Monday, June 20, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 2

யூத குலத்தின் தொடக்கம் - சிலை தகர்ப்பு

சூரியன் வானத்தை தழுவி வேகு நேரமாகிவிட்டது என்பதை உணர்த்தும் வண்ணமாக உச்சிவானத்தின் மேல் நின்று உலகை எரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

நகரம் நடு இரவைப் போல் வெறிச்சோடிக் கிடந்தது. மக்கள் நேற்றிரவு நடந்து முடிந்த திருவிழாவில் ஆடிப்பாடிக் களைத்தவர்களாக இன்னும் உறக்கத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே சில வீட்டு மிருகங்கள் கேட்பாரற்று தெருக்களில் உலாவிக் கொண்டிருக்க திடீரென 'அய்யோ இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா' என்ற ஆங்காரமான சத்தம் நகரத்தின் அமைதியைக் குலைத்தது.

தெருக்களில் அலறியவாறு ஒடிய அந்த நடுத்தரவயது மனிதனின் சத்தம் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் பெண் குழந்தைகள் எல்லோரையும் ஏதோ இடி விழுந்ததுபோல் எழுப்பிவிட்டது. அந்த மனிதன் ஓடிய தெருக்களில் எல்லாம் மனிதர்கள் வெகுவேகமாக விழுந்தடித்து வெளியேறி வந்தனர். எதிரிகள் படை எடுத்து வந்து விட்டனரோ என்று மக்கள் இங்கும் அங்கும் அஞ்சிக் கொண்டிருக்க 'கோவிலில் இருந்த நமது கடவுள்கள் எல்லோரையும் அடித்து நொருக்கிவிட்டார்கள். எல்லா சிலைகளும் உடைந்து கிடக்கிறது... எல்லோரும் ஓடி வாருங்கள்' என்று அழைத்த சத்தம் நகரத்தின் எல்லா திக்கிலும் எதிரொலிக்க, மக்கள் பீதியடைந்தவர்களாக கோவிலை நோக்கி ஓடினார்கள்.

மக்கள் கலங்கியவர்களாக இது என்ன சோதனை. கடவுள்களை யார் உடைத்தது. இப்படியும் நடக்குமா? என்று ஒன்றும் புரியாமல் கோவிலை நோக்கி செல்ல மக்கள் கூட்டம் கடலலை போல் கோவிலைச் சுற்றி வட்டமிட்டது.

நகரத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் ஒன்றும் புரியாமல் கோபத்துடனும், தெய்வ குற்றம் நிகழ்ந்துவிட்டதே, இது என்ன சோதனையோ என்று கலங்கி ஒருவரோடு ஒருவர் பேச நா இல்லாமல் இங்கும் அங்கும் பார்த்தவாறு உடைந்து கிடக்கும் சிலைகளையும் அந்த கடவுள்களுக்கு இரவிலே படைக்கப்பட்ட சிதறிக் கிடக்கும் உணவுகளையும் பார்த்தாவாறு வேர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள்.

கண்களில் நீர் பெருக உடைந்து கிடக்கும் ஒவ்வொரு கடவுள் சிலைகளையும் பார்த்தவாறு உள்ளே நடந்து வந்து கொண்டிருந்த முதியவர், நகரத்தலைவர் உடைந்த சிலைகளுக்கு மத்தியிலே ஒரு பெரிய சிலை மட்டும் எந்தவித அப்பழுக்கும் இல்லாமல் அமைதியாக சுத்தமாக இருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றார். அவரது திகைப்புக்கு காரணம் அந்த சிலை உடையாமல் இருந்ததை நினைத்து அல்ல, மாறாக அந்த சிலையின் கை ஒன்றில் ஒரு கோடாலி தொங்கிக் கொண்டிருந்ததே.

'இது... இது ... என்ன விந்தை.. பார்த்தீர்களா' என்றவாறு மற்றவர்களை அழைக்க மற்ற தலைவர்களும் புரோகிதர்களும் கையில் கோடாலியுடன் வீற்றிருக்கும் சிலையைப் பார்த்து ஒரு நிமிடம் வாயடைத்து போய் நின்றார்கள். இந்த பெரிய கடவுள் சிறிய கடவுள்களை (சிலைகளை) உடைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு அந்த பெரிய சிலை வீரமான தோற்றத்துடன் புதிய அவதாரம் எடுத்து இருப்பதைப் பார்த்து பதைத்துப் போய் நின்றார்கள்.

'தலைவரே.. இது என்ன விந்தை.. இங்கே என்ன நடக்கிறது' என்றவாறு நெருங்கிய ஒருவர்.. கண்ணீர் மல்க அப்பெரிய சிலையின் காலடியில் மண்டியிட்டவாறு கைகட்டி அழ ஆரம்பித்தார்.

'இல்லை... இது ஏதோ ஒரு மனித செயல்தான்.. யாரோ இப்படி செய்திருக்கிறார்கள்.. யாரங்கே' என்று தலைவர் சத்தமிட அவரது ஏவாலள்கள் வேகமாக அவர் முன்னால் வந்து நின்றார்கள். இருநூறு வயதிற்கு மேல் இருந்த அத்தலைவரின் கர்ச்சனைக் குரல் அங்கிருந்த எல்லோரையும் அமைதியாகச் செய்தது.

'நமது கடவுள்களுக்கு இப்படி ஒரு பாதகச் செயலை யார் செய்தது? அப்படி செய்தவர் நிச்சயம் ஒரு அநியாயக்காரராகத்தான் இருக்கமுடியும் (1)' கூட்டமாக சத்தமிட்டார்கள்.

'அய்யா... இது நிச்சயமாக.. அந்த இளைஞனின் செயல்தான்.. ஆப்ரஹாமின் செயல்தான்... அவர்தான் எப்போது பார்த்தாலும் நமது கடவுள்களுக்கு எதிராக பேசிக்கொண்டு திரிந்தார். அதுமட்டுமல்ல.. இச்சிலைகளை உடைக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்'(2) என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, எல்லோரும் தேரா இருக்கும் பக்கம் பார்த்தார்கள்.

'ஆம்.. அவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்' என்று இன்னொருவரும் அதை ஆமோதித்தார்.

'ஆனாலும் நமது கடவுள்களை இப்படி பாதுகாப்பு இல்லாமல் விட்டு சென்றது நமது தவறுதான்' என்று கூட்டத்தில் இன்னொருவர் சொல்ல.. மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்கத் தொடங்கினர். கடவுளுக்குப் பாதுகாப்பா.. கடவுளிடம் நாம்தானே தினம் தினம் பாதுகாப்பு கேட்கிறோம், நேற்றிரவு நடந்த திருவிழாவில் கூட புரோகிதர்கள் எவ்வளவு நேரம் கடவுள் வாழிபாடு செய்து இந்நகரமும் மக்களும் சுகமாக வாழ வேண்டும் என்று பிரார்தித்தார்கள், இது என்ன இங்கே கடவுளே இப்படி பாதுகாப்பற்று உடைக்கப்பட்டுள்ளாரே என்று மக்கள் தங்களுக்குள்ளே தர்க்கம் செய்யத் தொடங்கினர்.

'நிறுத்துங்கள் உங்களின் பேச்சை...' தலைவரின் சத்ததில் மக்கள் எல்லோரும் அமைதியாக தலை குனிய நின்றார்கள்.

'கொண்டு வாருங்கள் அந்த ஆப்ரஹாமை. இந்த மக்கள் கூட்டத்தின் முன்னால் நாம் அவரை விசாரிப்போம். இந்த மக்கள் அனைவரும் சாட்சிகளாக இருக்கட்டும்'(3) என்று தலைவர் ஆனையிட நகரத்தின் காவலாளிகள் தலைவரின் முன்னால் மண்டியிட்டு வணங்கியவர்களாய் புறப்பட எத்தனிக்கும்போது

'அதற்கு அவசியமில்லை, நான் இங்குதான் இருக்கிறேன்' என்ற ஆப்ரஹாமின் குரல் வந்த திக்கை நோக்கி மக்களின் பார்வை சென்றது.

