பொங்கல் திருநாள்
உலகிற்கு அமுதூட்டும்
உழவர் திருநாள்.
வானும் மண்ணும் பார்த்து
வயிற் நிறைத்தவனின்
வாழ்வுத் திருநாள்
சேற்றில் வீடுகட்டி
செம்மண்ணில் நடைபயின்று
வரப்பு வீதிகளில்
கோவனத்தில் வாழ்ந்துவரும்
விவசாயித் திருநாள்
நாடு வளம் பெற
காடு மண்ணில் களம் பரப்பி
நாய் நரிகள் மத்தியிலும்
நன் மக்கள் குடிசையிலும்
சாக்கு முக்காடிட்டு
சந்திரனின் ஒளிகொண்டு
வாழ்வின் விடியலுக்கு
விடியல்வரை நீர் பாய்ச்சும்
எளியோர் திருநாள்
என் பாட்டன் பூட்டன் முதல்
சாதி சனம் சேர்ந்தணைத்து
இயற்கையின் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்ந்துணர்ந்த
வலியோர் பெருநாள்
நெருங்கரும்பை நிற்க வைத்து
கொத்து மஞ்சள் படைசாற்றி
வெண் பானை பொங்கலிட்டு
பல்லில்லா பாட்டன் முதல்
பொக்கைவாய் மழலை வரை
வான் சிரிக்க வாய்விட்டு
பொங்கலோ பொங்கல் சொல்லும்
ஏழைகளின் எழுச்சித் திருநாள்
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
No comments:
Post a Comment