Friday, January 20, 2017

இது ஜல்லிகட்டு போராட்டம் மட்டுமல்ல

வரலாறு காணாத ஒரு எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். வாட்ஸ் அப்பும், ஃபேஸ்புக்கும், இன்ஸ்டகிராமும், ஸ்நாப் சாட்டும்தான் உலகம் என்று கிண்டலடிக்கப்பட்ட்ட இளைஞர்கள்தான் இப்போது உலகமே உற்றுப் பார்க்கக்கூடிய செயலை தமிழகம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை இயற்றி வாடிவாசலை திறக்கும் வேலை நடக்கும் நேரத்தில் இந்த போராட்டம் ஏன் என்றும் இதிலிருந்து உலகிற்கு தமிழ் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவது அவசியம். தமிழகம் முழுவதும் இளஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வெயிலிலும், இரவின் குளிரிலும் தங்களை  வருத்திக் கொண்டு போராட வேண்டியதின் அடிப்படை என்ன? இழந்ததை பெறுவதற்கா அல்லது இருப்பதை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ளவா?  இரண்டும்தான்.

வர்த்தகமயமாக்கபட்ட உலகத்தில் தனிமனித வாழ்க்கையும் தாறுமாறாகிக் கொண்டிருக்கின்றன. மனித இனங்களின் ஒட்டு மொத்த அடையாளங்கள்கூட அழிந்துபோய்க் கொண்டிருக்கும் அவல நிலை உலகெங்கிலும் சத்தமில்லாமல் நடந்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டை முன்வைத்து தமிழக இளைஞர்கள் நடத்தும் இந்த போராட்டம் வெறும் ஜல்லிகட்டோடு முடிந்துவிடும் போராட்டாமாக கருதி ஒட்டு மொத்த இளைஞர்களின் மனவெழுச்சியை ஒதுக்கித் தள்ளினால் அது மாபெரும் தவறு என்பதை இக்கட்டுரையின் மூலம் உணர்த்த விரும்புகின்றேன்.   

தமிழர்களின் இனமான திராவிட இனம் உலகில் தோன்றிய முதல் இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.மு. 3800 வருடங்களுக்கு முன்பாக தோன்றிய மொழி தமிழ் மொழி என்பது வரலாற்று உண்மை.  முதல் மனிதன் ஆதாம் தோன்றிய பூமி தமிழ் பூமிதான் என்று வரலாற்று சான்றுகள் பகர்கின்றன. தமிழ் சொற்கள் வேறு மொழிகளில் குறிப்பாக அராபிய மொழியிலும் யூத மொழியிலும் கலந்திருக்கின்றன.  மொகஞ்சதாரோ நாகரீகம் திராவிட நாகரீகம் என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று. இந்தியா முழுவதும் திராவிட மன்னர்களால் ஆளப்பட்ட வரலாற்று சுவடுகள், உண்மைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இமயம் முதல் குமரிவரை மட்டுமல்லாமல், இந்தோனேசியா, சீனா, ஆப்கானிஸ்தான் என்று எல்லா திக்கிலும் ஆட்சி செய்தவர்கள் தமிழ் மன்னர்கள். இப்படி பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னுள்ளெ கொண்ட தமிழ் இனத்தின் கோபம்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டம். தானாடவில்லை என்றாலும் தன்னுள்ளே குடியிருக்கும் மரபணுக்களும் ஒருநாளும் செத்துப் போவதில்லை. என்றாவது ஒருநாள் அது தன் சிறப்பை காட்டும். அப்படி ஒரு நிகழ்வுதான் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

காலம் காலமாக தேங்கிக்கிடந்த தமிழர்களின் கோபத்தின் உச்சம்தான் ஜல்லிகட்டின் போர்வையில் வெடித்து வீதிகளில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. யார் மீது கோபம்?  என் இந்த கோபம்? 
நம்பிக்கைத் துரோகம் செய்த ஆள்பவர்களின் மீது கோபம். நல்லாட்சி தருவார்கள் என்று வாக்களித்து தங்களின் வாழ்வாதாரம், எதிர்காலம், கலச்சாரம், பண்பாடு, மரபுகள், ஒற்றுமை என்று இன்னும் பிறவற்றையும் ஆள்பவர்கள் புரிந்துக் கொண்டு ஆட்சி நடத்துவார்கள் என்று நம்பியிருந்தோம். தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையுடன் எங்களை நடத்திச் செல்வீர்கள் என்று நம்பி உங்களுக்குத் தொல்லைக் கொடுக்காமல் காத்திருந்தோம். நீங்கள் சொல்வதும், செய்வதும் ஒன்றுக்கொன்று  முரண்பட்டதாக இருந்தாலும் உங்களின் திறமை, நாணயம், நேர்மை, அறிவு இவைகளுக்கு மதிப்பளித்து பொறுமையுடன் காத்திருந்தோம். ஆனால் திறமையற்ற, எதார்த்தங்களை புரிந்துக் கொள்ளமுடியாத, மக்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளாத இன்னும் சொல்லப்போனால் எங்களைப்பற்றிய எவ்வித கவலையுமில்லாமல் இருக்கிறீர்கள் என்பதை நினைத்து குமுறுகின்றோம். 

ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் உள்ள விரிசல்கள் காலம் காலமாக விரிவடைந்துப் போவதை நினைத்து எழுந்த கோபம்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டம். எங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்கள் எதை செய்தாலும் கேட்க யாரும் இல்லை என்று தமிழ்ச் சமுதாயத்தை நாதியற்ற சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் மீது எழுந்த கோபம்?  தினம் ஒரு அறிக்கை, ஒரு பேச்சு என்று நடைமுறைக்கு சம்பந்தமில்லாமல் எதிர்மறை அரசியலுடன் ஆளுக்கொரு டிவி சேனல்களில் மக்களை முட்டாள்களாக நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் பச்சோந்திகளின் மீது எழுந்த கோபம்.

எங்களின் ஐயாயிரமாண்டு கலாச்சார பண்பாடுகளை சட்டங்களின் முன் ஏளனப்படுத்தி எங்களை காயப்படுத்துவீர்கள் என்று நாங்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. காவிரி முதல் ஜல்லிகட்டுவரை எல்லாவற்றையும் சட்டச் சிக்கலுக்குள் தாரைவாத்து கொடுத்துவிட்டு நீதிமன்றங்களின் வாசல்களில் பிச்சையெடுக்கும் கூட்டமாக தமிழர்களை மாற்றிவிட்டீர்களே என்ற கோபம்.

ஆண்டாண்டு காலமாக எங்கள் வீட்டு பிள்ளைகள்போல் மாடுகளை வளர்த்து வருகின்றோம். பசு கன்று போட்டால் என்னவோ எங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்த்துபோல் அதையெ சுற்றிச் சுற்றி வருவோம். ‘அம்மா பால் கறந்தது போதும், கன்னுகுட்டி குடிக்கட்டும் என்று அம்மாவிடம் சண்டை போட்ட பிள்ளைகள் நாங்கள். நாய்களுக்கும், பூனைகளுக்கும் முத்தம் கொடுக்க பழகி கொடுத்த வெளிநாட்டு கலாச்சாரம் வருவதற்கு முன்னால் எங்கள் வீட்டு கன்றுகளை முத்தமிட்டு மகிழ்ந்த மக்கள் நாங்கள். மாடுகளிடம் பேசிப் பழகியவர்கள் நாங்கள். பல காலம் பழகிய ஒரு மாட்டையோ அல்லது கன்றையோ விற்க நேர்ந்தால் ஒருவாரத்திற்கு குடும்ப நண்பர்களில் ஒருவரை இழந்தது போன்று சோகத்தில் வலம் வரும் எங்களுக்கு பிட்டா போன்ற அமைப்புகள்தான் விலங்குகளின் உரிமையைப் பற்றி விவரிக்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிதான் விலங்குகளின் வதைப் பற்றி அறிவுருத்த வேண்டுமா? எந்த சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியும், விலங்குகளுக்காக வாதாடும் வக்கீல்களும், விலங்கு நலத்துறையினரும், பிட்டா அமைப்பினரும் தத்தமது வீடுகளில் மாடுகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள்? நாங்கள் வாழ்ந்து வருகின்றொம். என்ன கொடுமை இதெல்லாம்? மாட்டை அடிக்கிறீர்கள், வதை செய்கிறீர்கள் என்று கூக்குரலிடும் இந்த கூட்டம் நாளை அப்பனும் ஆத்தாளும் காட்டுமிராண்டிகள், தான் பெற்ற பிள்ளையை அடிக்கிறார்கள் என்று சொல்லி போலீசுடன் வீட்டுவாசலில் வந்து நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எங்கு போய் கொண்டிருக்கிறது இந்த நாடு என்று எழுந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த ஜல்லிகட்டின் போராட்டம்.

மனிதர்கள் ஏன் பல குலங்களாக, இனங்களாக, நிறங்களாக படைக்கப்பட்டார்கள் என்பதை இந்த உலகமயமாக்கல் கூட்டதினருக்குத் தெரியுமா? ஒவ்வொரு இனத்திற்கும், குலத்திற்கும் சிறப்புகளும், சில வேறுபாடுகளும் ஏன் இருக்கின்றன என்று தெரியுமா? ஒவ்வொன்றிர்க்கும் சில குணாதிசயங்கள் இருக்கின்றன. ஒன்றைப்போல் இன்னொன்று இருக்காது. குளிரில் வாழும் இனம் பாலைவனத்தில் வாழமுடியாது. வெயிலில் வாழும் இனம் குளிரைக் கண்டு பயப்படும். இது மனிதப்படைப்பினங்களின் விதி. ஆனால் என்னைப்போல் நீ இருக்க வேண்டும், நான் நம்புவதை நீ நம்ப வேண்டுமென்று, நான் வாழ்வதைப்போல் நீயும் வாழ வேண்டும், நான் உண்ணுவதைத்தான் நீயும் உண்ண வேண்டும் என்ற ஆதிக்க வேட்கை ஏன்? ஒன்றை அழித்து இன்னொன்றை காப்பாற்ற ஏன் இந்த கொலைவெறி? மாடு பிடிப்பது முதல், வாசலில் சாணித் தெளித்து கோலமிடுவதுவரை ஒவ்வொன்றிர்க்கும் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. பழைமையைப் பேசி பழமையில் வாழுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, ஆனால் பழைமையை பழிக்கிறீர்களே என்ற கோபத்தின் உச்சம்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டம்.   

கல்லூரியில் படித்த காலங்களில் காவிரி ஆற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்தி கழித்த நாட்களை நினைத்துப் பார்த்து கண்ணீர் விட்டவர்கள் நாங்கள். வெறும் மணல்களாக நீரோடிய பதிவுகள் கூட இல்லாமல் அழிந்து கொண்டிருக்கும் ஆறுகளைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நோகாத நேரங்கள் இல்லை. கண்களில் நீர்த்திவளைகளுடன்தான் இதையும் எழுதுகின்றேன். என் பூமி தாகத்தில் அழுகிறது, கொடுக்க வக்கில்லை இந்த அரசாங்களுக்கு. ‘என்ன தம்பி எப்ப வந்தீங்க என்று கேட்கும் என் இன சகோதர விவசாயி ஒழுகும் குடிசையில் வாழ்ந்தாலும் மழைக்காக கையேந்தி அழும் சூழலுக்கு கொண்டுவந்துவிட்ட கையாலாகாத அரசாங்கங்களின் மீது எழுந்த கோபம்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டம்.

வற்றியது நீர் மட்டுமில்லை எங்களின் நம்பிக்கையும்தான். எத்தனை எத்தனை பேச்சு வார்த்தைகள்? எத்தனை எத்தனை குழுக்கள் அமைக்கப்ப்பட்டு அதிகாரிகளின் சுற்றுலாக்கள். என்ன நடந்துவிட்டது? கொடு என்கிறது சுப்ரீம் கோர்ட். கொடுக்கமாட்டேன் என்கிறது கர்நாடக சகோதர இனம். ஆள்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ‘அய்யா தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்றால் அதற்கோர் அவசர சட்டம் தேவை, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வேண்டும் என்று எங்கள் விவசாயிகளை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறீர்களே? இதுதான் அரசின் இலக்கணமா? இதற்குத்தான் நாங்கள் உங்களை நம்பியிருந்தோமா?

மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி அதை மத்திய அரசு அங்கீகரித்து ஜனாதிபதி கையெழுத்திட்டால் ஜல்லிகட்டு நடத்தலாம் என்று நேற்றிரவு ஆலோசனை வழங்கும் சட்ட வல்லுனர்கள் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? யாரைக் கேட்டு காளையை பொதுக் காட்சிப் பட்டியலில் சேர்த்தீர்கள். போதுக் காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்கினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று சொல்லும் சட்ட வல்லுநர்களுக்கு எங்களின் கலாச்சார பண்பாடு ஏன் தெரியாமல் போனது. அல்லது இப்படி ஒரு அவசர சட்டம் கொண்டு வரலாம் என்ற அறிவுகூட இல்லாமல் ஒரு மாநில அரசு செயல்படுகிறதென்றால் நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சி நடத்துகின்றீர்கள்? உலகமயமாக்கலின் அடிப்படையில் நமது நாட்டின் எதிர்கால சந்ததிக்களுக்கு எதிராக இன்னும் என்னென்ன குழறுபடிகளை செய்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.  
மாடுகளுக்கு பயிற்சி அளிப்பதும் அதைவைத்து ஜல்லிகட்டு கண்காட்சிகள் நடத்துவதை தடை செய்யும் சுப்ரீம் கோர்ட்... தினம் தினம் மக்களை வைத்து கண்கட்டு வித்தைகளை காட்சிகளாக நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஏன் தடைவிதிக்க முடியவில்லை?

இரட்டை வரிகளில் உலகிற்கு மறை கொடுத்தவன் தமிழன். அநாச்சாரங்கள் இல்லாத இறைவழிபாட்டை உலகிற்கு சொல்லிக் கொடுத்த தமிழன் இன்று சின்னா பின்னாமாகி நிற்கின்றான். எல்லாவற்றிர்க்கும் கண்டவன் பின்னால் ஓடுகின்ற நிலைக்குத் தள்ளிய அரசியல் வித்தகர்கள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று ரோட்டில் இறங்கியிருக்கிறார்கள் தமிழர்கள். அரசியல் பிண்ணனி இருப்பதால்தான் இப்படி ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கிறதென்று தொலைகாட்சிகளில் பேசும் வல்லுனர்கள் சாதரண மனிதர்களின் சக்தி தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டம்கூட ஒழுக்கமான முறையில் ஆண் பெண்கள் என்று ஒன்று கூடி இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருக்கிறது.

ஜல்லிகட்டு போராட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் எச்சரிக்கை என்பதை மறந்துவிட வேண்டாம். எல்லாவற்றிர்க்கும் எங்களை தெருவில் இழுத்துவிடாதீர்கள் ஒழுங்காக உங்களின் வேலையைப் பாருங்கள் இல்லையென்றால் உங்களை அரசியல் அநாதைகளாக நாங்கள் தெருவில் விட்டுவிடுவோம்.  

உங்களிடம் நாங்கள் அன்புடன் கேட்டுக் கொள்வதெல்லாம் இவைகள்தான். (1) எல்லாவற்றையும் அரசியலாக்காதீர்கள். (2) செய்ய வேண்டியதை சரியாகச் செய்யுங்கள். (3) ஆதாயம் மக்களுக்கு மட்டுமே இருக்கும்படி செய்யுங்கள் (4) புழுத்துப் போன அரசியல் கலாச்சாரத்திலிருந்து வெளியேறுங்கள். (5) ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். (6) ஜாதி மதங்களின் பெயரால் மக்களைப் பிரிக்காதீர்கள் (7) அறிவுள்ளவர்களையும் சேவை மனப்பான்மை உள்ளவர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்துங்கள் (8) உலகமயமாக்கலின் அடிப்படையில் கண்டதிலும் கையெப்பமிட்டுவிட்டு சர்வதேச சந்தைக்கு இந்தியாவை அடிமையாக்கிவிடாதீர்கள். கலாச்சாரம், பண்பாடு, நிலம், நீர், சுகாதாரம், சுற்றுச் சூழல் இவைகளில் கையெழுத்திடுமுன் மக்களிடம் கருத்து கேளுங்கள். (9) தனிமனித சுதந்திரத்தின் பெயரால் அந்நிய காலச்சரத்தை ஆதரித்து நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தரக்குறைவாக மதிப்பிடும் மனப்போக்கிலிருந்து விடுபடுங்கள். (10) நல்லது எங்கிருந்து வந்தாலும் வரவேற்கும் நேரத்தில் வந்தாரையெல்லாம் ஆளவைக்கும் தமிழகம் இப்பொது இளைஞர்களின் எழுச்சியால் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொண்டுவிட்டது.

வந்தாரை வாழ வைப்போம் ஆனால் ஆள வைக்க மாட்டோம்.


இறுதியாக.. அரசியல் வாதிகளே.. மக்கள் சேவையை மட்டும் மையமாக வைத்து ஒழுங்க உங்க வேலையப் பாருங்க. இல்லன்னா... உங்க எல்லாரையும் கூண்டோட அள்ளிகட்டிடுவோம். தமிழன்டா....     

1 comment:

அபு மர்வான் said...

அருமையான பதிவு.