Thursday, March 17, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும்

அமேரிக்காவிற்கு குளிர் காய்ச்சல் வராத நாட்களே கிடையாது என்று சொல்லுமளவிற்கு எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அமேரிக்கா மூக்கை சிந்திக் கொண்டிருப்பதும் மற்ற நாடுகளை நினைத்து கவலையில் நடுங்கிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலங்களிலிருந்து அறுபதுகள் வரை தனது அண்டை நாடுகளில் யார் ஆளவேண்டும், எப்படி ஆளவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. தீடீரென்று வியாட்னாமிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய கவலையில் தானும் நடுங்கி உலகத்தில் உள்ள மற்ற வளரும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தது. அதன் பிறகு, ஐரோப்பியர்களை எப்படி தன் கைக்குள் வைத்திருப்பதென்ற கவலைக்கு மருந்தாக சோவியத் அரசோடு குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தது. சோவியத்தை ஒழித்துக் கட்டிய பிறகு ஐரோப்பியர்களை எப்படி பிரித்து வைப்பதென்ற கவலையில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தது. ஐரோப்பியாவை எவர் ஆண்டாலும் சரி தனது கொள்கைகளுக்கோ அல்லது வியாபாரங்களுக்கோ எதுவும் குறை வந்துவிடக் கூடாது என்று ஒப்பாரி வைக்காத குறையாக பிதற்றல்கள்.

இவைகளை எல்லாம் விட்டு கொஞ்சம் தள்ளி வந்தால் சீனாவை நினைத்து வேறு சொல்ல முடியாத கவலை. ஜப்பானின் பொருளாதார முன்னேற்றமும், அதைத் தொடர்ந்து ஜப்பானிய பொருட்களுடன் உலக நாடுகளில் போராட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளான போதும், அவ்வப்போது கொரியாவை நினைத்தும் பல்வேறு சூழல்களில் ஒரே ராஜ தந்திர பினாத்தல்கள். இருக்கிற உபாதைகள் போதாதென்று ஈரானியர்களின் அணுகுண்டை நோக்கிய முன்னேற்றம் அமேரிக்காவிற்கு சொல்லொன்னா துயரத்தை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவழியாக பாகிஸ்தானின் அணுகுண்டு ஜனநாயகவாதிகளின் கையில் இருப்பதைவிட காக்கிச்சட்டைக்காரர்களிடம் இருப்பதே மேல் என்ற கொள்கையை செயல்படுத்தி வரும்போது இந்த ஈரானிய தலைவலி தற்போது அமேரிக்காவை தூங்கவிடாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று ரஷ்யாவின் nuclear fuel deal வேறு. ஈரானின் முல்லாக்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடும் அதே நேரம் ஈராக்கில் முல்லாக்களை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சிக்கலில் சிக்கி நிற்கிறது அமேரிக்கா.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அமேரிக்காவின் கொஞ்சம் நஞ்சம் சுய சிந்தனைகளையும் மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு தனது எல்லா சுமைகளையும் அமேரிக்காவின் தலை மேல் போட்டுவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற இஸ்ரேல். தொலையட்டும் துக்காடா நாடு, பல காலமாக உலக நாடுகளில் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என்று அமேரிக்கா இஸ்ரேலின் அட்டுழியங்களை 'செல்லப் பிள்ளையின்' விளையாட்டுப் போல் சகித்துக் கொள்ளவேண்டிய கவலை வேறு.

மொத்தத்தில் உலகப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தன் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு தத்துப் பித்தென்று உலக உருண்டைமேல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிற அமேரிக்கா தற்போது ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அதாவது 'ஜனநாயக வாத்தியார்', உலகத்திற்க்கு ஜனநாயகத்தை கற்றுத் தருவதென்று முடிவெடுத்து முதலாவதாக அரேபிய ஆட்சியாளர்களை எல்லாம் கையில் தடியுடன் மிரட்டி வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இப்படி அமேரிக்கா உலக நாடுகளை நினைத்து இத்தனை அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் அமேரிக்காவின் இந்த உலகளாவிய செயல்கள், அது அரைகுறையாக இருந்தாலும் அல்லது முழுதாக இருந்தாலும், ஒரு தொலைநோக்கு நிறைந்த, மிகவும் புத்திசாலித்தனமான மாபெரும் திட்டத்தின் விளைவுகள் என்பது தெரியவரும்.

கம்யூனசத்தின் வீழ்ச்சியின் போது உருவான 'the new world order' என்ற புதிய உலகை நிர்மானிக்க கூடிய கட்டுமானப் பணிகளை தானாக உருவாக்கி அதற்கான தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. (போட்டி தலைமை எங்கே என்று கேட்கிறீர்களா?) தீவிரவாதத்திற்க்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை திணிக்க வேண்டிய கட்டாயம் என்று பல்வேறு பரினாமங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தின் பயணம்தான் இந்த அமேரிக்காவின் உலக அரசியல். தீவிரவாதத்திற்க்கும் ஜனநாயகத்திற்க்கும் எப்படியெல்லாம் அர்த்தங்கள் செய்யமுடியும் என்பதை அமேரிக்காவின் உலக அரசியலைப் பார்க்கும் போதுதான் நமக்கே புரிய வருகிறது.

உலக நாடுகளில் குறிப்பாக தெற்காசியாவும், மத்திய ஆசிய நாடுகளும் பல்லாண்டு காலமாக தீவிரவாத கூட்டங்களால் தினம் தினம் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டபோது உல்லாசமாக உறங்கிக் கொண்டிருந்த அமேரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உலக நாடுகளை எல்லாம் தன் பின்னால் வரவேண்டுமென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. தனது இரும்புக்கர ஆக்கிரமிப்பால் ஈராக்கை வைத்துக் கொண்டு அதில் நடத்திய கண்ணாமூச்சி தேர்தலை மார்தட்டி பெரும் சாதனையாக முழங்கும் அமேரிக்கா, உலகில் பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எத்தனையோ அரசுகளை அந்நாட்டு இராணுவ உதவியுடன் வீழ்த்திய வரலாறுகளையும் மறந்துவிடமுடியாது.

லெபனாலில் மக்கள் சுதந்திரமாக ஒட்டு போடவேண்டும், அது சிரியா வெளியேறினால்தான் சாத்தியம், மத்திய ஆசியாவில் ஜனநாயகத்தை மலர வைக்காமல் ஓய்வதில்லை என்று வாய் கிழிய கத்தும் வெள்ளை மாளிகை 'உலக விரும்பிகள்' பொலிவியாலில் நடக்கும் ஜனநாயகத்திற்க்கு ஆதரவான மக்கள் எழுச்சியைப் பற்றி வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் வீழ்ச்சியுடன் அணிசேர நாடுகள் இயக்கம் சொல்லாமல் கொல்லாமல் தூக்கி எறியப்பட்டது போல் தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் அழிந்தொழிய இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னிருந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளும் ஏறக்குறைய மற்ற நாடுகளை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் பொருளாதார சூழலில் இருப்பதை மறுக்க முடியாது.

யாருக்கும் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தற்போதைய உலகச் சூழல் இந்த உலகின் எதிர்கால பயணத்தை இரண்டுவிதாமான பாதைகளில் தொடருவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று ஆக்கப் பூர்வமானது, இன்னொன்று அழிவை நோக்கியது. இரண்டிற்கும் தலைமை தாங்கிச் செல்ல தகுதி படைத்ததாக தற்போது அமேரிக்கா இருந்தாலும், அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத்தான் அமேரிக்கா விரும்புகிறது, காரணம், அமேரிக்காவின் உலகப் பார்வையும், உலகின் பெரும்பாலான நாடுகளின் உலகப் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. Unilateral and multilateral என்ற இரண்டு விதமான சிந்தனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத்தான் அவ்வப்போது அமேரிக்காவின் வலதுசாரி சிந்தனையாளர்கள் வேறொரு பெயரில் 'clash of civilization' என்று உலகை ஏய்க்கும் வேலையயை செய்து வருகிறார்கள். அப்படி செய்வதிலும் சொல்வதிலும் மூலமாக அமேரிக்காவிற்கு அதனுடைய 'new world order' கட்டமைப்புக்கு வலு சேர்க்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த அமேரிக்க சிந்தனையை ஏற்க மறுப்பதும் கீழை நாடுகளை, குறிப்பாக முஸ்லீம் நாடுகளை பிரித்துப் பார்க்கும் சிந்தனையை ஏற்க மறுக்கின்றன. காரணம் கீழை நாடுகளின் கலாச்சாரமும் சிந்தனை பரிமாற்றங்களும் ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தவை மேலும் அவைகள் இன்னும் பலன் தரக்கூடியவை என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைகள் வைத்துள்ளதுதான். ஆனால் அமேரிக்காவின் சிந்தனையை, குறிப்பாக தற்போது ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை முற்றிலுமாக கவர்ந்திருக்கக் கூடிய ஜையனோசியக் கொள்கைகளைத் தழுவிய 'new world order' தற்போது 'clash of civilization' என்ற பெயரில் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா உலக பேரரசுகளும் உயர்ந்ததும் வீழ்ந்ததும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகளின் வளர்ச்சியை பொருத்தே வந்திருக்கின்றன. அதே வேளை, இந்த சிந்தனைகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை கொடுக்கும் வரை அந்த சிந்தனைகளின் எதிர்மறை விளைவுகள் அதன் பின் விளைவுகள் ஒரு பெரும் பிரச்சனையாகத் தெரியாது. ஆனால், பொருளாதார பின்னடைவுகள் உருவாக ஆரம்பித்ததும், அதன் எதிர்மறை விளைவுகள் வெளிப்படையாக தெரியவரும். எதிர்மறை விளைவுகள் முதலில் பொருளாதார வீழ்ச்சி¨யையும் அதைத் தொடர்ந்து ஆதரவு அளித்த கூட்டணிகள் உடைவதின் மூலம் உணரமுடியும். ஆனால், இந்த காலம் கடந்த விழிப்பால் உடனடியாக அந்த சிதைவுகளிலிருந்து மீள்வது என்பது கடினமான ஒன்று மட்டுமல்ல பல சமயங்களில் அது அழிவில் சென்று முடிகிறது. இந்த சூழலில் உலகப் பேரரசுகள் எதைக் கொள்கையாகக் கொண்டு தனது சிந்தனை முறையை அமைத்துக் கொண்டதொ அந்த கொள்கையை உதறி எறிய வேண்டிய நிர்பந்தததிற்கு உள்ளாகின்றன. சிந்தனைகளை உதறி எறிவதென்பது சாதாரண விஷயமல்ல, அப்படி அந்த கொள்கைகளை விட்டு வெளியேறும் போது, அதற்கொரு விலையையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சோவியத் பேரரசின் வீழ்ச்சியும் அதன் கீழ் இருந்த நாடுகள் சிதறுண்டு போனதையும் எடுத்துக் கொள்ளலாம். அமேரிக்காவும் இப்படி ஒரு சூழலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?

(தொடரும்)

1 comment:

Akbar Batcha said...

நன்றி ராஜா,

இது ஒரு நீண்ட தொடராக இருக்கும், குறைந்த பட்சம் ஆறை தாண்டலாம். வலைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒரு சில இஸ்லாம் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள், உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் இஸ்லாமும் முஸ்லீம்களும்தான் காரணம் என்பது போல் அவ்வப்போது காழ்ப்புணர்ச்சியில் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆய்வுக் கட்டுரை.