத்தை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஒருபக்கம். ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவுமில்லாமல் மோடி எதிர்ப்பை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு செயல்படும் ராகுல்காந்தி மறுபக்கம், மாநில கட்சிகளின் கூட்டமைப்புதான் மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என்று சொல்லும் வேளையில் ஒருவருக்கொருவர் போதுமான புரிதல்கள் இல்லாத மாநில கட்சித் தலைவர்கள் இன்னொரு பக்கமுமாக மக்களை நோக்கி முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர்கள் எல்லோருக்கும் மன்னராக வேண்டுமென்ற ஆசைகள். அதற்கு அவர்கள் நம்பியிருக்கும் பாதை மதவாத மற்றும் ஜாதிவாத பிரிவினைகள் மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் எல்லோரும் பாகுபாடில்லாமல் ஒன்றுபட்ட வளர்ச்சி காணுவதே நோக்கம் என்று முழங்கிய மோடி அவர்களின் இந்தியர்கள் என்ற வரையறைக்குள் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடமில்லை. ஊழல்வாதிகள் என்று ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு ஆளுனரிடமும், கோர்ட்டிலும் புகார் கொடுத்தவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நம்மை மூடர் கூட்டமாக பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகள், திட்டங்கள், வளர்ச்சிகள் மற்றும் ஊழலற்ற ஆட்சி என்ற கோணிபைக்குள் மத, இன, மொழி, ஜாதி, இலவசங்கள் என்ற போதைப் பொருட்களுடன் நம்முன்னே பணிவுடன் பவனி வந்து கொண்டிருக்கும் இவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம் ‘இந்திய மக்கள் ஒரு மூடர்கள்’. ஏன் இப்படி அவமதிக்கப் படுகின்றோம்? ஏன் நமது அறிவையும் புரிதல்களையும் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அசிங்கப்படுத்துகின்றார்கள்?
நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கும் அறிவை இழந்ததால். இது என்னுடைய நாடு என்ற உரிமையை மறந்ததால். நமது வேர்வைகளையும் ரத்தத்தையும் உறிஞ்சி அதையே காசு பணமாக மாற்றி நம்மிடமே அதை இலவசமாக தருகிறார்கள் என்பதை புரிதல் இல்லாத காரணத்தால். என்னுடை ஒவ்வொரு வாக்கும் எனது மற்றும் என் சந்ததிகளின் எதிர்காலத்தை செதுக்கும் உளிகள் என்பதை மறந்த காரணத்தால். வாக்குகளை சரியாக பயன்படுத்தாததால் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாமல் முட்டளாக வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தால்.
‘இந்தியாவிற்கு இப்போது சுதந்திரம் கொடுக்காதே. அதை அனுபவிக்கும் தகுதியும் திறனும் அவர்களுக்கு இன்னும் வரவில்லை’ என்று 1940களில் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் நகைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படியே போனால் வாக்களிக்கும் உரிமையையும் எதிர்கால ஆட்சியாளர்கள் நம்மிடமிருந்து பறிக்கும்நாள் வெகுதூரத்தில் இல்லை. காரணம் அனுபவிக்கத் தெரியாதவனிடம் ஒரு உன்னதமான விஷயம் இருந்து என்ன பலன் என்று இறைவனும் முடிவு செய்துவிடுவான். இன்னும் சொல்லப் போனால் முட்டள்களை இறைவன் ஒருபோதும் காப்பாற்ற மாட்டான். உண்மையிலேயே நாம் முட்டாள்களா?
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர் (அல் குரான் 3:110)
நல்லவன் என்று எப்போது ஒருவன் அடையாளம் காட்டப்படுகின்றான்? அவன் தன்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதா? நிச்சயமாக இல்லை. நல்லவைகளை தன் செயல்மூலம் பிறருக்கு செய்து காட்டும்போதுதான் ஒருவன் நல்லவன் என்று சமுதாயத்தில் அறியப்படுகின்றான். நம்மிடையே நிறைய நல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தன் சிந்தனையில் மட்டுமே நல்லவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள், செயல்களில் இல்லை. ஏன்?
- தன்னுடைய சிந்தனைகளை மட்டும் தூய்மையாக வைத்துக் கொண்டிருந்தால் போதும் என்று ஒரு கூட்டம்.
- தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இன்னொரு கூட்டம், எனக்கென்ன என்று ஒதுங்கி போகும் இன்னுமொரு பிரிவு.
- தன்மீதே நம்பிக்கை இல்லாமல் உலாவரும் இன்னொரு கூட்டம்.
- யாராவது செய்யட்டும் அல்லது செய்வார்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் மற்றொரு கூட்டம்.
- சொந்தப் பிரச்ச்னைகளையே சமாளிக்கவே முடியவில்லை எப்படி அடுத்தவர்களுக்கு உதவுவது என்று ஒரு கூட்டம்.
இப்படி பல காரணங்களுடன் நல்லவர்கள் எல்லாம் நாடு நாசமாவதைப் பற்றி கவலையில்லாமல் வாழ்கிறார்கள். இவர்கள் சொல்லக்கூடிய மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் மனிதவாழ்வின் அடிப்படை குணாதிசயங்களுடன் ஒத்துப் போகாத முரன்பாடுகள். சுயநல சிந்தனைகளின் ஆதிக்கத்தால் எழுந்த பலகீனமான வாழ்க்கை முறையும், அதனுள் சிக்கிக்கொண்டு அடிமைகளாக வாழ்வதின் வெளிப்பாடுகள். மொத்தத்தில் மனித அழிவிற்கான வித்துக்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னையும் ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களால்தான் விதைக்கப்படுகின்றன!
நாம் ஒவ்வொருவரும் நமது அழிவிற்கான பாதையை நமக்குத் தெரியாமலே அகலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம். அழியும் ஒவ்வொரு நொடியும் அழிவின் பாதையில் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று தெரியாமலே பழக்க வழக்க சுழற்சிக்குள் அடிமையாகி அதன் ஓட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலும் அப்படி ஓர் அனிச்சை சுழற்சியில் உள்வாங்கப்பட்டு நம்மை நாமே அழித்துக் கொள்ள நமது விரல்களை (வாக்குகளை) நாம் பயன்படுத்த இருக்கின்றோமா?
மனிதர்களின் வாழ்வும், முறையும், உள்ளும், புறமும் மற்ற படைப்பினங்களோடு பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கை அமைப்பு. இந்த கட்டமைப்பிலிருந்து யாரும் விலக்கல்ல. முற்றும் துறந்த ஞானிகள்கூட மனித சமுதாயத்திற்குள் தன்னை இணைத்துக்கொண்டு வாழாமல் கடைத்தேறல் கிடையாது. தனிமனித முக்தியோ அல்லது பிறவிகளின் முடிவோ அல்லது சொர்க்கமோ, நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒரு மனிதன் தனித்து வெற்றி பெறமுடியாது, அது சாத்தியமில்லை. காரணம் மனிதனின் உடல்கூறுகளும் மனக்கூறுகளும் மற்ற மனிதர்களுடன் மற்றும் படைப்புகளுடன் பிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
இன்னும் விளக்கமாக எழுத வேண்டுமென்றால் எல்லா உயிரினங்களும் ஒரே காற்றைத்தான் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உன் நாசிக்குள் சுற்றிவந்த காற்றுதான் என் நாசிக்குள்ளும் உலா வருகின்றது. எனவே நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற சிந்தனையே தவறானது. எப்போதெல்லாம் ஒரு நல்லவன் எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகின்றானோ அப்போதெல்லாம் அந்த இடத்தை ஒரு கெட்டவன் ஆக்கிரமித்துக் கொள்கின்றான். ஆகவே எனக்கென்னவென்று நான் இருந்தால் என்னை மட்டுமல்ல என் அண்டைவீட்டாரையும் பாதிக்க செய்யக்கூடியவன்தான் என்னை ஆள்பவனாக பதவிக்கு வருவான்.
இறைவன் மனிதனை தனது பிரதிநிதியாக கருதுகின்றான். இவ்வுலகில் உள்ள அனைத்தையும் மனிதனின் ஆதிக்கத்தின் கீழ் கொடுத்து நம்முடைய பொறுப்பையும் பொதுநலத்தையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். இந்த உலகத்தின் இயக்கமும், பாதையும், முடிவும் நம் கைகளில் இல்லையென்றாலும் இறைவன் நம்மை கருவாக பயன்படுத்திதான் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அதையே சோதனையாகவும் செய்துகொண்டிருக்கின்றான். இல்லையென்றால் நமக்கு அறிவையும், ஆற்றலையும் மற்ற படைப்பினங்களை ஆதிக்கம் செலுத்தும் உரிமையையும் ஏன் இறைவன் நமக்கு வழங்க வேண்டும்? நன்மைகளை ஏவுவதும் தீமைகளை தடுப்பதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. அவைகளை செய்யத் தயங்கும்போது நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்கின்றோம். அப்படிப்பட்ட அழிவின் ஒருபகுதியாக வரவிருக்கின்ற பாரளுமன்ற தேர்தலை நாம் மாற்றிக் கொள்ள போகின்றோமா? அல்லது நன்மைகளை ஏவி தீமைகளை தடுத்து நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தை காப்பாற்ற போகின்றோமா?
நம் கைகளால் நமக்கு நானே அழிவைத் தேடிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை அறிதல், தெளிதல், உணர்த்துதல், ஒன்றுபடல் என்ற நான்கும்.
ஏன் தேர்தல்? எதற்காக நாம் வாக்களிக்க வேண்டும்? வெற்றிபெறுபவர்களின் அதிகார எல்லைகள் என்னென்ன? அவர்களின் செயல்பாடுகள், பலன்கள் மற்றும் செயல்படவில்லை என்றால் என்னென்ன பாதகங்கள்? வெற்றி பெற்றவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகள் எப்படியிருக்க வேண்டும்? என் இந்த நான்கையும் சரியாக பயன்படுத்தினால் என் வீடு, என் தெரு, என் கிராமம், என் சமுதாயம், என் மாநிலம், என் நாடு அனைத்தும் என் சுமூகமான வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். நமது சுதந்திரத்தை நாம் பூரணமாக அனுபவிக்க முடியும்.
அதன் முதல்கட்டமாக இந்த தேர்தலில் பொய்களையும், கற்பனைகளையும் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகாவும் அதிமுகாவும் தங்களின் சுயநலத்திற்காக எப்போது எப்படி வேண்டுமானலும் பாசிச சக்திகளிடம் உறவாடும் தன்மை கொண்டவைகள். இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் சாபக் கேடுகள். இரண்டுமே தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால், பிரச்சனை இந்தியாவை யார் ஆள்வதென்பதெ! எனவே, முதலில் வெளியில் இருந்து வரும் பாசிச சக்திகளையும், அவைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நம் இன மத மொழி சகோதரர்களை தோற்கடிக்க வேண்டும். முதலில் வெளியிலிருந்து வரும் பாம்புகளை அழிப்போம். பிறகு நம் வீட்டினுள் இருக்கும் எலிகளை அழிப்போம். ஆகவே, பி.ஜெ.பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய தகுதியும் பலமும் பொருந்திய வேட்பாளர்களுக்கு வாக்களிப்ப்தெ சிறந்தது.
அதனடிப்படையில் காயிதே மில்லத் முதன்மைக் குழுவின் முடிவை ஒவ்வொரு முஸ்லீமும் தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே வேளையில் மாற்று மதத்தை சேர்ந்த நம் சகோதாரர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல்வர்களுக்கு வாக்களியுங்கள். அவர்களை தோற்கவிடாதீர்கள், அவர்கள் எந்த கட்சிகளில் இருந்தாலும் சரி. உங்கள் சாதிக்காரர், மதத்தைச் சேர்ந்தவர் என்று கெட்டவர்களுக்கு வாக்களித்துவிடாதீர்கள். பெட்ரோல் விலை சாதிப் பார்த்து ஏறுவதில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு இனம் பார்த்து குறைவதில்லை. விவசாயிகளின் விளைச்சல்களுக்கு அரசு மதம் பார்த்து விலை நிர்ணயிப்பதில்லை. வாக்களுக்கும்போது சாதி மதம் பார்க்காதீர்கள். வேட்பாளர்களின் தரம் பாருங்கள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின், தலைவர்களின் குணம் பாருங்கள். நல்ல வேட்பாளர்தான், ஆனால் கட்சி சரியில்லை என்றால் அந்த வேட்பாளரை ஒதுக்கி வைத்த்துவிட்டு பாசிசத்திற்கு எதிராக வாக்களியுங்கள்.
No comments:
Post a Comment