வெறுப்பு என்ற ஒரு குறிப்பிட்ட உணர்வின் மூலம் உருவாகும் சாதாரண உணர்ச்சி ஆற்றல்கள் எப்படி ஒரு பெரும் அரசியல் ஆற்றல்களாக (எனர்ஜியாக) மாற்றப்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வலுவானதாக மாறுவதை நம்மில் பலர் அறிந்திக்கிறோம். மனிதர்களின் மனதில் உருவாகும் சாதாரண உணர்ச்சிகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நோக்கி வெற்றிபெற செய்வதை நாம் உலகெங்கும் காண்கிறோம். மதம், இனம், மொழி மற்றும் அரசியல் முன்னேற்றங்களுக்காக மனித உணர்வுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு முழுவதும் விரவிக்கிடக்கும் உண்மை. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களின் உணர்வுகள்தான் இந்த உலகத்தை இழுத்துச் செல்லும் மாபெரும் உந்து சக்திகள். அறிவு, அறிவியல், ஆன்மீகம் எல்லாவற்றிர்க்கும் அடிப்படை ஆற்றல் மனிதர்களின் உணர்வுகளும் அதிலிருந்து நிகழும் உணர்ச்சி மேம்பாடுகளே.
இதை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் அறிந்து, உணர்ந்து ஒருங்கிணைத்து நம் வாழ்க்கையை எப்படி செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
நம் மனதில் உருவாகும் அனைத்து உணர்வுகளும் ஆற்றல்களின் (எனர்ஜி) பிறப்பிடங்களாக, கிரியூக்கிகளாக அன்றாடம் நம்முள்ளே உருவாகும் உணர்வுத் தொழிற்சாலை. ஆனால், பெரும்பாலும் உணர்வுகளின் தாக்கத்தினால் எழும் காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் மூலம் உருவாகும் ஆற்றலை (எனர்ஜி) உதாசீனப்படுத்துகிறோம். ஆனால், இந்த ஆற்றல்களை நமக்கும் பிறருக்கும் பயன்படும் முறையில் மாற்ற முடியும். நம்மில் பலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக உலகில் எல்லா நேரத்திலும், எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு எனர்ஜி உருவாகிக் கொண்டே இருக்கிறது. இயற்கையில் விழித்திருக்கும் எல்லா உயிரினங்களும் (புல் பூண்டு புழுக்கள் முதல் கடலில் வாழும் சிறிய, பெரிய உயிரினங்கள் தொடங்கி, ஒளி ஒலி கொடுக்கும் அனைத்து கிளஸ்டிகள் பாடிவரை) உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இவைகளின் மூலம் ஏற்படும் அனைத்து ஆற்றல்களும் ஒருமித்த ஆற்றல்களாக (composed energy) மாற்றம் பெற்று இவ்வுலகின் உள் மற்றும் வெளி இயக்கங்களுக்கு அடிப்படை காரணிகளாக அமைகின்றன.
அறிவியல் ஆராட்சிகளில் இதை ஆர்கானிக் மேட்டர்களாக (உயிர்ச்சத்து பொருட்களாக) அறியப்பட்டு எது எதனுடன் சேரும், அல்லது எதிர்க்கும் அல்லது சேராமல் விலகிப் போகும் ( molecules) என்று அறியப்பட்டு இவ்வாறு அன்றாடம் நிகழும் சேர்க்கைகளை அளவிட்டு பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது பொருட்கள் அறியப்படுவதையும் பார்க்கிறோம். ஆர்கானிக் மேட்டர் மூலம் உருவாகும் பல எண்ணிலடங்கா எனர்ஜிகளின் இயக்கங்கள்தான் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
அதே போன்று நமது உடலுக்குள் உருவாகும் எண்ணிலடங்க ஆற்றல்கள் நமது உடல் மற்றும் மன இயக்கங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. உடலின் வளர்ச்சிக்கு தேவையான எனர்ஜி ஒருபக்கமும் நமது உள்ளத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எனர்ஜி இன்னொரு பக்கமுமாக நமக்குள்ளேயே உருவாக்கப்படுகின்றன.
நம்மிடம் உருவாகும் கருணை, பாசம், வெறுப்பு, விறுப்பு, மகிழ்சி, துக்கம், ஆசை, கோபம் போன்ற அனைத்து உணர்வுகளும் நம்முள்ளே சில ஆற்றல்களை (எனர்ஜிகளை) உருவாக்குகின்றன. குறிப்பாக மகிழ்வும், கோபமும் அதிகமான ஆற்றல்களை உருவாக்குகின்றன. இவ்விரண்டு நிலைகளிலும் உருவாகும் ஆற்றல்களை (எனர்ஜிகளை) நாம் முற்றிலும் புறக்கணித்து விடுகிறோம். அவைகள் நேர்மறை அல்லது எதிர்மறை எனர்ஜியாக இருந்தாலும் அதை நமக்கும், பிறருக்கும் பயன்படும் முறையில் அந்த எனர்ஜியை வழிப்படுத்த வேண்டும். இதை யோகிகளும், சித்தர்களும், கடவுள் வழிபாட்டில் உச்சநிலையைத் தொட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக நாம் புராணங்களிலும், கதைகளிலும் படித்தாலும், சாதாரண குடும்ப வாழ்க்கையில் உள்ள பலர், அதிலும் வறுமையிலும் கடினமான சூழலில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களும்கூட தனது அன்றாட வாழ்க்கையில் அதை அநாசமாக செய்திருக்கிறார்கள்.
நம்முடைய மன வளர்ச்சிக்குத் தேவைப்படும் பெரும்பாலான ஆற்றல்கள் நமது உணர்ச்சிகளின் மூலமே திரட்டப்படுகின்றன. எனவே அத்தகைய எனர்ஜி வெளிப்பாடுகளை நமது உணர்வுகளின் மூலம் நாம் அடையாளப்படுத்திக் காணலாம். உதாரணமாக மகிழ்வு. நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது வெளிப்படும் எனர்ஜி நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது. ஏதேனும் சோகத்தில் இருப்பவர்கள் கூட சில நிமிடங்கள் தனது சோகத்தை மறந்து நம்முடன் மகிழ்ச்சியாக இருப்பதை காணலாம். அதே போன்றுதான் கோபம். நம்முடைய கோபம் நம்மை சுற்றி இருப்பவகளையும் கோப உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகின்றது.
இவ்வாறு நம் உடலுக்குள்ளே உருவாகும் பல்வேறு ஆற்றல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினால் நம்மால் பொதுவாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் நம்மிடம் ஊற்றெடுக்கும் நமது இன்னர் எனர்ஜியை (உள்ளாற்றலை) நாம் உணர வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காலை நேர இறைவழிபாட்டிற்கு பிறகு அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது அன்றாட வேலைகளை தொடங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானத்தில் இருப்பது அவசியம். இங்கே நான் தியானம் என்று குறிப்பிடுவது நமது அகப்பார்வை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அகப்பார்வை என்பது கடவுளை அறிவதற்கும், உணர்வதற்கு மட்டுமே என்று பொருள் கொள்ள வேண்டாம். அகப்பார்வையின் மூலம் நமது உணர்வுகள் ஒவ்வொன்றின் பிறப்பிடத்தையும், அதன் மூலம் எழும் ஆற்றல்களையும், அந்த ஆற்றல்களினால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களையும் (visualization) காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, நான் கோபப்பட்டால் அல்லது மகிழ்ச்சி அடைந்தாகல், அதை எப்படி வெளிப்படுத்துகிறேன், யாரிடம் முதலில் வெளிப்படுத்துகிறேன், ஏன் அவரிடம் வெளிப்படுத்துகிறேன், அதனால் என்ன நிகழ்கிறது, அதன் தொடர்வினை என்ன, அதன் எதிர்வினை என்ன, முடிவாக என்ன கிடைக்கிறது என்ற ஓர் காட்சிப்படுத்துதலை தியானத்தில் செய்து பார்க்கும் போது கோபத்தினாலோ அல்லது மகிழ்ச்சியினாலோ எழும் ஆற்றலை நம்மால் அளவிட முடியும். இவ்வாறு ஒவ்வொரு உணர்வுகளையும் நாம் காட்சிப்படுத்தி அளவிட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முள்ளிருந்து வெளியாகும் ஆற்றலை (எனர்ஜியை) எவ்வாறு சரியாக உபயோகிப்பது என்ற தெளிவும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் செல்ஃப் கன்ரொல் (சுயக் கட்டுப்பாடு) என்று அறியப்படுகிறது. ஒருவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது என்றாலும் அதை எப்போது எந்த இடத்தில் நான் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துச் செய்யும்போது என் கோபத்தின் ஆற்றல் சரியான பயனை எனக்கும் நான் கோபப்படும் மனிதனுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சுயக் கட்டுப்பாட்டின் உச்ச நிலைக்கு சென்றவர்கள் அநாசயமாக தன்னை தற்காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் எந்த ஒரு சிக்கலான நிலையிலும் தன்னை இழக்காமல் தனது லட்சியத்தை அடையக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதில் இன்னொரு பயன் என்னவென்றால் நாம் அதிகமான நேரம் நிகழ்காலத்தில் வாழமுடியும். அதிகமான நேரத்தை நிகழ்காலத்தில் செலவழிப்பதன் மூலம் இறந்தகால மற்றும் எதிர்கால வருத்தம் மற்றும் பயத்திலிருந்தும் நாம் விடுதலை அடைகிறோம்.
மனிதனுக்குள் இயற்கையாகவே அல்லது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு உணர்விலும் நன்மை தீமைகள் என்ற இரண்டும் உள்ளது. அது நன்மையா அல்லது தீமையான விளைவா என்பது நம் கையில்தான் உள்ளது.