கொரொனா என்ற கண்ணுக் தெரியா ஒரு எதிரி
உலக சாம்ராஜ்யங்களை துவம்சம் செய்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் கொரொனாவிற்கு
எதிரான யுத்தத்தில் ஏறக்குறைய வெற்றியா அல்லது தோல்வியா என்று நிர்ணயிக்க முடியாத
சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் என்ன நடக்கலாம், அல்லது எது நடக்க
வேண்டும் என்ற பகுப்பாய்வின் அங்கமாக பொருளாதாரத்தை முன்னிலைப் படுத்தி
எழுந்ததுதான் இந்த கொரொனா யுத்தமும் பொருளாதார ஆய்வும் கட்டுரை.
உலகப் பொருளாதாரத்தின் புதிய சகாப்தம்
ஒன்று உதயமாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆறு மாதமாக உலகையே உலுக்கி
எடுக்கும் ஒரு தீவிரவாதி யாரென்றால் இந்த கொரோனாவாகத்தான் இருக்கும். கண்ணுக்குத்
தெரியா ஒரு வைரஸ்.. தொட்டாலும் பட்டாலும் ஒட்டிக் கொள்ளும் என்று உறவுகளைக் கூட
தள்ளி வைத்து மூக்கிலிருந்து முழு உடல்வரை மறைத்தும் மறைந்தும் வாழ வைத்துவிட்டது.
ஆலயங்கள் வழி பாட்டுத் தலங்கள் என்று உலகின் தலைசிறந்த வாடிகன் முதல் மக்கா வரை
மூடப்பட்டு கடவுளைக் கூட சற்று தள்ளி வைத்துவிட்டது இந்த கொரொனா. மரணித்தவர்களுக்கு மட்டும் சமாதி கட்டாமல் உலகப்
பொருளாதாரத்தையும் பாதளத்தில் தள்ளி சமாதிக் கட்டி அனுதினமும் நம்மை சின்னாபின்னப்
படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தீவிரவாதி கொரோனா.
எங்காவது ஒரு நாட்டில் ஒரு குண்டு
வெடித்து பதினைந்து பேர் இறந்தால் ஆட்சியாளர்களெல்லாம் ஒன்றுகூடி வருத்தம்
தெரிவித்துக் கொள்வதும், அறிக்கை விடுவதும், தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமித்த
நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தொலைக்காட்சிகளில் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும்
சூழலில் தினமும் ஐந்தாயிரத்திற்கு குறைவில்லாமல் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறது கொரோனா.
ஊரடங்கின் மூலம் கொரொனாவை ஒழித்துவிடலாம்
என்று மக்களை வீட்டுக்குள் முடக்கியும் கொரொனா முடங்குவதாக இல்லை. அரசுகள் என்ன
செய்வதென்று தெரியாமல் தலையை சொரிந்துக் கொண்டிருக்கும் போது மக்களும் ஒன்றும்
புரியாமல் விழி பிதுங்கி.. நாளைய பொழுது எப்படிப் போகும் என்று மாடமாளிகையில
வாழும் சீமான் முதல் சாலையில் படுத்துறங்கும் சாமானிய மனிதன் வரை தள்ளாடிக்
கொண்டிருக்கிறோம். இந்திய அரசும் அவ்வப்போது தலைகாட்டி, வீர வசனங்கள் பேசி
மணியடித்து, கைதட்டி, தீபம் ஏற்றி, வானிலிருந்து மலர்மழைத் தூவி கொரொனா எதிர்ப்பை
தொலைக்காட்சி நாடகமாக்கி மக்களை பரவசப்படுத்தியது. இதோ முடிந்துவிட்டது,
ஒழித்துவிட்டோம் என்று டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டில் கொரொனா நன்றாக நீட்டி
முழுக்கி படுக்கையை விரித்து உலகம் முழுக்கப் படுத்துக் கொண்டதுதான் நிதர்சனம்.
இந்திய வல்லரசில் பல்லாயிரம் மைல்கள்
பொடிநடையாய் நடந்தும், கிடைத்த வாகங்களில் பயணம் செய்தும் வழியிலேயே இறந்து போன
ஆன்மாக்களை நினைத்து, என்னடா நாடு இது.. செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் மனிதர்களை
அனுப்பப் போகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நமக்கு மும்பயிலிருந்து பீகாருக்கு
அனுப்பி வைக்க நம்மிடம் போக்குவரத்து இல்லாமல் போய்விட்டது. சொந்த நாட்டிலேயே
அகதிகளாக துரத்தப்படும் மக்களை காப்பாற்ற முடியாத நாடு பக்கத்து நாடுகாளிலிருந்து
வரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை தரப்போகிறோம் என்று சட்டம் இயற்றியதை நினைத்து
சிரிக்கத்தான் வேண்டும். தாய் இறந்துவிட்டாள் என்று கூட தெரியாமல், அவளை
எழுப்பிவிட தவிக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையின் காணொளி கண்ணீரை வரவழைத்து விட்டது. தானுண்டு, தன் குப்பைத் தொட்டியுண்டு என்று
வாழ்ந்துக் கொண்டிருந்த நாய்கள் கூட இப்போது வாடிய முகமும் ஒட்டிய வயிறுமாக வீட்டு
வாசல்கலில் வந்து நின்று எதையாவது சாப்பிடக் கொடு என்று பார்க்கும் காட்சிகள் என்
மனதைவிட்டு அகல மறுக்கின்றன.
சூப்பர் பவர் நாடுகள் எங்கெ? உலகத்தின்
வழிகாட்டி நான்தான் என்று ஊருக்கெல்லாம் நாட்டாண்மை செய்யும் அமேரிக்கா எங்கே? ஏன்
இப்படி உலகமே பேயறைந்ததுபோல் திகிலடைந்து நிற்கிறது?
கொரொனா என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதா
அல்லது இயற்கையின் செயல்பாடுகளில் எழுந்த பாதிப்பா அல்லது கடவுளின் தண்டனையா என்று
எல்லா நாட்டுத்தலைவர்களும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அல்லது எதையோ செய்ய
என்னமோ வந்துவிட்டது என்று தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வாயடைத்து
நிற்கின்றார்களோ என்னவோ? புரியவில்லை. சிலருக்கு இது கடவுளின் தண்டனை. சிலருக்கு
இது இயற்கையை தேவையில்லாமல் தீண்டியதால் வந்த கொடூரம். சிலருக்கு இது மனிதர்கள்
தங்களின் கரத்தால் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட தீவினை.
கடவுளின் தண்டனை அல்லது இயற்கையின்
சீற்றம் அல்லது மனிதன் தன் கைகளால் உருவாக்கிய ஓர் அழிவு என்ற மூன்றையும் கொஞ்சம்
தள்ளிவைத்துவிட்டு இதன் மூலம் நிகழ இருக்கும் அல்லது நிகழ்த்த இருக்கும் பொருளாதார
தாக்கங்களை முதலில் சிந்திப்போம். காரணம் எந்த ஒரு செயலுக்கும் ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட எதிர் விளைவுகள் அல்லது தொடர் விளைவுகள் இருக்கின்றது. கொரொனாவும்
அதன் தொடர்பான நடவடிக்கைகளும் எங்கோ எதற்கோ ஆரம்பித்த ஒரு வினையின் எதிர்வினை
அல்லது தொடர்வினை என்பதில் சந்தேகம் இல்லை.
விஷயத்திற்கு வருவோம். உலகத்தின் போக்கு
அல்லது வளர்ச்சி அல்லது சீராய்வு அல்லது முற்றிலுமாக மாற்றம் வேண்டுமென்றால் உலகம்
தழுவிய ஒரு யுத்தமும் அதன் மூலம் அரங்கேறும் பொருளாதார சீரழிவு மூலம்தான் கொண்டுவர
முடியும். ஏறக்குறைய கடந்த நூறு வருடமாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகம்
முழுவது ஏதாவது ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவ்வப்போது போர் அல்லது
பெரும் கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். இவை அணைத்தும் பொருளாதார வயப்படுதலை
குறிவைத்தே நடத்தப்பட்டது என்றாலும் உலகத்தின் போக்கை ஒட்டு மொத்தமாக மாற்றவல்லது
அல்ல. ஆங்கங்கே மேலாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பை அதிகப்படுத்தவும் அல்லது உறுதி
செய்வதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட போரும் கலவரங்களும் நடந்து வருவதை நம்மால்
காண முடியும்.
அவைகள் யாவும் மத, இன, மொழி
சித்தாந்தங்களை தூக்கிப் பிடித்து நடக்கும் போராட்டமாக சித்தரிக்கப்பட்டாலும்
அல்லது தெரிந்தாலும் உண்மையில் நடந்த அல்லது நடக்கப் போகும் எந்த யுத்தமும் அல்லது
போராட்டமும் மேற்சொன்ன சித்தாந்தத்திற்க்காக இல்லை. வரலாற்றில் ஒன்றிரண்டு போராட்டங்களைத்
தவிர்த்து மற்ற அனைத்தும் பொருளாதார மேலாதிக்கத்திற்காகவே நிகழ்த்தப் படுகின்றன.
மனித வர்க்கத்தின் உணர்ச்சிகளை தூண்டவும் அவர்களை ஒருமித்து சேர்க்கவும் மத, இன
மற்றும் மொழி சித்தாந்தங்கள் அவசியம் என்பதால் இந்த மூன்றையும் முன்னிறுத்திதான்
போராட்டங்களையும், கலகங்களையும், போர்களையும் உருவாக்குவது என்பது தொன்று தொட்டு
நடந்து வரும் வரலாற்று நிகழ்வுகள்.
ஆகவே.. உலக இயக்கத்தின் தற்போதைய
நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக
வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த உலகளாவிய கொரொனா தீவிரவாதமாக இருக்குமோ என்ற
அச்சம் ஒருபக்கம் இருக்கிறது. அதெ வேளையில் இந்த குழப்பத்தை அல்லது அழிவை எப்படி
பயன்படுத்திக் கொள்வது என்பதில் மேலாதிக்க சக்தி முதல் வாய்ச்சவடாலில் ஆட்சி
நடத்தும் ஆட்சியாளர்கள் வரை எல்லொரும் மும்முரமாக முயன்று வருகிறார்கள்.
கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். அமேரிக்க
வல்லரசு மற்றும் அதன் கரன்சியான டாலரின் பழைய கதைகள் தெரிந்தால்தான் ஏன் இந்த
ஒட்டுமொத்த பொருளாதார மேலான்மையில் மாற்றம் அவசியம் எனும் அனுமானத்தை
படிப்பவர்களால் சரியாக உணரமுடியும்.
உலகப் பொருளாதாரம், டீப் ஸ்டேட் என்று
அறியப்படும் ஆதிக்க சக்திகளின் கைப்பிடிக்குள் இருந்தாலும் தற்போது அது அவர்களின்
கையை மீறிய ஒரு அழிவுப் பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதன் அறிகுறிகளின் ஒரு
அங்கம்தான் வற்றிக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் சிக்கிக் கொண்டிருக்கும்
பெட்ரோ டாலர்கள்.
பிரெட்டன் உட்ஸ் கரன்சி பெக்கிங் (Bretton Woods Currency Pegging) அதாவது (1) நாணய
மாற்று முறையில் உறுதித்தன்மை ஏற்படுத்தல், (2) பணமாற்று போட்டிகளின் மூலம்
ஏற்படும் கட்டுக்கடங்கா மதிப்பிழப்பை தடுத்தல் மற்றும் (3) பொருளாதர விரிவாக்கம் என்ற
மூன்றையும் ஒழுங்குபடுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றி 1944களில் ஏறக்குறைய
நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து இருவாரங்களுக்கு மேலாக விவாதித்தன.
அவ்விவாதம் நடைபெற்ற இடத்தின் பெயர் தான் பிரெட்டன் உட்ஸ் எனும் ஹோட்டல்.
விவாதங்களின் இறுதியில் அந்நாடுகள் அனைத்தும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட
ஒப்பந்தத்தின் படி, அமேரிக்க டாலர்கள் தங்கத்தின் மதிப்பை வைத்தும் ஏனைய நாடுகளின்
நாணய மதிப்பு அமேரிக்க டாலருக்கு நிகரகாக மதிப்பிடுவது என்று முடிவு
செய்யப்பட்டது. அதாவது உலக நாடுகள் அனைத்தும் அமேரிக்க டாலரை உலக பொது நாணயமாக
ஏற்றுக் கொண்டு அமேரிக்காவின் டாலருக்கு உலக அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
இது நிகழ்ந்தது இரண்டாம் உலகப்
போருக்குப்பின் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய
நாடுகள் சின்னாபின்னமாக்கப் பட்டு அவைகளின் புனரமைப்பிற்கு தேவையான பொருளாதாரத்தை
எப்படி கொண்டு வருவது என்ற கேள்விக்குப் பதிலாக எழுந்ததுதான் இந்த பிரெட்டன் உட்ஸ்
ஒப்பந்தம். சற்று சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி சொல்வதென்றால், இக்கால கட்டதை
பயன்படுத்தி தங்களின் வளத்தை பெருக்கிக் கொள்ள முடிவெடுத்தனர் டீப் ஸ்டேட்
உரிமையளர்கள் (கந்துவட்டி முதலாளிகள்). இதன் மூலம் ஐரோப்பிய பொருளாதாரத்தின்
அடிப்படைகளை கட்டுபடுத்தவும் மற்றும் உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்திற்கும்
பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தம் மூலம் டீப் ஸ்டேட்டின் (கந்துவட்டி முதலாளிகள்) இரு மிகப்பெரும்
பொருளாதார நிறுவனங்களை உருவாக்கினார்கள். ஒன்று சர்வதேச புனரமைப்பு மற்றும்
பொருளாதார வளர்ச்சி வங்கி (பிற்காலத்தில் இது உலக வங்கியாக மாறிப் போனது (World Bank) (உலக நாடுகளுக்கு
கடன் கொக்கல் வாங்கல் செய்யும் நிறுவனம்) இன்னொன்று சர்வதேச நாணய மதிப்பு மையம்
அல்லது நிதியம் (International
Monetory Fund).
உலக வங்கி ஆரம்ப காலத்தில் இரண்டாம் உலகப்போரில்
பாதிக்கப்பட்ட நாடுகளை புனரமைக்கும் நோக்கத்துடன் கடன் கொடுக்கும் அமைப்பாக
ஆரம்பித்தாலும் பிறகு அமேரிக்காவைப் பயன்படுத்தி உலக பொருளாதார மேலாதிக்கத்தை
கையகப்படுத்த இரு அங்கங்களில் ஒன்றாக (மற்றொன்று International Monetory Fund) செயல்பட ஆரம்பித்தன. உலக வங்கியின் நிர்வாக இயக்குனர்கள், அதில் அங்கம்
வகிக்கும் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களால் நியமிக்கப்பட்டவர்களாக
இருந்தாலும், உலக வங்கியின் நிர்வாகம் அதிக பங்கு வைத்திருக்கும் அமேரிக்காவின்
அதிகாரத்திற்கு உட்பட்டது.
கந்துவட்டிக் காரர்களிடம் மண்டியிட்டு
வாழும் நாடுகளில் முதல் நாடு அமேரிக்கா. தன் முதலாளிகளின் விருப்பங்களை அடி முதல்
நுனி வரை செயல்படுத்தும் வல்லரசுதான் அமேரிக்கா. ஃபெடரல் பேங் என்று அறியப்படும் அமேரிக்காவின்
மத்திய வங்கி, அமேரிக்கா பொருளதார கொள்கைகளை செயல்படுத்தும் நிதி நிறுவனமாகும். 1913ம்
ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஃபெடரல் ரிசர்வ் ஆக்ட் மூலம் அமேரிக்கா காங்கிரசுக்கு கட்டுப்பட்டாலும்
அதில் 63 விழுக்காடு பங்கு 12 தனியார் வங்கிகளுக்கு சொந்தமானது. இயுஸ்டேஸ்
முல்லின்ஸ் மற்றும் காரி காஹ் எனும் இருவரின் ஆய்வரிக்கையின்படி, ஃபெடரல்
வங்கியின் பெரும்பான்மை பங்குகள் சிட்டி வங்கி, சேஸ் மான்ஹட்டன், மோர்கன் காரன்டி டிரஸ்ட், கெமிக்கல் வங்கி,
பாங்கர்ஸ் டிரஸ்ட் கம்பேனி மற்றும் இன்னும் சில நிதி நிறுவனங்களுக்கு சொந்தமானது
என்கிறது. இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்தின் ரோத்ஷில்ட் குடும்பத்தினருக்கு
சொந்தமானது என்றும் வாதிகிடுறார் முல்லின்ஸ்.
‘… The most powerful men in the United States were themselves
answerable to another power, a foreign power, and a power which had been
steadfastly seeking to extend its control over the young republic since its
very inception. The power was the financial power of England, centered in the
London Branch of the House of Rothschild. The fact was that in 1910, the United
States was for all practical purposes being ruled from England, and so it is
today’ (Mullins, p. 47-48).
ஆகவே, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய
நிதியம் இரண்டும் உலக நாடுகளின் பொருளாதார பரிமாற்றங்களை பார்வையிடுவதோடு
மட்டுமல்லாமல் அதன் தொடர்பான பல தனியார் நிதி மதிப்பீட்டு நிறுவனங்களையும்
உருவாக்கி தங்களின் பொருளாதார மேலாதிக்கதிற்க்கு மேலும் வலு சேர்த்தன. எந்த ஒரு
நாட்டின் பொருளாதார எழுச்சியும் வீழ்ச்சியும் இந்நிதி நிறுவனங்களை அனுசரித்துப்
போவதை வைத்தே முடிவு செய்யப்பட்டன, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள்.
1944லிருந்து 1971வரை அமேரிக்காவின்
பொருளாதாரம் மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டது. கனிசமான உலகப் பொருளாதாரம்
தனியார்களின் கைகளுக்கு சென்று சேர்ந்தது. இச்சூழலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து
கருப்புத்தங்கம் என்று அழைக்கப்படும் பெட்ரோல் வளம் கண்டறியப்பட்டு,
அந்நாடுகளுக்கு உதவி செய்ய அமேரிக்கா தயாரானது. அங்கிருந்த நாடுகள் அனைத்தையும்
தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து, தான் விரும்பிய அரபு தேசிய மற்றும் மத
விற்பண்ணர்களை பதவிகளில் அமரவைத்து எண்ணெய்க் கிணறுகளின் காவலாளிகளாக அவர்களை
நியமித்தது அமேரிக்கா. இதை தொடங்கி வைத்த நாடு இங்கிலாந்தாக இருந்தாலும் அதை
சரியாக செயல்படுத்தியது அமேரிக்காதான்.
பெட்ரோல் வாங்க வேண்டுமா? அமேரிக்க
டாலர்களை கொண்டு வாருங்கள் என்று காவலாளிகளின் சிரமேற் கொண்ட ஏவலால் அமேரிக்காவின்
டாலர் அதி வேகமாக உச்சத்தைத் தொட்டது. எதற்க்கிந்த தேவையற்ற தங்கத்திற்கெதிரான
மதிப்பியல் என்று 1970ல் அதிபர் நிக்சன் அமேரிக்கா டாலர்களை தங்கத்தின்
மதிப்பியலிலிருந்து விடுவித்தார். 44 நாடுகள் கூடி ஏற்படுத்திய ஒப்பந்ததை தூக்கி
மூலையில் எறிந்துவிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்தது அமேரிக்கா. ஏற்கனவே அமேரிக்கா
பாலன்ஸ் ஷீட்டில் பணமாற்று மதிப்பீட்டின் மூலம் இழப்புகள் ஏற்பட்டு டாலரின்
மதிப்பு குறையத் தொடங்கும் வேளையில தங்கத்தின் ஒப்பீட்டிலிருந்து வெளியேற வேண்டும்
என்ற அழுத்தமும் அமேரிக்கா பொருளாதார வல்லுனர்களிடையே இருந்தது. உலக நாடுகளின்
எரிசக்தி தேவையாக இருந்த பெட்ரோல் உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும் மாறி
எண்ணெய் கிணறுகளின் ஆழம் அதிகமாவதுடன் தேவைக்கேற்ப டாலர்கள் பிரிண்ட் செய்து
கொள்ளப்பட்டன. இறுதியல் அமேரிக்காவின் டாலர் பெட்ரோல் டாலராக மாறிப்போனது.
அதே நேரம், வட்டிசார்ந்த பொருளாதாரத்தின்
கட்டுக்கடங்கா வளர்ச்சியில் காணாமல் போகும் பணமுதலைகள், அழிந்து வரும் தொழில்
நிறுவனங்கள், குறைந்து வரும் மத்திய வர்க்கத்தின் வாங்கும் திறன், வரலாறு காணாத
வேலையின்மை என்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார சவால்களுக்கு பதில்
தெரியாமல் மேலாதிக்க சக்திகள் தடுமாறிக் கொண்டிருக்கிறன. என்னதான் செய்தாலும்
புறப்பட்ட இடத்திற்க்கே பொருளாதரம் மீண்டும் வந்தமர்வது என்பதில் எந்த மாற்றமும்
இல்லை. உலகின் முதன்மை கரன்சி என்று அறியப்பட்ட அமேரிக்க டாலர்களின் மதிப்பு
குறைவதும், அதை ஒட்டி பணப்பறிமாற்றம் நடத்தி வரும் ஐம்பது விழுக்காடுகளுக்கு
மேற்பட்ட நாடுகளின் நாணயங்களின் கட்டுப்பாடற்ற தன்மை இன்னொரு புறம் என்று சமாளிக்க
முடியாத பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது உலகப் பொருளாதார வீழ்ச்சிகள். இதற்கிடையில் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கத்தில் இருந்த அமேரிக்க டாலர்
இப்போது தன் மேலான்மையை இழக்க ஆரம்பிக்கின்றது. அமேரிக்க ஏகாதிபத்தியத்தை முன்னிலை
படுத்தி டாலரை உலக பொது நாணயமாக வைத்து இதுவரை கோலேச்சிய மேலாதிக்க சக்திகளுக்கு
இது பெரும் சவலாக மாறிக் கொண்டிருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன் ஈரோவை வைத்து
டாலருக்கு எதிராக கட்டம் கட்ட நினைத்தன ஐரோப்பிய நாடுகள். ஆனால் பெட்ரோல் எனும்
ஊக்கியை தன்கையில் முழுவதுமாக வைத்திருந்த அமேரிக்கா அதை நாசுக்காக முறியடித்து
ஈரோவை மண்டியிட வைத்தது. அதைத் தொடர்ந்து எண்ணெய் கிணறுகளின் காவலாளிகள் திடீரென
முதலாளிகளாக மாறும் எண்ணத்துடன் டாலரை புறம் தள்ளி வெவ்வேறு கரன்சிகளைக் கொண்டு
தன்னிச்சையாக வியாபாரம் செய்ய முனைந்த போது, அதற்கு வித்திட்ட சதாம் ஹுசைன்,
கடாஃஃபி போன்றவர்களை உள்நாட்டு பிரச்சனைகளை உருவாக்கி அவர்களை கொடூரமாக பலி
கொடுத்து காவலாளிகள் ஒருபோதும் முதலாளிகளாக முடியது என்று பாடம் கற்றுக் கொடுத்தது
அமேரிக்கா.
அமேரிக்கா என்ற நாடு பெரும்பாலும்
தனியார்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தி அவர்களுக்கு சேவகம் செய்யும் நாடாகும்.
அரசியல் தலைவர்கள் முதல் ஆளும் தலைவர்கள் வரை எல்லோரும் ஏதேனும் ஒரு தொழில்
நிறுவனத்தை நடத்துபவர்கள் அல்லது தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே
இருப்பார்கள். முதலாளித்துவக் கொள்கைகளை உலகமெங்கும் கொண்டு சென்று சிறு, குறு,
நடுத்தர மற்றும் பெரும் முதலாளிகளை உருவாக்கி அவர்கள் எல்லோரையும் பொருளாதார
மேலாதிக்கத்தின் (Deep State) மேல்தட்டு மக்களின் அங்கமாக அல்லது கைப்பாவைகளாக வைத்திருப்பது அவர்களின் எழுதாத
கோல்டன் விதிகள்.
எந்தெந்த நாடுகளின் என்னென்ன கனிம
வளங்கள் உள்ளன, அவைகளை எப்படி கையகப்படுத்துவது என்ற ஆரய்ச்சிகள் ஒருபுறம்
நடக்க்கும் அதே வேளையில் யாரை எங்கு பதவியில் அமர்த்தினால் தங்களின் வணிகத்தை
தங்கு தடையின்றி நடத்திக் கொள்ளலாம் என்பதை குறைந்தபட்சம் ஒரு பதினைந்து
வருடங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்து செயலாற்றும் தகுதியும் பலமும் உள்ளவர்கள்.
இருபது வருட காலம் தனது கைப்பாவையாக
இருந்து ஈரானுடன் தொடர்ந்து எட்டு வருட காலம் சண்டையிட்டு ஈரானின் முதுகெலும்பை
உடைக்க காரணமாக இருந்த சதாம் ஹுசைனை எதிரியாக மாற்றி அந்நாட்டை சீரழித்து, பிறகு
அதன் புனரமைப்புகளுக்காக அநாட்டின் பெட்ரோல் வளத்தை சுரண்டியதை யாரும் மறக்க
முடியுமா? இப்படி நிறைய உதாரணங்கள் உலகம்
முழுக்க உள்ளன.
உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கி மற்றும்
சர்வதேச நாணய நிதியகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து வெகுநாட்களாகிவிட்டன. எப்படி
உள்ளூர் வங்கிகள் நன்றாக தொழில் செய்பவர்களை சந்தித்து, உங்களின் தொழிலை விரிவாக்க
கடன் தருகிறோம் என்று தொழில் முனைவோர்களை வைத்து தங்களின் வங்கி லாபங்களை
அதிகப்படுத்துகிறார்களோ அதே போன்று உலக நாடுகளில் பலவற்றிர்க்கு கடன் கொடுப்பதன்
மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் கையில் எடுத்து விடுவார்கள். உதாரணமாக கொரொனா
இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடன் உலக வங்கி ஒரு பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுக்க
உடனடியாக அறிவித்ததை நினவு படுத்த விரும்புகிறேன். ஆக ஒட்டு மொத்த நாடும் கடன் பிடிக்குள் சிக்கி
நாட்டின் லாபத்தில் பல கோடிகளை வட்டிகளாக கட்டிக் கொண்டிருக்கும் நிலையைக்
காணலாம்.
இந்திய அரசாங்கம் வருடத்திற்கு
ஆறிலிருந்து ஏழு லட்சம் கோடி ரூபாய் வெறும் வட்டியாக மட்டும் கட்டிக்
கொண்டிருக்கிறது. இது நாட்டின் மொத்த வருமானத்தில் 35லிருந்து 40 விழுக்காடாகும். இன்னும்
சொல்லப் போனால் இந்திய பட்ஜெட்டில் நான்கில் ஒரு பகுதி வட்டி கட்டுவதற்கென்றே
ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலபடி மேலே சென்று சில நாடுகளுக்கு எச்சரிக்கை என்ற
பெயரில் அந்நாட்டின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி பொருளாதார சிக்கலை மேலும்
ஏற்படுத்தி கடனாளியாக மாற்றுவதும் நடந்தேறுகின்றன. பணியாத நாடுகளை ஓட்டாண்டியாக்கி
அதன் மூலம் அரசியல் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் செய்வது முதல்
கனிமவளங்களை சுரண்டுவதற்கு ஏதாவதொரு காரணம் சொல்லி போர் தொடுப்பதுவரை எல்லா விதமான
அடாவடி வேலைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. (இரண்டு நாட்களுக்கு முன்னதாக
சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் அரசிடம் அரசுப் பணியார்களுக்கான ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைக்க
அறிவுறுத்தியிருக்கிறது).
1980களில் சோவியத் யூனியன் என்ற
கூட்டமைப்பினுள் இருந்த நாடுகள் எல்லாவற்றையும் உடைத்து அவைகளின் பொருளாதாரங்களை
கையகப் படுத்திக் கொண்ட அதே வேளையில் பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் இந்திய போன்ற
நாடுகளின் பொருளாதாரமும் அவர்களின் போர்ட்ஃபோலியாவாக மாறிப் போனது. கடைசியாக
விஞ்சி நிற்பது சீனாவின் 15 ட்ரில்லியன் பொருளாதாரம். அதாவது உலகின் இரண்டாவது
பெரிய பொருளாதாரம். இன்னும் சொல்லப் போனால், அடுத்த பத்து வருடத்தில் உலகின்
முதலாவது பொருளாதார நாடாக மாறிக் கொண்டிருக்கும் இரும்புத்திறை நாடு சீனா.
இவ்வாறு உலகப் பொருளாதரத்தை
கையகப்படுத்தி தங்களின் இரும்புக் கோட்டையை வலுப்படுத்திக் கொண்டவர்களுக்கு,
இரும்புக் கோட்டையின் அடித்தளம் துருப்பிடித்துக் கொண்டிருப்பதையும் அறிந்தே
வைத்திருக்கிறார்கள்.
வட்டிகளை அடிப்படையாக வைத்துப்
பின்னப்பட்ட பொருளாதார அமைப்பு இப்போது அதே வட்டிப் பளுவால் தாங்க முடியாமல்
திணறிக் கொண்டிருக்கிறது. மேலும் ஷேர் மார்க்கட் போன்ற தளங்களில் ஊகங்களின் அடிப்படையில்
கொஞ்சம்கூட நியாயம்ற்ற விலையேற்றங்களும், விலையிறக்கங்களும் நடந்து இல்லாத
உயர்வையும் தாழ்வையும் சந்தித்துக் கொண்டிருக்கும் கூத்திற்கு குறைவேயில்லை.
கையில் பணத்தைப் பார்க்காமல் வெறும் காகிதங்களில் நம்பரை பார்த்து பெருமையடித்துக்
கொள்ளும் நடுத்தர மக்களின் சேமிப்புகளை சுரண்டும் நரித்தனம் உலகம் முழுவதும்
பரவலாக நடந்து வருகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் சேர்த்து
ஏறக்குறைய 255 டிரில்லியன் டாலர்கள் கடனாளிகளாக இருக்கின்றன. கொரொனாவின் மூலம்
இன்னும் பத்து டிரில்லியன் டாலர்கள் அதிகமாகியிருக்கலாம் என்ற ஐயமும் இருக்கிறது. எங்கிருந்து
வாங்கினோம் இவ்வளவு கடன்களை? செவ்வாய் கிரகத்திலிருந்தா? இதில் உலக வங்கி மூலம் அதிகமாக கடன் வாங்கிய
நாடுகளில் சீனா முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
இப்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுடனும், உலக வங்கியிலும் கடன்களிலும் வட்டிககளிலும்
காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சூழலில் உலகப் பொருளாதாரம் இன்னுமொரு சுனாமியை
சந்திக்க இருப்பதாக கடந்த மூன்று வருடமாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை செய்த
வண்ணம் இருப்பதும் கவனிக்க வேண்டும். வட்டி கட்ட முடியாமல் சாமனிய மனிதர்கள்
தங்களின் வீடு சொத்துக்களை இழப்பதுபோல் நாடுகளும் தங்களை இழந்து கொண்டிருக்கின்றன.
சிக்கிய நூல்கண்டாய் நொந்து போய் கிடக்கும்
பொருளாதாரத்தை செப்பனிட்டால்தான் துருப்பிடிக்கும் அடித்தளத்தை புதுப்பிக்க
முடியும் என்பது முற்றிலும் உணர்ந்த டீப் ஸ்டேட் இம்மாபெரும் இக்கட்டிலிருந்து
மீண்டாக வேண்டும். அதற்கான வழிமுறைகள் ஒன்று சீனாவின் முழுப் பொருளாதாரத்தையும்
தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது உலகப் பொருளாதாரத்தின் போக்கை
மாற்ற வேண்டும்.அதாவது பொருளாதார கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். என்பதுதான் மேலாதிக்க சக்திகளின் கையில்
இருக்கும் இறுதி வாய்ப்புகள்.
சீனாவும் இதை முற்றிலும் அறிந்தே
இருக்கிறது. அதே நேரம் சீனா எதிர் வினையாற்றும் நாடாக இல்லாமல், இனி நடக்கப்
போகும் பொருளாதார சீரமைத்தலில் தன்னுடைய பங்கு முன்னனியில் இருக்க வேண்டும் என்ற
நிலைப்பாட்டை எப்போதோ எடுத்துவிட்டது. மொத்தத்தில் எல்லா நிலைகளிலும் எல்லா நாடுகளும்
தனக்கு மேல் உள்ள நாடுகளுடன் பொருளாதார யுத்தத்தில் முனைப்புடன் இருக்கின்றன.
உலக மூலப் பொருட்களின் மற்றும் உற்பத்தி
மையங்களின் ஆணிவேராக செயல்பட்டு வந்த சீனா சேவகன் என்ற நிலையிலிருந்து மாறி கட்டளை
பிறப்பிக்கக்கூடிய இடத்திற்கு தன்னை தள்ளிக் கொண்டு வருகிறது. இந்தப் பனிப்போர்
ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக அமேரிக்காவிற்கு சீனாவிற்கு தொடர்ந்துவரும் நிலையில்
கொரொனாவின் மூலம் சூடு பிடித்துள்ளது. சீனாவிற்கு பாடம் கற்பிக்க அமேரிக்காவும்,
அமேரிக்காவின் முதுகெலும்பை உடைக்க சீனாவும் ஒன்றை ஒன்று பட்டைத் தீட்டிக்
கொண்டிருக்கும் இச்சூழலில், ரஷ்யா சீனாவின் பக்கமும் ஐரோப்பிய நாடுகள்
அமேரிக்காவின் பக்கமும் அணி சேர்ந்துள்ளன. அமேரிக்கா இந்தியாவை தன்னுடன்
சேர்த்துக் கொள்ள விரும்பும் இச்சூழலில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப்
போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த பொருளாதாரப் போரில் இந்தியா
சாதிக்கப் போகிறதா அல்லது சேதமடையப் போகிறதா என்றும் தெரியவில்லை.
விரைவில் உலகளாவிய புதிய பொருளாதாரக்
கொள்கைகள் வரவிருக்கின்றன. அது எப்படிப்பட்டதாக இருக்கும், ஏற்கனவே இருக்கும்
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயலாக்கங்களில் மட்டும் மாற்றம் கொண்டதாக
இருக்குமா அல்லது அடிப்படையில் மாற்றம் வருமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க
வேண்டும். சொசலிச கொள்கைகள் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்புகளும் நிறைய
இருக்கின்றன. மேலாதிக்க சக்திகள் (Deep
State Actors) எப்படிப்பட்ட சார்பு நிலை எடுத்து எந்த
கொள்கைகளை முன்னிலைப் படுத்தி செயல்பட்டாலும் அவர்களின் அடிப்படை நோக்கம் உலகப்
பொருளாதாரத்தின் சாவி அவர்களின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
கொரொனாவால் சிலருக்கு சோதனை. சிலருக்கு
வாய்ப்பு, சிலருக்கு அழிவு என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
No comments:
Post a Comment