Wednesday, November 02, 2016

தூக்கி சுமந்தவன் இன்று தூங்கப் போய்விட்டான் (அக்டொபர் 30, 2016)


என் பிஞ்சுத்தலை தூக்கி மெச்சிப் புகழந்தவனின்
உச்சம் தலைப்பிடித்து மண்ணுக்குள் வைத்துவிட்டேன்.
முதன்முதலாய் முத்தமிட்டவன் இன்று என்
கடைசி முத்தத்துடன் உறங்கப் போய்விட்டான்.

மண்ணில் என் கால் படாமல் மார்பில் சுமந்தவன்
விண்ணிற்கு வழிதேடி மண்ணுக்குள் மறைந்து விட்டான்.
தோளில் சுமந்தென்னனை தமிழ் சொல்லிக் கொடுத்தவன்
என்தோள்கூட வேண்டாமென்று தோற்கடித்துப் போய்விட்டான்.

அறியாமல் செய்த பிழைகள் தெரியாமல் மறைத்து வைத்து
புரியாமல் விட்டுவிட்டு புதிய இடம் தேடி போய்விட்டான்
பழைய நினைவுகளில் நான் மட்டும் சுற்றிவர
புதிய உலகிற்குள் முழுதாக புதைந்துவிட்டான். 

அறிவை மட்டும் கொடுப்பேன் வேறொன்றும் இல்லை என்றான்
அதுவே பெரிதென்றேன் அழவைத்து போய்விட்டான்.
என் மறுமை சொர்க்கத்தின் வாசலில் ஒன்றை
இன்றோடு மூடிவிட்டு தன்மறுமைத் தேடிக் கொண்டான்.

உறவுகள் முறிவதில்லை உணர்வுகள் அழிவதில்லை
மரணம் ஒரு மாற்றமே! மீண்டும் உயிர் பெறுவோம்
மறுமையிலும் உனக்கு நான் மகனாக வரவேண்டும்
முடியாத வாழ்க்கைக்குள் முடிந்ததை தேடவேண்டும்

மன்னித்துவிடு இறைவா! மண்ணுக்குள் என் தந்தைக்கு
நீண்டதொரு அமைதிகொடு! மீண்டும் நீ எழுப்பும்வரை
வாழும் நாள் முழுதும் அவருக்காய் பிரார்த்திபேன்
என்றாவது நானும் வருவேன் எனக்கும் நீ மன்னிப்பளி.

No comments: