Monday, April 11, 2005

அரசியல் இஸ்லாம் - ஆன்மீக இஸ்லாம்?

இஸ்லாம் என்பது ஒன்றுதான். இதில் அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்று எந்த பிரிவுகளும் கிடையாது. முஸ்லீம்களில் பல பிரிவுகள் இருக்கலாம், ஆனால் இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் என்பது ஒரு முழுமையான மார்க்கம் மற்றும் வழிமுறைகள் அடங்கிய ஒரு வாழ்க்கைத் திட்டம். முழுமையான வாழ்க்கைத் திட்டம் அல்லது வழிமுறை எனும்போது அதில் ஒரு மனிதனுக்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை வழிகாட்டுதலும் இருக்க வேண்டும். உலகில் தோன்றிய மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் உள்ள வித்தியாசமே இதுதான். மற்ற மதங்களெல்லாம் இறைவழி பாட்டையும், மோட்சமடைவதின் அவசியத்தையும் அதற்கான வழி முறைகளை மட்டுமே பெரும்பான்மையாக வலியுறுத்துகின்றன. ஒரு சில மதங்களில் அதையும் தாண்டி மற்ற விஷயங்கள் அங்கங்கே சொல்லப் பட்டாலும் காலப் போக்கில் அவைகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கடவுளை நான்கு சுவற்றுக்குள், கோவில்களிலும், பள்ளிகளிலும் உட்கார வைத்துவிட்டார்கள். ஏதோ கடவுள் அங்கு மட்டும் விழிப்புடன் இருப்பது போலவும் மற்ற இடங்களில் என்ன தவறு செய்தாலும், கோவிலுக்கு சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு போதனைகள் வெறும் சடங்காக மட்டும் கையாளப்படுகின்றன.

இதை மாற்றி இறைவனை எல்லா நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் அஞ்சி நடக்கவும், இறைவனின் போதனைகளை அதற்குரிய வழியில் பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாகவோ, வியாபாரியாகவோ, ஆசிரியனாகவோ, தொழிலாளியாகவோ, முதலாளியாகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏழையாகவோ இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களாக ஒரு நல்ல மு·மீனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. விரும்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்கள் அதை செயல்படுத்த ஒரு சில பார்முலாக்களையும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதைத்தான் இஸ்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்திர்க்கும் உகந்த அறிவையும் வழிமுறையையும் குரான் மூலமாக கொடுத்திருக்கிறது. எனவேதான் இஸ்லாம் ஒரு முழுமையடைந்த மார்க்கம் என்று இறைவனாலேயே மொழியப்பட்டது.

'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்' (அல்-மாயிதா 5:3 - அல் குரான்)

ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அது ஆன்மீகம், அந்த ஏக இறைவனை எப்படி வணங்க வேண்டுமென்று முகம்மது நபி (சல்) அவர்கள் சொன்னபடி வணங்கினால் அது அரசியல் என்று கருத்துத் தொணிக்கும் வகையில் இந்த வலைப்பதிவில் நேசகுமார் அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டது. அந்தக் கட்டுரை இன்னும் நிறைய விஷயங்களை அவர் விரும்பியது போல் வெளிப்படுத்தியுள்ளது. (He is deliberately attempting to distort the meanings by quoting out of context) அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்கினால் அது 'ஆன்மீக இஸ்லாம்', நபி முகம்மது (சல்) அவர்கள் காட்டிய வழியில் வழிபட்டால் அது 'அரசியல் இஸ்லாம்' என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த சிந்தனை கோட்பாட்டை நினைத்து சிரிக்கத்தான் வேண்டும்.

ஒரு மாணவன் தனது அறிவியல் புத்தகத்தை தானாக படித்தால் அது 'அறிவியல் படிப்பு', அதையே அவனது அறிவியல் ஆசிரியர் சொல்லி தந்ததுபோல் படித்தால் அது 'ஆசிரியர் அறிவியலாகிவிடுமா?'

ஒரு குழந்தை தானாக ஏதேனும் உளரினால் அது 'மொழிப் பயிற்ச்சி', அதையே அம்மா சொல்லிக் கொடுப்பது சொன்னால் அது 'அம்மா பயிற்ச்சியாகிவிடுமா?'

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆன்மீகம் என்றால் என்ன, கர்மா என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தங்களை அவர் தெரிந்து கொள்ளுதல் நல்லது. நேசகுமார் போன்றோரின் கவலை எல்லாம் எப்பாடு பட்டாவது முகம்மது நபியை ஒரு குற்றமுள்ளவர் என்று நிரூபித்துவிட வேண்டும் அப்படி செய்வதன் மூலம் முஸ்லீம்களை முகம்மது நபியின் (சல்) வழிகாட்டுதலில் இருந்து வேறுபடுத்தி வெறும் மதச் சடங்குகளை மட்டும் செய்யக் கூடியவர்களாக மாற்றிவிட வேண்டுமென்பதே. (அதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம்). நேசகுமார் போன்றோருக்கு வெண்டுமென்றால் கடவுளை பூஜை அறையோடும் அல்லது கோவில்களில் மட்டும் கொண்டாடினால் பொதுமென்று இருக்கலாம்.

'மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம் - அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும் அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாரட்டத்தக்க வகையில் அணுகியிருக்கிறதென்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று அனுபவப் பூர்வமாக கூறுகிறேன்'. என்று விவேகானந்தர் அவர்கள் சாட்சி கூறுகின்றார்.
அதுமட்டுமல்ல 'நான் அழுத்தமாகச் சொல்கிறேன். நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமியச் செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் - அது எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் - பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்' என்று கூறுகின்றார் (Letters of Swami Vivekananda P. 463)

விவேகானந்தர் எந்த ஒரு முஸ்லீமுடைய வாளுக்கும் பயந்து இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நேசகுமார் போன்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

நடைமுறை அத்வைதம் எப்போது சாத்தியமாகும்? இஸ்லாமிய செயல்பாடுகள் இருந்தால்தான் அது சாத்தியமாகும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் விவேகானந்தர். இஸ்லாமிய செயல்பாடு என்றால் ஒருமித்த ஒரு வழிகாட்டுதலுக்கு உட்பட்ட செயல்பாடாக இருக்க வேண்டும், அதுவல்லாமல் ஆளுக்கொரு வழியில் செயல்பட்டால் அது விவேகான்ந்தர் சொன்னதுபோல் அது எத்தனை சிறப்புக்குரியதாக இருந்தாலும் பயனற்றதாகத்தான் இருக்கும். அதுதான் இந்து வேதாந்த தர்மங்களில் ஏற்பட்ட ஒரு குறைபாடு. அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்க்காகத்தான் இங்கே முகம்மது நபியவர்களின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

குரான் என்பது ஒரே நாளில் மொத்தமாக எழுதி அச்சடித்து மனித சமூகத்தின் கையில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக 23 வருடங்களாக கொடுக்கப்பட்டு அதை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எப்படி வழிநடத்த வேண்டுமென்று நபிகளின் வாழ்க்கை மூலமாக நடத்திக் காட்டப்பட்டதுதான் குரான் என்ற புனித மறை. எனவேதான் ஒவ்வொரு முஸ்லீமும் நபிகாளாரை பின்பற்றி நடந்தால்தான் குரானை அதனுடைய உண்மையான வழியில் செயல்படுத்த முடியும். அதுதான் விவேகானந்தர் அவர்கள் சொன்ன இஸ்லாமிய செயல்பாடு.

கர்மாவை அதிகமாக வலியுறுத்துவது அத்வைதம், ஆனால் அதை அழகாக வாழ்வில் செயல்படுத்த பாதை அமைத்துக் கொடுக்கிறது இஸ்லாம் என்று விவேகானந்தர் போன்ற பெரும் மனிதர்கள் சொன்னதெல்லாம் கடவுளை வெறும் வழிபாட்டு கூடங்களில் மட்டும் வைத்துவிடக்கூடாது என்ற கருத்தில்தான்.

இஸ்லாம் என்பது முன்பே சொன்னது போல் ஒரு முழுமையடைந்த மார்க்கம். இதில் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அடிப்படை அம்சங்களும் போதிக்கப் பட்டுள்ளது. இதில் ஆன்மீகமும் இருக்கிறது அரசியலும் இருக்கிறது. பொருளாதாரமும் இருக்கிறது பொறியியலும் இருக்கிறது. அறிவியலும் இருக்கிறது சட்டவியலும் இருக்கிறது. சமுத்திரங்களைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது சரித்திரங்களும் சொல்லப்பட்டுள்ளது. ஆக இவை எல்லாம் இருப்பதால் இஸ்லாத்தை அறிவியல் இஸ்லாம், சரித்திர இஸ்லாம், பொருளாதார இஸ்லாம், பொறியியல் இஸ்லாம் என்று பகுதி பகுதியாக பெயரிட்டுக் கொள்ளலாமா?

அல்லாஹ்வைவிட முகம்மது நபி (சல்) அவர்களுக்கே அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது அதுதான் அரசியல் இஸ்லாத்தின் அடிப்படை, அதைத்தொடர்ந்து இஸ்லாத்தில் பிளவுகள் அதிகமாகிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் நேசகுமார். இப்படி அல்லாஹ்வைவிட நபிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நபி வழிபாடகிறது என்று கூட எழுதியுள்ளார்.

எந்த முஸ்லீமும் நபியே எனக்கு இதைக் கொடு, நான் இன்ன கஷ்டத்தில் இருக்கிறேன் என்னை காப்பாற்று என்று கைதூக்கி முறையிடுவதில்லை. அறியாமையில் இருக்கும் முஸ்லீம்கள்கூட தர்காக்களுக்கு சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடிய மனிதர்களிடத்தில் வேண்டுமென்றால் கையேந்தி நிற்பார்கள், கேட்பார்கள், ஆனால் நபியை ஒரு போதும் கடவுள் நிலையில் வைத்து வணங்கியதில்லை. இறைவனுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்த்தை ஒரு போதும் நபியவர்களுக்கு இந்த சமுதாயம் கொடுத்ததுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை.

பிறகு ஏன் கடவுளை அவன் இவன் என்று பேசுகிறீர்கள், ஆனால் முஹம்மதை மட்டும் மரியாதையாக பேசுகிறீர்களே என்று கேட்கலாம்.

கடவுளை அவன் என்றும் பேசலாம், அவர் என்றும் பேசலாம் அல்லது அது என்றும் பேசலாம், காரணம் இறைவன் மறைவானவன், எல்லோருக்க்கும் பொதுவானவன். எனக்கு இருக்கும் உரிமைதான் நேசகுமார் போன்றோருக்கும் இருக்கிறது. நானும், அவரும் இன்னும் எல்லோரும் அதே இறைவனால்தான் படைக்கப் பட்டவர்கள். யாருக்கு எப்படி அழைக்கத் தோன்றுகிறதோ அவ்வாறு அழைக்கலாம். இந்த அ·றிணை உயரிணை இருக்கக் கூடிய மொழிகளில்தான் இந்த மரியாதை வேற்றுமைகள். இது மொழி வழக்கு. இந்த மொழி இலக்கணம் தெரியாமல் சிலர் இதை ஒரு பெரும் குற்றமாக எடுத்துச் சொல்வது அவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. ஆங்கிலத்திலும் அரபியிலும் இன்னும் எத்தனையோ மொழிகளில் மனிதர்களை குறிப்பிடும்போது இந்த அ·றிணை உயரிணை வேற்றுமைகள் கிடையாது. எனவே இது மொழிபெயர்ப்பும் அந்தந்த மொழியில் இருக்கக்கூடிய வழக்கு இலக்கணங்களை கொண்ட விதியாகும்.

இறைவனை அவமானப் படுத்தினால் ஆயுள் தண்டனை, ஆனால் முகம்மது நபியைத் தரக்குறைவாக பேசினால் மரண தண்டனை என்றெல்லாம் மிகவும் கவலைபட்டு சில கருத்துக்களையும் நேசகுமார் மொழிந்துள்ளார்.

உதாரணத்திற்கு: அரசு பேருந்தில் ஏறிக் கொண்டு அந்த பேருந்தைப் பற்றி தரக்குறைவாக பேசலாம், அதை நடத்தும் அரசாங்கத்தை அவமானமாக பேசலாம், அந்த பேருந்தை ஓட்டுபவரும், நடத்துனரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள், கூட பயணம் செய்பவர்கள் கூட அதை ரசிக்கலாம். அதே நேரம் அதை ஓட்டும் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையோ தரக்குறைவாகப் பேசினால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஏன் அப்படி?

ஒரு நாட்டின் சட்டம் கடவுளை மறுக்கலாம் அல்லது கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், அது அந்தந்த நாட்டின் வரைமுறைக்கு உட்பட்ட விஷயம், இவைகளைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டிய அளவிற்கு அவைகள் ஒன்றும் முக்கியமான விஷயங்கள் அல்ல.

3 comments:

சுட்டுவிரல் said...

//நேசகுமார் போன்றோரின் கவலை எல்லாம் எப்பாடு பட்டாவது முகம்மது நபியை ஒரு குற்றமுள்ளவர் என்று நிரூபித்துவிட வேண்டும் அப்படி செய்வதன் மூலம் முஸ்லீம்களை முகம்மது நபியின் (சல்) வழிகாட்டுதலில் இருந்து வேறுபடுத்தி வெறும் மதச் சடங்குகளை மட்டும் செய்யக் கூடியவர்களாக மாற்றிவிட வேண்டுமென்பதே.//
- இது தான் அவருடைய உள்நோக்கம். அவருடைய கட்டுரையே அதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நீங்களும் போட்டு உடைத்துவிட்டீர்கள்

Akbar Batcha said...

I appreciate if he comes out with some meaningful dialogue.

Akbar Batcha said...

ஹலோ ராஜா,

மதத்தின் பெயரால் மக்கள் சின்ன பின்னப் படுவதை எந்த அறிவுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதில் நானும் நீங்களும் ஒரு கட்சிதான்.

இன்றையச் சூழ்நிலையில் இருக்கின்ற மதவாதிகள் அரசியலில் ஈடுபடுவது நாட்டிற்கு நல்லதல்ல. ஏனென்றால் இந்த மதவாதிகள் எவரும் முழுமையடைந்தவர்கள் அல்ல. அவர்கள் சமயம் ஏற்படும்போது அரசியல்வாதிகளுடன் சேர்ந்துகொண்டு அதிகாரத்தை பங்கு போட தயங்கமாட்டார்கள்.