Wednesday, January 30, 2013

நான் ஒரு கலைஞன்


என் கலைப் படைப்பு சின்னா பின்னாக்கப் படும்போது என் வலியும் வேதனகளும் வார்த்தைகளில் வடிவமைக்க முடியாது.  என் கலை தாகத்தை எனக்குத் தெரிந்த கலை வடிவத்தில் வெளிக் கொணரும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, பணம், பொருள், புகழ், அதிகாரம் இன்னும் என்னென்ன உலக ஆதாயங்கள் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி தருமோ அவைகள் அனைத்தையும் மிஞ்சி நிற்கிறது. அதே நேரத்தில் என் கலை வெளி உலகிற்கு வருவதற்குமுன் அரசியல், மதம், கொள்கைகள் மற்றும் சாதி பேதங்களின் காரணமாக அதை சின்னா பின்னப்படுத்தும் போது என் வலிகளும் வேதனைகளும் வார்த்தைகளால் வடிவமைக்க முடியாமல் அழுகிறேன்.

என் கலை சுதந்திரம் அதன் மூலம் நான் வெளிப்படுத்தும் என் கருத்து சுதந்திரம் எல்லாம் முடக்கப்படும் போது வாழ்நாள் முழுவதும் நான் ஆர்ப்பரித்த, அலங்கரித்த, ஆதரித்த, ஆராதனை செய்த இன்னும் இதுதான் என் வாழ்க்கை என்று முற்றிலுமாக நான் என்னை சமர்ப்பித்து வாழும் என் கலை அதன் வழியாக நான் உருவாக்கிய என் கலைக் குழந்தை என் கண் முன்னால் அநாதையாக நின்று அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நான் சதாரண மனிதனல்ல.  புகழ் பெற்ற ஓர் கலைஞன், மனிதன், பட்டயங்கள் பல வென்ற திறமைசாலி, சமூகங்களின் மேம்பாட்டை விரும்பும் ஓர் சமூக சேவகன், இவை அனைத்தையும் தாண்டி என் மனதில் ஏற்படும் நியாயமான உணர்வுகளை,  அவைகள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருந்தாலும், துணிச்சலுடன் பதிவு செய்திருக்கின்றேன்.

நான் செய்த தவறு என்ன? புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத மக்களிடம் எனது படைப்பை சமர்பித்துவிட்டேனா?  அல்லது யார் பார்க்க வேண்டும் என்று படைத்தெனோ அவர்களின் புரிதலை நான் புரிந்துக் கொள்ள தவறி விட்டேனா?

என்னுள்ளே இரண்டு விதமாக வாதங்கள் தலை தூக்குகின்றன! ஒன்று எனது கலை ஆர்வம்.  இன்னொன்று எனது சமூக ஆர்வம்.

கலை ஆச்சர்யமானது.  சமூகம் ஆச்சர்ங்களை உடனே ஏற்றுக் கொள்வதில்லை.  கலை தூய்மையானது.  சமூகம் மாசுகளை சுமந்து வாழும் ஓரு அமைப்பு.  கலை மனிதர்களை மாற்றுலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.  சமூகம் மற்றுலகத்தை எளிதில் மதிக்காத மற்றும் போட்டி போடும் ஓர் அமைப்பு. கலை அற்புதமானது.  சமூகம் அற்புதங்களை ஆராதனை செய்யும் ஆனால் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. கலை சுதந்திரமானது.  சமூகம் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுவது.

நான் கட்டுப்பாட்டிற்குள் வாழும் சமூகத்தின் ஓர் ஒற்றைப் பிறவி.  எனது கலை சுதந்திரத்தை கட்டுப்பாடு என்ற எல்லைகளுக்குள் நின்று படைத்தல் சிறந்ததா அல்லது கட்டுப்பாடுகளை எல்லாம் தாண்டி கலையை கலைக்குறிய விதிகளின் படி படைத்தல் சிறந்ததா?

நான் கலைஞனாக மட்டும் இருப்பதா?  அல்லது சமூகப் பொறுப்புள்ள கலைஞனாக இருப்பதா?    

No comments: