முச்சந்தியில் தமிழகம்.
தமிழகத்தின் பெண் சிங்கம் போதுமிந்த
அரசியல் வேட்டையும் விளையாட்டுமென்று அமைதி கொள்ள முடிவெடுத்துவிட்டதொ என்னவோ,
இரவோடு இரவாக அப்பொல்லொ சென்று இன்னொமெரு இரவில் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
சரியொ தவறோ... அம்மாவின் ஆட்சி ஒரு ஜனநாயக சர்வாதிகார ஆட்சியாக இருந்தது. சரி
என்று தோன்றியதை சரியாகச் செய்ததுடன்... சரியில்லை என்று சொன்னவர்களை சரிபாதிகூட
மதிக்காமல் உடனிருந்து ஆதரித்தவர்களையும் எதிர்த்து நின்றவர்களையும் தான்
விரும்பிய அரசியல் களத்தில் உள்வரச் செய்து பலரை அசிங்கப்படுத்தியும் சிலரை காலில்
மிதித்தும் கம்பீர அரசியல் நிகழ்த்தினார் என்பதெ உண்மை.
தமிழக அரசியலின் மையமாக விளங்கிய அம்மா
மற்ற தலைவர்கள் அனைவரையும், முதுபெரும் அரசியல் வித்தகர் கருணாநிதி முதற்கொண்டு
தனது அரசியல் விளையாட்டில் எதிர்மறை அரசியல் (reactive politics) செய்ய வைத்தார்.
ஆனால் தற்போதைய கேள்வி, எம்ஜியார் தொடங்கிவைத்த அரசியல் மாற்றம் இப்போது
முடிவுக்கு வந்துவிட்டதா? அப்பொல்லொ மருத்துவமனையில் அம்மாவின் உயிர் பிரியுமுன்
அதிமுக விலை போய்விட்டதென்று பரவலாக செய்தி வருகிறது. அப்படி விலைபோய் விட்டால்
வாங்கியவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.
தமிழக அரசியலை மாற்றி அமைத்தவர்கள்
மூன்று பெரும் தலைவர்கள். ஒன்று பெரியார். இன்னொருவர் அண்ணா, மூன்றமவர் எம்ஜியார்.
தீண்டாமை மற்றும் ஜாதிக் கொடுமைகளை
எதிர்த்து தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். சமூக மாற்றங்கள்
நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் அரசியல் அதிகாரம் இருந்தால்தான் சாத்தியமாகும்
என்று பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி காங்கிரசை தமிழகத்தைவிட்டு
துரத்தியடிக்க வித்திட்டவர் அண்ணா. கருத்து மோதல்களை தனிமனித மோதல்களாக மாற்றி
சினிமாவைப் போல் அரசியலை ஆச்சர்யங்களும், அதிசயங்களும், பல திருப்பு முனைகளுமாக
மாற்றி தனது ஆதரவாளர்கள் எல்லோரையும் சினிமா மாயவலைக்குள் முழுவதுமாக வைத்து
அரசியல் நடத்திய எம்ஜியார்.
இம்மூவரும் தமிழகத்தின் அரசியல்
தலைஎழுத்தை மாற்றிய வித்தகர்கள். அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதியும் எம்ஜியாரைத்
தொடர்ந்து ஜெயலலிதாவும் இரண்டுவிதமான அரசியல் நடத்தி இன்றுவரை தமிழகத்தின் இரு
பெரும் தூண்களாக இருந்ததில் ஒன்று தகர்ந்துவிட்டது.
எனது பார்வையில் தமிழக அரசியல் தற்போது
முச்சந்தியில் நின்றுக் கொண்டிருப்பதாக உணர்கின்றென்.
முதல் சந்து
ஜெயலலிதாவிற்கு பிறகு அக்கட்சியில் அவரைப்போல்
இன்னொருவர் யார் என்ற கேள்விக்கு விடையிருப்பதைப் போல் தெரியவில்லை. தனது கட்சித்
தலைவர்களையும் தொண்டர்களையும் தனிநபர் வழிபாட்டுக்குள் கொண்டுவந்து சர்வாதிகார ஜனநாயகவாதியாக
ஆளுமை செய்ய ஜெயலலிதாவைப் போன்று மக்களின் ஆளுமை சக்தி கொண்ட தலைவர் வேறு யாரும்
இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் தனிநபரை முன்வைத்து நடக்கும்
அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் நான் உணர்கின்றென். ஒரு வேளை ரஜினி
அரசியலுக்கு வந்தால் எம்ஜியார் பாணி அரசியல் தொடர வாய்ப்புள்ளது. அவரின் ஆளுமை
ஈர்ப்பு சக்தி ஜெயலலிதாவிற்கு இணையாக அல்லது அதையும் தாண்டிகூட இருக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவாரா?
இரண்டாம் சந்து
கருணாநிதி அம்மையாருக்கு புகழாரம் சூட்டி
ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். எம்ஜியார் புருக்லீன்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது ‘நாற்பதாண்டு கால நட்பு’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு
அதிமுகாவினரை தன் பக்கம் இழுக்க முயற்சித்தார். அது வரலாறிகிவிட்டது. இப்போது அதெ
போன்று மறைந்த அம்மாவிற்கு புகழாரம் பாடி... நாங்கள் அரசியலில் வேறுபட்டவர்கள்தான்
ஆனால் கொள்கையால் திராவிடர்கள் என்று பூட்டிக் கிடக்கும் திராவிட அரசியலுக்கு
புத்துணர்ச்சி கொடுக்கத் தொடங்கிவிட்டார் என்று உணர்கிறேன்.
திமுக திராவிட அரசியலுக்கு
திரும்புகிறதென்றால் அதற்கு இன்னொரு முக்கிய காரணம் பிஜெபியின் திரைமறைவு வேலைகள்.
சசிகலா ஓபிஎஸ் கோஷ்டிக்கு நடுவே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் மத்திய
அரசின் உள்நோக்கம் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைதான். பிஜெபி தற்போது காங்கிரஸ்
பழங்காலத்தில் செய்த வேலையை செய்து கொண்டிருக்கிறது. அதிமுகாவின் உள்கட்சி
விவகாரங்களில் பிஜெபி மூக்கை நுழைக்கும்போது திமுக வெறுமனெ பார்த்துக்
கொண்டிருக்காது. அதிமுக இயற்கையாக சிதைய வேண்டுமென்று திமுக காத்திருக்க
விரும்பினாலும் (நாலரை வருட அதிமுக ஆட்சி மீதமுள்ள காரணத்தினால்), பிஜெபியின்
கட்டப்பஞ்சாயத்து திமுகாவை திராவிட அரசியலுக்கு இழுத்துச் சென்றுவிடும். 2ஜியைக்
காட்டி திமுகாவின் வாயை அம்மையார் அடைத்தது போல் பிஜெபியால் முடியாது. காரணம்
பிஜெபியில் அப்படிப்பட்ட தலைவர்களொ தொண்டர்களோ இல்லை.
திமுக அதிமுகாவை உள்வாங்கிக் கொள்ளும் நோக்கத்துடன்
செயல்படத் தொடங்கிவிட்டது அதனால்தான் புகழாரமும் அடக்கி வாசித்தலுமாக திமுக தலைமை
அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டது. இனத்தையும் மொழியையும் முன் வைத்து
தூங்கிக்கிடக்கும் திராவிட அடையாளத்தை தூசித்தட்ட ஆரம்பித்துவிடுவார் கருணாநிதி. தமிழர்களின்
உணர்வுகளை தந்தை தூண்டிவிட நிர்வாகம், எதிர்காலம், இளைஞர்களின் எதிர்பார்ப்பென்று
இளைய தலைமுறையை குறிவைத்து மகன் ஸ்டாலின் செயல்படலாம். அப்படி நடப்பதில்
தவறெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
மூன்றாம் சந்து
புளித்துப் போன திராவிட அரசியலும்,
புறையேறிப் போன ஜாதி மத அரசியலும் கோலோச்சி நிற்கும் தனி நபர் வழிபாட்டரசியலையும்
தூக்கி எறிந்துவிட்டு சமூகநீதி, ஊழலின்மை, விவசாயம் மற்றும் தொழில் முன்னேற்றம்
என்ற இந்த மூன்றைமட்டும் அடிப்படையாக வைத்து நேர்மறை அரசியலை (positive politics) உருவாக்க இதைவிட
வேறு தருணம் கிடைக்காது. நாட்டின் மீது உண்மையாகவே கவலை கொண்டவர்கள், ஓட்டுகூட போட
விரும்பாமல் ஒதுங்கி நிற்பவர்கள், சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் எல்லொரையும் ஒன்றினைத்து
ஒரு புதிய அரசியலுக்கு வழிகாண இது ஒரு நல்ல வாய்ப்பு. முடியுமா?
முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இருக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும் எவ்வளவு விரைவில் ஆட்சியைப் பிடிக்கலாம்
என்று முயற்சி செய்யும் அதெ தருணத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற கொள்கயை மட்டும்
முன்னிறுத்தி உழைத்தால் காலப் போக்கில் அரசியல் போக்கையும் மாற்றலாம், ஆட்சிக்கும்
வரலாம். மூன்றாவது பாதைக்கு அழைத்து செல்ல தகுதிவாய்ந்த தலைவர்கள் இல்லையே என்ற
ஏகோபித்த அபிப்பிராயம் வெகுவாகவே இருக்கிறது.
உண்மைதான். திமுக அதிமுக இரண்டும்
மாறாது. காங்கிரஸ் குதிரைச் சவாரி செய்து சலித்து தற்போது சவாரி செய்யக்கூட
எதுவும் கிடைக்காமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு போய்விட்டது. பிஜெபி மற்றுமொரு
காங்கிரசாக மாறிக் கொண்டிருக்கிறது. சிறு குறு கழகங்கள் அனைத்தும் இரு பெரும்
திராவிட கட்சிகளின் பின்னால் கைகட்டி சேவகம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் போட்ட
பாதையில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்களாலும் மூன்றாம்
பாதைக்குள் நம்மை அழைத்து செல்ல முடியாது.
தற்போதுள்ள சூழலில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்கு
மட்டும் அந்த தகுதியிருக்கிறது. ஆம் ஆத்மி
கட்சிக்கு அந்த தகுதி உள்ளதாக நினைக்கிறேன். ஜாதி மத அரசியல், தனிமனித வழிபாட்டரசியல்
என்றில்லாமல் ஊழலற்ற மக்களாட்சி வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கிறது. அரசியல்
உலகத்தில் ஆம் ஆத்மி கட்சி சிறு பிள்ளையாக இருப்பதன் காரணமாக அவ்வப்போது சிறு
பிள்ளைத்தனமாக சில செயல்களை செய்து கொண்டிருந்தாலும் நோக்கம் தெளிவாக உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சி
சென்னையில் ஒரு சிலரைத்தாண்டி மற்றவர்களுக்கு தெரியாதென்றாலும், நாட்டின் மீது உண்மையான
கவலையும் பற்றும் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தால், தானகவே கட்சிக்குள் ஒரு நல்ல தலைமை
உருவாகலாம், மாற்றத்திற்கான தொடக்கமாகவும் அமையலாம்.