Saturday, April 09, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 4

போர் என்றால் முதலில் பாதிக்கக் கூடியது பொருளாதாரம். ஆனால், போரை ஒரு சிறந்த முதலீடாக வைத்து பொருளாதார வெற்றி கான நினைப்பதில் அமேரிக்காவிற்கு நிகர் அமேரிக்காதான். எத்தனையோ நாடுகள் போரில் தனது பொருளாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் ஏழையாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அமேரிக்காவின் இந்த 'gambling' மத்தியக் கிழக்கு நாடுகளை பொருத்தவரை கொஞ்சம் சுலபமான விஷயம்தான். காரணம் போர் செய்யப்போவது ஒன்றும் சீனாவோ அல்லது ரஷ்யாவிற்க்கு எதிராகவோ அல்ல, இன்னும் சொல்லப் போனால் வட கொரியாவிற்கு எதிராகக் கூட அமேரிக்கா தற்போது ஆயுதத்தை கையில் எடுக்காது.

போர் என்றால் அதிலிருந்து வெற்றி பெரும் நாட்டிற்க்கு ஏதேனும் பிரயோசனம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது முட்டாள்தனமான முடிவு மட்டுமல்லாமல் உள்ளதையும் இழக்க வெண்டிய சூழ்நிலை ஏற்படும். அமேரிக்கா ஒன்றும் முட்டாள்தனமாக முடிவு எடுக்கும் நாடு அல்ல, எனவே போருக்கு முன்னால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார அரசியல் லாபங்களை நன்றாக கணக்கிட்டுத்தான் போருக்கான முடிவை எடுத்தது.
அதிலும் போர் செய்யப்போவது தன்னால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட உருப்படாத ஆட்சியாளர்களும், ஆமாம் சாமி போட்ட கிரிமினல் ராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு எதிராகத்தான். ஆப்கானிஸ்தான் போர் ஒரு போரே அல்ல. இரட்டை கோபுரத்தின் வீழ்ச்சியால் எழுந்த கவுரவப் பிரச்சனயை தீர்த்துக் கொள்ள வலுவிழந்த நாட்டை இழுத்துப் போட்டு உதைத்த கதைதான். அதுமட்டுமல்லாமல் தன்னிடத்தில் உள்ள அனைத்துவித ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கவும் அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

ஈராக் யுத்தம் அமேரிக்காவிற்க்கு அனைத்து வகையிலும் வலு சேர்க்கக் கூடிய போர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈராக் யுத்தம் அமேரிக்கவை பொருந்த்தவரை ஒரு நல்ல முதலீடும் கூட.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க அமேரிக்க தயாரானது. உலகிற்கு வேண்டுமானல் ஈராக் யுத்தம் ஒரு தெளிவில்லாத WMD கதையாக இருக்கலாம், ஆனால் அமேரிக்கா தான் எழுதிய 'script' படித்தான் இந்த யுத்தத்தை நடத்தியிருக்கிறது. அதனால்தான் ஜார்ஜ் புஷ்ஷ¤ம் டோனி பிளேயரும் தலையில் அடிக்காத குறையாக தன்னாட்டு மக்களிடம் நேரடியாக விளக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் விளையக் கூடிய நன்மைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அந்த வகையில் அமேரிக்கர்கள் பொதுவாக போரை எதிர்த்தாலும் பிறரை அடக்கியாள வேண்டுமென்ற குணாதிசயம் அவர்களை ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டாவது வெற்றிக்கு ஓட்டு பொட வைத்தது).

இப்போரின் முடிவில் அமேரிக்கா எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விளைவுகள்:

அ) ஐ. நா. சபையையும், ஐரோப்பிய நாடுகளையும் அரசியல் ரீதியாக வலுவிழக்க செய்வது.
ஆ) சரிந்துவரும் தனது டாலரை பெட்ரோ டாலரின் மூலம் தூக்கி நிறுத்துவது
இ) இஸ்ரேலை மத்தியக் கிழக்கு நாடுகளின் போலிசாக உயர்த்தி அரபு நாடுகளை இஸ்ரேலின் பிடிக்குள் (ஆதிக்கத்தின்) கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்றிர்க்கும் சரியான காரணத்தைக் காட்டி உலக ஊடகங்களில் அதை பெரிதுபடுத்தி சாமனிய மக்களின் சிந்தனைகளை முடிந்தவரை குழப்பி அதன் மூலம் அவர்களது கருத்துக்களை தனக்கு ஆதரவாக திரட்டுவது என்று முடிவு செய்யப் பட்டது. அமெரிக்க எப்போதுமே தான் விரும்பக் கூடிய முடிவை முதலில் ஊடகங்களில் விவாதிக்க வைத்து அதன் வாயிலாக மக்களின் ஆதரவை திரட்டுவது வழக்கம். ஆள்பவர்களின் கருத்துக்களை பொதுமக்களிடத்தில் விற்பதற்க்குத்தானே இந்த ஊடகங்கள் எல்லாம் அடித்துப் பிடித்து ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உண்மை என்று நம்புவது பெரும்பாலருக்கு பழகிப் போன ஒன்று. (ஊடகங்களில் உண்மையை மட்டும் எழுதுபவர்களின் நிலையை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.)

மக்களின் மனதில் சென்று பதியக்கூடிய வாசகங்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் முதன்மையானதும் ஏற்கனவே ஆப்கான் போரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதுமான 'தீவிரவாதம்' அதைத் தொடர்ந்து 'WMD (Weapons of Mass Destruction)' என்று இரு USP (Unique Selling Points) உருவாக்கப் பட்டது.
செப்டம்பர் 11 க்கு பின் உலகில் உருவாகிப் போன சந்தேக நோய் தொற்று நோயாக மாறி இருப்பவன் இல்லாதவன், தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்தவித மொழி, மத மற்றும் நாடுகள் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் பற்றிக் கொண்டது அமேரிக்காவிற்க்கும் பிரிட்டனுக்கும் சாதகமாக அமைந்தது.

எதிர்க்க ஆளில்லை என்றால் அடிக்க வருபவனின் தன்னம்பிக்கையும் தைரியமும் அபாரமாக இருக்கும். அதுமட்டுமா? எப்போது எதிரியை உதைக்கலாம் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு உடனடியாக போரில் குதிப்பதென்று தவியாய் தவிக்க ஈராக் அமேரிக்காவின் 52வது மாநிலமாக மறுவதற்கு நாட்கள் எண்ணப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் WMD என்ற இரண்டு வார்த்தைகளும் உலக அரங்கில் எல்லா மனிதர்கள் வாயிலும் வராத நாட்களே இல்லை எனும் அளவிற்கு தினம் தினம் பேசப்பட்டது. ஆனால் ஈராக்கில் அப்பாவி மக்களும், ஆண், பெண் குழந்தைகளும் மரணத்திற்க்கு தயாரானார்கள்.

ஏதோ ஒரு கூட்டம் லாபமடைவதற்க்கு லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்கத் தயாரானார்கள். அவர்களை அறியாமலே மரணத்தின் கொட்டகைக்கு வந்து குவிக்கப் பட்டார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் தங்களது கண்களுக்கு முன்னாலேயே வெடி குண்டுகளிலும், பீரங்கி தாக்குதலிலும், விமான ஏவுகனைகளினாலும் சிதறடிக்கப் படுவதைப் பார்த்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இரத்த வெள்ளத்தில் கையிழந்து காலிழந்து முகம் சிதைந்து மரணத்தில் மிதந்தார்கள். பெற்றெடுத்தப் பிள்ளைகளின் விழிகளில் தூசு விழுந்தாலே துடித்துப் போகும் தாய்மார்கள் மார்புகளில் பிள்ளைகளை அணைத்தவாறு மரணித்தார்கள்.

இரட்டைக் கோபுரம் தாக்கப்படும் காட்சியை மணிக்கொருமுறை டிவிக்களில் காட்டி மேலை நாட்டு மக்களின் மனதில் அதை மறக்கவிடாமல் செய்த மீடியாக்கள் ஈராக்கில் சிதறிவிழும் மனித உடல்களை மொத்தமாக மூடி மறைத்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக் கூடாது, எப்படிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும் என்று அந்தந்த படைத்தலைவர்களின் தணிக்கைக்கு பிறகே போர்ச் செய்திகள் வெளியிடப்பட்டன. அதையும் மீறி அல் ஜசீரா மற்றும் அல் அரபியா டிவியினர் ஈராக்கில் அப்பாவி மனிதர்களும் பிள்ளைகளும் கொல்லப் படுவதை செய்தியாக வெளியிட்டார்கள். ஆனால் அமேரிக்கா கருத்துச் சுதந்திர விரும்பிகள், ஜனநாயகக் காவலர்கள் அந்த டிவிக்களின் செய்தி சேகரிக்கும் பாக்தாத் அலுவலகங்களை தாக்கி அங்கிருந்த செய்தியாளர்களையும் உண்மையை சொன்ன காரணத்திற்க்காக மேல் நோக்கி அனுப்பி வைத்தார்கள்.
சோவியத்தை நம்பி முதலாம் வளைகுடா போரில் மோசம் போன சதாம் ஐரோப்பியாவை நம்பி இரண்டாம் வளைகுடா போரில் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் எலிக்குகைக்குள் தஞ்சமடைய நேர்ந்தது.

அரபுலகம் அவமானத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வேதனையில் வாய்மூடி அமைதியாகக் கிடந்தது. ஐ.நா. சபையின் முடிவிற்க்கான காலம் தொடங்க ஆரம்பித்தது. வெறும் நிவாரணப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுறுத்தப் பட்டது.

ஐரோப்பிய நாடுகள் மெதுவாக ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஈராக் அமேரிக்காவின் வசம் போய்விட்டது, பெட்ரோல் டாலர்கள் பெட்ரோல் ஈரோவாக மாறும் நாட்கள் தற்போது இல்லை என்ற எதார்த்தத்திற்க்கு வந்தவர்கள் புனரமைப்பு பணிகளில் ஏதாவது ஒப்பந்தம் கிட¨க்குமா என்று அமேர்க்காவிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

அமேரிக்காவின் script ல் ஐரோப்பியாவிற்கு எந்தவித பாத்திரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு பிரிதொரு சந்தர்பத்திற்க்காக காத்திருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப் போனது ஐரோப்பிய உலகம்.

அமேரிக்கா ஏன் தன்னிச்சையாக புனரமைப்பு பணிகளில் யாரையும் கூட்டு சேர்க்காமல் செயல் படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள ஒன்றும் ராக்கெட் அறிவு தேவையில்லை. ஈராக் என்பது அமேரிக்கவை பொருத்தவரை ஒரு புதயலைப் போன்று. தோண்ட தோண்ட வற்றாமல் கிடைக்கக் கூடிய உலகின் இரண்டாவது அதிக கையிருப்பு இருக்கக் கூடிய பெட்ரோல் உள்ள நிலம் என்பதால் எத்தனை பில்லியன் டாலர்கள் செலவு செய்தாலும் வட்டியும் முதலுமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாததால் அமேரிக்க வேறு யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

ஈராக்கின் எல்லா ஒப்பந்தங்களும் அமேரிக்க கம்பேனிகளுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த ஒப்பந்தங்கள் எதையும் பிற்காலத்தில் ஈராக் செல்லுபடியாகாத ஒப்பந்தமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் எடுத்து அதற்கு தகுந்தார்போல் ஈராக்கின் புதிய சட்டங்கள் பால் பிரெமரால் (First Governor General of Iraq) ஏற்கனவே எழுதி அமலாக்கப் பட்டுவிட்டது. ஒரு நாட்டை அநியாயமாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி இருக்கக் கூடிய பெட்ரோல் தொடர்பான எல்லா வியாபரங்களையும் அமேரிக்க கம்பேனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறது அமேரிக்க அரசாங்கம்.

அமெரிக்கா விரும்பியது போல் ஐ. நா சபை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. கோபி அண்ணானின் ஐ.நா. சீரமைப்புத் திட்டத்திற்க்கு அமேரிக்கா veto சொல்லிவிட்டது. ஆங்காங்கே ஏழை நாடுகளுக்குச் சென்று போலியோ ஊசி போடும் வெலையும் கோதுமை மூட்டைகளை வினியோகம் செய்தால் போதும் என்று ஐ.நா. வின் வேலையை அமேரிக்கா குறைத்துவிட்டு உலக நாடுகளின் அரசியல் பொருளாதார ஒழுங்குகளை தான் பார்க்கப் போவதாக ஆணித்தரமாக அழகுற ராஜ தந்திர வார்த்தைகளில் சொல்லிவிட்டது.

ஐ.நா.வின் தலை எழுத்தை மாற்றி எழுதும் பணியை இத்தோடு விடப் போவதில்லை அமேரிக்கா. ஐ.நா. சபையைப் பற்றி 1994ல் 'There is no such thing as the United Nations. There is only the international community, which can only be led by the remaining superpower, which is the United States... The secretariat building in New York has 38 stories. If it lost ten stories, it wouldn't make a bit of difference' என்று Federalist Society Forum' என்ற அமைப்பில் பேசிய ஜான் போல்டன் (1) என்ற புதிய பழமைவாதியைத்தான் (இப்படி மொழி பெயர்க்கலாமா? neo-conservative) அமேரிக்காவின் ஐ. நா. தூதராக நியமித்திருக்கிறது.

ஈராக் போரின் மூலம் தனது முதலாவது எதிர்பார்ப்பான ஐ.நா. ஒழிப்பு வேலையை தொடங்கிவிட்ட அமேரிக்கா தனது இரண்டாவது வெற்றியான டாலரின் பாதுகாப்பில் குறைந்தது ஒரு பத்தாண்டு காலத்திற்க்காவது அதிகம் கவலைப்பட தேவையில்லை எனும் அளவிற்கு தன்னை கொஞ்சம் நிம்மதியாக்கிக் கொண்டது. ஒபெக் நாடுகளின் முதுகெலும்பை உடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈராக்கை கையில வைத்துக் கொண்டு தான் விரும்பிய நாடுகளுடன் இருநாட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு வேண்டுகின்ற அளவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ய முடியும். ஒபெக் நாடுகளின் கட்டுபாட்டை குலைத்து அவர்களையும் அமேரிக்கா விரும்பியபடி பெட்ரோல் விலையை நிர்ணயிக்க செய்யும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

தான் எதிர்பார்த்த முதல் இரண்டு விளைவுகள் செயல்படத் தொடங்கியது அமேரிக்காவிற்கு தற்போது மன சாந்தியை அளித்தாலும் தனது மூன்றாவது எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்து கொள்ள அமேரிக்கா போரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ஜனநாயகம் என்ற புதிய USP யை இப்போது செயல் படுத்த தொடங்கியுள்ளது.

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.

(தொடரும்)

Notes:
1. Warriors of Democracy - Aamer Syed, Arab News page 7, dated April 7, 2005

5 comments:

Akbar Batcha said...

நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். சில விஷயங்களை கொஞ்சம் நாசூக்காகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அக்பர் பாட்சா

Abu Umar said...

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்களினால் எப்படி பழிவாங்கப்படுகிறார்கள் என்று கட்டுரையின் ஊடே சுருக்கமாக கோடிட்டு காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே வேளையில், முஸ்லிம்கள் "ஊடக துறையில் பின்தங்கியிருப்பதன் காரணங்களை" ஆராய்ந்து அக்குறைகளை களையவேண்டியது பற்றி அவசரமாக சிந்திக்க வேண்டும்.

-அபூ உமர்-

Akbar Batcha said...

அபு உமர்,

மீடியாக்களில் பின் தங்கி இருப்பதும் கல்வியில் பின் தங்கியிருப்பதும் முஸ்லீம்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையே. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கூட்டமாக வாழ்வதால் தன்னை மட்டுமல்லாமல் தனக்கு பின்னால் வரும் சமுதாயத்தையும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறோம். இது முற்றிலும் இஸ்லாமிய வாழ்க்கைக்கு எதிரானதே.

சுட்டுவிரல் said...

//ஏதோ ஒரு கூட்டம் லாபமடைவதற்க்கு லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்கத் தயாரானார்கள். அவர்களை அறியாமலே மரணத்தின் கொட்டகைக்கு வந்து குவிக்கப் பட்டார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் தங்களது கண்களுக்கு முன்னாலேயே வெடி குண்டுகளிலும், பீரங்கி தாக்குதலிலும், விமான ஏவுகணைகளினாலும் சிதறடிக்கப் படுவதைப் பார்த்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இரத்த வெள்ளத்தில் கையிழந்து காலிழந்து முகம் சிதைந்து மரணத்தில் மிதந்தார்கள். பெற்றெடுத்தப் பிள்ளைகளின் விழிகளில் தூசு விழுந்தாலே துடித்துப் போகும் தாய்மார்கள் மார்புகளில் பிள்ளைகளை அணைத்தவாறு மரணித்தார்கள்.//

படிக்கும்போது ஆதிக்கவெறியின் கோரம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

யாரோ ஒரு சிலர் சுகமாக வாழ தேசங்களல்லவா பலி கொடுக்கப்படுகின்றன. அதேப் போல எப்படியோ புகழும் பணமும் பெற்றிட யார் யார் மீதோ சேறுகளை வீசுகிற மனப்பாங்கு.

ஒன்று மட்டும் நிச்சயம்: 'எந்த ஒரு சமுதாயமும் தானே முன்வந்து தன் நிலையை மாற்றிக்கொள்ளாதவரை இறைவனும் அவர்களுக்கு உதவப்போவதில்லை'.

Akbar Batcha said...

Dear Suttu Viral,

Rightly said. Unless the society or for that matter an individual desired to change, even Allah will not help us. This is what Allah said in Quran.

Hope the Muslim world will change.