Wednesday, August 05, 2020

தூங்கா மன்னன்

'ஏன் ஒரு மாதிரியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்?' கேட்டவளை சற்றுத் திரும்பிப் பார்த்த மன்னர் அல்வானி மீண்டும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். 

கணவன் ஏதோ ஒரு முக்கியமான சிந்தனையில் இருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்ட ஷிபா.. கையில் கொண்டு வந்த பேரித்தம் பழம் மற்றும் காஃபி தட்டை வைத்துவிட்டு அருகில் அமர்ந்தாள்.  கணவனைப்போல் கடலும் சோகமாக இருக்கிறதோ என்னவோ.. அலைகள் கூட அமைதியாக இருந்தன. நினைத்தபடி கணவன் அல்வானியின் முகத்தைப் பார்த்தாள் ஷிபா.

நீண்ட மூச்சை இழுத்துவிட்ட அல்வானி மனைவியின் தோளில் கைவைத்தபடி புன்னகைத்தார். ஷிபா அல்வானியின் இரண்டாவது மனைவி. அல்வானிக்கு மிகவும் பிடித்தவள். காரணம் அழகு மட்டுமல்ல, பக்கத்து நாடான யோடான் மன்னரின் ஒரே மகள் மற்றும் புத்திசாலிப் பெண். 

அல்வானி நாற்பது வயதை நெருங்கினாலும் இருபது வயதிற்குண்டான சுறுசுறுப்பும் எதையாவது வித்தியசமாக செய்ய வேண்டும் என்ற பேராவல் கொண்டவர்.  யோடான் நாட்டின் பாரம்பரியம் நிறைந்த பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தந்தைக்குப் பின் பெய்தோ நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.  

பெய்தோ நாடு ஒரு பாலைவனப் பகுதி.  கட்டமான் சாம்ராஜ்யத்திற்கு பிறகு மேற்காசிய பகுதி சிறு சிறு நாடுகளாக பிரிந்தபோது, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத பாலைவனப் பகுதி என்பதால் இது எந்த நாட்டுடனும் சேரமுடியாமல் ஏதோ நாடோடி கூட்டம் போல் தன்னந்தனியாக இருந்தது.  இருபது வருடங்களுக்கு முன் ஒரு பெரிய கிராமம் அல்லது நகரத்திற்கும் கிராமத்திற்கும் சம்பந்தமில்லாத ஒரு நிலப்பகுதி என்றுதான் சொல்ல வேண்டும்.  தற்போது ஒரு சிறு நகரமாக முன்னேறியுள்ளது.

அல்வானியின் மூதாதையர்கள் பகலில் கடலில் மீன் பிடித்தும், இரவில் கப்பல்களை கொள்ளை அடித்தும் வாழ்ந்தவர்கள். அவர்களை கடல் கொள்ளையர்கள் என்று சொல்வதா அல்லது மீன் பிடிக்கும் பரம்பரையா என்று அரிதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு வாழ்ந்தவர்கள். அல்வானியின் தந்தை காலத்திலிருந்து கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு வெறும் மீன் பிடி தொழிலை  மட்டும் செய்து வந்தார்கள். பெய்தோவின் அதிக பட்ச வருமானம் பிடிக்கும் மீன்களை அண்டை நாட்டு மீன் சந்தைகளில் விற்று கிடைக்கும் தினசரி வருமானம்தான்.   

அல்வானி, அல்ராயர், அல்புத்தான், அல்நூர், அல்கப்பானி என்று மொத்தமாகவே வெறும் ஐந்து குலத்தைச் சேர்ந்த குடும்பங்களின் கூட்டனிதான் இந்தப் பகுதி.  ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி அல்வானியின் தந்தையை தலைவரகாத் தேர்ந்தெடுத்தார்கள். அல்ராயர் குடும்பத்தினருக்கு அது இன்னமும் வருத்தமாகவே இருந்தது. அல்வானியின் தந்தையும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பக்கத்து நாடுகளின் உதவியுடன் கடல் சார்ந்த சில தொழில்களை உருவாக்கி திக்கித் திணறி நிர்வாகம் செய்து வந்தார்.  

'என்ன யோசனை?' ஷிபாவின் கேள்வி அல்வானியின் இறந்தகால சிந்தனையிலிருந்து தட்டி எழுப்பியது.

'நான் இந்த நாட்டின் மன்னன்'

'அதற்கென்ன இப்போது.. மக்களில் யாரும் உங்களுக்கு எதிராக இருக்கிறீர்களா?'

'இருப்பதெ வெறும் ஐம்பதாயிரம் மக்கள். எல்லோரும் கடலையும் கடவுளையும் நம்பி வாழ்கிறார்கள்'.

'பிறகென்ன பிரச்சனை?'

'ஒரு பெரிய நாட்டிற்கு மன்னராக இருக்க வேண்டும் விரும்புகிறேன்'. ஷிபா சற்று தடுமாறிப் பார்த்தாள். 'நகரம் என்று சொல்ல கடலின் இந்த பக்கம் நாலு தெருக்கள், கடலின் அந்த பக்கம் நாலு தெருக்கள். கேவலமாக இருக்கிறது.  தூரத்தில் நான்கைந்து கிராமங்கள்.  இதற்கு பெயர் நாடு'. எரிச்சலாக சொன்னார் அல்வானி.  

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ஷிபாவின் உள்ளம் கொஞ்சம் சலனப்பட்டது.  யோடான் நாட்டிற்கு மன்னராக ஆசைப்படுகிறாரோ என்று லேசாக பயநதாள்.  அப்பாவோ உடல்நிலை சரியில்லாமல் அம்ருக் நாட்டின் மருத்துவமனையில் உள்ளார். அண்ணனுக்கு போட்டியாக ஏதும் பிளான் பண்ணுகிறாரோ என்று பயப்பட ஆரம்பித்தாள். 

'உனக்குத் தெரியுமா? இரண்டு கப்பலுக்கு சொந்தக்காரனான அல்ராயர் என்னை திவானில் வைத்து அவமரியாதையாக பேசிவிட்டார்'.  அல்வானி கடலைப் பார்த்தபடி பேசினார்.

'போகிற போக்கைப் பார்த்தால் அல்ராயர் இன்னும் ரெண்டு கப்பலை வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  அய்தானிலிருந்து ஒரு பிசினஸ்மேன் அல்ராயருடன் தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கேள்வி'. அல்வானி.

'அதெப்படி உங்களுடைய அனுமதியில்லாமல் ஒப்பந்தம் செய்ய முடியும்'

'இங்கு என்ன சட்டம் வைத்திருக்கிறோம்?' சற்று கோபமாக கத்தினார்.  'இன்னும் அய்தான் நாட்டின் கரன்சியை வைத்துதானே தொழிலும் வியாபரமும் செய்துகொண்டு இருக்கிறோம்'.  சொல்லிவிட்டு அல்வானி பெருமூச்சு விட்டார்.

'அம்மா...' சத்தமிட்டபடி ஒன்பது வயது மகன் வர, ஷிபா எழுந்து மகனை நோக்கி நடந்தாள்.  ஒரு வழியாக கணவனைவிட்டு நகர ஒரு வாய்ப்பு கிடைத்ததென்று மனதுக்குள் சந்தோஷமாய் நகர்ந்தாள்.  அல்வானியின் புலம்பல்களை அவள் இன்று நேற்று கேட்கவில்லை.  ஷிபா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அல்வானி எழுந்து கடல்கரையை நோக்கி நடந்தார்.

'எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எனது நாட்டை உலகம் போற்றும் நாடாக மாற்ற வேண்டும்.' காற்றில் பேசியபடி அலைகள் கால்களை உரசுவதையே பார்த்தபடி நின்றார். தொலைவில் காற்றில் பறந்துக் கொண்டிருக்கும் பெய்தோவின் தேசியக் கொடியைப் பார்த்தார்.  ஏனோ தானோ என்று காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.  

அல்வானிக்கு பெய்தோ ஒரு தூங்கு மூஞ்சி நாடாக தெரிந்தது.  காலையில் மட்டும் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருக்கும். வெயில் கொடுமை வேறு. மற்றபடி மாலை ஆறு மணிக்கெல்லாம் மக்கள் வீட்டிற்குள் அடங்கிவிடுவார்கள். பக்கத்து நாட்டின் தயவின் காரணமாக மாதா மாதம் இலவசமாக கிடைக்கும் டீசல் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு 'மீனுன்டு தானுன்டு' என்று வாழும் மக்களை நினைத்து மனம் புழுகி நடந்து கொண்டிருந்தார் அல்வானி.

பக்கத்து நாடுகளில் இருக்கும் எண்ணெய் வளம் என் நாட்டில் இல்லை.  என் நாட்டைச் சுற்றி இருக்கும் நாடுகள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வளம் பெற்றதாக இருக்கின்றன.  அல்லது ஏதேனும் வரலாற்று பிண்ணனிகளும், பாரம்பரிய நாகரீகமும், கலாச்சாரங்களும் இருக்கின்றன.  இங்கே மணலையும் கடலையும் தவிர்த்து எதுவுமே இல்லை.  'என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்'  சிந்தித்தப்படி நடந்தார்.  

அல்ராயருடன் அய்தான் வியாபாரி ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.. பணத்திற்கா? அல்ராயரைவிட அய்தான் வியாபரி பணக்காரன் என்றல்லவா கேள்விப்பட்டேன். அப்படி என்றால் பணத்திற்க்காக இல்லை. பிறகு வேறென்ன காரணம்.  

இந்த மண்ணை வைத்து ஏதும் செய்யப் போகிறார்களா? வெளிநாடுகளிலிருந்து கடத்தல் வியாபாரம் ஏதும் செய்யப் போகிறார்களோ? இவரிடம் கப்பல் இருக்கிறது. அவரிடம் பணம் இருக்கிறது. எனது நாட்டை ஒரு தடமாக மாற்றப் போகிறார்களோ? மனதில் ஏதோ லேசாக பொறி தட்டியது. என் நாட்டை ஒரு மாற்றுத் தளமாக மாற்றி பிற நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் பொருட்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து வேறு நாட்டிற்கு வியாபரம் செய்யப் போகிறார்களோ? அல்வானியின் மனதில் சட்டென்று தீப்பொறி ஒன்று நெருப்பாக மாறியது.  

ஆலோசனைக் கூட்டதிற்கு நாட்டின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். எல்லோருக்கும் டீயும் பேரித்தம் பழமும் வழங்கப்பட்டது.  அல்வானி கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தார். எல்லொரிடமும் கைகுலுக்கி கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட அல்வானி இருக்கையில் அமர்ந்தார். யார்க் ஜன்னல் ஏசி இதமான குளிரை அறையெங்கும் இரைத்து வைக்க அல்வானி டீயை சுவைத்தபடி எல்லோரையும் பார்த்தார். 

'ஒரு முக்கியமான மாற்றத்தை நமது நாட்டில் கொண்டுவர விரும்புகிறேன்'. 

என்ன என்பது போல் உறுப்பினர்கள் எல்லோரும் அல்வானியின் முகத்தைப் பார்த்தார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை இது நாடல்ல.  இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரு நான்கைந்து பரம்பரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  ஏதோ வேறு வழியில்லாமல் எப்போதோ குடியேறிய நாடோடிக் கூட்டம்.  அல்வானி எப்போதும் போல் கற்பனை உலகத்தில் வாழ்கிறார் என்று மனிதிற்குள் நினைத்துக் கொண்டார்கள்.  அவ்ருக்கு வேலையில்லாமல் நம்மை கூப்பிட்டிருக்கிறார்.  ஏன் தேவையில்லாமல் அவரின் மனதை நோகடிக்க வேண்டும் என்று நினைத்தவாறு அடுத்ததாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

'நமது நாட்டில் தொழில் செய்ய பக்கத்து நாடுகளில் இருக்கும் முதலாளிகளை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.' எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

என்ன தொழில் செய்தாலும், நாமும் அதில் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் பிற நாடுகளில் வாழும் தொழிலதிபர்களை நம் நாட்டில் தொழில் செய்ய அழைப்பு விடுக்க விரும்புகிறேன். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல எந்த கட்டுப்பாடும் கிடையாது.'

உறுப்பினர்களின் எல்லோரின் விழிகளும் நிலைக்குத்தி நிற்க அல்வானியையேப் பார்த்தனர். இந்த நாட்டில் என்ன இருக்கிறது.. ஏன் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும். யார் இந்த கேள்வியை கேட்பது என்றபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க 'அவர்கள் ஏன் இங்கு தொழில் செய்ய வேண்டும், இங்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்' உறுப்பினர்கள் கொஞ்சம் திடுக்கிட்டுப் பார்க்க அல்வானி புன்னகைத்தார். 

'கடல் ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் உள்வாங்கி இருப்பதால் இரண்டு பக்கமும் இரு கரைகள் உள்ளன. இதை ஏன் நாம் துறைமுகமாக மாற்றக் கூடாது?' அல்வானி.  மற்றவர்கள் மனதில் லேசாக ஏன் கூடாது என்ற சிந்தனை வந்தது.

'கப்பல்கள் வந்து நிற்க போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே?' அல்நூர்

'புதிதாக நாம் எந்த கட்டுமானப் பணிகளையும் செய்ய வேண்டாம். இந்தக் கரைகளில் ஒதுங்கும் அளவிற்கு உள்ள சிறிய அல்லது குறுங்கப்பல்கள் வந்தால் போதும்'. அல்வானி

'வேலை செய்ய ஆட்கள்?' அல்புத்தான் கேட்டு வைத்தார்.

'அவர்களே கொண்டு வரட்டும். ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு பணம் என்று வசூலித்து விடுவோம். நம் மக்களில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்களும் செய்யட்டும்.' அல்வானி சொல்லச் சொல்ல எல்லோருக்கு சொல்லமுடியாத சந்தோஷம்.

'நன்றாகத்தான் உள்ளது. ஆனால் எதைக் கொண்டு வருவார்கள் அதற்கு நம் நாட்டில் என்ன தேவை உள்ளது' அல்கப்பானி கேட்டார்.

'எதை வேண்டுமானலும் கொண்டு வரட்டும். கொண்டு வந்ததை அப்படியே பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி வியாபாரம் செய்து கொள்ளட்டும். அதற்கு சேவைக் கட்டணம் மட்டும் நமக்கு கொடுத்தால் போதும்' அல்வானி பேசினார்.  'பக்கத்து நாடுகள் எல்லாம் துறைமுக சேவை மற்றும் இறக்குமதி வரி என்று வருமானம் ஈட்டுகிறார்கள். நமக்கு அப்படி எதுவும்  வேண்டாம். இது ஒரு இலவச துறைமுகமாக செயல்படட்டும்' அல்வானி முடித்தார்.

'கடத்தல் பொருட்களாக இருந்தால்?' அல்புத்தான்

'ஒன்றிரண்டு வரத்தான் செய்யும்.. ஆனால் எங்கிருந்து வருகிறது என்பதற்கான ஆவணத்துடன் வர வேண்டும் என்ற விதிகளை உருவாக்கி விடுவோம்.' அல்வான்

'நம் நாட்டிற்கென்றுதான் சட்டங்கள் ஒன்றுமில்லையே' அல்கப்பானி

'நான் உருவாக்கி விட்டேன். நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் வரும் தேசிய நாளில் அதை நடைமுறைப் படுத்தலாம்' அல்வானி

'அல்வானி.. நாங்கள் ஒன்றும் மெத்தப் படித்தவர்கள் இல்லை. எது செய்தாலும் நீ நல்லதிற்குதான் செய்வாய் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஒப்புதல் கொடுத்துவிட்டோம்.. என்ன சொல்கிறீர்கள்?' மற்றவர்களைப் பார்த்து அல்நூர் கேட்க எல்லோரும் ஆமாம் சொல்ல அல்வானின் முகத்தில் புன்னகை வந்தது. 

ஒரு நாடு உருவாகிறது என்ற சந்தோஷம் மனதிற்குள் மெலிதாய் வட்டமடித்தது.

'உங்கள் விருப்பப்படி செய்யலாம்' எல்லோரும் சொல்ல அல்வானி புன்னகைத்தபடி எழுந்து வணக்கம் வைத்துவிட்டு கதவை நோக்கி நடந்தார்.

ஆண்டுகள் இரண்டு உருண்டோடின. அல்வானி எதிர் பார்த்தது போல  பெய்தோவின் துறைமுகம் சுறுசுறுப்பாகிப் போனது. கப்பலிலிருந்து சரக்கு பரிமாற்றங்கள் சிறப்பாக நடந்தேறின. துறைமுகத்தில் வந்திறங்கும் சரக்குகள் கடல் மற்றும் நிலம் வழியாக அருகில் உள்ள நாடுகளுக்கு குறிப்பாக எல்லா பக்கமும் நிலத்தால் சூழ்ந்துள்ள யாரிசி, நபாலே, யோடான் நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தன. வாகனங்கள் பெருகின. வேலை செய்யத் தொழிலாளர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்தார்கள். அவர்க்ளுக்கு தங்குமிடமும், உணவும் இன்னும் பிற தேவைகளென்று மேலும் பல தொழில்கள் உருவாக, நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மகிழ்ச்சியை மக்களுக்குக் கொடுத்துவிட்டு பெரும்பாலான தொழில்களை தன் வசம் வைத்துக் கொண்டார் அல்வானி.

'இப்போதெல்லாம் கடலில் அலைகள் அதிகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.' கேட்டபடி கணவனின் முகத்தைப் பார்த்தாள் ஷிபா. 

'கப்பல்களின் போக்குவரத்தால்'. சொல்லிவிட்டு மனைவியைப் பார்த்து சிரித்தார். 'கடலை வைத்து இன்னும் என்னென்ன செய்யப் போகிறேன் பார்.' இருவரும் சிரித்தனர்.

'அல்ராயர் மணி எக்சேஞ்ச் தொழில் தொடங்கிவிட்டார் போல் தெரிகிறது?' கேட்டு வைத்தாள் ஷிபா. ஆமாம் என்பது போல் பார்த்தார் அல்வானி.

'எப்போது பார்த்தாலும் ஏதாவதொன்றை புதிதாக செய்து வைக்கிறார். என்னுடைய புத்திசாலித்தனத்திற்கு சவால் விட்டுக் கொண்டே இருக்கிறார்.' அல்வானி சற்று வெறுப்பாகவே சொன்னார்.

'இன்று நேற்று பகையில்லையே' ஷிபா.

'என்ன செய்யலாம்?' அல்வானி.

'நமது நாட்டிற்கென்று கரன்சி உருவாக்குங்கள். அதை நிர்வகிக்க வங்கியை உருவாக்குங்கள்' ஷிபா. 

அல்வானின் முகம் மலர்ந்தது.  'இன்னுமொரு தொழில்'. கடலைப் பார்த்தபடி சிரித்தார். 

பெய்தோவின் தினார்கள் சந்தையில் புழக்கத்திற்கு வந்தது. மக்களுக்கு பெரும் சந்தோஷம். நமது நாடு என்ற இறுமாப்பு உருவானது. அய்தான் நாட்டு கரன்சியை நிறுத்தியதால் அல்ராயரின் தொழிலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதில் அல்வானிக்கு பெரும் மகிழ்ச்சி.  துறைமுகத்தால் ஹோட்டல், ரெஸ்டாரென்ட் என்று தொழில்கள் பெருகியதோடு அந்நிய நாட்டு நிறுவனங்கள் அலுவலகங்கள் திறக்க ஆர்வப்பட்டன. அதற்கென்று துறைமுகத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பை ஒதுக்கி அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டடங்கள் கட்டிக் கொள்ள அனுமதித்தார். அதற்கென்று ஆண்டிற்கு குறிப்பிட்ட வாடகையும் நிர்ணயிக்கப்பட்டது. கட்டுமான நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி மொத்த காண்டிராக்டையும் தனது நிறுவனத்திற்கு வர ஏற்பாடும் செய்துவிட்டார் அல்வானி. 

'போர் தொடங்கிவிட்டது' அல்நூர் சொல்லியபடி டிவியை ஆஃப் செய்தார்.  'இதோ அதோ என்று இரண்டு ஆண்டுகளாக கோரானுக்கும், கோராக்கும் இடையே எதிர்பார்த்த யுத்தம் அரங்கேறிவிட்டது. தேவையற்ற நில பங்கீடு காரணமாக இருநாடுகளும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. என்ன செய்யலாம்? துறைமுகத்திற்கு சரக்கு வருவதும் குறைந்துவிடும்.' அல்நூர் கவலையுடன் எல்லோரையும் பார்த்தார். அல்நூர் ஆலோசகர் என்ற நிலையிலிருந்து வருவாய்த் துறை அமைச்சரகாக உருமாறி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. 

'அல்புத்தான்' அல்வான் அழைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அல்புத்தான் சிந்தனையை கலைத்துவிட்டு அவரைப் பார்த்தார். 'உங்களுக்கு கோரான் நாட்டில் நல்ல தொடர்பு இருக்கிறதல்லவா?'

'ஆமாம்'

'அந்த நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு அழைப்பு விடுங்கள்.  போர் முடியும் வரை நம் நாட்டில் நிம்மதியாக வாழலாம் என்று அழையுங்கள். அவர்கள் பணத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம். கப்பலில் கொண்டு வந்தாலும் சரி, அல்லது நிலம் வழியாக கொண்டு வந்தாலும் சரி'  ஒரு நிமிடம் அனைவரும் செயலிழந்து பார்த்தனர். 

'அதே போல் கோராக்கில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுப்போம்'

அல்வானின் புத்திசாலித்தனத்தை நினைத்து மற்ற அமைச்சர்கள் எல்லோருக்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி. 

'எப்படி பாதுகாக்கப் போகிறோம்?' அல்கப்பானி, பொதுப்பணித் துறை அமைச்சர் கேட்டார்.

'பெய்தோ சென்டரல் வங்கியில்' அல்வானி

'எப்போது தொடங்கியது இந்த வங்கி?' அல்நூர்.

'இன்று... இப்போது... நான் வங்கியின் தலைவர். நீங்கள் அனைவரும் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்'

மகிழ்ச்சியில் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர் எல்லோரும்.  
அல்வானியின் வங்கித் தொழில் ஒன்று புதிதாக உருவானது. சண்டையிட்டுக் கொள்ளும் இரு நாட்டின் பணமுதலைகள் தங்களின் பணங்களை கப்பல்களிலும், லாரிகளிலும் கொண்டு வந்து சேர்த்தனர்.  அவரவர்கள் கொண்டு வந்த கரன்சிகள் அப்படியே பெற்றுக் கொள்ளப்பட்டு வரவு வைக்கப்பட்டன.   பெய்தோவைச் சுற்றியுள்ள நாடுகளில் கணக்கில் வராமல் இருந்த பணங்கள் எல்லாம் இப்போது பெய்தோவின் வங்கியில் மகிழ்ச்சியுடன் முடக்கப்பட்டது.  போதாதென்று வர்த்தகம் செய்யும் நாடுகளின் வங்கிகளின் கிளைகள் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டு அல்ராயரின் மணி எக்சேஞ்ச் தொழிலையும் கட்டுக்குள் கொண்டு வந்தார் மன்னர் அல்வானி.

கடல் அமோகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.  ஷிபாவும் அல்வானியும் கடல் நீர் மென்மையாக காலைத் தழுவ நடந்துக் கொண்டிருந்தனர். 

'எதுவெல்லாம் இல்லையோ, அதையெல்லாம் வைத்து பல தொழில்களை உருவாக்கி விட்டீர்கள்.' ஷிபா.

'மாற்றி யோசித்தேன்.. இல்லையென்றால் அப்பாவைப் போன்று பக்கத்து நாடுகளுக்கு வருடம் ஒருமுறை சென்று பிச்சை எடுத்துதான் மக்களை காப்பாற்ற வேண்டும்.'

'நீங்கள் மக்களுக்காக செய்ததாக தெரியவில்லை' ஷிபா சொல்ல அல்வானி புன்னகைத்தார்.

'நான் நன்றாக இருந்தால்தானே மக்கள் நன்றாக இருக்க முடியும்'. ஷிபா புரிந்தவளாக சிரித்தாள்.

'அரசியல் படித்தவர்.. நீங்கள்..'

'நீயும் அரச குடும்பத்தில் பிறந்தவள்தானே...'  சிறிது நேரம் இருவரும் பேசாமல் நடந்து கொண்டிருந்தனர்.

'சாதித்தது வெறும் 25 சதவிகிதம்தான். இன்னும் நிறைய வெளிநாட்டு மக்கள் இங்கு வந்து வேலை செய்ய வேண்டும்.' அல்வானி பேசினார்.

'மக்கள் கூட்டத்தைப் பார்க்கத்தான் நீங்கள் தினமும் சாலைகளில் உலா வருகிறீர்களே'

'கேட்பாரற்று கிடந்த தெருக்களெல்லாம் இப்போது வானுயர நிற்கும் கட்டிடங்களாக மாறியதை ரசிக்க வேண்டாமா?'

'இப்போது திருப்தியடைந்திருப்பீர்களே?'

'இல்லை.' ஷிபா கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவரின் முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது. 'அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நமது மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய போதுமானதுதான். ஆனால், இலக்கு இதுவல்ல.' அல்வானி

'என்ன செய்யப் போகிறீர்கள்?' ஷிபா

'இன்னும் நிறைய வெளிநாட்டு பணக்காரர்களை இங்கு கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்ல, அறிவிலும் தொழிலிலும் பேராசைக் கொண்டவர்களையும் கொண்டுவர வேண்டும்.  என் நாட்டை சொர்க்க பூமியாக மாற்றப் போகிறேன். எல்லாம் கிடைக்கும் அவர்களுக்கு' அல்வானியின் குரலில் ஒரு உறுதி இருந்தது.

'எல்லாம் என்றால்?' ஷிபா

'அவர்கள் விரும்புவதெல்லாம்' அல்வானி

'நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவித்தால்?' ஷிபா

'அப்படியென்றால் அது கலாச்சாரமே அல்ல.. பிற கலாச்சாரங்களை தாக்கு பிடிக்க முடியாத ஒரு கலாச்சாரம் நிச்சயமாக பாரம்பரிய கலாச்சாரமாக இருக்க முடியாது... பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்'?' அல்வானி

'மக்களை அடிமைப்படுத்துதலின் முதல் கட்டத்தில் வெற்றிப் பெற்றுவிட்டீர்கள்' ஷிபா

'என் மக்களை மட்டுமல்ல.. பிற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் அடிமைகளாக மாற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை' அல்வானி

'எப்படி?'

'மக்கள் எப்போதுமே பழக்கத்திற்க்கும், மோகத்திற்கும் அடிமையானவர்கள்.  விரும்புவதை சுலபமாக கிடைக்கச் செய்தால் அதுவே பழக்கமாக மாறி அடிமையாகிவிடுவார்கள்'

'அப்படிப் பார்த்தால் நீங்களும் ஒரு அடிமைதான்'.  திடுக்கிட்டுப் பார்த்தார் அல்வானி.  'உங்களின் பேராவலுக்கு நீங்களும் அடிமைதான். கவனமாக இருங்கள்' 

இருவரும் நின்றனர். 'பயப்படாதே ஷிபா.. என் எல்லை எனக்குத் தெரியும்' அவரின் பேச்சை அமோதித்தபடி அவரின் தோளைப் பிடித்தவாறு நிற்க இருவரும் மீண்டும் நடந்தனர்.

'கல்விச்சாலைகள் தொடங்க வேண்டும். அதிலும் அம்ருக் யுனிவர்சிட்டியை கொண்டுவர வேண்டும். என் நாட்டு மக்களின் ஆளுமை சக்தியை அதிகமாக்க வேண்டும். வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தொழிலாளார்களை மிஞ்சிய நெஞ்சுரமும், மேலாண்மையும் வேண்டும்.'

ஷிபா சிரித்தாள். 'உங்களை யாராலும் வெற்றிக் கொள்ள முடியாது' சொல்லியபடி அல்வானின் தோளில் சாய்ந்தபடி நடந்தாள். 'எப்படி செய்யப் போகிறீர்கள்?'

'பல்கலை கழகங்களின்  கேம்பஸ் ஒன்றை உருவாக்கி அதில் படிக்க வெளிநாட்டு மாணவர்களை வரவழைக்கப் போகிறேன். அதற்கென்று ஒரு தனியிடத்தை உருவாக்கி, அங்கே உலகின் தலைசிறந்த பல்கலை கழகங்கள் சுய அதிகாரத்துடன் தாங்களே நடத்திக் கொள்ளலாம். அதில் கிடைக்கும் வருமானத்தில் நம் நாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப் போகிறேன்'

'வெளிநாட்டு மாணவர்கள் ஏன் இங்கு வந்து படிக்க வேண்டும்?'

'மேலை நாட்டிற்கு சென்று படிக்கும் வசதி எத்தனை பேருக்கு உள்ளது? ஆனால் வெளிநாட்டில் படிக்கும் ஆசை பலருக்கு உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்வோம். அது மட்டுமல்ல. பக்கத்து நாடுகளில் நடக்கும் போர் இப்போது முடியாது போல் தெரிகிறது. அந்நாட்டு மாணவர்களும் இங்கு வந்து படிக்கலாமே?'

'ஒரு நாட்டின் வீழ்ச்சி இன்னொரு நாட்டின் வளர்ச்சி'. ஷிபா சொல்லா இருவரும் சிரித்தபடி மாளிகையை நோக்கி நடந்தனர்.

அம்ருக் நாட்டின் கேபினட் மீட்டிங் பிரார்த்தனையுடன் தொடங்கியது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இன்னும் பிற அமைச்சர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌனமாக பரமபிதாவை வணங்கிவிட்டு நிமிர்ந்தனர். 

'சேம்.. ஆரம்பிக்கலாம்' ஜனாதிபதி சொல்ல துணை ஜனாதிபதி குரலை கனைத்துக் கொண்டார்.

'சார்.. மேற்காசியவில் ஒரு பப்புள் உருவாகியுள்ளது' சேம்

'ஒற்றர்படை தலைவர் சொன்னார்' ஜனாதிபதி  பதில் சொன்னார். 'என்ன செய்யப் போகிறீர்கள்?' 

'பக்கத்து நாடுகளில் நடக்கும் யுத்ததை பயன்படுத்தி பொருளாதாரத்தை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகட்டும்.. ' சேம்

'என்ன பிளான்' ஜனாதிபதி

'இன்னும் கொஞ்சம் சேரட்டும். மொத்தமா உரிஞ்சு விடுவோம்.' சேம்

'திடீரென்று செய்தால் கூட்டாளிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும்?'  ஜனாதிபதி

'தேவையில்ல... அவர்கள் ஆரம்பித்திருக்கிற புளு சிப்ஸ் கம்பேனி எல்லாவற்றிலும் நமது ஆட்கள்தான் சி இ ஒவா இருக்கிறார்கள். நேரம் வரும்போது பயன்படுத்திக் கொள்வோம்.' சேம்

'எனிவே...தற்போது அங்கே டிபாசிட் செய்திருக்கிற லோக்கல் கரன்சி எல்லாவற்றையும் நமது டாலருக்கு மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.'
'ஷ்யூர் சார்' 

கேபினட் மீட்டிங் இனிதே நிறைவேறியது. 

அல்வானியின் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். பெய்தோவின் இளவரசராக ஷிபாவின் மகன் பட்டமேற்கும் விழா முடிந்து மக்கள் ஒவ்வொருவராக வந்து மன்னர் அல்வானியின் வலது கையைப் பிடித்து தங்களின் ஏற்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர். 

யார் யார் வருகிறார்கள் என்ற பதிவேடு பாதுகாப்பு படையினரால் பதியப்பட்டுக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் விருந்து உபசரிப்பு ஒரு பக்கம் தங்கு தடையின்றி நடக்க பெய்தோ நாடு பதினைந்து வருட காலத்தில் எதிர்பாராத பல வளர்ச்சிகளை எட்டியது. கல்வி நகரம், அறிவியல் நகரம், சுகாதார நகரம், நிதிமேலாண்மை நகரம், விளையாட்டு நகரம், ஊடக நகரம், ஜுவல்லரி நகரம், டெக்ஸ்டைல் நகரம், ஆட்டோமொபைல் நகரம் என்று பெய்தோவின் பாலைவன வெற்றிடங்களில் எல்லாம் கட்டிடங்களும், வியாபரத் தளங்களும் போட்டிப் போட்டு வளர்ந்தன. பெய்தோவின் மக்களைவிட வெளிநாட்டு மக்கள் மூன்று மடங்கு அதிகமாக வாழ ஆரம்பித்தார்கள்.

கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க அல்வானி மற்றும் அமைச்சரவை நண்பர்கள் தேநீர் விருந்தில் நாட்டு நடப்புகளை அலசிக் கொண்டிருந்தனர்.

'அல்வானி... நமது வங்கியில் உள்ள கரன்சி எல்லாவற்றையும் ஒன்று நமது நாட்டு கரன்சி அல்லது அம்ருக்கின் டாலராக மாற்றினால்தான் நல்லது' அல்நூர்.  அல்நூர் அம்ருக்கின் கைப்பாவையாக மாறிக் கொண்டிருக்கிறார் என்பது அல்வானிக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும். இன்று அது உறுதியாகிவிட்டதாக அல்வானியின் மனது சொன்னது.

'என்ன காரணம்?' அல்வானி தெரியாததுபோல் கேட்டார்.

'கோரான் மற்றும் கோராக் கரன்சி வேல்யூ நாளுக்கு நாள் கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதனால் நமக்கு திடீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.' அல்நூர்    

'ஆமாம், அது மட்டுமல்ல. மத்திய ஆசிய நாடுகளின் அரசியல் சூழலும் சரியில்லை. அதை நாம் எப்படியும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.' அல்புத்தான் தொடர்ந்தார். 

'வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் எல்லோரும் டாலருக்கும் மாறிவிடுவது நல்லது என்கிறார்கள்' அல்நூர்

'எனக்கும் அதுதான் சரியென்று தோன்றுகிறது. அம்ருக் டாலராக மாற்றுவதால் நமக்கும் அம்ருக்கிற்கும் அரசியல் உறவு மேலும் நன்றாக அமைய வாய்ப்பிருக்கிறது. 'கூடவே அல்ராயரின் மணி எக்சேஞ்ச் தொழிலின் லாபங்களை சுத்தமாக கட்டுப்படுத்த முடியும்' என்று மனதிற்குள் நினைத்தவராய் 'நிதித்துறை அமைச்சகம் இன்றிலிருந்து உருவாக்கப்படுகிறது. தற்காலிகமாக அதை நானே நிர்வகிக்கப் போகின்றேன்.' அல்வானி சொல்லி முடித்தார்.

'சரிதான்.. சரிதான்.  வாழ்த்துக்கள்' என்று மற்ற அமைச்சர்கள் சொல்ல, அல்வானி எழுந்தார்.

பெய்தோ மேற்கு ஆசியாவின் முக்கியமான நாடாக மாறிப் போனது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் ஏதாவதொரு தொழில் அங்கே நடக்க ஆரம்பித்தது. வருமான வரி இல்லாததால் மேலை நாடு முதல் கீழை நாடுகள் வரை உள்ள தொழில்கள் எல்லாம் குவிந்த வண்ணமிருந்தன. தொழிலாளர்கள் முதல் மேல் மட்ட ஆளுமைகள் வரை பெய்தோவில் வேலை தேடி சாரை சாரையாக பல நாடுகளிலிருந்து வந்து சேர்ந்தனர். யார் வேண்டுமானாலும் கம்பேனிகள் ஆரம்பிக்கலாம். எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். பன்னாட்டு நட்சத்திர ஹோட்டல்கள் முதல், வங்கிகள் தொடங்கி உலகின் தலைசிறந்த மருத்தவமனைகள் வரை பெய்தோ நாட்டில் கிளைகளை உருவாகின.  

பெய்தோவின் துறைமுகம் சரக்குகளை மலைமலையாக கொண்டுவந்து கொட்டும் அதே நேரத்தில் விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் வெளிநாட்டு மக்கள் வருகை புரிந்தார்கள். உலகின் தலைசிறந்த விமான நிலையத்தில் ஒன்றாக மாறிப் போனது பெய்தோ அல்வானி விமான நிலையம்.  பாலைவனம் சொலைவனமாய் மாறி ஏதோ ஒரு மாய உலகம் போல் தோற்றம் தர பல நாடுகளுக்கு பெய்தோ ஒரு ஆச்சர்யம் கலந்த சுற்றுலா நாடாக மாறிப் போனது.  பெய்தோ நாட்டு மக்களில் பெரும்பாலோர் போலீஸ், செக்ரூட்டி, ராணுவம் என்று எல்லோருக்கும் வேலை கொடுக்கப்பட்டு மக்கள் செல்வத்தின் செழிப்பில் அளவிலா மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

பெய்தோவின் முக்கிய கம்பேனிகள் அனைத்தும் ஷேர் மார்க்கட்டில் நல்ல லாபங்கள் ஈட்ட ஆரம்பித்தன. பல மேலைநாட்டு நிதி நிறுவனங்கள் பெய்தோ கம்பேனிகளின் ஷேர்களை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி குவித்தனர்.

'நம் மூதாதையர்கள், கடலில் கொள்ளையடித்தனர். நான் கடலயே கொள்ளை அடிக்கப் போகிறேன்' சத்தமிட்டு சொன்னார் அல்வானி. 'கடல் மீது ஒரு நகரை உருவாக்க்கி அதில் உலகில் உள்ள செலிபிரிட்டி எல்லோரிடமும் விற்கப் போகிறேன்' 

'அடக்கி வாசிக்கலாமே' ஷிபா சிரித்தபடி சொன்னாள்.

'அடங்கச் சொல்கிறாயா?' அல்வானி

'கொஞ்சம் அமைதியாயிருக்கச் சொல்கிறேன்' ஷிபா

'வளர்ச்சியை தடுத்தால், கீழிறங்கி விடுவோம்.' அல்வானி

'தடுக்கச் சொல்லவில்லை, மேற்கொண்டு எதையும் செய்யாமல் இருப்பதை நிலைநிறுத்தச் சொல்கிறேன்.' ஷிபா

'ஏன்?' அல்வானி

'கொஞ்சம் ஓய்வெடுத்து இன்னும் கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்.  இப்போதெல்லாம் நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை எல்லோராலும் ஊகிக்க முடிகிறது. அது சரியல்ல' ஷிபா

அல்வானியின் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றின. ஷிபா சொல்வதும் சரிதான். இதுநாள் வரை நான் என்ன சொல்லப் போகிறேன் அல்லது எதை செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்த அமைச்சரவை நண்பர்கள் இப்போது தங்களின் கருத்தையும் செயல்படவைக்க நினைக்கின்றனர். காரணம் என்னைப்பற்றி அவர்கள் ஓரளவு கணிப்பு செய்துவிட்டார்கள்.  சொன்னதை மட்டும் செய்யும் திறன் பெற்றவர்கள் இப்போது என்னையும் தாண்டி சிந்திக்க ஆரம்பித்தால் பிரச்சனை எனக்குத்தான். 

அம்ருக்கின் கேபினட் மீட்டிங் வழக்கம்போல் பிரார்த்தனையுடன் தொடங்கினாலும், எல்லோர் முகத்திலும் ஈயாடவில்லை.  கடந்த ஒரு வாரமாக உலகமே சருக்கி விழும் பொருளாதார பின்னடைவு பண முதலாளிகள் அனைவரையும் புரட்டி எடுத்தது. அம்ருக்கின் மிக முக்கியமான வங்கிகள் மூன்று திவாலாகும் நிலையில் உள்ளதால் அதை காப்பாற்றுவதா அல்லது விட்டுவிடுவதா என்ற மிக முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டாய சூழலில் அமைச்சர்கள் அனைவரும் தனது மூளையை கசக்கி பிழிய ஆரம்பித்தனர். 

எல்லோரும் தங்களுக்குத் தோன்றிய கருத்துக்களை எடுத்து வைக்க விவாதம் காரசாரமாக நடந்துக் கொண்டிருந்தது. 

'சார்... எப்படியானாலும்... குறைந்தது மூன்று டிரில்லியன் டாலர் இருந்தால்தான் மூன்று வங்கிகளையும் காப்பாற்ற முடியும்' சேம். 

'நமது பொருளாதாரத்தின் நாலின் ஒரு பங்காயிற்றே... எப்படி சமாளிப்பது?' ஜனாதிபதி 'என்னதான் டாலரை பிரிண்ட் செய்தாலும் அதை பயன்படுத்தினால்தானெ நமக்கு பிரயோசனம்?' ஜனாதிபதி முடித்தார்.

'எண்ணெய் நாடுகளிலிருந்து எப்படியும் பாதியை பிடுங்கிவிடலாம்.' சேம்.

'அதுமட்டுமல்ல... அடுத்த ஆறு மாத காலத்திற்கு கேஷ் ஃபுளோ வேண்டும்'. நிதி அமைச்சர் ஹாகன் சொல்ல எல்லோரும் அமைதியாயினர். ஜனாதிபதி கண்களை மூடியபடி யோசித்தார். 

'மேற்கு ஆசியாவின் பப்புள் நிலை எப்படியுள்ளது?' ஜனாதிபதி கண்களை மூடியபடியே கேட்டார். 

சேம் சிரித்தார்.  உரிஞ்சும் நேரம் வந்துவிட்டது. மனதிற்குள் நினைத்தார்.  'அரை டிரில்லியன் டாலர் தேரும். ஆறுமாத கால கேஷ் ஃபுளோவிற்கு பயன்படும்' சேம் 

'மூன்று வங்கிகளையும் காப்பாற்றி விடலாம்'. ஹாகன் முடித்தார்.

'மூன்றில் இரண்டு வங்கியை மட்டும் காப்பாற்றுவோம். ஒன்று போகட்டும்' ஜனாதிபதி சொல்ல நீண்ட அமைதி நிலவியது. 

'பப்புளில் உள்ளதை கொண்டுவர ஏற்பாடு செய்ய்யுங்கள்' ஜனாதிபதி

'கேட்டால் கொடுக்க மாட்டார்கள்' டெய்சி, வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்னார்.

'யாரைக் கேட்க வேண்டும்?' ஜனாதிபதி சற்று சத்தமாக பேசினார். 'உலகப் பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அம்ருக்கின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும். நாம்தான் முக்கியம், முதலிடம்.' சொல்லிவிட்டு எழுந்தார் ஜனாதிபதி.

அல்வானி ஐக்கிய நாட்டு சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பெய்தோ நாட்டின் பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் தலைப்பு செய்தியாக வந்து பெய்தோ நாடு மகிழ்ச்சியில் அல்லோல கல்லோலப்பட்டது. 

'கிடைக்குமா இப்படி ஒரு சிறப்பு' என்று அல்நூர் மற்றும் அல்புத்தான் இருவரும் பத்திரிகைகளுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அல்வானின் மாளிகை, அவரது அலுவலகம் என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் அல்வானியை பேட்டி எடுக்க காத்திருந்தார்கள்.

அல்வானியின் தலைமைச் செயலர் பயணத்திட்டங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அல்வானியின் வெளியுறவுச் செயலர் ஐநாவிற்கு வரவிருக்கும் மற்ற பல தலைவர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.  ஷிபாவிற்கு சொல்ல முடியாத சந்தோஷம். கணவருடன் சேர்ந்து தானும் பயணம் செய்வதற்காக வேலையை ஆரம்பித்தாள்.  

பெய்தோ நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைவர்கள் எல்லோரும் அல்வானிக்கு கிடைத்த பெருமையை ஒரு பக்க விளம்பரமாக பத்திரிக்கைகளில் பிரசுரித்து தங்களின் விசுவாசத்தை பறைசாற்றினர்.

அல்வானி தன் மனைவி ஷிபாவுடன் தனது அலுவலக கட்டிடத்தின் 23வது மாடியில் அமர்ந்தபடி நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களையும் நாட்டையும் பற்றிய பிஆர் வேலைகள் செய்ய வேண்டும்.' ஷிபா சொல்ல அல்வானி சிரித்தபடி தலையசைத்தார். 'மற்ற நாடுகளின் நகரங்களைவிட நம் பெய்தோதான் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரம் என்று பெரும் மீடியா செய்திகளை உலகமெங்கும் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' 

'போதும் ஷிபா... விட்டால் இன்னும் ஏதேதோ.. திட்டங்கள் எல்லாம் வைத்திருப்பாய் போலிருக்கிறது' அல்வானி குறுக்கிட்டார்.

