இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக நிலை அவர்களது சமூகப் பார்வையை பொருத்தே அமைகிறது. இந்திய சமூகக் கூட்டமைப்பு என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியதே. ஆனால், முஸ்லீம்கள் இந்த கூட்டமைப்பினுள் இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்திய முஸ்லீம்கள் தனக்குத்தானெ ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டு அதைவிட்டு வெளிவராமல் தனது இயலாமைக்குக் காரணம் மற்றவர்கள்தான் என்று குற்றம் சுமத்தி வருவதும் ஏற்புடையதல்ல. மாற்றார்களின் அரசியல் அரங்கில் எத்தனை நாளைக்குத்தான் முஸ்லீம்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குருட்டுத் தனமாக வாழமுடியும். எந்த அரசும் அல்லது எந்த மாற்றார்களின் சமூகமும் முஸ்லீம்களை கைதூக்கிவிட வராது என்பதை எப்போதுதான் இந்த சமூகம் புரிந்துக் கொள்ளப்போகிறதோ தெரியவில்லை. முஸ்லீம்களின் சமூகப்பார்வை மாறாத வரை எந்த மற்றமும் வாராது. இறைவன் குரானில் சொல்வது போல் 'முஸ்லீம்கள் தானாக மாறாதவரை இறைவனும் உதவி செய்ய மாட்டான்' என்பதை முழுவதும் மறந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லீம்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு தலைவனிடம் தங்களது தலைவிதியை ஒப்படைத்துவிட்டு 'எல்லாம் அந்த தலைவர் பார்த்துக் கொள்வார்' என்ற சோம்பேறித்தனமான சிந்தனையில் உழன்று கொண்டிருக்கிறோம். தலைமைக்கு கட்டுப்படுவதென்பது வேண்டியதே, அதற்காக தகுதியற்றவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களிடம் முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டோம். அப்படிப்பட்ட தலைவர்களும் ஆளுங்கட்சிகளிடம் புகலிடம் தேடி தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒரு சரியான சமூக அரசியல் கொள்கையை உருவாக்கியதாகவோ அல்லது கல்வி மேம்பாட்டிற்கு உழைத்ததாக தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தலமைகள் எல்லாம் குழப்பத்தில் வாழ்ந்தும் வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றார்களே தவிர்த்து திடமான ஒரு வாழ்வியல் திட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது உருவாக்கவோ இயலாமல் இருக்கிறார்கள்.
பொதுவாகவே இந்தியாவில் முன்னேற்றம் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய ஒரு வளர்ச்சிதானே தவிர்த்து அரசியல் தலைவர்களால் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் நடத்திச் செல்லப்படுவதல்ல. முன்னேற்றம் என்பது ஒரு பரிமான வளர்ச்சியே தவிர்த்து ஒரு நெறியாள்கைக்கு உட்பட்டு நடக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இல்லை.
ஏதோ மழை பெய்கிறது, அதில் ஏதோ முளைத்து செடியாகி, மரமாகி எதையோ கொடுக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அதை அனுபவித்துக் கொள்கின்றார்கள். இப்படித்தான் இந்த GDP வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறதே தவிர்த்து ஒன்றும் பிரமாதமான திட்டத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சில அரசியல் நல்லவர்கள் அங்கங்கே கொஞ்சம் நீரூற்றி, வேலி கட்டி ஏதாவது ஒரு பாதுகாப்பை செய்துவிட்டு செல்வார்கள், அதை காலமெல்லாம் சொல்லிக் கொண்டு பின்னால் வருபவர்கள் பெருமை தேடிக் கொள்வார்கள்.
இந்த பொதுவான விதியில் கூட முஸ்லீம்கள் பின் தங்கியிருப்பது வருத்தமான நிலை. வெறும் புல் பூண்டுகளாக முளைத்து தனக்கும் பிரயோசனமில்லாமல், தன்னால் பிறருக்கும் பயனில்லாமல் வாழ்ந்துவருவது ஒரு இஸ்லாமிய வாழ்க்கையே இல்லை.
முஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும். ஒரு புறத்தில் ஆளும் வர்க்கத்தின் மாற்றந்தாய் அணுகுமுறைகளும், இன்னொரு புறத்தில் தகுதியற்ற தலைவர்களிடம் அகப்பட்ட பகடைக்காய்கள் போலவும் வெறும் சுமை தாங்கிகளாக அடிமட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
இதை நன்குணர்ந்த நல்ல மனிதர்கள் முஸ்லீம்களிடத்திலே பலர் உள்ளனர். அவர்களை வளரவிடாமல், வாய்ப்பு கொடுக்காமல் முளையிலேயே கிள்ளும் வேலைகளில் முஸ்லீம் ஆளும் வர்க்கமும், மாற்றார்களின் அரசியல் விற்பன்னர்களும் கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
தனக்குத்தானெ உதவி செய்துகொள்ள முடியாத ஒரு சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் சமூகப் பார்வை எப்படி ஒரு கூட்டமைப்பில் வாழும் சமூகப் பார்வையாக இருக்க முடியும்? இது முஸ்லீம் சமுதாயத்தின் முன்னல் இருக்கக்கூடிய முதன்மையான சவால். ஆனால் இந்த சவால்கள் வெல்லக் கூடியதே.
முஸ்லீம் தலைவர்களுக்கு சமூக அங்கீகாரம் என்பது இரண்டு விதங்களில் கிடைக்க வேண்டியிருக்கிறது. ஒன்று முஸ்லீம் சமுதாயத்தில், இன்னொன்று இந்திய கூட்டமைப்பு சமுதாயத்தில். ஒன்றில் அங்கீகாரம் இருந்தால் இன்னொன்றில் இருக்காது. இது போன்ற அவல நிலை வேறு சமுதாயத்திலலும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இந்த இரண்டிலும் அங்கீகாரம் பெறும் தலைவர்களால்தான் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல வழிகாட்டுதல்கள் கொடுக்க முடியும். இந்த அவலச் சூழலுக்கு அடிப்படைக் காரணம் கல்வியை, மார்க்க கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் தேவையில்லாமல் பிரித்து ஒரு பெரிய பிளவையே இந்த சமுதாயத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். மார்க்க கல்வி கற்றவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எதார்த்தமே இல்லாமல் சமூகத்தை நடத்தி செல்கிறார்கள். மறு பிரிவினர் வெறும் தொழுகை, நோன்பு என்று தனது ஆன்மீகத்தேவைகளை ஒரு கட்டுக்குள் நிறுத்திவிட்டு உலக ஆதாயங்களில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள். இந்த பிளவு தொடர்ந்து இருக்க வேண்டியது மாற்றார்களுக்கு அவசியமாகிவிடுகிறது. இதனாலேயே, இந்தியாவின் ஆளும் கூட்டனிகள் தேவைக்கேற்ப இந்த இரு பிரிவின் தலைவர்களையும் வைத்து பொம்மலாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த பிரிவுகளை சமாளித்து, இரண்டிலும் அங்கீகாரம் பெற்று பிறகு இந்திய கூட்டமைப்பில் மரியாதைக்குரிய இடத்தை பெற வேண்டிய கட்டாயச் சூழலில் முஸ்லீம் இளைஞர் சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது சமுதாயத்திற்கு தீவிரவாதம் பட்டம் கட்டி கிடைக்கும் ஒன்றிரண்டு முன்னேற்றத்தையும் அல்லது வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி நிற்கிறது இளைஞர் சமுதாயம். இப்படி சொந்த வீட்டையே சரி செய்ய இயலாமல் நிற்கும் இந்தக் கூட்டம் எப்படி இந்திய கூட்டமைப்பில் நின்று சிந்திக்கக் கூடிய மனிதர்களாக மாறுவார்கள்?
இப்படிப்பட்ட குழப்பமான சமுதாயப் பார்வைகள்தான் தற்போது முஸ்லீம்களிடத்தில் இருக்கிறது. இதை மாற்றி, ஓரளவாவது ஒரு தெளிவான பாதையில் கால் வைக்கும்போதுதான் முஸ்லீம்களின் நாடு தழுவிய சமுதாயப் பார்வையில் மாற்றம் வரும். அப்படி வந்தால்தான் முஸ்லீம்களின் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி வரும்.
இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லீம் இளைஞர் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கவர்கள் முதலில் அரசியலில் முஸ்லீம்களுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது, எத்தனை ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்று தனது முழு சக்தியையும் அரசியல் உயற்விற்காக வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லீமகளின் சமயம் சாராத சமுதாயப் பார்வைகள் அவர்களது கல்வியில் ஏற்படும் (மார்க்கம் மற்றும் உலகம்) முன்னேற்றத்தை பொருத்தே இருக்கிறது.
1 comment:
இளைஞர்கள் தங்களுக்குள் மாற்றத்தை வேண்டி பயணிக்கையில் எதிரிகள் அவர்களுக்கு தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி பொதுவிலிருந்து புறந்தள்ள எத்தனிக்கிறார்கள். இவ்வாறான முத்திரை குத்துவதன் மூலம் நடுநிலையாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராக மாற்ற முயல்கிறார்கள்.
ஆக இத்தகைய சூழ்ச்சிகளை இனங்கண்டு அழித்து, இச்சமுதாயத்தை முன்னேற்ற கல்வியும், திட்டமிடலும் அதிகமான உழைப்பும் அவசியம். இம்முன்னேற்றத்திற்காக நம்மால் ஆன உதவிகளை செய்ய நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு படித்தவர்கள் முன்வரவேண்டும்.
புலம்பிக்கொண்டு நிற்பதைவிடு, நமது முன்னேற்றத்திற்கான வழியை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது மேல்.
-அபூ உமர்-
Post a Comment