Saturday, March 26, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2

உலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமேரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமேரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமேரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குரானின் கொள்கைகள். இரண்டிற்க்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.

இந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமேரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.

அமேரிக்காவின் மிகப் பெரும் பிரச்சனை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரொவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம் மற்ற கரன்சிகளைப் போல் அமேரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமேரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமேரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.

இன்றைக்கு அமேரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்க்கும் உதவுகிறது.

எந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.

அமேரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமேரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமேரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை.

அமேரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமேரிக்க பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமேரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமேரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமேரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.

உலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமேரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமேரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(இதை எழுதும்போது உலக வங்கியின் கொள்கைகளையும் அதன் வாயிலாக அழியும் ஏழை நாடுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதை வேறொரு தலைப்பில் பின்னொரு தருணத்தில் தருகிறேன்.)

இதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.

இப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக் கூடது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமேரிக்கா மட்டும் டலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமேரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமேரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

அமேரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமேரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமேரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன். (Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)

இப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமேரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமேரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமேரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணாமக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பதிவிலே அமேரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடக நான் எழுதியது.

அதுமட்டுமல்லாமல் அமேரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றிர்க்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமேரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா?

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம். (தொடரும்).

4 comments:

சுட்டுவிரல் said...

Your articles are having deep analysis and it is your pluspoint. I completely agree with your views. Who will come forward to tie-up the bell in the neck of this dhadha? what do you think of the rising nations?

Akbar Batcha said...

Hello Suttuviral,

Thanks for visiting and reading it. I will try to give my analysis for your question in this continuing article.

சுட்டுவிரல் said...

சதாம் ஹுசைன் தாக்கப்பட்டதன் பின்னணி காரணமாக அவர் தன் நாட்டு வர்த்தகத்தை யூரோவுக்கு மாற்றியதையும் சொல்கிறார்கள். இது சரி என்றால், டாலரின் முக்கியத்துவத்தை யூரோவுக்கு தருவதன் மூலமாக ஏதும் சாதிக்கமுடியுமா?
இந்த கல்ஃப் நாடுகள் பொது கரன்சி வைத்துக்கொண்டாலென்ன?
இந்தியா போன்ற வளரும் நாடுகள் வல்லாதிக்கத்தை வீழ்த்த எப்படி செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்?

Akbar Batcha said...

அன்பின் சுட்டுவிரல்,

ஈரோவிற்கு எதிரான டாலரின் போராட்டம் வெறும் சாதாரண விஷயம் அல்ல. இதைப்பற்றிய விரிவாக எனது அடுத்த பதிவில் எழுதி வருகிறேன்.

அமேரிக்காவின் பொருளாதாரம் தற்போது சரிவின் விளிம்பில் வந்து நிற்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமான நிலையில்தான் தற்போது அமேரிக்கா இருக்கிறது. சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் அமேரிக்கா நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனா இன்னும் 20 வருடங்களில் ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்க்கு வாய்ப்புகள் இருந்தாலும் அரசியல் கொள்கைகளில் மாற்றம் வரும்வரை ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை.

அக்பர் பாட்சா