Friday, June 03, 2005

முதல் தியாகம்


நிசப்தமான நடுப்பகல் நேரம். உடலின் நீரையெல்லாம் உரிஞ்சும் சுட்டெரிக்கும் வெயில. எங்கு பார்த்தாலும் வெப்ப சலனங்கள், மணல்வெளிகள் தங்கத்தில் உருக்கப்பட்ட தடாகம் போல் தகித்துக் கொண்டிருந்தது. பனு மக்ஸும் கூட்டத்தினருக்கு சொந்தமான சில ஒட்டகங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கற்களை உணவுகளாக சுவைத்துக் கொண்டிருந்தன. பாலையின் அனல் பறக்கும் வெயிலுக்குச் சொந்தமான இப்பகுதி குரைஷி இனத்தின் வலிமைமிக்க ஒரு பிரிவான மக்ஸூம் குலத்தினருக்கு சொந்தமானது.

வீல் ... என்ற ஒரு பெண்ணின் அலறல் அந்த நிசப்தத்தை கொடூரமாக கலைத்தது.  அதைத் தொடர்ந்து ஒரு ஆணின் அழுகுரலும் சேர பாலையின் அந்த மலையடிவாரம்  திடீரென ஒரு பதை பதைக்கும் இடமாக மாறியது.  ஒட்டகங்கள் தலையை திருப்பி சத்தம் வரும் இடத்தை நோக்கி பார்த்தன. 'இது தினமும் கேட்கும் சத்தம்தான்' என்று நினைத்தனவோ என்னவோ சிறிது நேரத்தில் ஒட்டகங்கள் தலையை தொங்கவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தன.

மீண்டும், மீண்டும் அந்த பெண்ணின் அலறலும் ஆணின் அழுகையும் மணல்வெளியில் முட்டி மோதி காணமல் போக,  சில ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள் கொஞ்சம்  கொஞ்சமாக அதிகமாகியது. ஒரு புறத்தில் மரண அவலத்தில் கதறும் ஆண் பெண் குரல்கள்.  இன்னொரு புறத்தில் அவர்களின் கதறல்களை ரசித்துச் சிரிக்கும் ஆண்களின் கூட்டம்.

சாட்டை அடியின் விளாசல்களில் எழுந்த சத்தங்களின் மத்தியில் ஒரு ஆணின் தளர்ந்த அழுகுரல் வலியால் சத்தமிட, அலறிய பெண்ணின் குரல் அடிக்காதீர்கள்... அவரை அடிக்காதீர்கள்.. என்று சத்தமிட்டது.  ஆனால், அந்த சாட்டையடி சத்தங்கள் நிற்காமல் தொடர, அழும் அந்த ஆண், பெண் குரல்களை பின்னுக்குத் தள்ளின அங்கிருந்து வந்த ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள்.

தூரத்தில் இரு இளைஞர்கள் தங்கள் தலைகளில் கை வைத்தவர்களாக கண்களில் தாரை தாரையாக நீர் சொரிய அழுது கொண்டிருந்தார்கள். ஏன் இந்த அழுகை என்று  கேட்க யாருமில்லை. பலைவனத்தின் மணல்களும், மலைகளின் பாறைகளும்தான் கேட்க வேண்டும்.  யாருமற்ற, நாதியற்றவர்களாக இளைஞர்கள் இருவரும் இங்கே அழுவதும், தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சித்திரவதை செய்யப்படுவதும் அதை மலைகளும், பாறைகளும், மணல் வெளிகளும் வெறும் வாய் மூடி மௌனமாக கேட்பதுமாக நாழிகைகள் நகர்ந்தன. ஒரு நாளல்ல, இரு நாளல்ல. இந்த அவலம் தொடர்ந்து பல நாட்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி சாய்ந்துக் கொண்டிருந்தான். இரு இளைஞர்களும் அழுகை வந்த திக்கை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் மற்றும் அம்மார் என்ற இருவரும் தளர்ந்த நடையுடன் கேளிக்கையும் கும்மாளமுமாக சிரித்துக் கொண்டிருக்கும் கூடாரத்தை தயங்கியபடி நெருங்கினார்கள். வரும் இருவரையும் பார்த்தவுடன் அந்த கூட்டத்தினர் இன்னும் சத்தமிட்டு சிரித்து வரவேற்றனர்.

'
அழைத்து செல்லுங்கள். அடிமைகளுக்கு பிறந்த அடிமைகளே' சத்தமிட்டனர்.

'
நாளை இந்த இரு கிழங்களும் உயிரோடு கண் விழித்தால் வழக்கம் போல் திரும்பவும் அழைத்து வரவேண்டும்.. புரிகிறதா..' என்று முழக்கமிட.. இரு இளைஞர்களும் தலையசைத்து ஆமோதித்தவாறு.. மணலில் கிடத்தி இருந்த அந்த இருவரையும் நோக்கி நடந்தார்கள்.

எக்காளமிட்டு சிரித்த அந்த கூட்டம் அபூ ஹுதைஃபா இப்ன் முகீரா என்பவரின் வாரிசுகள். அபூ ஹுதைஃபா என்பவர் இஸ்லாத்தையும் முஹம்மதுவையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கு முக்கிய தலைவர்களில் ஒருவரான அபூஜஹ்லின் பெரிய தந்தையாவார்.
அப்துல்லாவும் அம்மாரும் அழுத வண்ணம் மணலில் கிடத்தியிருந்த தனது பெற்றோரின் அருகில் வந்து நின்றார்கள்.  கொதி மணலில் மார்பில் பாரமாக வைக்கப்பட்டிருந்த சுடும் பாறையை தள்ளிவிட்டார்கள் இருவரும். உடலெல்ல்லாம் சாட்டையால் அடிபட்டு ரத்தம் சொறிய கிடந்த தனது தந்தை யாசிர் பின் மாலிக்கை அழுதபடி தூக்கிப் பிடித்து அமர வைத்தார்கள்.  அவரின் உடலெல்லாம்.. இரும்புக் கம்பியால் பழுக்கக் காய்ச்சி சூடு போடப் படடதுபோல் தோல்கள் பிய்ந்து தொங்கின.  மேனி முழுவதும் இரத்தம் ஒழுகி... சின்ன பின்னப்படுதப்பட்ட உடலாக இருந்தார் யாசிர்.

இரும்புக் கவசத்தை தலையில் அணிவித்து சுடுமணலில் கிடத்தப்பட்டிருந்த தனது தாய் சுமையாவின் சுட்டெரிக்கும் கவசங்களை அப்புறப்படுத்திவிட்டு அவரையும் தூக்கி அமரவைக்கவே... அம்மாரல் இனிமேலும் அடக்கி வைக்கமுடியாத அழுகை சத்தமாக பீறிட்டு வந்தது. காய்ந்து பழுத்துப் போன முகம். இரத்தம் கலந்த கண்ணீருடன் அழுது புடைத்திருக்கு அன்னையின் கன்னங்கள். முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்த தாயின் கோரமான முகத்தைப் பார்த்து சொல்லன்னா துயருடன் சத்தமிட்டு அழுதார்கள் இரு மகன்களும்.

அடிமைகளுக்கு அழும் உரிமை கூட கிடையாதே என்று அம்மாரும் அப்துல்லாவும்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்படி மக்ஸூம் கூட்டதினரின் சித்திரவதைகளை அனுபவிக்கப் போகிறோம் என்று தாய் தந்தையரின் இரத்தங்களை துடைத்தவாறு கதறினர்.

சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்து வரும் இந்த இரு தள்ளாத வயதினரின் குற்றம்தான் என்ன?  ஏன் அவர்களது இரு மகன்களும் தன் பெற்றோர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஒன்றும் செய்ய முடியாதவர்களாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்ககின்றனர்?

ஏக இறைவனை.. கடவுளாகவும்.. முஹம்மது (சல்) அவர்களை இறைத்தூதராகவும் இஸ்லாத்தை வாழ்வுமுறையாக ஏற்றுக் கொண்டதுதான் அவர்களது குற்றம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையில்லை என்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அடிமை வாழ்க்கையிலிருந்து வெளியேற முனைந்ததுதான் அவர்களின் குற்றம். இவை எல்லாவற்றையும் கடந்து சிந்திக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அடிமை குடும்பத்திற்கு சீரிய கொள்கைகளா? வெகுண்டெழுந்த இறை நிராகரிப்பாளர்கள் கேட்க நாதியற்றவர்களை கொடுரமாக தண்டித்தால்தான் நபியை பின்பற்ற நினைக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கையாக இருக்கும் என்ற கொடூர சிந்தனையில் விளைந்ததுதான் யாசிர் குடும்பத்தின் இந்த அவல நிலை.

