Monday, June 27, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 3

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாம் - நெருப்புக் கிடங்கு

அசத்தியம் எப்போதெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சத்தியத்தை நெருப்பிலிட்டு கொளுத்த தயங்கியதில்லை. ஆனால் சத்தியம் அதிகாரத்தில் இருக்கும்போது அசத்தியத்தில் இருப்பவர்களுக்கு தங்களை அந்த தவறான கொள்கைகளிலிர்ந்து விடுவித்துக் கொள்ள எப்போதுமே சந்தர்ப்பம் கொடுக்கத் தயங்கியதில்லை. இதுதான் சத்தியத்தின் பலமும் கருணையும். அசத்தியத்தின் பலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான்.

ஆப்ரஹாம் கொண்டுவந்த அல்லது சொன்ன அந்த சத்தியம் இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு ஆழ்ந்த கருத்து. அந்தக் கருத்துக்கள், கொள்கைகள் அசத்தியத்தின் அதிகாரத் தூண்களை அகற்ற வல்லது என்பதை புரிந்த அசத்திய மேதாவிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆப்ரஹாமை இல்லாமல் செய்து சத்தியத்தை அழித்துவிட முயற்சித்தனர்.

இந்த மன நிலை இன்றும்கூட அதிகமாக விரவிக்கிடப்பதை எல்லா நிலையிலும் காணலாம். ஆப்ரஹாம் சொன்ன மார்க்கம் ஓரிறை மார்க்கம். இறைவன் தான் படைத்த மக்கள் நல்வழியில் சென்று மறைவதையே விரும்புகிறான். அதை தான் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு இறைத்தூதர் மூலமாகவும் உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பிவைத்தான். மனிதர்களுக்கு வழிகாட்டியாக அப்போதிருந்த ஆப்ரஹாம், யூதகுலத்தின் பிதா, அரேபியர்களின் தந்தை, நெருப்பிலிட்டு அழிக்க அந்நகரத்துக் கூட்டம் தயாரானது.

நகரத்தின் பொது மைதானத்தில் மரக்கட்டைகளும், பட்டைகளும், ஓலைகளுமாக கொண்டுவந்து குவிக்கப்பட்டன. ஒரு சிறிய மலைக்குன்றைப் போல் அந்தக் குவியல்கள் பெருகிவந்தது. நகரத்தில் வசிக்கும் ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் வரை யார் யாருக்கெல்லாம் ஆப்ரஹாமின் மீது வெறுப்பு இருந்ததோ அல்லது யார் யாரெல்லாம் நகரத்தலைவர்களின் விசுவாசிகளாக இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொளுத்தும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.

சத்தியத்தை எடுத்தியம்பும் மனிதனை முதலில் தீர்த்துக் கட்டுவது. பிறகு அந்த மனிதர் கொண்டுவந்த அந்த சத்தியக் கொள்கைகளை அழிப்பது. இதுதான் காலம் காலமாக சத்தியத்தின் எதிரிகள் செயல்படுத்திவரும் கோட்பாடுகள். அப்படி அழிக்க முடியாவிட்டால் அந்தக் கொள்கைகளை சின்னபின்னப் படுத்தி சிதைத்துவிடுவது. அதுவும் இயலாத பட்சத்தில் அந்தக் கொள்கைகள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாது என்று தட்டிக் கழிப்பது. அதுவும் நடக்காத பட்சத்தில் அந்தக் கொள்கைகளை சொன்ன அல்லது கொண்டுவந்த மனிதரின் தனிமனித வாழ்க்கையை தேடித் துருவி அதில் ஏதேனும் தவறுகளோ அல்லது முரண்பாடுகளோ இருந்தால் அதைக் காரணமாகக் காட்டி அந்தக் கொளைகளை ஒழித்துக் கட்டுவது அல்லது எதிர்ப்பது. அதுவும் முடியவில்லை என்றால் இப்படிப்பட்ட சத்தியக் கொள்கைகளும் கருத்துக்களும் எப்படி வெளியானது என்று ஆராட்சியில் ஈடுபட்டு தானும் வழிமாறி அடுத்தவர்களையும் குழப்பி எப்பாடு பட்டாவது அந்தக் கொள்கைகளை அழித்துவிடுவது என்று பலவிதாமான வன்முறைகள் சத்தியத்திற்கு எதிராக நடத்தப்படுகின்றன. அதில் முதலாவதான சத்தியத்தைச் சொன்னவரை கொன்றுவிடுவது, அதிலும் பொது இடத்தில் நெருப்பிலிட்டு கொலை செய்தால் நாளை வேறு யாரும் 'ஓர் இறைவனை மட்டும் வணங்குங்கள், சிலைகளை வணங்காதீர்கள்' என்று சொல்ல துணிவு வராது என்ற காரணத்திற்காக ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொல்ல மைதானத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்.

பீரங்கி வண்டியைப் போல் மரத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு இழுவண்டி கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. மக்கள் கூட்டம் திரண்டு நின்று ரசித்துக் கொண்டிருந்தது. இழுவண்டியின் மேல் அம்புபோல் அல்லது கிட்டத்தட்ட ஒரு ஏவுகணை போல் பொருத்தப்பட்ட மரக்கட்டையை வெளியில் எடுத்து அதில் ஆப்ரஹாமை படுக்கவைத்து இரும்பு கம்பிகளால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டார். மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய தேரவும் அவரது உறவினர்களும் கண்களில் கண்ணீரும் மனம் முழுக்க கலக்கமாக தனது மைந்தனின் மரணத்தைப் பார்க்க சகிக்காமல் நின்று கொண்டிருந்தனர்.

நகரத்துத் தலைவர்களின் இறுமாந்த பார்வை மக்கள் கூட்டத்தைப் பார்த்து 'இனி யாராவது இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய எத்தனித்தால் இதுதான் தண்டனை, பார்த்துக் கொள்ளுங்கள்' என்பது போல் சுற்றி வந்தது.

நெருப்புக் கிடங்கின் சுவாலைகள் வானத்தைத் தொடும் அளவிற்கு உயரமாக எரிந்துக் கொண்டிருந்தன. தீச்சுவாலைகளின் அனல் கக்கும் வெப்பம் அருகிலிருந்த மனிதக் கூட்டங்களை எல்லாம் எரித்துவிடுமோ எனும் அளவிற்கு தகித்துக் கொண்டிருந்தது.

இழுவண்டியின் மேல் மரக்கட்டையில் இணைத்ட்துக் கட்டப்பட்ட ஆப்ரஹாமின் உடல் மக்களின் பார்வைக்கு நெருப்புக் கிடங்கைச் சுற்றி இழுத்துவரப்பட்டது.

'ஓ ஆப்ரஹமே! இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது.. நகரத்து தலைவர்கள் சொல்வதைக் கேட்டு பயந்து நடந்துக் கொள்ளுங்கள், நீங்கள் உயிர் பிழைக்கலாம்' என்று மக்கள் சத்தமிட்டனர்.

'உங்களுக்கு விரோதமாக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு பயந்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்களது அந்தக் கூற்றானது பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக நம்பிக்கையைத்தான் அதிகப்படுத்தியது. மேலும் 'அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவன், பாதுகாவலில் அவன் மிக்க நல்லவன்'. என்றும் கூறினார்கள். அவர்கள் இறைவனின் அருட்கொடையையும், பேரருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களை எந்தத் தீங்கும் அணுகவில்லை' (1)

இரும்புக் கம்பிகளுடன் இணைக்கப்ட்ட ஆப்ரஹாம் அவர்கள் உறுதியாக தனது பதிலை எடுத்து வைத்தார்கள்' அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை, அவனே புகழுக்குரியவன், இவ்வுலகங்களின் அதிபதி, அவனுக்கே எல்லா புகழும் தகும், அவனிடமே அதிகாரங்கள் அனைத்தும், அல்லாஹ்விற்கு இணையாளன் யாரும் இல்லை' என்ற அவரது அழுத்தமான பிரார்த்தனை ஆரவாரங்களையும் மிஞ்சி நின்றது.

இழுவண்டி நெருப்புக் கிடங்கை சுற்றிவந்து நின்றது. ஆபரஹாமின் உறவினர்கள் விழிகளை மூடி பார்க்க சகிக்காதவர்களாக குனிந்து கண்ணீரை செறிந்துக் கொண்டிருந்தனர்.

'நெருப்பிலிட்டு கொளுத்துங்கள்' (2) என்ற நகரத்தலைவரின் சத்தம் ஆங்காரமாக ஆணையிட மக்கள் "ஓ...வென்று' சத்தமிட்டு அமைதியாயினர். இழுவண்டியின் பீரங்கி முனை நெருப்புக் கிடங்கை நோக்கி முன்னிறுத்தப்பட தீச்சுவாலைகளின் சத்தத்தைத் தவிர்த்து வேறு எந்த சத்தமும் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்ததுபோல் கொடூரத்தின் அமைதி எல்லோரையும் மௌனமாக்கியது.

'ஹஸ்புனல்லாஹா வநிஃமல் வக்கீல் (அந்த வல்ல இறைவனே போதுமானவன்) என்ற ஆப்ரஹாமின் குரல் மட்டும் அத்தீச்சுவாலைகளின் சத்தத்தையும் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் மக்களையும் கடந்து வான வெளிகளை சென்றடைந்ததுபோல் எதிரொலித்தது.

இழுவண்டியிலிருந்து எரியப்பட்ட ஏவுகணைபோல்..... சத்திய மகனின், அல்லாஹ்வின் தோழன் என்று சிறப்புப் பெற்ற அம்மகான் ஆப்ரஹாமின் உடல் வானவெளியில் பயணம் செய்து சரியாக நெருப்புக் கிடங்கின் மத்தியிலே வந்து விழுந்தது.

'(அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே), "நெருப்பே, இப்ராஹீமிற்கு குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு" என்று நாம் கூறினோம் (3) என்ற மகத்துவம் நிறைந்த மாபெரும் இறைவனின் உதவி அங்கே ஆப்ரஹாமிற்கு வந்து சேர்ந்தது.

ஆப்ரஹாமின் 'நான் நம்பும் அந்த இறைவனின் பாதுகாப்பே எனக்கு போதுமானது' என்ற உறுதி நெருப்புக் கிடங்கின் தீச்சுவாலைகளிலிருந்து அவரைக் காப்பாற்றியாது.

இனி எரிப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலைக்கு அந்நகரத்தில் எரிபொருள்கள் எல்லாம் காலியாகிப் போயின. ஆப்ரஹாம் மட்டும் எந்தவித தீங்கும் இல்லாமல் அவரை அந்த நெருப்பு ஒன்றும் செய்ய இயலாமல் தானே எரிந்து, தானே சாம்பலாகிப்போனது.

கூடியிருந்தக் கூட்டம் வயடைத்து வார்த்தகளை இழந்ததுமல்லாமல் சத்தியத்தின் பலத்தில், உண்மையின் அழியா நிலையைப் பார்த்து தங்களையும் இழந்து நின்றது. அவமானத்தில் வெட்கித் தலைகுனிந்தது. அசத்தியம் தற்காலிகமாக அந்த இடத்தைவிட்டு எப்போதோ மறைந்து போயிருந்தது.

அவர்கள் ஆப்ரஹாமிற்கு சதி செய்ய நாடினார்கள். நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாக செய்துவிட்டோம் (4)

அவமானத்தில் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க, ஆப்ரஹாம் இறைவனின் பேரருளுடன் நெருப்புக் கிடங்கைவிட்டு எழுந்து நடந்து வெளிவந்தார். அவரின் உறுதி இன்னும் அதிகமாகியது. அவர் மூலமாக இறைவன் அந்த மக்களுக்கு இன்னுமொரு அதியசத்தை நிகழ்த்தி மக்களை நேர்வழிக்கு வருமாறு இறைவன் மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தை அளித்தான்.

ஆப்ரஹாமும் நம்ரூதும்

ஆப்ரஹாமின் இந்த அதிசயம் நிறைந்த நிகழ்ச்சி பாபிலோனா தேசமெங்கும் காட்டுத்தீப்போல் பரவ பாபிலோன தேசத்தின் அரசன் நம்ரூத் குழப்பத்தில் கொதித்தெழுந்தான்.

என்னைவிட சக்தி நிறைந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா என்ற அவனது சீற்றம் ஆப்ரஹாமின் தனது ஏக இறைவனின் பிரச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியாக அமைந்தது.

அரசன் நம்ரூதுடனான ஆப்ரஹாமின் சந்திப்பு தயாரானது. அரசவைக் கூட்டமும் அமைச்சர்கள் பெருமக்களும் இன்னும் அத்தேசத்தின் முக்கிய பிரமுகர்களுமாக அந்த நாள் அரசவையின் வைபோக நாளைப்போல் விவாதத்திற்கு தயாரானது.

நம்ரூதுடனான விவாதம் ஆரம்பித்தது. ஆப்ரஹாமின் கேள்விகளுக்கு நம்ரூத் பதிலளிக்கத் தொடங்கினான். விவாதம் சிலைகளில் தொடங்கி, தனி மனித சக்திகளிலிருந்து அதிகாரம் வரை சென்று முடிவாக நம்ரூத் தன்னைவிட சக்தி நிறைந்தது இந்த உலகில் கிடையாது என்று கர்ச்சித்தான். ஆட்சியும் அதிகாரமும் கொடுத்த இறைவனை புறக்கணித்து தானே சிறந்தவன், உயர்ந்தவன் என்ற நம்ரூதின் வாதம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருந்ததே தவிர்த்து, தான் நிலையற்றவன், மரணம் தனக்கும் உண்டு என்பதை முற்றிலும் மறந்ததாகவே இருந்தது.

'எவன் உயிர் கொடுக்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கிறானோ அவனே என்னுடைய இரட்சகன் (இறைவன்)' (5) என்று ஆப்ரஹாம் சொல்ல நம்ரூத் எக்காளமிட்டு சிரித்தவாறு 'நானும் உயிர்ப்பிக்கச் செய்வேன், மரணிக்கவும் வைப்பேன்' என்று சத்தமிட்டான் (6).

அத்தோடு நில்லாமல், 'யாரங்கே' என்று சத்தமிட்டு அழைக்க அரசவைக் காவலர்கள் வந்து நின்றார்கள். 'இரண்டு மனிதர்களை இங்கே அழைத்து வாருங்கள்' என்று நம்ரூத் கட்டளையிட.. இரண்டு அப்பாவி மனிதர்களை காவலர்கள் அரசவை மண்டபத்தின் நடுக்கூடத்திற்கு இழுத்து வந்தார்கள்.

'இதில் ஒரு மனிதனின் கழுத்தைச் சீவி கொல்லுங்கள்' என்ற நம்ரூதின் அகங்கார சத்தம் ஒரு அப்பாவி மனிதனின் உயிரைக் குடித்தது. 'இங்கே நிற்கும் அந்த இன்னொரு மனிதனை திருப்பி அனுப்பி விடுங்கள்' என்று கத்திய குரூரத்தின் உருவமான நம்ரூத் ஆப்ரஹாமின் பக்கம் திரும்பி, பார்தீரா.. நான் தான் உன் இறைவன், உனது இரட்சகன்.. நான் மரணத்தையும் கொடுப்பேன், உயிரையும் கொடுப்பேன்' என்று அறிவிற்கு சம்பந்தமில்லாத கொடுங்கோலனாக வாதம் செய்தான்.

அமைதியாக நம்ரூதைப் பார்த்த ஆப்ரஹாம்..'அப்படியென்றால் 'நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகிறான். அதை நீ மேற்கிலிருந்து கொண்டுவா' என்றார் (7)

ஏக இறைவனை நிராகரித்த நம்ரூத் திகைப்பில் வாயடைத்துப் போய் நின்றான்.

(தொடரும்)

1. திருக் குரான் (3:173 -174)

2. திருக் குரான் (21:68)

3. திருக் குரான் (21:69 - 70)

4. திருக் குரான் (21:70)

5. திருக் குரான் (2:258)

6. திருக் குரான் (2:258)

7. திருக் குரான் (2:258)

2 comments:

நல்லடியார் said...
This comment has been removed by a blog administrator.
நல்லடியார் said...

//சத்தியத்தை எடுத்தியம்பும் மனிதனை முதலில் தீர்த்துக் கட்டுவது. பிறகு அந்த மனிதர் கொண்டுவந்த அந்த சத்தியக் கொள்கைகளை அழிப்பது. இதுதான் காலம் காலமாக சத்தியத்தின் எதிரிகள் செயல்படுத்திவரும் கோட்பாடுகள். அப்படி அழிக்க முடியாவிட்டால் அந்தக் கொள்கைகளை சின்னபின்னப் படுத்தி சிதைத்துவிடுவது. அதுவும் இயலாத பட்சத்தில் அந்தக் கொள்கைகள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாது என்று தட்டிக் கழிப்பது. அதுவும் நடக்காத பட்சத்தில் அந்தக் கொள்கைகளை சொன்ன அல்லது கொண்டுவந்த மனிதரின் தனிமனித வாழ்க்கையை தேடித் துருவி அதில் ஏதேனும் தவறுகளோ அல்லது முரண்பாடுகளோ இருந்தால் அதைக் காரணமாகக் காட்டி அந்தக் கொளைகளை ஒழித்துக் கட்டுவது அல்லது எதிர்ப்பது. அதுவும் முடியவில்லை என்றால் இப்படிப்பட்ட சத்தியக் கொள்கைகளும் கருத்துக்களும் எப்படி வெளியானது என்று ஆராட்சியில் ஈடுபட்டு தானும் வழிமாறி அடுத்தவர்களையும் குழப்பி எப்பாடு பட்டாவது அந்தக் கொள்கைகளை அழித்துவிடுவது என்று பலவிதாமான வன்முறைகள் சத்தியத்திற்கு எதிராக நடத்தப்படுகின்றன.//

அறிவுப் பூர்வமாக சிந்திக்க மறுப்பவர்களின் கடைசி முயற்சிதான், சத்திய கொள்கைகளை கொண்டு வந்தவரை கொச்சை படுத்துவதும், அதற்கு மனம் போன போக்கில் விளக்கம் கொடுப்பதும்.

இவ்வாறு தோண்டி துருவி தப்பர்த்தம் காண ஆரம்பித்தால் உலகில் ஒரு கொள்கையும் இருக்காது. இது ஏனோ சில மேதாவிகளுக்குத் தெரிவதில்லை.