'இருபது வருடத்தில் ஒன்றுக்கும் பிரயோசமில்லாமல் இருந்த பூமியை செல்வம் செழிக்கும் நாடாக மாற்றிவிட்டீர்களே! சும்மாவா'. ஷிபா சொல்வதக் கேட்க கேட்க அல்வானிக்கு இளமைக்கால நினைவுகள் மீண்டும் கண் முன்னே வந்து கவிபாடின.   

'ஷெக் அல்வானி...' இன்டர்காமில் அல்வானியின் தலைமைச் செயலர் அழைத்தார். 

'சொல்லுங்கள்' அல்வானி சொல்ல சுவற்றில் இருந்த 52 இஞ்ச் சோனி டிவியில் பெய்தோ நாட்டு கம்பேனியின் ஷேர்கள் அனைத்தும் ஏறுமுகமாக இருப்பதை காட்டிக் கொண்டிருந்தன. 

'அம்ருக்கின் வெளியுறவு அமைச்சர் டெய்சி பில்பிரைட் உங்களுடன் பேச விரும்புகிறார்' 

'கொடுங்கள்'. சொல்லிவிட்டு டெலிபோன் ரிசீவரை எடுத்தார்.

'குட் மார்னிங்' அல்வானி

'வெரி குட் மார்னிங் ஹைனஸ்... வாழ்த்துக்கள்.  உங்களுக்கான ஐநாவின் அழைப்பு எங்களை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.'

'நன்றிகள் மேம்' சொல்லியபடி மனைவியைப் பார்த்தார் அல்வானி.

'ஜனாதிபதியின் வாழ்த்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்' டெய்சி

'நிச்சயமாக... இது எனக்கு மிகுந்த கௌரவத்தைக் கொடுக்கிறது' அல்வானியின் முகத்தில் ஆயிரம் வாட் மின் விளக்குகள் பிரகாசமாக எரிந்தது. 

'ஹிஸ் ஹைநஸ்.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் எங்களின் மிலிட்டரி கார்கோ பிளைட்டுகள் உங்கள் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர இருக்கின்றன' டெய்சி சொல்வதைக் கேட்க கேட்க அல்வானிக்கு ஒன்றும் புரியவில்லை.

'அம்ருக்கின் துணை நிதியமைச்சரும் அதில் வருகிறார்.'

'சொல்லுங்கள்' சமாளித்துக் கொண்டு பதில் சொன்னார் அல்வானி

'அம்ருக்கி ஃபெடரல் வங்கியின் 500 பில்லியன் டாலருக்கான பிராமன பத்திரங்களை உங்களிடம் ஒப்படைப்பார்.' அல்வானி

'ஏன்.. புரியவைல்லை?' அல்வானி

'உங்களிடமுள்ள 500 பில்லியன் டாலரை எங்களது கார்கோ பிளைட்டில் ஏற்றி அனுப்பி வையுங்கள்'. டெய்சி சொல்லி முடிப்பதற்குள் அல்வானிக்கு எலக்டிரிக் ஷாக் அடித்ததுபோல் இருக்கையில் பின்னால் சாய்ந்தார்.

'ஹிஸ் ஹைனஸ் அல்வானி... அல்வானி...' 

'யெஸ்... யெஸ்.' அல்வானியின் முகம் இருண்டு போனது. கணவனின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஷிபா குழம்ப ஆரம்பித்தாள். 

அல்வானியும், ஷிபாவும் கண்ணாடி வழியாக நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவர் முகத்திலும் சிறிது நேரத்திற்கு முன் இருந்த சந்தோஷம் சொல்லாமல் கொள்ளாமல் எப்போதோ ஓடிவிட்டது. நகரத்தின் முக்கியத் தெருக்களில் எல்லாம் சாரை சாரையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.  அங்கங்கே வளைந்து நெளிந்து வட்டமிட்டு செல்லும் பாலங்கள், சுறுசுறுப்பாக வளர்ந்துக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், தூரத்தில் கடல்மேல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கடல் நகரம்... எல்லாம் இப்போது கலக்கமடைந்த மனதில் காணாமல் போய்விட்டன. கண்ணாடி வழியாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கணவனின் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்தாள் ஷிபா.

'பயப்பட வேண்டாம்' மெதுவாகச் சொன்னாள்.

'இருபதுவருட உழைப்பு... ஒரே டெலிஃபோன் காலில் காணாமல் போய் விட்டது ஷிபா' கலங்கிய குரலில் பேசினார் அல்வானி. 

'இல்லை. அப்படி நினைக்காதீர்கள்' ஷிபா குறுக்கிட்டாள். 

'எப்படி இந்த நாட்டை நான் நிர்வகிக்கப் போகிறேன்... புரியவில்லை...' எழுந்து கண்ணடியின் அருகில் போய் நின்றார். 'அரசு ஊழியர்களின் சம்பளம், கட்டுமானப் பணிகள், ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் ஊதியம்.. எல்லாம் தடை பட்டு போகுமே...' ஷிபா ஒன்றும் பேசாமல் கணவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'உருசியா ஜனாதிபதியுடன் பேசி ஏதேனும் ஆலோசனைக் கேட்கலாமா?' அல்வானி கேட்டபடி ஷிபாவைப் பார்த்தார்.

'எல்லோரும் வல்லூருகளே.. ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பிரச்சனையில் சிக்க வேண்டாம்' பேசிக் கொண்டே கணவனின் தோளை மெதுவாக தடவி விட்டாள். 

'வழி கிடைக்கும். கடல் நமக்கு சோறு போடும்'. ஷிபா சொல்லியபடி தூரத்தில் அமைதியாய் தவழ்ந்துக் கொண்டிருந்த கடலலைகளைப் பார்த்தாள். 

'எனது பலவீனம்... அம்ருக்கின் பலம்.. இப்போதுதான் புரிகிறது' அல்வானி பேசியபடி வானத்தைப் பார்த்தார் 'எல்லோரும் கொள்ளைக்கார்கள்தான்.. ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துதான் நாட்டை நிர்வாகிக்கிறோம்.' 

பெய்தோவை தூங்கா நகரமாக மாற்றிய அல்வானி இப்போது தூங்கா மன்னனாக மாறிப்போனார். 

No comments: