Tuesday, January 07, 2014

கற்பா? கல்லூரியா?

ஒரு வெள்ளியன்று எங்களது ஊரில் ஜுமஆ தொழுகைக்குப் பிறகு கற்பா? கல்லூரியா? என்ற தலைபில் ஒரு கட்டுரை அச்சடித்து பிரயோகிக்கப்பட்டது. தமிழகத்தில் முஸ்லீம்களிடம் பிரபலமாக உள்ள ஒரு அமைப்பின் சார்பாக உண்மை பத்திரிக்கையில் பதியப்பட்ட கட்டுரையை நகல் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த கோரினார்.  நானும் அவ்வாறு எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தேன். எதிர்பார்த்ததை போல் பதில் கிடையாது. ஆனாலும் அந்தக் கட்டுரை என்னை மிகவும் பாதிக்க வைத்தது. காரணம் ஏற்கனவே 25 வருடங்கள் பின்தங்கி இருக்கும் எனது முஸ்லீம் சமுதாயம் இன்னும் பிற்போக்கு சிந்தனைகளையும், எதிர்மறை அணுகுமுறைகளையும் கடைபிடிக்கும் தலைவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின்தங்கிய நிலையிலேயெ இருக்கிறதே என்ற ஆதங்கம்.

கற்பும் வேண்டும், கல்வியும் வேண்டும் என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை.  கல்வி வேண்டாம், கற்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் தலைவர்கள் ஒரு பக்கத்தில் சமுதாயம் உயர வேண்டுமென்று முஸ்லீம் தெருக்களிலும் சந்துகளிலும் பிரச்சாரம் செய்து இளைஞர்களை உணர்ச்சி பொங்க செய்யும் போது, முஸ்லீம் பெண்கள் மட்டும் கற்பு போதுமென்று வீட்டிற்குள்ளேயெ முடங்கிக் கிடக்க வேண்டுமென்று விரும்புவது எந்த வகையில் அறிவார்ந்தது? சமுதாயம் என்றால் வெறும் ஆண்கள் மட்டுமா? பெண்கள் முன்னேறதா சமுதாயம் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது. சமுதாயம் உயர வேண்டுமென்றால் வெறும் கற்பு மட்டும் போதாது. கல்வியும் வேண்டும்.  இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே.
கட்டுரையில் விவரிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் உண்மைதான்.

பெண்கள் ஒழுக்கம் தவறுவதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதெல்லாம் உண்மைதான்.  ஆனால் அதற்கு அவர்களால் விவரிக்கப்பட்ட தீர்வு தற்காலிகமாகவும், எல்லோராலும் எதார்த்தத்தில் செயல்படுத்த ஏதுவானதாக இல்லை.

குறிப்பாக தெருக்களில் யார் எப்போது எவ்வளவு நேரத்திற்கு நடமாடுகிறார்கள் என்பதை CCTV வைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஒரு தீர்வு விவாதிக்கப்பட்டது.  தெருக்களில் CCTV வைத்து நடமாடுபவர்களை கண்காணிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உரியது.  அப்படியே செய்தாலும் எல்லா காலங்களிலும் CCTV மூலம் கண்காணிக்கப்படுவது சாத்தியமல்ல.  தெருவிற்கு ஒரு ஜமாத்தாக இருக்கும் முஸ்லீம் சமுதாயத்தில் CCTV ஒரு நிரந்தர தீர்வல்ல.

அடுத்து வீட்டிற்குள் இண்டர்நெட் டிவி வைத்து மனைவியையும், பிள்ளைகளையும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தீர்வு கட்டுரையில் பரிந்துறைக்கப்பட்டது.  ஏற்கனவே மனதளவில் பிளவடைந்து கிடக்கும் நிறைய குடும்பங்களில் வீட்டிற்குள் இன்டர்நெட் டிவி வைப்பதென்பது குடும்பத்தில் எதிர்மறை விளைவுகளையும், நிரந்தர மன வேற்றுமைகளையும் உருவாக்கிவிடும்.  மேலும் தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த தடைகளையெல்லாம் சுலபாமாக தாண்டிவிடுவார்கள்.  ஓடிப்போகும் பல பெண்கள் உணவுப் பங்கீட்டு அட்டையின் நகல் முதல், பள்ளி சான்றிதழ்கள் வரை எடுத்துக் கொண்டு ஓடும் அளவிற்கு திட்டமிட்டு செய்யும் போது இந்த சாப்ட்வேர் கண்காணிப்புகளெல்லாம் வெறும் சாதரணம்.

கணவன் மனைவியை ஏமாற்றலாம், மனைவியை கணவன் ஏமாற்றலாம், பிள்ளைகள் பெற்றோர்களை ஏமாற்றலாம்.  யாரும், யாரையும் ஏமாற்றலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கும் நம்பிக்கையும், மரியாதையும், அன்பும், பாசமும் இன்னும் இவைகளையெல்லாம் கடந்து இறைவன் மேல் இருக்கும் பயம்தான் மனிதர்களை ஒழுக்கம் தவறாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும் இருக்க செய்ய முடியும். எனவே அல்லாஹ்வையும் முகம்மது ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் வீட்டிலும் முஸ்லீம் தெருக்களிலும் இருக்கும் அல்லது இருக்க வைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த நினைப்பதே ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.  அவ்வகையில் என்து கீழ்கண்ட ஒருசில கருத்துக்களை அந்த அமைப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் பதிவு செய்தேன்.  இங்கும் நான் இதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.  பின்வரும் எனது கருத்துக்களை முஸ்லீம் அமைப்புகள் அவர்களது தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மூலமாக சிறந்த முறையில் செயல்படுத்த முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அ) பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடத்தலாம்.  கேள்வி பதில் நிகழ்ச்சிகளாக நடத்துவது முற்றிலும் சிறந்தது.  அதிக கூட்டமில்லாமல் பெற்றோர்களை மட்டும் வைத்து ஒவ்வொரு ஊரிலும் நடத்தலாம்.  நான் ஆட்சிமன்ற தலைவராக இருந்த போது ஜெத்தா பன்னாட்டு பள்ளியின் பெண்கள் பிரிவில் இப்படி ஓர் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகளாக தொடந்து நடத்தி வந்தோம்.  இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக பெண் குழந்தைகளின் பருவ மாற்றத்தால் ஏற்படும் பாலியல் உணர்வுகள், மன இச்சைகள், பருவக் கோளாறுகள், இன்னும் பிற இண்டர்நெட் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் முறைகள் பற்றி மனவியல் நிபுணர்களையும் மற்றும் அனுபவமிக்க பெற்றோர்களையும் வைத்து சிறப்பாக நடத்தினோம்.  அதன் மூலம் பல பெற்றோர்களுக்கு பருவமடைந்த பெண் பிள்ளைகளை பக்குவமாக அணுகும் முறையை கற்றுத்தர முடிந்தது.  எனது அனுபவத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பெண் பிள்ளைகளின் கண்காணிப்பு, அவர்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உணர்ந்து கொள்ளும் அறிவும், அணுகுமுறைகளையும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.

ஆ) உயர் கல்வியும் அதன் சவால்களும்.  கவுன்சலிங் முறை மூலமாக உயர்கல்வி கற்க செல்லும்போது ஏற்படும் தனிமை வாழ்க்கை,  தகாத நட்புகள்,  ஒழுக்கச் சிதைவுகள் என்று பருவத்தாலும், சினிமா, பத்திரிகைகள் மற்றும் சூழ்நிலைகளாலும் எழும் பல பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது.  இதை அவர்கள் கல்லூரிக்கு செல்லும் காலத்திற்குமுன் செய்வதை விட, பிளஸ் டூ படிக்கத் தொடங்கும் போதே தொடங்கப்பட வேண்டும். அதிலும் முஸ்லீம் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் இதை எளிதாக செய்யலாம்.  இதன் மூலம் முஸ்லீம் மாணவிகள் மட்டுமல்லாமல் எல்லா பெண் மாணவிகளும் பலனடையும் வாய்ப்புகள் உள்ளது. எனக்குத் தெரிந்த பல முஸ்லீம் அல்லாத பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை தனியார் முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம், முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரிகளில் இருக்கும் கண்டிப்பான ஒழுக்க முறைகளாகும்.

இ) Preparatory Programs and Courses - (இதை தமிழ்ப்படுத்த தெரியவில்லை), தனியார் முஸ்லீம் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இஸ்லாமிய ஒழுக்கப் பண்புகளையும், நாகரீகங்களையும் கற்றுத் தரும் பாடங்கள்.  இதனை ஆரம்பக் கல்வி முதலிருந்தே நடத்துவது சிறந்தது.

ஈ) ஊர் ஜமாத் அமைப்பின் சார்பில் வேன் ஏற்பாடுகள் செய்து அதில் மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுப்புதல். அதில் வரும் வருமானத்தில் ஓட்டுனர் ஊதியம் மறறும் ஊர்திகளுக்கான செல்வினங்களை ஈடு செய்து கொள்ளலாம்.

உ) பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கம் - ஒவ்வொரு கல்லூரியிலும் இப்படி ஓர் அமைப்பை துவங்கி அதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து தீர்வு செய்வது மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகத்தையும் கண்காணிக்க செய்யலாம். கல்லூரி நிர்வாகமும் ஒழுங்காக இயங்கும்.  கல்லூரிகளில் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது அத்தனை சுலபமில்லை என்றாலும், இதன் மூலம் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.

ஊ) ஊருக்குள் தள்ளுவண்டி வியாபாரம், பால் விநியோகம், காய்கறி விற்பனை, இன்னும் பிற வியாபார நடமாட்டங்கள் அனைத்தும் ஊர் ஜாமத்தின் அனுமதி கார்டு பெற்றுக் கொண்டுதான் செய்ய வேண்டும்.  அனுமதி கார்டு கேட்கும் உரிமை ஊரில் யாருக்கும் உண்டு.

எ) முஸ்லீம் இளைஞர்களை போலீசிலும், ராணுவத்திலும் சேர்வதற்கு ஊக்கப்படுத்துதல்.  குறிப்பாக கல்லூரி செல்ல வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள்.  ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருந்தால் கூட போதும், அவர்கள் வாயிலாக ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் சமுதாயப் பொறுப்பும், நாட்டுப்பற்று அதிகமாக வாய்ப்புள்ளது.

மேலே சொல்லப்பட்ட யாவும் எல்லா காலங்களிலும் செயல்படுத்தக் கூடியவைகளே.

அமைப்பு ரீதியாக தொண்டர்கள் அதிகமுள்ள அமைப்புகள் இவைகளை பிரயோசனமுள்ள வகையில் சிறப்பாக செயல்படுத்த முடியும்.  இவைகள் எதுவும் உடனடியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது, ஆனால் காலப் போக்கில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகுவதற்கு காரணிகளாக இருக்கும்.

No comments: