Tuesday, January 10, 2017

பொங்கல் - ஜல்லிகட்டு – பிரியாணி – தமிழன்

கலாச்சாரம், மரபுகள், பாரம்பரியம் மற்றும் இனப்பற்று போன்ற அடையாளங்களை சீரழிக்கும் ஒரு இனம் தமிழர்களைத் தவிர வேறெவரும் இருக்க மாட்டார்கள்.  சீனர்களோ, அரபியர்களோ, ஜெர்மனியர்களோ, பிலிப்பைன், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்களொ அல்லது ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த எவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் அவரவர்கள் மொழிகளில்தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும்தான் தமிழில் பேசிக் கொள்ள தயங்குவார்கள். காரணம் தாழ்வு மனப்பான்மையும், அடிமை குணமும், உன்னைவிட நான் படித்தவன் என்ற அகங்காரமும் தமிழர்களிடத்தில் அதிகமாகிவிட்டது.

உலகத்தின் முதல் மொழிகளில் ஒன்றான தமிழையும், மூத்தகுடி என்ற வரலாற்றுத் தொண்மைமிக்க கலாச்சாரத்தையும் மதிக்காத, அலட்சியப்படுத்தும் நமது குணங்களின் வெளிப்பாடுதான் இன்றைய இழிவு நிலை. ஜல்லிகட்டு பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுக்கும்வரை இளித்தவாயகர்களாக இருந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு, பிறகு அரசு ஒரு நல்ல முடிவைத் தரும் என்று காத்துகிடந்து தற்போது அதையும் அரசியலாக்கிவிட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றொம். அரசாள தகுதியில்லாதவர்களை பதவிகளில் அமர்த்திவிட்டு எல்லாவற்றையும் அரசு பார்த்துக் கொள்ளும் என்று மெத்தன்னமாக இருக்கும் போக்கை சோம்பேரித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொங்கல் கட்டாய விடுமுறையிலிருந்து அகற்றப்பட்டு தேவையானால் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு மாற்றிவிட்டது. அய்யோ பாவம்! அப்படி ஒன்று நடந்தே தெரியாமல் இருந்துக் கொண்டிருக்கிறது இந்த தமிழினம். நெருக்கடி கொடுத்த பட்சத்தில் மத்திய அரசு மாற்றிக் கொண்டுவிட்டது. அதை அப்படியெ எங்களால்தான் முடிந்தது பறைசாற்றிக் கொள்ளவும் இந்த அரசியல் கட்சிகள் தயங்காது. 

ஜல்லிகட்டை தடை செய்தவர்கள் பிரியாணியையும் தடை செய்ய வேண்டியதுதானெ என்று கேட்ட கமல் ஹாசனின் அர்த்தம் பொதிந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத பிட்டா அமைப்பினரும், மத்திய அமைச்சர் தவேயும் நமக்குச் சொல்லும் தத்துவங்களையும், சட்ட விளக்கங்களையும் கேட்க வேண்டிய அளவிற்கு தரம் கெட்டு போய்விட்ட தமிழ்சமுதாயத்தை நினைத்து கவலை மட்டுமில்லை, பயமாகவும் இருக்கிறது.  

தன்மானமில்லாத ஒரு வெற்று சமுதாயமாக மாறிவிட்டது தமிழ்ச் சமுதாயம்.    தமிழர்கள் இரண்டு விஷயங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.  ஒன்று கேடு கெட்ட அரசியல்வாதிகளின் வார்த்தை வித்தைகளில், இன்னொன்று சீரழிக்கும் சினிமா மாயையில். இந்த இரண்டும் இருக்க வேண்டிய இடத்தில் வைக்கத் தெரியாமல் போனதால் தமிழினம் நிலை குலைந்து நிற்கிறது.

காவிரியைத் தொலைத்து முப்பது வருடங்களாகிவிட்டது. உன்னால்தான், என்னால்தான் என்று ஒருவர் கண்ணை இன்னொருவர் குத்தி குருடாக்கிக் கொண்டு இருட்டரையில் வீரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நமது தலைவர்கள். என்ன நடக்கிறதென்று தெரியாமல் கடைசி நேரத்தில் மாரடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இப்போது ஜல்லிகட்டையும் தொலைத்துக் கொண்டிருக்கிறொம்... ஆனால் ஒவ்வொரு தெருச்சந்திலும் ஏதாவதொரு பிரியாணி மட்டும் விருவிருப்பாக வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. விலங்குகளை அறுத்து உண்ணுவதை இன்னும் தடுக்கவில்லையாம் அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப் படமாட்டோம், ஆனால் மாட்டின் வாலைப் பிடித்துத் தொங்குகிறார்கள், இதனால் மாடுகளை வதைக்கிறோம் என்று கண்ணீர் வடிக்கின்றனர் பிட்டா அமைப்பினர்கள். இதையே மெக்சிகொவிலும், ஸ்பெயினிலும் போய் செய்ய வேண்டியதுதானெ?  அங்கெ தோற்றுப் போன காளைகள் பீஃப் ஸ்டீக்காக (மாட்டுக்கறியாக) வென்றவர்களின் தட்டிலில் பரிமாறப்படுவதை தடுக்க வேண்டியதுதானெ? ஏன் இந்த நிலை? தமிழன் என்ற உணர்வே நமக்கு இல்லாமல் போய்விட்டதாலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று தெரியாமல் முட்டாள்தனத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருப்பதினாலும்தான் இந்த கேவல நிலை. ஓட்டிற்கு கொடுப்பதுபோல் இதற்கும் பணம் கொடுத்தால்தான் உணர்வுகள் வருமோ என்னவொ?

உலகில் உயர்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ சமுதாயங்கள் தங்களது மொழி, கலாச்சாரம், இனம் ஆகியவைகளை விட்டுக் கொடுக்காமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.  ஆனால், இருக்கிற கோவணத்தையும் கழட்டிக் கொடுத்துவிட்டு அம்மனமாக நின்றுகொண்டு வீரம் பேசும் தமிழ் சமுதாயத்தைப் பார்க்கும்போது கவலை மட்டுமில்லை, பயமாகவும் இருக்கிறது.

தமிழன் என்ற உணர்வை மழுங்க வைத்த பெருமை திராவிடத்தின் பெயர் சொல்லி தன்னை மட்டும் வளர்த்துக் கொண்ட தலைவர்களுக்குத்தான் முதலில் போய் சேர வேண்டும்.

திரிபுராவின் மாநில முதல்வர் மணிக் சர்க்கார் இன்னமும் சைக்கிளில்தான் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.  என் சகோதர இனம் இன்னும் வறுமைக் கோட்டுக்கீழே வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் வசதிகள் என்று வாழும் அவரிடம் கேட்டுப் பாருங்கள் இன உணர்வு என்றால் என்ன என்று தெரியும்.

பக்கத்து மாநிலமான கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரும், எதிர்கட்சி காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆளுனரும் ஒரெ காரில் மறைந்த தமிழக முதல்வரின் அஞ்சலிக்கு வந்ததை பார்த்தவர்களுக்குத் தெரியும் மலையாளிகளின் இன உணர்வுகள்.

காவிரி நதி நீர் தொடர்பாக ஒரே குழுமமாக டெல்லிக்கு செல்லும் காங்கிரசின் முதல்வர் சித்தாரமையாவிடமும், பிஜேபியின் எடியூரப்பாவிடமும், ஜனதா தளின் குமாரசாமியிடமும்  கேட்டுப் பாருங்கள், அவர்களிடம் இன உணர்வு நமது மர மண்டைக்கு புரியலாம்.  
தெலுங்கானவின் சந்திர சேகர ராவும், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் பிரிந்துவிட்ட மாநிலங்களின் முதல்வராக இருந்தாலும் இன்னும் ஒரே தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்களிடம் இனப்பற்று இருக்கும்.

பிஜெபியின் மராட்டிய அரசிற்கு சட்டசபையில் போதுமான பலமில்லாத போதும், சிவசேனாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முற்று பெறாமல் இழுபறியில் இருந்த நிலையில் நான் தருகிறேன் ஆதரவு என்று சட்ட சபையில் ஆதரவு கொடுத்த தேசிய காங்கிரசின் சரத் பவாரிடமும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேயிடமும், முதல்வர் தேவேந்திர பத்னவியிடமும் கேட்டுப் பாருங்கள். அவர்களின் இனப்பற்றுத் தெரியும்.

தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு ஆளுக்கொரு டிவி சேனல்கள் வழியாக பாதி நேரங்களை சொந்தப் புராணத்தையும், ஒருவரை ஒருவர் ஜென்ம எதிரிகளாக வசைபாடிக் கொண்டு மீதி நேரத்தில் சினிமாப் புராணத்தைக் பாடிக் கொண்டு தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள் இந்த தமிழினக் காவலர்கள்.

இந்த அவல நிலையிலிருந்து காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்.  ஆழந்த உறக்கத்தில் இருக்கும் நம்மை எழுப்பிவிட எவரும் இல்லை. நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும். அரசியலையும் சினிமாவையும் வாசலில் செருப்பை கழட்டிவைப்பதுபோல் வைத்துவிட்டு இது நம் வீடு, இது எனது இனம், எனது மொழி, எனது கலாச்சாரம், எனது பாரம்பரியம், இவைகள் அனைத்தும் எனது சொத்துக்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். பணம் மட்டுமெ சொத்துக்கள் இல்லை. மானம், வீரம், கருணை, அறிவு, அன்பு, மன்னிப்பு இவைகள் யாவும் நிலபுலன்களைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள்.


அரசியல் ஆள்வதற்கல்ல... மக்களுக்கு சேவை செய்ய என்பதை புரிந்து கொண்டால் அரசியல் வாதிகளிடம் நமது வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை நினைத்து கண்ணீர் விட மாட்டோம். நிலம் பாழகிவிட்டது, அதில் ஏர் உழவு செய்த மாடுகள் எல்லாம் மறைந்துவிட்டது. பொலிவிழந்த பொங்கலாக ஏதோ கடமைக்கு கொண்டாடிவிட்டு மாலையில் ஏதாவதொரு புது சினிமாவுக்கு சென்று வந்தால் போதும் என்றில்லாமல் பொங்கலை பெருமையோடு கொண்டாடும் தமிழனமாக மாறிக்கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டும்.    

No comments: