யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்
ஆப்ரஹாமின் ஆரம்பகால வரலாற்றில் அவரும் அவருடைய சகோதரனின் மகன் லூத்தும் மற்றும் ஆப்ரஹாமின் மனைவி சாரவைத் தவிர்த்து ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக வேறு யாரும் இருக்கவில்லை என்றே அறியப்படுகிறது. அக்காலச் சூழலில் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதில் சந்தேகமேயில்லை. மனிதர்களை மனிதர்களே சித்திரவதை செய்து கொன்று முடிப்பதில் அவர்களுக்கு ஒரு பெரும் காரியமாக அது இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குக்கூட இந்த நிலையை காண்கிறோம். சிறிய பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒருவரை ஒருவர் கொல்வதென்பது சாதாரண காரியம். அந்த வகையிலே ஆப்ரஹாம், அவரது மனைவி மற்றும் லூத் அவர்களின் வாழ்க்கை பாபிலோனாவின், நம்ரூத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் ஒரு மிகப் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. நம்ரூத் ஆப்ரஹாமுடன் செய்த வாததத்தில் தோல்வியடைந்ததிலிருந்து அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் கிடைத்துவந்த மாதாந்திர உணவுப் பொருட்களை நிறுத்திவிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
தேரா இனிமேல் பாபிலோனா நாட்டில் வாழ்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவராக தனது மகன் ஆப்ரஹாம், லூத், ஆப்ரஹாமின் மனைவி சாரவுடன் அந்த நிலத்தைவிட்டு குடி பெயர்ந்து சிரியாவை நோக்கி புறப்பட்டதாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுடைய நோக்கம் கன்ஆன் (பாலஸ்தீன தேசம்) என்ற இடத்திற்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்று விரும்பினார்கள்.
அவர்கள் போகும் வழியில் ஹரன் என்னும் இடத்தில் சில காலம் தங்கியிருந்தார்கள். அவ்வாறு தங்கியிருக்கும்போது ஆப்ரஹாமின் தந்தை தேரா தனது 250ம் வருடத்தில் மரணம் எய்தினார். ஆனால் ஆதியாகாமத்தில் தேரா இறக்கும்போது அவரது வயத்ய் 205 வருடங்கள் என்று சொல்கிறது. சிறிது காலத்தில் லூத் ஆப்ரஹாமின் வேண்டுகோளிற்கு இணங்க ஜோர்டனைச் சேர்ந்த சோடோம் என்ற நகரத்திற்கு பிரிந்து சென்றுவிடுகிறார். அந்நகரத்தில் மக்களை ஓரிறைவன் பக்கம் அழைக்க லூத் தனது தூதுத்துவப் பணிக்கு அனுப்பபடுகிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரா மட்டும் தனித்து சிரியாவிற்கு உட்பட்ட டமாஸ்கஸ் என்னும் நகரத்தில் சில ஆண்டுகள் வசித்ததாக வரலாறு சொல்கிறது.
டமாஸ்கஸ் நகரத்தில் வாழ்ந்த மக்கள் வடதுருவத்தில் தோன்றும் ஏழு நட்சத்திரங்களை வணங்கி வாழக் கூடிய மக்களாக இருந்தார்கள். இன்றைக்குக் கூட டமாஸ்கஸ் நகரத்தில் இருக்கக்கூடிய புராதான அரண்மனைக் கட்டிடங்களில் உள்ள வாசல்கள் ஏழுகளாகவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரால் நிர்மானிக்கப்பட்டதாக இருப்பதையும் காணலாம்.
ஹாகர் எனும் ஹாஜிரா
ஆப்ரஹாமின் இந்த நீண்ட பயணத்தில், நாடோடி வாழ்க்கையில் சிரியாவை கடந்து போகும் வழியில் ஒரு கொடூர அரசன் ஆட்சி செய்யும் இடத்தை (எகிப்து) கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அந்நகரத்து மக்களில் ஒருசிலர் அம்மன்னனிடம் ஆப்ரஹாம் என்ற ஒரு நாடோடி இந்த நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவருடன் ஓர் அழகான மங்கை இருப்பதாகவும் சொல்ல அம்மன்னன் ஆப்ரஹாமை தன்னிடம் அழைத்துவர ஆணையிடுகிறான்.
ஆப்ரஹாமை அழைத்து அவருடன் வந்த அந்தப் பெண் யார் என்று கேட்க ஆப்ரஹாம் சாரவை தனது மனைவி என்பதை மறைத்து சாராவை தனது சகோதரி என்று அறிவித்துவிடுகிறார். காரணம் அம்மன்னனிடமிருந்து சாராவிற்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம், அல்லது சாரவை அவனுடன் உடலுறவு கொள்ளக் கேட்கலாம் என்ற காரணத்தினால் சாராவை தனது சகோதரி என்று சொல்லிவிடுகிறார். (1)
அக்காலச் சூழலில் மனைவி என்பவளுக்கான சமூக உரிமைகள் எப்படியிருந்தன், அம்மனைவியர்களை பிறருடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பதிலும் அல்லது அனுமதிக்க நிர்பந்திக்கப்படுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் என்னென்ன என்று சரியாகத் தெரியாதால் ஆப்ரஹாமின் இந்த 'சகோதரி' என்ற கூற்றிற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒருவனின் சகோதரி என்பவளை அவளுடைய அனுமதியுடன் அல்லது அவளது தகப்பன், சகோதரன் அல்லது அவளது பொருப்பாளிகளின் அனுமதி பெற்றுதான் உறவு வைத்துக் கொள்ளவேண்டுமா என்பதும் தெரியவில்லை. பொதுவாகவே வரலாறுகளில் அக்கால கலாச்சாரங்களைப் பார்க்கும்போது உடலுறவு மற்றும் வீட்டு வேலைகளுக்கு அல்லாமல் பெண்களுக்கு வேறு எந்த வேலைகளும் இல்லை. ஆண்களை மகிழ்வூட்டவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்பதில் அக்கால மக்களுக்கிடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாத அளவிற்கு பெண் வர்க்கங்களை அதற்கு மட்டுமே மதிப்பளித்தும் பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அந்த மன்னன் சாராவை தன்னிடம் ஓரிரவு தங்குமாறு அனுப்பிவைக்க ஆப்ரஹாமிற்கு கட்டளையிடுகிறான். ஆப்ரஹாம் திரும்பி வந்து சாராவிடம் விஷயத்தைச் சொல்லி, 'சாரா, இந்த இடத்தில் உன்னையும் என்னையும் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையாளரும் இல்லை. இந்த கொடுங்கோல் மன்னனிடம் உன்னை என் சகோதரி என்று சொல்லி வந்திருக்கிறேன். அவன் உன்னை ஓரிரவு அவனுடன் தங்குமாறு அழைக்கிறான். இறைவன் நமக்குத் துணையிருப்பான்' இறைவனை வணங்கிக் கொண்டிரு, நானும் நீ திரும்பி வரும் வரை வணக்கத்திலேயே இருப்பேன். என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இப்படிப்பட்ட சூழல் நாம் படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ சாதாரணமாகத் தெரியலாம் அல்லது அதற்காக ஓரளவு வருத்தப்படலாம். நாடோடியாக நாடு விட்டு நாடு சென்று கொண்டிருக்கும் ஒரு கணவன் மனைவிக்கு, அவர்கள் இருவரைத் தவிர்த்து அவர்களுக்கு எந்த ஆதரவோ அல்லது பாதுகாப்போ இல்லாத நிலையில் இப்படிப்பட்ட கொடுமையான நிலைகளில் அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது படைத்த அந்த இறைவனைத் தவிர்த்து வேறு யார் இருக்க முடியும். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனைகளும் இறைவன் மீது வைக்கக் கூடிய அதீதமான நம்பிக்கையுமே. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எல்லோருக்குமே இப்படிப்பட்ட துயரமான சோதனைகளும் துன்பங்களும் குறைவில்லாமலே நிகழ்ந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சோதனைகளும், துன்பங்களும் அவர்களது நம்பிக்கையை அதிகமாக்கவே செய்திருக்கின்றன என்றாலும் அதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை அறிபவர்களுக்கு அது ஒரு பாடமாகவும் இருக்கின்றது.
அரண்மனையில் அன்றிரவு அம்மன்னன் சாராவுடன் தவறாக நடக்க முயற்சிக்கும்போதெல்லாம் சாரா ஒலுச் செய்துகொண்டு (2) இறை வணக்கத்தில் ஈடுபட்டுவிட அப்போதெல்லாம் அம்மன்னன் அருகில் இருந்த தண்ணீர் தடத்தில் விழுந்து மூழ்கும் நிலை அடைகிறான். அப்போது அம்மன்னன் சாராவிடம் என்னைக் காப்பாற்று என்று முறையிட சாரா இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அம்மன்னனும் நீரிலிருந்து தப்பிக்கின்றான்.(3) இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டு மூன்று முறை நடைபெறுகிறது. அவன் சாராவை நெருங்கும் பொதெல்லாம் சாரா பிரார்த்திப்பதும் அவனை யாரோ பிடித்து தண்ணீரில் எறிந்து அவன் உயிருக்காகப் போராடுவதுமான நிலை தொடர்கிறது.
இறுதியாக அம்மன்னன் தனது காவலாளை அழைத்து 'நீ இங்கே அழைத்து வந்தது அழகிய மங்கையை அல்ல.. ஒரு சாத்தனை.. இவளை இங்கிருந்து திருப்பி அனுப்பிவிடு.. அப்படியே அவளுக்கு என்னிடமிருந்து ஒரு அடிமைப் பெண்ணையும் அவளுடன் அனுப்பிவிடு' என்று ஆணையிட சாரா அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அவருடன் அனுப்பிவைக்கப்பட்ட அந்த அடிமைப் பெண்தான் ஹாகர் என்கிற ஹாஜிரா.
சாராவின் பிரார்த்தனையின் போதெல்லாம் அம்மன்னனை யாரோ பிடித்து இழுப்பது போல நிகழவே அம்மன்னன் சாராவை நினைத்து மிகவும் பயந்து போயிருக்க வேண்டும். சாராவிடமிருந்து மீண்டும் அப்படி ஒரு நிலை தனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சாராவை சமாதானப்படுத்த வேண்டி அவருக்கு ஹாகரைப் பரிசுப் பொருளாக அனுப்பி வைத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.
சாரா ஆப்ரஹாமுடைய இடத்தை அடையும்போது ஆப்ரஹாம் வணக்கத்திலிருந்தார். சாரா அங்கு நடந்ததைச் சொல்லி ஹாகரை அறிமுகப்படுத்துகிறார். ஹாகர் என்பவர் காப்டிக் இனத்தைச் சேர்ந்தப் பெண். பிற்காலத்தில் சாராவிற்கு மகபேறு பெருவதற்கான வாய்ப்பு இல்லை என்று சாரா ஹாகரை ஆப்ரஹாமிற்கு மனைவியாக்கிவிடுகிறார். இந்த ஹாகர் என்ற தனது இரண்டாவது மனைவி மூலமாகத்தான் ஆப்ரஹாமின் அரபு குல மக்கள் தோன்றுகின்றனர். (4)
ஆப்ரஹாம் எகிப்திலிருந்து திரும்பி சிரியாவை வந்தடைகிறார். அவருக்கு குழந்தைகள் பெறும் வாய்ப்பில்லாதவராக இருந்தார் என்று ஆதியாகாமம் அறிவிக்கிறது. அப்போது அவருக்கு இறைவனிடமிருந்து ஒரு நற்செய்தி கிடைக்கிறது.
'இறைவன் இந்த உலகை எனது பார்வைக்கு சுருக்கி வைத்தான். நான் கிழக்கிலும் மேற்கிலும் திரும்பிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றுபவர்கள், (எனது குலத்தினர்) இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்வார்கள்' (5)
'வானத்தை அண்ணந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதற்கு உம்மால் முடியுமாயின் எண்ணிக் கொள்ளும். இவ்வாறுதான் உமது சந்ததியும் பெருகியிருக்கும்' என்ற அசரீரி ஒலித்தது (6)
இதற்கிடையில் ஆப்ரஹாமின் செல்வாக்கும் அவரது ஏக இறைவனை மட்டுமே வணங்க அழைக்கும் பிரச்சாரமும் வலுவடைந்து ஆப்ரஹாமை பின்பற்றும் மக்கள் அதிமாகின்றனர். இச்சூழ்நிலையில் ஜோர்டான் நாட்டிற்கு உட்பட்ட நிலத்தில் ஏக இறைவன் வணங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட லூத் அவர்களை அங்கிருந்த ஒருசில எதிர்ப்பாளர்கள் சிறைபிடித்து அவருடைய பொருட்களையும் அவரது கால்நடைகளையும் எடுத்துக் கொண்டதாக ஆப்ரஹாமிற்கு செய்தி கிடைக்கிறது.
ஆப்ரஹாம் தன்னுடன் 318 வீரர்களுடன் லூத்தை சிறைபிடித்தவர்களுடன் போரில் ஈடுபட்டு அவர்கள் அனைவரையும் தோற்கடித்து லூத்துடைய பொருட்களையும் கால்நடைகளையும் மீட்டு லூத்துடன் திரும்பி வருவதாக வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது (7). இந்தப் போரில் ஆப்ரஹாமிற்கு கிடைத்த வெற்றியின் மூலமாக பாலஸ்தீன் நாட்டின் மன்னன் ஆப்ரஹாமை வரவேற்பளித்து தனது நண்பராக்கிக் கொண்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. (8)
ஆப்ரஹாம் பாலஸ்தீன் நிலத்தில் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழ்கிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரவும் கிட்டத்தட்ட 90 வயதை அடைகின்றனர். அவர்களுக்கு வாரிசாக குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. எங்கே தனது கணவருக்கு சந்ததியில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சாரா ஆப்ரஹாமை நிர்பந்தித்து ஹாகரை மனமுடித்துக் கொள்ளச் செய்கிறார். ஆப்ரஹாம் ஹாகரை தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொள்கிறார்.
ஹாகர் ஆப்ரஹாமிற்கு மனைவியானவுடன் இருவருக்கும் பிள்ளைபேறுக்கான வாய்ப்பு உருவாகிறது. இதன் மூலம் ஹாகருக்கான முக்கியத்தும் ஆப்ரஹாமிடம் அதிகரிக்கவே சாரா சஞ்சலம் அடைகிறார். சாராவிற்கும் ஹாகருக்கும் இடையில் சிறு சிறு பிரச்சனைகள் பெரிதாகி அவர்களுக்கு மத்தியில் எப்போதும் நிம்மதியில்லாத சூழல் உருவாகிறது. சாரா ஆப்ரஹாமுடன் இப்பிரச்சனைக்கான தீர்வை விவாதிக்க ஆப்ரஹாம் இறுதியாக சாராவிடம் 'ஹாகரை நீ என்ன வேண்டுமானலும் செய்துகொள்' என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். இதையறிந்த ஹாகர் சாரா தன்னை கொலை செய்யக்கூடும் என்று அஞ்சி பாலைவனத்தில் ஓடி மறைந்துக் கொள்கிறார்.
அங்கே ஹாகருக்கு ஒரு நற்செய்தி கிடைக்கிறது.
'பயப்படாதே... இறைவன் உனக்கு நல்லதை நாடியுள்ளான். அதன் மூலம் உனக்கு ஒரு ஆண்மகவு கிடைக்கும். அவன் ஒரு சக்தி நிறைந்த (காட்டு விலங்கைப் போன்ற) மனிதனாக இருப்பார். அவருடைய ஆளுமையினால் ஒவ்வொரு மனிதரையும் தனக்குக் கீழ் கொண்டு வருவார். அவரது சகோதரர்களின் பூமி அனைத்தும் அவருக்கு கீழ் வரும் ஹாகர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவராக இருந்தார்'. (9)
'நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். ஒரு குமாரனைப் பெறுவாய். உன் குமாரனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிடுவாயாக (10)
இறைவனிடமிருந்த கிடைத்த இந்த நற்செய்தியின் மூலம் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்தவராக ஹாகர் திரும்பவும் தனது இருப்பிடத்திற்கு வந்தடைகிறார். தனக்குக் கிடைத்த அந்த நற்செய்தியை ஆப்ரஹாமிற்கும் சாராவிற்கும் ஹாகர் அறிவிக்கின்றார்.
(தொடரும்)
1, 2, 3 & 4. புகாரி நூல் (ஹ்தீஸ் அபூ ஹுரைரா)
5. திர்மிதி ஹதீஸ் நூல்
6. ஆதியாகாமம் (15:5)
7 & 8. Exgetes (Stories of the Prophet - Ibn Kathir)
9 & 10 பைபிள் - ஜெனிசிஸ் (16:10 - 11)
3 comments:
ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை தக்க ஆதாரங்களுடன் எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
Dear Mr.Akbar,
I have invited you to write on books
pls see:
http://ezuthovian.blogspot.com/2005/07/blog-post.html
Thanks
- IBNU HAMDUN.
Shafi 8466 and Ibn Hamdoun,
Thanks for your appreciation.
Insha Allah, I will do it in near future.
Post a Comment