Saturday, March 19, 2005

இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்

இஸ்லாம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் அவசியமா? என்ற ஒரு கேள்வி இந்த வலைப்பூவிலே வைக்கப்பட்டு அதற்கு அவசியமே என்ற பதில் நேசகுமார் என்பவரால் கொடுக்கப்பட்டது. கேள்வியும் பதிலும் மாற்றார்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதால், மாற்றார்கள் இஸ்லாம் குறித்து விவாதிக்கலாமா என்ற கேள்வி சற்று கனமானதாக தோன்றுகிறது பலருக்கு.

விவாதிக்கலாம், விமர்சனங்களும் செய்யலாம். செய்ய வேண்டும் என்பதே சரியான பதில். இஸ்லாம் என்பது குரானில் சொல்வது போல் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அருளப்பட்டது. எனவே உலக மக்கள் அனைவரும் அது குறித்து விவாதிப்பதோ, விமர்சனம் செய்வதோ ஒன்றும் தடுக்கப்பட்ட செயல் அல்ல. பெரியாரும் விமர்சிக்கலாம், அண்ணாவும் விமர்சிக்கலாம். பெரியவர்கள் விமர்சித்தால் ஒன்றும் சிறியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். நேசகுமாரும் விமர்சிக்கலாம், நேசமில்லாதவர்களும் விமர்சிக்கலாம்.

விமர்சனங்கள் வரும்போதுதான் விவாதங்களும் வரும். விவாதங்கள் வரும்போதுதான் தெளிவு பிறக்கும். இஸ்லாம் வளர்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும், இன்னும் வளர இருப்பதும் விமர்சனங்களாலும், விவாதங்களாலும்தான்.

இது குறித்த விவாதங்கள் வரும்போதுதான், நேசகுமார் நம்புவது போல், இஸ்லாம் வன்முறையை போதிக்கக் கூடிய அல்லது அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மதமா அல்லது இஸ்லாத்திற்க்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியிலே வளர்ந்த மதமா என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

"(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதைக்கொண்டு அவர்களுடன் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன், அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன்; இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன் (16:125) - திருக்குரான்.

ஆகவே விவேகத்தைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் வாதடுவதில் எந்த தவறும் இல்லை, அதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அதைத்தான் நபி அவர்களும் செய்தார்கள். இதில் பயப்படவோ அல்லது இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமோ இல்லை.

No comments: