Sunday, May 29, 2005

நான் யார்?

இலக்கணத்தில் உலகமைத்து
இலக்கியத்தில் மறையளித்த
இறைவனுக்கே எல்லா புகழும்

தமிழ்மணத்தின் தாரகைககள் மத்தியிலே
இன்று நான் இவ்வார நட்சத்திரம்.
நான் யார் என்ற கேள்விக்கு
இப்படியும் ஒரு பதில் உண்டோ?

தாயின் கைகளில் தவழ்ந்த போது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
தந்தையின் விரல் பிடித்து நடை பயின்றபோது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
ஆசிரியன் அறிவுப் பட்டறையில்
என்னை நான் யார் என்று கேட்டதில்லை

மங்கையின் விழி மின்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்
மாந்தர்களின் மதி இன்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்

உண்மையில் நான் யார்?

விழுதுகளை சுற்றிவந்த நான்
வீணே அதை மரம் என்றெண்ணி
ஆணி வேர்களைத் தேடி
மண்ணுக்குள் என்னை மறந்துவிட்டேன்

உச்சிவான் கூரைக்குள்ளே
உறைந்து நிற்கும் மேக விளிம்புகளில் நின்று
உலகைப் பார்க்க எண்ணி
கற்பனைக்குள் என்னை கறைத்துவிட்டேன்

இளமையின் சலனத்தில்
இருளின் மையத்தில்
விடியாத பொழுதைத் தேடி
விளக்குகளின் திரியைத் தீர்த்துவிட்டேன்

உண்மையில் நான் யார்?

விடியலைப் பார்த்துக் கேட்டேன்
விதியின் விளையாட்டில் விளைந்த
வித்தகன் நீ என்றது
ஓலியைப் பார்த்துக் கேட்டேன்
ஓங்கார நாதம் கமழும்
ஓலியின் ஓர் அங்கம் என்றது

கவியைப் பார்த்துக் கேட்டேன்
கலைஞனின் பட்டறையில் வார்த்த
ஒர்கவிதையின் சிதறல் என்றது
ஓளியைப் பார்த்துக் கேட்டேன்
ஓரிறை அரசாட்சியின்
நாடகப் பாத்திரம் என்றது

உண்மையில் நான் யார்?

உன்னிலிருந்து உன்னைத் தேடு
என்றான் என் நண்பன்
என்னிலிருந்தும் என்னை வழிகாட்டும்
என் இறைவனிடம் தேடுகின்றேன்

என்னைச் சுற்றி நிற்கும் ஒளியில் தேடுகின்றேன்
என்னை மறைக்கத் துடிக்கும் இருளில் தேடுகின்றேன்
என்னால் பிறர் சிரிப்பதில் என்னைத் தேடுகின்றேன்
என் அழுகையில் என்னைத் தேடுகின்றேன்

என் அனைப்பில் மயங்கும் மங்கையில் தேடுகின்றேன்
என் கைப்பிடித்து நடக்கும் என் மழலையில் தேடுகின்றேன்
என் தோள் தொட்டு நடக்கும் என் நண்பணிடம் தேடுகின்றேன்
என்னை மறந்து என்னைத் தேடுகின்றேன்

தேடுகின்றேன், மரணம் என்னைத் தேடும் வரை.

15 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லா எழுதியிருக்கீங்க அக்பர் பாட்சா

-மதி

Akbar Batcha said...

அன்பிற்குரிய மூர்த்தி, ராஜா, மதி கந்தசாமி,

வாழ்த்துக்களுக்கும் வரவேற்பிற்கும் நன்றி. கருத்துக்கள் பிடித்தால் பாரட்டுங்கள். இல்லை என்றால் விமர்சியுங்கள். விமர்சனங்கள் இல்லாவிட்டால் வளர்ச்சியே இல்லை.

Thangamani said...

அக்பர் பாட்சா! உங்கள் மேல் இப்போது இருக்கும் வெளிச்சத்தின் பேரில் சக முஸ்லீம் பதிவர்கள் அனைவரிடமும் நான் ஒன்றை கேட்க ஆசைப்படுகிறேன். ஏன் பெரும்பாலான முஸ்லீம் பதிவர்கள் தங்கள் மதம் சார்ந்த அடையாளத்தின் கீழ் மட்டுமேயான பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசுகிறார்கள்? அவர்களுக்கு ஈழமும், இந்தியும், ஊழலும், அரசியலும், இன்றைய கல்வி முறையும், பாலியல் பிரச்சனைகளும், ஆன்மீக சிக்கல்களும், தனி மனித முரண்பாடுகளும், விழுமியங்களின் மோதலும் இன்னும் மற்ற பிரச்சைகளும் தெரிவதில்லையா? இப்படி பொது சமூகத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது யார்? அரிதாகவே இப்படியான விசயங்கள் (சாத்தான் குளம் அப்துல் ஜபார் ஈழப்பிரச்சனை குறித்து முக்கியமான பார்வையை எழுதினார்) இஸ்லாமியரால் எழுதப்படுகின்றன. எனக்கு இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் உண்டு. உயிரோடிருக்கிற எதுவும் விமர்சனங்களை எதிர்நோக்கவேண்டியதும், மாற்றத்தை ஏற்கவேண்டியதும் அவசியம். ஆனால் இங்கு சொல்வது இஸ்லாம் பற்றியதல்ல; இஸ்லாமியர்கள் பொதுப்பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பதுபோல ஒரு நிலை இருப்பதைக் குறித்துதான்.

முதலில் இதைகுறித்து வலை பதியும் இஸ்லாமியர்கள் எவரேனும் சொல்லவேண்டும் என்று எழுதத்தான் எண்ணினேன் ஆனால் அதுவே ஒரு தனி அடையாளம் பற்றிய அழைப்பாக இருப்பதால் இதைக்குறித்து வலைபதியும் எவரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாமே என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இப்படியாக ஒதுங்கிப்போவதும், சமூக பங்களிப்பை கருத்தியல் தளங்களில் குறைத்துக்கொள்வதும், இந்து முஸ்லீம் மதங்களில் இருக்கும் பன்மைத்தன்மையை விரும்பாத, ஒற்றை சிந்தனையை, வடிவை வலியுறுத்தி மற்ற சிந்தனையை, அதன் வழிகளை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு அளிக்கும் ஊக்கமாகவும், மறைமுகமாக அவர்களது நிலையை வலுப்படுத்துவதாகவும் அமையும் என்பதால் இப்படிக்கேட்கிறேன்.

இறைநேசன் said...

இந்த வார நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்

இறைநேசன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா எழுதியிருக்கீங்க!!!

jeevagv said...

அக்பருக்கு அன்பு வணக்கங்கள்.
தங்கள் தேடல் உயர்வானது.
தேடல் தொடருட்டும்,

சலாம் ஆலைக்கும்,
ஜீவா வெங்கடராமன்

மாமன்னன் said...

ஹே௒ வுணநுறுலு஢,
::அவர்களுக்கு ஈழமும், இந்தியும், ஊழலும், அரசியலும், இன்றைய கல்வி முறையும், பாலியல் பிரச்சனைகளும், ஆன்மீக சிக்கல்களும், தனி மனித முரண்பாடுகளும், விழுமியங்களின் மோதலும் இன்னும் மற்ற பிரச்சைகளும் தெரிவதில்லையா? ::
என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்குத் தெரியும்.
உலகத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு எல்லோரும் இஸ்லாத்தை தழுவுவதும், ஷாரியத் சட்டத்தை அமல் படுத்துவதும் தான் என்று அவர்கள் கூறுவார்கள்.

நான் கூறுவது கொஞ்சம் ஓவர் என்று நினைக்கலாம். இஸ்லாமிய சிந்தனையாளர்களைப் படியுங்கள் அவர்களிடம் பேசுங்கள். நான் சொல்வதன் உண்மையை உணர்வீர்கள். இன்றைய உலகில் இஸ்லாம் போன்றதொரு பாஸிஸச் சிந்தனை வேறு எதுவும் இல்லை. பலர் காலம் தாழ்ந்து உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தும், இன்னும் உணராமல் இருக்கிறார்கள். எல்லா கொள்கைகளையும் ஒரே தரத்தில் அணுகினால், இஸ்லாமின் பாஸிஸ முகம் வெளிவந்துவிடும். ஆனால், சிறுபான்மை, பெரும்பான்மை சப்பைக்கட்டுகளில் சிக்கி சிந்தனையாளர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

கிவியன் said...

வருக வருக இந்த வார நட்சத்திரமே.

அக்பர் என்ன எழுதறான்னு பாக்குறத விட்டுட்டு அக்பர் ஏன் இத எழுதினாரு, ஏன் அத எழுதலேன்னு சொல்லறது சரியில்லை.

தமிழ்மணத்துல மத ஆராய்ச்சி ஆறு மாதிரி ஓடுது. இதுல் ஒருத்தர் சொல்லறாரு இஸ்லாம் மிக சிறந்ததாம்
இன்றைய காலகட்டத்துல, நம்ம ரசிகர் மன்றத்துல ஆள் ஜாஸ்தியா இல்லே மற்ற ரசிகர் மன்றத்துல ஆள் ஜாஸ்தியானுதா பாக்கறாங்களே தவிர்த்து
தான் மேண்மையானவனா மாறுறதுக்கு ஒண்ணயும் பண்றதில்ல.

அக்பர், உங்களுக்கு மேலானதுன்னு தோன்றத பத்தி எழுதுங்க. நன்றி

Chandravathanaa said...

அக்பர் பாட்சா
நல்லாயிருக்கு கவிதை வடிவிலான உங்கள் பதிவு.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Akbar Batcha said...

மணி,

உங்களின் கேள்வி சரியானதே!

முஸ்லீம் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இரு புறத்திலும் கண்டனத்திற்குள்ளாகிறார்கள். ஒரு சிலர், ஒட்டு மொத்தமாக முஸ்லீம் சமூகத்திலிருந்து தனித்து பொது விஷயங்களை மட்டும் எழுதிக் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் தனது திறமைகளை முஸ்லீம் மற்றும் இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் மட்டும் எழுது வருகிறார்கள். ஒரு முறை இவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்டால் அவர் எதை எழுதினாலும் அவரைப் பற்றிய கண்ணோட்டம் அவரின் மேல் எழுந்த அந்த முதல் முத்திரையை ஒட்டியே அமைகிறது.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நான் கருதுவது, முஸ்லீம் மக்களிடமும், அதன் எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பற்ற மன நிலையும் (insecured feelings). இவைகளை விட்டு வெளியே வரத்தயாரக இருப்பவர்களை அதே நேரம் தனது அடையாளத்தை (முஸ்லீம்) விட்டுத் தராதவர்களை பெரும்பான்மை சமூகம் ஆதரிக்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் இப்போது இருக்கும் இந்த தனித்துவ சூழ்நிலை மாறலாம். அதுவே சில நல்ல தலைவர்களை முஸ்லீம்கள் மத்தியில் உருவாக்கலாம்.

Akbar Batcha said...

ஆரோக்கியம், சுரேஷ், சூச்சு, சந்திரவதனா, ஜீவா வெங்கட்ராமன், சிங்கை இஸ்மாயில், இறைநேசன்.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள்.

contivity said...

அன்பின் அக்பர்,

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.. உங்களின் முந்தைய பதிவுகளைப் படித்திருக்கிறேன். மேலும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

Thangamani said...

நன்றிகள் அக்பர் பாட்சா, இஸ்மாயில்.

//இவைகளை விட்டு வெளியே வரத்தயாரக இருப்பவர்களை அதே நேரம் தனது அடையாளத்தை (முஸ்லீம்) விட்டுத் தராதவர்களை பெரும்பான்மை சமூகம் ஆதரிக்க வேண்டும். //

மிக நேர்மையுடனும், சமயச்சார்பற்றும் (சமயத்தை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொண்டு) சமூக அக்கறையோடும் அணுகுபவர்கள் இப்போது முஸ்லீம் சமூகத்தைல் குறைவாக இருக்கிறார்களே என்றுதான் கேட்கிறேன். சமூக அங்கீகாரத்துக்கு பயப்படும் எவரும் அதற்கு பயந்தரும் ஒன்றைச் சொல்ல, செய்ய முடியாதல்லவா?

இப்னு ஹம்துன் said...

நீண்ட காலமாக வலைப்பக்கம் வர இயலாமல் இப்போது வந்துப்பார்த்தால் இரண்டு இன்ப அதிர்ச்சிகள்.

1).விஷய தானமுள்ள கட்டுரைகளைத் தருவதனால் என் வாசக மனதை ஆளுமைச்செய்யும் நீங்கள் நட்சத்திரமாகியிருந்தது.

2). உங்களுக்குள் ஒரு சிறந்த கவிஞர் ஒளிந்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

இக்கவிதை அருமை. இதே தேடலைக்கொண்ட என் 'வாக்குமூலம்' படித்தீர்களா?

Akbar Batcha said...

இப்னு ஹம்தூன்

உங்களின் வாக்குமூலம் நான் படிக்கவில்லை. நிச்சயம் படிப்பேன். உங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

இறைவன் எல்லோருக்கும் அருள் செய்யட்டும்.