Thursday, June 16, 2011

பணக்கார தந்தையும் - ஏழை தகப்பனும் (Rich Dad - Poor Dad)

நகைக்கவும் வியக்கவும் வைக்கும் சொல் விளையாட்டிற்கு சொந்தக்காரர்.எதார்த்தத்தில் எழுச்சி கொள்ள வைக்கும் தமிழ் தத்துவங்கள். ஆர்ப்பரிக்க வைக்கும் அலங்கார வார்த்தைகளின் ஊற்றிற்கு சொந்தக்காரர். அபரிதமான இலக்கியத் திறன் கொண்ட தமிழ் மேதை. தமிழ் சமுதாயத்தின் பலவீனங்களை பாங்குற அறிந்த தந்திரவாதி. தமிழன் உணர்வுப்பூர்வமானவன், அவனை அறிவால் கட்டிப்போடுவதைவிட உணர்வுப்பூர்வமாகத்தான் ஆட்கொள்ளமுடியும் என்பதை முழுமையாக அறிந்த அறிவாளி. அபாரமான ஞாபக சக்தியின் மூலம் மாற்றார்களை மருள வைக்கும் திறனும் அதே சமயத்தில் அரசியல் சிம்மாசனத்திற்கு 'நான்தான்'அதிக உரிமை கொண்டவன், அதற்காகவே பிறந்தவன் என்ற அசாத்திய நம்பிக்கையில் கோடிகள் பல குவித்த பணக்கார தந்தையான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தற்போதைய நிலை.


வெட்டிப் பேச்சு வித்தகர்கள், திண்ணைப் பேச்சு தூங்கு மூஞ்சிகள் என்று முன்னாளில் ஏளனம் செய்யப்பட்ட வெள்ளை வேட்டி வித்தகர்களில் ஒருவர். ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் வெள்ளையனை வென்ற வரலாற்றை வீர வசனம் பேசி வாழ்ந்த அரசியல்வாதிகள் மத்தியில், வீரம் பேசியது போதும் எதார்த்த இந்தியாவில் காலம் காலமாய் உறைந்துகிடக்கும் இன வேற்றுமையை ஒழிக்க வாருங்கள் என்று புதிய அரசியல் ஓட்டதிற்கு வித்திட்ட அரசியல்வாதிகளில் ஒருவர். நாட்டின் முன்னேற்றம் எனது மூச்சு, தமிழனின் எழுச்சி என் உடம்பில் ஓடும் ரத்தம் என்று தமிழனின் உயர்விற்காக கண்ணீர் விட்ட ஏழை தகப்பன் கருணாநிதியின் தற்போதைய நிலை. தமிழர்கள் என்னை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள் என்று ஓரே வரியில் தேர்தல் தோல்வியை விளக்கிவிட்டு, உண்மையில் ஓய்வெடுக்க முடியாமல் வேதனையுடன் இருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நிலை.


வாழ்க்கையில் பல விஷயங்கள் எத்தனை முறைதான் திருபம்பவும் நிகழ்ந்தாலும்,பலருக்கு அவைகள் ஏதோ இப்போதுதான் முதல் முறையாக நடந்ததுபோல் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை தட்டிவிட்டு செல்வது இயல்பு. ஆனால் வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகளின் பரிமானங்களை நன்குணர்ந்த சிலருக்கு அவைகள் இயல்புகள் அல்ல. அவைகளை வெறுமனெ களைந்துவிட்டு அடுத்தடுத்த நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதென்பது அத்தனை எளிதல்ல. என்னதான் வயதானாலும், எத்தனைதான் அனுபவமிருந்தாலும், தவறுகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்பதற்கு வாழும் உதாரணம் முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்கள்.


88 வயதில் எதிர் கட்சித் தலைவர் என்றுகூட சொல்லிக் கொள்ளமுடியாமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நமது மூத்த தமிழர் கருணாநிதி எங்கே, அதே 88 வயதில் தோற்றாலும் ஆட்ட நாயகன் என்று பாராட்டப்படும் நமது பக்கத்து மாநிலத்தின் மூத்த மலையாளி அச்சுதானந்தன் எங்கே! எங்கே நடந்தது தவறு?


ஏழைத் தகப்பனாக இருந்தபோது தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றம் மட்டுமே லட்சியமாக இருந்தது. பணக்கார தந்தைக்கு தன் குடும்பத்தின் முன்னேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. சேவை என்பது முதல் வினையாக இருந்தபோது எதிர்வினைகள், தொடர்வினைகள் எல்லாம் வினாக்குறியின் கீழ் உள்ள வெறும் புள்ளியாக தெரிந்தது. சேவை மன்ப்பான்மை மாறி, தேவை மனப்பான்மை முதலிடம் வகிக்க துவங்கியவுடன் யார் செய்த விணை என்று கேள்விக்குறியாகிவிட்டார் கருணாநிதி.


இறந்த காலத்தில் வாழும் அரசியல்வாதிகளை அதிகமாக கொண்ட தமிழகத்தில் தன்னுடைய இறந்தகால தவறுகளை மட்டுமே எண்ணி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட கருணாநிதி அவர்கள் இன்னுமொரு இன்னிங்கஸ் விளையாடும் உடல் சக்தியும் மன உறுதியும் கொண்டவரா அல்லது திமுகவின் பயிற்சியாளராக தன்னை மாற்றிக் கொண்டு தனது மகன் ஸ்டாலினையும், மகள் கனிமொழியையும் முன்னிறுத்தி அரசியல் அரங்கில் ஒரு புதிய அவதாரம் எடுப்பாரா? பொறுதிருந்து பார்க்கலாம்.

1 comment:

Unknown said...

நல்ல நக்கல்