இந்த சூழலைத்தான் ஆப்ரஹாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மக்கள் எல்லோரும் ஒன்று கூட்டப்பட வேண்டும், அவர்களின் அறியாமையை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். கடவுள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கும் இந்த கற்சிலைகள் இந்த மனிதர்களுக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்ய சக்தியற்றவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அறிவுப்பாதை திறக்கப்பட வேண்டும். அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வர வேண்டும். இப்படிப்பட்ட சிலை வணக்கங்களினால் தான் மக்களின் கடவுள் சிந்தனைகள் அறியாமையில் இருக்கின்றது. இறைவணக்க வழிபாடுகளை பாழ்படுத்திவரும் அடிப்படை அம்சமே இப்படிப்பட்ட சிலை வணக்கங்களால்தான். அதை களைந்தாக வேண்டும் என்ற ஆபரஹாமின் வைராக்கியம் அவரை மக்கள் கூட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

'ஆப்ரஹாமே...எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தான? (4) கூட்டம் ஏகோபித்தக் குரலுடன் கேட்டது.

'மக்களே, அந்தப் பெரியதுதான் (கடவுள்) இவ்வாறு செய்தது. நீங்கள் அந்த பெரியதையே கேளுங்கள்' அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்.(5) என்று ஆப்ரஹாம் பதில் சொல்ல கூட்டத்தினரும் தலைவர்களும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மக்களின் முகங்களில் கவலையும் வெட்கமும் மாறி மாறித் தோன்ற அவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. 'நிச்சயமாக நீங்கள்தான் இவைகளை வணங்கி அக்கிரமம் செய்துவிட்டீர்கள் (6). கடவுள் என்றும், சக்தி நிறைந்தது என்றும் இத்தனை நாட்களாக நாம் இவைகளை வணங்கி வந்தது எத்தனை தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி பேசிக்கொள்ள கூட்டதில் சலசலப்பு அதிகமாக, தலைவர் சத்தமிட்டு எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி ஆனையிட்டார்.

வெட்கத்தில் தங்களின் முகத்தை தரையில் பார்த்தவர்களாய் நின்று கொண்டிருந்த மற்ற பிரமுகர்கள் சிறிது நேரத்தில் 'ஆப்ரஹாம்... இவைகள் பேசமாட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் (7) அப்படி இருக்கும் போது அவைகளிடம் எப்படி நாங்கள் கேட்கமுடியும் என்று சத்தமிட்டார்கள்

ஆப்ரஹாமுடன் செய்யப்படும் விவாதத்தில் முக்கியமான, சாதகமான ஒரு வாதம் கிடைத்ததுபோல் 'அதுதானே, இது என்ன கேள்வி, அச்சிலைகள் எப்படி பேசும்' என்று மக்களும் தலைவருக்கு அனுசரனையாக பேசி வைத்தனர்.

'(அப்படியானால்), உங்களுக்கு கொஞ்சமும் நன்மை செய்யாத, உங்களுக்கு தீமை செய்யாத இறைவன் அல்லாத ஒன்றை (இந்த சிலைகளை) வணங்குகின்றீர்களா (8) என்று ஆப்ரஹாம் திருப்பிக் கேட்டார்.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டன சூழலில் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஆப்ரஹாமின் வாதமும் அதில் இருக்கும் உண்மையும் கூட்டத்தை திகைக்க வைத்தது. என்ன பதில் எப்படி சொல்வதென்று தெரியாமல் மக்கள் தலைவர்களையும் புரோகிதர்களையும் பார்க்க அவர்கள் தரையில் தலையை கவிழ்த்தவர்களாக நின்று கொண்டிருந்தனர்.

'ச்சே.. உங்களுக்கும் அல்லாஹ் (இறைவன்) அல்லாத இவைகளும் நாசம்தான். நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா' (9) என்ற ஆப்ரஹாமின் கேள்வி கூடியிருந்த மக்களை திரும்பவும் வாயடைக்கச் செய்தது.

'நீங்கள் உங்களின் கைகளால் உருவாக்கிய (செதுக்கியவைகளை) இந்த சிலைகளையா வணங்குகின்றீர்கள்?' (10) என்ற தொடர் கேள்வியினால் உந்தப்பட்டவர்கள் ஆப்ரஹாமை நோக்கி அவர் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள். கூட்டம் ஆப்ரஹாமின் பக்கம் அவரின் வாதத்தில் உண்மையிருப்பதை உணர்ந்து செல்லத் தொடங்கியது தலைவர்களுக்கும் புரோகிதர்களுக்கும் பீதியை அளித்தது.

'உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான் (11) நீங்களும் நானும் அந்த இறைவனின் படைப்புகள், அப்படியிருக்கும்போது உங்களது கைகளால் நீங்கள் உருவாக்கிய ஒன்றை எவ்வாறு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள்' என்ற ஆப்ரஹாமின் வார்த்தகள் அங்கிருந்த மக்களின் சிந்தனைகளை தூண்டிவிட அதைப் பார்த்துக் கொண்டிருந்த அச்சமுதாயத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் அவசர அவசரமாக ஆப்ரஹாமின் அருகில் நெருங்கிய அந்தக் கூட்டத்தின் முன்னால் நுழைந்து கையசைத்து தடுத்தார்கள். மக்கள் கூட்டம் சற்று நிதானித்து தலைவர்களின் அவசர வருகையால் தடுக்கப்பட்டு நின்றார்கள்.

'மக்களே..ஆப்ரஹாம் உங்களிடம் குழப்பத்தை உண்டாக்க நினைக்கிறார். நாம் இத்தனை காலம் சத்தியமென்று நம்பி நமது மூதாதையர்கள் முதல் இன்றுவரை வாழ்ந்து வணங்கி வந்த வாழ்க்கையை குற்றம் என்று சொல்கிறார். இவருக்கென்ன தெரியும்?. நமது பெற்றோர்களும், மூதாதையர்களும் என்ன அறிவற்றவர்களா? நமது காலச்சாரமும், பண்பாடும் தொன்று தொட்டது. இம்மனிதரின் பேச்சைக் கேட்காதீர்கள். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் தேவையற்ற பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கிறார். புரியாத விஷயங்களைச் சொல்லி நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறார்' என்ற தலவரின் பேச்சு மக்களை ஆப்ரஹாமை விட்டு தள்ளிச் செல்ல வைத்தது.

'(மக்களே) நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (அதன் மூலம்) உங்கள் (வணக்கதிற்குரிய) தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்' (12) தலவர்களின் ஒருமித்த இந்த ஆனை வேகமாக உரைக்கப் பட்டது.

'இவரை நெருப்பிலிட்டு கொளுத்துவதின் மூலம் சிலைகளை உடைத்த தெய்வ குற்றத்திற்கு அது தண்டனையாக இருக்கட்டும்'

எப்போதெல்லாம் அதிகார வர்க்கத்தின் தவறுகள் வெளிக்கொணரப் படுகிறதோ அல்லது பொதுமக்களை சத்தியத்தின் பாதையில் அழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரவர்க்கத்தின் திமிரும், தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரூரமும் தான் செய்வது தவறுதான் என்றாலும் அதை மறைத்து சூழ்நிலையை தனக்கு சாதாகமாக்க முயற்சிக்கும்.
அதிகாரச் செருக்கு தான் செய்யும் தவறுகளை புரிய வைக்காது. மாறாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையைச் சொன்னவர்களை அல்லது செய்பவர்களை சமுதாயத்திலிருந்து அப்புறப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட செயல்கள் அன்றைக்கும் நிகழ்ந்தது, இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைவர்களின் இந்த முடிவினால் ஆப்ரஹாமிற்கு வழங்கிய அந்த தீர்ப்பு அங்கே கூடியிருந்த தலைவர்களாலும், புரோகிதர்களாலும், கடைசியாக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆப்ரஹாமுடனான வாதத்தில் தங்களிடன் நியாயமும் இல்ல, பதில்களும் இல்லை என்றாலும் விட்டுக் கொடுக்க முடியாத சுயநல மற்றும் அதிகார திமிர் சத்தியத்தைப் போதிப்பவனை, உண்மையை சொல்பவனை, பொது நலம் நாடுபவர்களை சமாதிக் கட்டும் முயற்சியில் இறங்கியது.

'இவருக்காக ஒரு கிடங்கை உருவாக்குங்கள். பின்னர் அதில் நெருப்பை உர்வாக்கி அதில் அவரை தூக்கி எறியுங்கள் (13)' என்ற அம்மக்களின் கூக்குரல் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தது.

குறிப்பு: யூத குலத்தின் பிதவாகவும், முஸ்லீம்களின் பிதாவகவும் இரு வேறு ஆன்மீக தோற்றத்தின் அடிப்படையான ஆப்ராஹாமின் (இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆரம்பகால வரலாற்றையும் அதில் அவர் எவ்வாறு, எந்தக் கொள்கைகளுக்காக போராடினார் என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதன் மூலம் இஸ்ரேலிய வரலாற்றின் அடிப்படையை சரியாக புரிந்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையைப் புரிந்துக் கொள்வது பிற்காலத்தில் இஸ்ரேல் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தை சரியாக அறிந்துக் கொள்ள உதவும்.

ஆப்ரஹாமை யூத குலத்தின் பிதாவாக ஆதியாகாமம் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவருடைய ஆரம்பகால வரலாற்றைப் பற்றி அதிகமாக அதில் அறியமுடியவதில்லை. ஆனால் அவரின் ஆரம்பகால வரலாற்றை திருக் குரான் ஓரளவு விவரிக்கிறது.


(தொடரும்)

1. திருக் குரான் (21:59)

2. திருக் குரான் (21:60 & 21:57)

3. திருக் குரான் (21:61)

4. திருக் குரான் (21:62)

5. திருக் குரான் (21:63)

6. திருக் குரான் (21:64)

7. திருக் குரான் (21:65)

8. திருக் குரான் (21:66)

9. திருக் குரான் (21:67)

10. திருக் குரான் (37:95)

11. திருக் குரான் (37:96)

12. திருக் குரான் (21:68)

13. திருக் குரான் (37:97)

4 comments:

நல்லடியார் said...
This comment has been removed by a blog administrator.
நல்லடியார் said...

உண்மை வரலாற்றையும் பாமரர் புரியும்படி செய்ய, இத்தகைய எழுத்து நடை அவசியமே. எனினும் கட்டுரைக்கு சுவை சேர்ப்பதற்காக கற்பனை கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியது அதைவிட அவசியம்.

மார்க்கம் அறிந்த தமிழ் உலமாக்களுக்கு ஆங்கில அறிவும் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்டுவதிலும், அதனை நாசூக்காக எடுத்துச் சொல்வதிலும் போதிய புலமை இருப்பதில்லை. எனினும் உங்கள் பாணி வித்தியாசமாக இருக்கிறது.

ஏனைய எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை சொல்ல கற்பனையையும், தங்கள் சொந்த கருத்தையும் சேர்த்து சொல்ல வருவதை 'நச்' என சொல்ல முடிகிறது. இத்தகைய வாய்ப்புகள் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு இல்லை. நமக்கு குர்ஆனும் ஹதீஸ்களும்தான் எல்லை. அதனால்தான் சில சமயம் நல்ல கருத்துக்கள் கூட வெகுஜனங்களை ஈர்க்கத் தவறி விடுகிறது.

அல்ஹம்துலில்லாஹ். தொடரட்டும் உங்கள் பணி.

Akbar Batcha said...

நல்லடியார் அவர்களே!

நான் எழுதும் இந்த யூதர்களின் வரலாற்றில் மற்ற வேதங்களையும் மேற்கொள் காட்ட இருக்கிறேன். எனவே இது முழுக்க முழுக்க வேதங்களின் ஆதாரங்களையும் இன்னும் பிற சரித்திர நூல்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை எனது பார்வையுடன் கலந்து வழங்குகிறேன்.

நீங்கள் எழுதியது போல் முஸ்லீம் எழுத்தாளர்கள் இஸ்லாம் தொடர்பான விஷயங்களை எழுதுவதற்கு சில நியதிகள் இருக்கின்றன, அதையொட்டிதான் இஸ்லாம் தொடர்பான எனது கட்டுரைகள் இருக்கின்றன.

Akbar Batcha said...

Raja,

I don't know either Periyar have happened to study the history of prophet Abraham. But Periyar's certain points are valid and well said.