'
மகன்களே.. நிச்சயமாக.. ஒரு நாள்.. நீங்கள் இருவரும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இறைத்தூதர் முஹம்மது கொண்டுவந்த அந்த செய்தி உண்மையானது.. இறைவன் பெரியவன். இறைவன் இந்த கொடுமைகளுக்கு பகரமாக உங்களின் எதிர் காலத்தை நன்மையாக்கி வைப்பான். இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து உங்களுக்கு உரிமைக் கிடைத்துவிடும்' என்று பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லியவாறு.. தனது குடிலை நோக்கி நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

சுமையா பிந்த் ஹயாட் என்ற அந்த பெண்மணி அபூ ஹுதைஃபாவிடம் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்தார்.   ஏமன் நாட்டிலிருந்து காணமல் பொன தன் சகொதரனைத் தேடி மக்கா வந்த யாசிர் அங்கெயே தங்கிவிடவே அபூ ஹுதைஃபா யாசிரை சுமையாவிற்கு கணவனாக மணம் முடித்து இருவரையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டார்.  யாசிரும் சுமையாவும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மதாயிஷ் எனும் வலுவற்ற ஓர் கீழ்நிலை குலத்தை சேர்ர்ந்தவர்கள். மற்ற குலத்தினர் இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் ஆண் பெண்களை பிடித்துச் சென்று அடிமைகளாக சந்தைகளில் விற்றுவிடுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு அடிமையாக விற்கப்பட்டவள்தான் சுமையா பிந்த் ஹயாட்.
அடிமையாக இருந்த சுமையாவை மணமுடித்த காரணத்தால் யாசிர் பின் மாலிக்கும் அபு ஹுதைஃபவிடம் அடிமையாக மாறிப் போனார். இருவருக்கும் பிறந்தவர்கள்தான் அப்துல்லாஹ் மற்றும் அம்மார் எனும் ஆண்மக்கள். அபு ஹுதைஃபாவின் மரணத்திற்குப்பின் யாசிரும், சுமையாவும் அபு ஹுதைஃபாவின் வாரிசுகளுக்கு அடிமையாக பணி செய்து கொண்டிருந்தனர்.
அம்மாரும் இறைத்தூதர் முஹம்மதுவும் நண்பர்கள். இறைத்தூதர் கொண்டு வந்த ஓரிறை மற்றும் இஸ்லாத்தில் அடிமை வாழ்க்கை இல்லை என்ற கொள்கைகளை அறிந்து யாசிரின் குடும்பம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது. அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள்?

முகம்மதின் 'தூதுத்தவத்தை ஏற்றுக் கொண்டு... லாயிலாஹா.. இல்லல்லாஹ்' வணங்குவதற்கு உரியவன்.. அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று மொழிந்த ஒரே காரணத்திற்காக தினம் தினம் உயிர் போகும் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள் யாசிரும் சுமையாவும்.  அடிமைகளுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமைகள் எதுவும் இல்லாத நிலையில், அதுவும் முஹம்மதின் கொள்கையை வேரருக்கும் வேளையில், யாசிர் குடும்பத்தின் செயல் மக்ஸூம் கூட்டத்தினருக்கு பெருத்த அவமானத்தை உருவாக்கிவிட்டது. யாசிரும் சுமையாவும் புதிய இறைக் கொள்கையை கைவிடச் சொல்லி கொடுமைப் படுத்தப் பட்டார்கள். ஆனால், உயிரே போனாலும் சரி, எங்களின் இறை நம்பிக்கையை கைவிட மாட்டோம் என்று உறுதியாக மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் மீண்டும் இம்மண்ணில் முளையிடத் தொடங்கிய காலம்.  நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து ஏறக்குறைய ஐந்து வருடம்.  இக்காலச் சூழலில் வெளிப்படையாக தன்னை முஸ்லீம் என்று அறிவிப்பு செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே.  ஒரு சிலர் ரகசியமாகவும் வேறு சிலர் வெளிப்படையாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீம்களாக மாறிக் கொண்டிருந்த காலம். முஹம்மது நபியவர்கள் தொடங்கி முஸ்லீம்களாக மாறிய அனைவரும் இறை மறுப்பாளர்கள் மற்றும் சிலைவணங்கும் கூட்டத்தினரால் பல்வேறு இன்னல்களும், சித்திரவதைகளும் அனுபவித்துக் கொண்டிருந்த காலச் சூழல். இறைத்தூதரின் உயிருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த மோசமான நிலை. தன்னையும் தன்னை பின்பற்றுபவர்களையும் காப்பாற்ற கடினமாக போரடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் குடும்பத்தின் அவலத்தை நினைத்து இறைவனிடம் கையேந்தி அழுதார்கள் நபியவர்கள்.

தினமும் இதே நிலைதான். யாசிரும் சுமையாவும் படும் சித்திரவதைகளுக்கு முடிவேயில்லாமல் போனது. அவ்வழியெ வந்த முஹ்ம்மது (சல்) அவர்கள் அந்த கொடுமையைத் தடுக்க முடியாமலும் பனு மக்ஸூம் கூட்டத்தினரை தட்டி கேட்க முடியாமலும், கண்ணீர் விட்டவாறு.. 'யாசிரின் குடும்பத்தினரே... பொறுமையுடன் இருங்கள்.. உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்லவும், அவர்களுக்காக பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தவர்களாக இருந்தார்கள்.
என்ன ஒரு கையறு நிலை என்ன ஒரு பலவீனமானச் சூழல். இறைவன் ஒருவனே, அவன் மட்டுமெ வணக்கத்திற்குரியவன் என்ற ஒரு சத்தியம் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறது. யாசிர் குடும்பத்தினரின் மீதான கொடுமைகள் கொஞ்சம்  கொஞ்சமாக அதிமாகி, கேட்க ஆளில்லை என்பதால் அவர்களது பிள்ளைகள் அப்துல்லவும் அம்மாரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மற்றொருமுறை முஹம்மது நபியவர்கள் அவர்களின் கொடுமைகளை கண்ணுற்றபோது  'யாசிரின் குடும்பத்தினரே, பொறுமையுடன் இருங்கள்' என்று கூறிவிட்டு.. 'இறைவா.. யாசிரின் குடும்ப்பத்தினருக்கு மன்னிப்பு வழங்குவாயாக' என்று பிரார்த்தித்து அழுதார்கள்.
நபியவர்களே தனது உயிரை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் சுமையா போன்ற சாமனியர்களுக்கு பெரும்பாதகமான சூழலாக இருந்தது. அபூ ஜஹல், அபூ லஹப் போன்ற குரைஷி தலைவர்கள்.. முகம்மதை நேரடியாக தாக்க இயலாத காரணத்தால்.. அவரின் கொள்கைகளை பின் பற்றுபவர்களை கொடுமையாக தாக்கி வந்தார்கள்.  நபியை பின்பற்றி நடப்பவர்களை கொடுமைப் படுத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்களால் முகம்மதின் உறுதியை குலைக்க எண்ணி படுபாதக செயல்களில் ஈடுபட்டார்கள்.

ஒரு நாள்... மாலை நேரத்தில் யாசிர், சுமையா, அப்துல்லாஹ் மற்றும் அம்மாரின் வருகைக்காக காத்திருந்தான் குரைஷிகளின் தலைவன், முகம்மது நபிகளாரின் எதிரி அபூஜஹல்.

பகல் முழுவதும் துன்பங்களை சகித்து இரவிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று வீட்டிற்கு வந்த சுமையா, வாசலில் அபூஜஹல் காத்திருப்பதைக் கண்டு கலங்கி தன் இரு மக்களின் கைகளை பிடித்தவாறு.. தள்ளாடி நின்றாள்.

ஓரிறை கொள்கைப்பிடிப்பும் முகம்மது அவர்களின் மேல் இருந்த உண்மையான அபிமானமும் அவர் சொன்ன செய்திகளில்... ஏக இறைவனின்.. உன்னதமான இறைச் செய்தியை சுவைத்த அனுபவமும் சுமையாவிற்கு.. போதுமான உளத்திறனை கொடுத்தது. தான் ஏற்றுக் கொண்ட இந்த கொள்கையால் நிச்சயம் ஒரு நாள் இந்த பூமியில் பெருத்த மாற்றம் வர இருக்கிறது.. இந்த கொடுமைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும்.. இந்த பூமி விடுபட இருக்கிறது. காலம் காலமாக அனுபவித்து வந்த அவமானங்கள், கேவலமான வாழ்க்கை முறைகள், ஒழுக்கக் கேடுகள் எல்லாவற்றிலிமிருந்தும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற சத்தியப்பிடிப்பு அவரை இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியிலலும் இன்னும் உயிர் வாழ வைத்தது. அது மட்டுமல்லாமல்.. தனது இந்த நம்பிக்கையால்.. நிச்சயம் தனது இரு ஆண் மகவுகளும் இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து விரைவில் விடுபடுவார்கள் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பும் நிறையவே இருந்தது. விழிகளில் நீரும், உதடுகளில் பிரார்த்தனையுமாக வீட்டை நெருங்கினார்கள் நால்வரும்.

இப்பாதுகாப்பற்ற சூழலில் மக்ஸூம் கூட்டதினரையும் அவர்களது உறவினர்களையும் காணும் போதெல்லாம் சுமையாவின் உள்ளம் மட்டுமல்ல உடலும் நடுங்கியது. தனது வீட்டு வாசலில் அபூஜஹல் நிற்பதை கண்ட சுமையாவின் முதல் பயம் பகல் முழுவதும் கொடுமைகளை அனுபவித்து விட்டு இப்போதுதான் திரும்பி வரும் வேளையில் தனது பிள்ளைகளை அந்த பாதகன் இன்னும் அதிக கொடுமைப் படுத்துவானோ என்ற பீதி அவளைப் பற்றிக் கொண்டது.

'
வா.. சுமையா.. அடிமையான உனக்கு.. எத்தனை தைரியமிருந்தால் நீ... இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று கோபத்துடன் அந்த பெண்மணியை தாக்கத் தொடங்கினான்.

அன்னை தாக்கப்படுவதை அப்துல்லாவும், அம்மாரும் தடுக்க முயன்றும், அபூ ஜஹல் தனது ஈட்டியால் இருவரையும் திருப்பித் தாக்கினான். கண்மூடித்தனமான அபூ ஜஹலின் தாக்குதலை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. போராடும் திறனும் உடல் பலுவும் அவர்களிடத்தில் இல்லையென்றாலும் இரு மகன்மகளும் அபூ ஜஹலை விடுவதாக இல்லை.

மிகுந்த போராட்டதிற்குப்பின் அபூ ஜஹல் தனது ஈட்டியால் அடிவயிற்றில் பெண்குறியில் குத்த சுமையா நடுத்தெருவில் சாய்ந்தாள். உயிருடன் வாழும் அடிமைகளுக்கே பரிந்து கேட்க ஆளில்லா சமூகத்தில் உயிரற்ற சுமையாவிற்கு யார் வந்து நிற்கப் போகிறார்கள்? எக்காளமிட்டு முழங்கிய அபூ ஜஹலின் வீரதீர பராக்கிரமத்தை பார்த்து கைகொட்டி ஆர்ப்பரித்த கூட்டத்தின் மத்தியில் சுமையா என்ற சொர்க்கத்தின் ஆன்மா கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது. இஸ்லாமிய சமூக கட்டமைப்பின் அடித்தளமான ஓரிறைக் கொள்கையை மனதில் தூக்கி சுமந்த ஓர் உன்னதப் பெண் இதுநாள்வரை தனது உறுதியை தன் குருதியின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்த ஓர் அடிமைத்தாய் இறுதியாக கண்ணுயர்ந்தாள். இஸ்லாமிய தியாகங்களின் அடித்தளத்தில் தன்னுயிரை கொடுத்த முதல் பெண் சுமையா என்ற வீரமங்கை.
சத்தியம் சிந்திய ரத்தங்களின் முதல் அத்தியாயம் மக்காவின் தெருவில் சுமையா என்ற ஒரு பெண்ணால் தொடங்கிவைக்கப் படுகிறது
(தொடரும்)

குறிப்புகள்:
1)       கணவர் யாசிரும் சில நாட்களில் பனு மக்ஸூம் கூட்டத்தினரின் சித்திரவதைகள் தாங்கமுடியாமல் மரணமடைகிறார்.
2)       அப்துல்லாவும், அம்மாரும் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
3)       அப்துல்லாஹ் அபூஜஹலால் கொல்லப்படுகிறார். .
4)       பனு மக்ஸூம் கூட்டத்தாரின் சித்திரவதைகள் தாங்க முடியாமல் அம்மார் இஸ்லாத்தை விட்டுவிடுவதாகவும், நபியவர்களை வெறுப்பதாகவும் சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்து வெளியேறுகிறார்.
5)       நடந்ததை நபியவர்களிடம் சொல்லி அம்மார் அழும்போது இறக்கப்பட்ட குர்ஆன் வசனம் 16:106 (எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதிக் கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர)
6)       நபியவர்கள் அம்மார் மற்றும் இன்னும் சில நண்பர்களை எதியோப்பியா அரசரிடம் புகலிடம் கேட்டு அனுப்பி வைக்கிறார்கள்.
7)       கலீபா உமர் (ரலி) காலத்தில் அம்மார் இப்ன் யாசிர் ஈராக்கின் கவர்னராக நியமிக்கப் படுகிறார்.
8)       அம்மார் தனது 90வது வயதில் சிரியாவில் நடந்த சிஃபின் யுத்தத்தில் வீர மரணம் அடைகிறார்கள்.
ஒரு குடும்பமே இஸ்லாத்திற்க்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த வரலாறு முஸ்லீம்களால் ஒருபோதும் மறக்கமுடியாது.

1 comment:

Abu Umar said...

அபூ ஜஹ்ல் போன்றவர்களை ஒன்றுமறியாத அப்பாவிகளாக காட்டிடத்துடிப்பவர்களுக்கு எதிரான நல்ல பதிவு.