Sunday, July 03, 2005

அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

மகன்: அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

தந்தை: மகனே! தனது அரசியல் வெற்றிக்காகவும் லாபத்திற்காவும் யார் மக்களை பமுறுத்தி, மிரட்டி, இன்னும் வன்முறையை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பெயர்தான் பயங்கரவாதி. அப்படித்தான் ஆக்ஸ்போர்டு டிக்ஷனிரியில் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லடா ராஜா... இந்த பயங்கரவாதிகளெல்லாம் நம்மள மாதிரி சாதாரண மனிதர்களை கொல்வதற்குக் கூட தயங்க மாட்டாங்க, ரொம்ப கொடூரமான ஆளுங்க!

மகன்: அவங்க ஏன் அப்படிக் கொலை செய்யறாங்க?

தந்தை: ஏன்னா அவங்களுக்கு நம்மை மாதிரி ஆளுங்க மேலயும் நம்ம நாட்டு மேலயும் அப்படி ஒரு மோசமான வெறுப்பு. இத விளக்கமா சொல்றது கொஞ்சம் கஷ்டம். அவர்களுடைய சிந்தனையே அப்படித்தான். நாம வாழற இந்த உலகத்துல எத்தனையோ பல காரணங்களால இப்படி வெறுப்புன்றது நிறைய புரையோடிக் கிடக்குது.

மகன்: ஈராக்குல நடக்குறமாதிரிதானே அப்பா? அப்பாவி மனிதர்களை பிடிச்சு வைச்சுக்கிட்டு அங்கிருக்கிற எல்லா அமேரிக்கா படைகளும் வெளியேறனும் இல்லன்னா இந்த அப்பாவி மக்களை கொலை செய்வோம்னு மிரட்டறாங்களே!

தந்தை: அதான்.. சரியா புரிஞ்சுக்கிட்ட, இதுக்கு பேருதான் 'ஈவில் ஒர்க்' அப்படீங்கிறது. அது மட்டுமா கண்ணா, பிளாக்மெயில் வேற... வெளியேறனும் இல்லண்ணா எல்லா பிணைக்கைதிகளையும் கொல்லுவோம்னு தினம் தினம் பிளாக் மெயில் செய்யறாங்க!

மகன்: அப்படியா!.. அப்பா!.. ஈராக்குல இருக்கிற அந்த WMD எங்கன்னு சதாம் ஹுசைன் சொல்லலன்னா அவங்க நாட்டு மேல படையெடுப்போம் அப்பாவி மக்களை குண்டு போட்டு கொல்லுவோம்னு சொன்னமே அதுவும் பிளாக்மெயில்தான?

தந்தை: இல்ல இல்ல...அது... ஆமாம்... அப்படி இல்ல... இதுக்கு பேரு ultimatum... அதாவது... நல்ல பிளாக்மெயில்.

மகன்: நல்ல பிளாக்மெயில்?.. அது என்னப்பா பிளாக்மெயில்லயே நல்லது கெட்டதுன்னு?

தந்தை: அதாவது ராஜா.. நல்ல காரியத்துக்கு அப்படி செஞ்ச அதுக்கு பேரு நல்ல பிளாக்மெயில்...உனக்குத் தெரியுமா மகனே.. அந்த WMD இருக்கே அது ரொம்ப மோசமான ஆயுதம்.. அது இந்த உலகத்தையே அழிச்சிடும். அதை ஈரக்குல உடனே கண்டுபிடிச்சி அதை அழிச்சாதான் நாம நிம்மதியா உயிர்வாழ முடியும். அது மிக மிக முக்கியம் தெரியுமா!

மகன்: அப்பா! அப்படி ஒன்னும் அங்க இல்லயே. ஈராக்குல இதுவரைக்கும் அப்படி ஒன்னயும் நமது படைகள் கண்டுபிடிக்கலயே!

தந்தை: சரிதான்.. அது நமக்கு இப்பத்தான தெரிஞ்சது.. முன்னால நமக்குத் தெரியல..நாம நினைச்சோம் அது அங்கதான் இருக்குன்னு

மகன்: அப்படின்னா.. இவ்வளவு நாளா அங்க நமது படைகள் தாக்கி செத்துப்போன அத்தனை பேரும் அப்பாவிங்கதான? இது தப்பில்லையா அப்பா?

தந்தை: இல்ல மகனே! அது ஒரு சோகமான நிகழ்வு... இங்க பாரு.. நமது படைகள் அங்க போனதுனால நாம நிறைய அப்பாவிகளை காப்பாத்தி இருக்கோம். சதாம் ஹுசைன் ஒரு கொடூரமான ஆட்சியாளன். அவன் நிறைய அப்பாவி ஈராக்கிகளை கொலை செய்திருக்கான். அவன் ஆட்சியில இருக்கும்னுங்கறதுக்காக நிறைய பேர சித்திரவதையும் கொலையும் செஞ்சிருக்கான். அவனது கொடுமைகளுக்கு நிறைய ஆண்கள், பெண்கள் இன்னும் குழந்தைங்கக் கூட பலியாயிருக்காங்க.

மகன்: நம்மக்கூட டீவியில பாத்தமே.. ஒரு பையனோட கை கால் தனியா போய் கீழக் கிடந்தானே. அப்படித்தானே?

தந்தை: ஆமாமாம்..அந்த மாதிரித்தான்.

மகன்: ஆனா அது நம்ம படைகள்தானே ஏவுகனை வீசி அப்படிச் செஞ்சது. அப்படீன்னா.. நம்ம தலைவர்களும் பயங்கரவாதிங்களா?

தந்தை: கடவுளே... உனக்கு இப்படியெல்லாம் சொன்னது யார். உனக்கு எங்கேயிருந்து இப்படி அயிடியா கிடைச்சது. அது ஒரு விபத்து.. போர்ல இப்படித்தான் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவாங்க. ஒரு நகரத்துல வெடிகுண்டுகள் வீசும்போதும், ஏவுகனைகள் வீசும்போதும் இப்படித்தான் நடந்து போகும்.. அத எப்படி தடுக்க முடியும்.. போர்னா இப்படித்தான். யார் என்ன செய்ய முடியும்

மகன்: சரிப்பா... போர்னா.. போர் வீரர்கள் மட்டும்தனே கொல்லப்படுவாங்க?

தந்தை: ஹம்ம்ம்...வீரர்களுக்கு பயிற்சிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவங்கல்லாம் துணிச்சல் நிறைஞ்சவங்க.. அவங்களுக்குத் தெரியும் போர்னா கொல்லப்படுவோம்னு... எப்ப அவங்க யூனிபார்ம் போட்டு போருக்குப் போறாங்களோ அப்பவே அவங்கள எதிரிப்படைகள் குறி வைச்சுடுவாங்க.

மகன்: பயங்கரவாதிங்கல்லாம் என்ன யூனிபார்ம் போடுவாங்கப்பா?

தந்தை: அதுதாண்ட மகனே பிரச்சனையே.... அவங்க உடை சாதாரண மனிதர்கள் போடறமாதிரிதான் இருக்கு. இதுல பயங்கரவாதி யாரு.. அப்பாவி யாருன்னு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். அதனாலதான் நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க... அந்த பயங்கரவாதிங்க... போருக்குன்னு இருக்கிற சட்ட திட்டங்கள பின்பற்றுவதே கிடையாது.

மகன்: போருக்கு சட்டம், விதி அப்படீல்லாம் இருக்காப்பா?

தந்தை: கண்டிப்பா... போர் வீரர்களெல்லாம் யூனிபார்ம் போடனும்.. நீயா திடீர்னு யாரையும் அட்டாக் பண்ணக் கூடாது, உன்னை யாராவது அட்டாக் பண்ணின.. நீ உன்னையும் நாட்டயும் காப்பத்தனும்.

மகன்: அப்படீன்னா.. ஈராக்தான் முதல நம்பள தாக்குனதா? நாம நம்ம நாட்டை பாதுகாக்கத்தான் சண்டை போடறமா?

தந்தை: ச்ச்ச்ச்...அப்படி இல்ல.. ஈராக் நம்பள தாக்குல.. ஆனால் அது நம்மள தாக்கக்கூடும்.. அதனாலதான் முன்னேற்பாட நாம ஈராக் மேல படையெடுத்தோம். ஏன்னா அதுக்குட்ட WMD இருக்கு.

மகன்: அதான் அவங்ககிட்ட அந்த WMD இல்லயே.. நாமதான் போருக்கான விதி முறைகளை மீறிட்டோம்.

தந்தை: சட்டப்படி பார்த்தா அப்படித்தான்.. ஆனால்

மகன்: நாம அந்த சட்டங்கள மீறினா.. ஏன் அந்த ஈராக்கிங்க... யூனிபார்ம் போடாத அவங்க மட்டும் சட்டத்தை மீறக்கூடாது?

தந்தை: ம்ம்ம்... அது சரிதான்... ஆனால் நாம நல்லதுக்குத்தானே அப்படி செய்யுறோம். அதனாலதானே சட்டதை நாம உடைச்சோம்.

மகன்: சரி அப்பா.. நாம் நல்லதுதான் செய்றோம்னு நமக்கு எப்படி தெரியும்.

தந்தை: நம்ம தலைவர்கள் சொல்றாங்கல.. புஷ், பிளயர்.. ஹோவர்டு.. அவங்களுக்குத் தெரியலன.. வேற யாருக்குத் தெரியும். அவங்கதான் சொன்னாங்க ஈராக்குல ஏதாவது செய்யலன்னா.. அது ஒரு மோசமான நாடா போயிடும்னு. அத ஒரு நல்ல நாடா மாத்தனும்னுதான் இத செஞ்சாங்க.

மகன்: ஈராக் இப்போ ஒரு நல்ல நாடா ஆயிடுச்சா?

தந்தை: நான் அப்படித்தான் விரும்புறேன். ஆனால்,, சரியா தெரியல. அங்க தினம் தினம் அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க.. மக்கள் பினைக்கதிகளா கடத்தப்படறாங்க..அந்த பினைக்கைதிகளோட குடும்பங்கள நினைச்சு நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஆனால்.. அதுக்காக அந்த பயங்கரவாதிங்களுக்கு நாம பனிஞ்சுப் போயிடக்கூடாது. அவர்களை நாம் எதுத்தாகனும்.

மகன்: சரிப்பா... என்னை ஏதாவது ஒரு பயங்கரவாதி அப்படி கடத்திக்கிட்டு போயிட்டா.. நீங்க இப்படி பேசுவீங்களா? அவங்கள சும்மா விடக்கூடாதுன்னு சொல்லுவீங்களா?

தந்தை: ஓ... காட்... என்னட இப்படியெல்லாம் பேசுறா... இல்லா... ஆமாம்... அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

மகன்: அப்படீன்னா... அந்த பயங்கரவாதிங்க.. என்ன கொலை செய்ய விட்டிடுவீங்களா.. என் மேல உங்களுக்கு அன்பு பாசமெல்லாம் கிடையாதா?

தந்தை: என்ன இப்படி சொல்றடா... உன்னை நேசிக்காம நான் யார நேசிப்பேன். அப்படி நடந்தா அது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? இது ரொம்ப சிக்கலான கேள்விடா கண்ணா.. நான் என்ன முடிவு எடுப்பேன்னே தெரியல.

மகன்: அப்பா.. யாராவது நம்மள தாக்கி நம்ம வீட்டுமேல பாம் போட்டு உங்களயும், ஜேமியையும், அம்மாவையும் கொலை செஞ்சா நான் என்ன செய்வேன் தெரியுமா?

தந்தை: என்ன செய்வ?

மகன்: இதை செஞ்சவன் யாருன்னு கண்டுபிடிச்சி... அவன கொல்லாம விடமாட்டேன். என்ன ஆனாலும் சரி...ஒரு ஜெட்டுல ஏறி...அந்த நாட்டுமேல படையெடுத்து.. அந்த நகரத்துமேல குண்டு போட்டு எல்லாரையும் கொன்னுபுடுவேன்.

தந்தை: ஆனால்.. நீ நிறைய அப்பாவி மக்கள கொன்னுபுடுவியே

மகன்: எனக்குத் தெரியும்...ஆனால்.. போர்னா... அப்படிதாம்பா.. என்ன செய்யுறது.

Written by: David Campbell.. Melbourne. April 23, 2004
David Campbell is an Australian journalist

8 comments:

contivity said...

Dear Akbar,

Excellent post. Thanks

குழலி / Kuzhali said...

உண்மை...

அப்துல் குத்தூஸ் said...
This comment has been removed by a blog administrator.
அப்துல் குத்தூஸ் said...

அப்ப யாரு தாங்க பயங்கரவாதீ?

மாயவரத்தான் said...

ஊருக்கு உழைப்பதாய் கதை விட்டு விட்டு தனது சொந்த மகனை விட யாருக்குமே தகுதியில்லை என்று கூறி தனது மகனை பெரிய ஆளாக்க துடிப்பவர் தான் 'அப்பா பயங்கரவாதி'.

நல்லடியார் said...

இல்லாததை இருக்கு என உலகையே நம்ப வைத்து பயங்கர தாக்குதல் நடத்தி அப்பாவிகளையும் குழந்தைகளையும் பயங்கரமாக கொன்ற அமெரிக்காவும் அதன் கூட்டனி தலைவர்களும் தான் என்னை பொறுத்தவரை பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள்

மாயவரத்தான் said...

பயங்கரத்தையும், தீவிரவாத்ததையும் பத்தி யாரு பேசுறதுன்னு வர வர விவஸ்தையே இல்லாம போய்டிச்சிப்பா!

நான் அமெரிக்காவை சொன்னேன் நல்லடியார்.

நல்லடியார் said...

//நான் அமெரிக்காவை சொன்னேன் நல்லடியார். //

அதானே பார்த்தேன்...நானும் இஸ்லாம்..முஸ்லீம்னு எழுதிக் கொண்டு இருக்கிறதாலே, என்னையும் தீவிரவாதின்னு சொல்லிடுவிங்களோ என பயங்கரமா பயந்துட்டேன்!

பயங்கரமா பயந்தா பயங்கரவாதி இல்லைதானே?