Wednesday, July 08, 2015

நோன்பில் ஒரு நாள்

ரமளான் மாதத்தின் சிறப்பை அனுபவிக்க வேண்டுமென்றால் அது என்னைப் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு விஞ்சி வேறெங்கும் முடியாது. முழுமாதமும் திருவிழாதான். பெரும்பாலான மனிதர்கள், பகலை இரவாக்கி, இரவில் விழித்திருந்து இறை வணக்கம் செய்வதிலும் சரி அல்லது ஷாப்பிங் மால்களில் விடிய விடிய சுற்றுவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.

ஆனால் ரமளான் மாத இறைவணக்கத்தின் உச்சகட்ட சிறப்பை மக்காவிலும், மதினாவிலும் மனம் நிறைந்துப் பார்க்கலாம்.  படைத்தவனை நோக்கி மனம், உடல் இரண்டையும் ஒருமித்து, உலக விஷயங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மரணத்திற்குபின் வாழப்போகும் வாழ்க்கைக்காக இறைவனிடம் மன்னிப்பு தேடும் அழுகுரல்களையும், அல்லது அமைதியில் லயித்து நிற்கும் ஆன்மாக்களையும் அழகுற பார்க்க்கலாம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இரவின் பெரும்பகுதியை தொழுகையிலும், குர் ஆன் ஓதுவதிலும் தமது நேரத்தை செலவிடுவதைப் பார்ப்பவர்களின் இறை நம்பிக்கை அதிகமாகும். மக்கா மதினா இமாம்களின் ஓதும் அழகே தனி.  அதை அனுப்வித்துக் கேட்க வேண்டும்.  அவர்களின் பின்னால் நின்றும் தொழும் பாக்கியம் உள்ளவர்ரகளுக்கு மட்டுமெ தெரியும். அவர்களது உச்சரிப்பும், ஓதும் அழகு மட்டுமல்லா அவ்வப்போது அழவும் வைத்துவிடுவார்கள்.  நரகத்தின் அச்சுறுத்தல்கள், இறைவனின் தன்மை, சொர்க்கத்தின் வர்ணனைகள், வாழ்வின் நோக்கம், மரணத்தை ஞாபகப்படுத்தும் வரிகள் எல்லாம் அவ்வப்பொது இமாம்களை உணர்ச்சி மிகைக்க வைத்து மனிதர்களின் உணர்வுகளை உச்சகட்ட நிலைக்கு கொண்டு சென்று நம்மை நாமே உரசிப் பார்க்க வைத்துவிடும்.   

இறை வணக்கம் என்பது தொழுகையில் மட்டும் இல்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு நற்செயலும் இறைவணக்கம் தான் என்பதை மற்றெல்லா மாதங்களைவிட அதிகமாக பறைசாற்றும் மாதம் ரமளான். இறை வணக்கங்களில் உள்ள எல்லாவும் மனிதன் தனக்காக, தன் ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக செய்கிறான், ஆனால் நோன்பு மட்டும் எனது அடியான் எனக்காக செய்கின்றான், அதனால் என் அடியானுக்கு கணக்கின்றி கொடுப்பது எனது கடமை என்று சொல்கின்றான் இறைவன். ரமளான் மாதத்தின் வாழ்க்கையை முஸ்லீம்கள் வருடம் முழுவதும் வாழ ஆரம்பித்தால், இந்த மக்களை உலகில் எந்த சக்தியாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.

எத்தனையோ அழகான ரமளான் நாட்கள் என்னுள்ளே பசுமையாக குடியிருக்கும்போது இந்த ஒருநாளை நான் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகின்றேன்.  21ம் இரவை மக்காவில் தொழ வேண்டுமென்ற ஆவலுடன் குடும்பத்துடன் எனது பயணம் நேற்று ஐந்து மணிக்குத் தொடங்கியது.  தாமதமான புறப்பாடுதான்.  நோன்பு திறக்கும் நேரத்திற்குள் கஃபா சென்றுவிடவேண்டுமென்று காரில் புறப்பட்ட நான், எதிரில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு கருத்த பெண்மணி (பொதுவாக இவர்கள் மாநகர குப்பைத் தொட்டிகளை கிளறி அதில் இருக்கும் பிளாஸ்டிக், தகரம், லுமினிய குப்பிகள் மற்றும் பாட்டில்களை பொறுக்கி விற்று பிழைப்பு நடத்துபவர்கள். மேலும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள்) வந்து கொண்டிருந்தாள்.  உடனே என் மனைவி, காரில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அரிசிப்பைகளில் ஒன்றை (ஒவ்வொரு கிலோவாக கட்டி வைத்திருந்தாள்) எடுத்து கொடுக்கச் சொன்னாள்.  எனது இரண்டாவது மகன் அப்பெண்மணியை அழைத்து ஒன்றைக் கொடுக்க, அவள் இன்னொன்றும் கேட்க, இன்னொரு பையையும் கொடுத்தான்.  அதற்குள் இன்னொரு கருத்த பெண்மணியும் வர அவளுக்கும் இரண்டு அரிசிப் பைகளை கொடுத்துவிட்டு புறப்பட்டோம்.

போகும் வழியில் சாண்ட்விச் வாங்க்கிக் கொண்டால், இரவு சஹர் நேரச் சாப்பாட்டிற்கு பிரச்சனை இருக்காது என்று இரண்டு மூன்று கடைகளை தேடிச்சென்றும் நாங்கள் எதிர்பார்த்த லஹம் சாண்ட்விச் இல்லாததால், பார்த்துக் கொள்ளலாம் என்று ஏறக்குறைய ஐந்தரை மணிக்குத்தான் ஜெத்தாவை விட்டு புறப்பட முடிந்தது. வழியில் இரண்டு போலீஸ் செக்பாயிண்டுகளை கடந்து ஒருவழியாக ஆறரை மணிக்கு குதை பார்க்கிங் மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம்.  சவுதி அரசாங்கத்தின் இலவச ஏற்பாடக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தவும், உடனுக்குடன் செல்ல நூற்றுக் கணக்கில் பேருந்துகளும் உள்ள இடம்.  மைதானத்தில் கிட்டத்தட்ட இருபதிற்கு மேற்பட்ட கழிப்பிட வசதிகள், இளைப்பாற இருக்கைகள், வாகனங்களை பாதுகாக்க போலீஸ் ரோந்து, போக்குவரத்தை சீரமைக்க நூற்றுக் கணக்கில் காவலர்கள், அவர்களுக்கு உதவி செய்ய சவுதி ஸ்கவுட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்று திரும்பிய இடமெல்லாம் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குதைப் பார்க்கிங்கிற்கு நுழையும் போதே வழி நெடுக நோன்பு திறப்பதற்கான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  ஒரு ஜூஸ், சீஸ் பிரட், தண்ணீர் பாட்டில், பேரித்தம் பழம், லபன் (தயிர்) ஒரு பாட்டில் என்று ஒரு மனிதன் வயிராற உண்பதற்கான எல்லாம் இருந்தன. வரும் வாகனங்கள் ஒவ்வொன்றையும் நிறுத்தி வாகனத்தின் உள்ளிருப்பவர்கள் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  நானும் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டேன்.  நோன்பு திறப்பதற்கான பதார்த்தங்களை ஏற்கனவே எனது மனைவி தயார் செய்து வைத்திருந்தாலும், அவர்கள் கொடுப்பதை மக்காவின் ஹரத்தினுள் யாருக்காவது  கொடுத்துவிடலாம் என்று வாங்கிக் கொண்டேன்.  ஒருவழியாக ஒரு பார்க்கிங் கிடைக்க காரை நிறுத்திவிட்டு பேருந்து நிற்குமிடத்தை நோக்கி நடந்தோம். 

எனது குடும்பத்தினர் நால்வருக்கும் போக வர பதினாறு ரியால்களுக்கு பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டு பேருந்தை நெருங்கினோம். திரும்ப வருதவற்கான பயணச்சீட்டையும் அங்கேயெ கொடுத்துவிட்டு ஏறினோம்.  ஏறுவதற்கு முன் யாரோ ஒருவர் ஒரு இரண்டு கிலோ மதிப்புள்ள பெரிய பேரித்தம் பழப் பெட்டியை என் மகளின் கையில் கொடுக்க அதையும் வாங்கி சேமித்துக் கொண்டேன்.  புறப்பட்ட பேருந்து சற்று நேரத்தில் ஒரு இடத்தில் நிற்க, இரு இளைஞர்கள் பேருந்தின் உள் இரண்டு அட்டைப் பெட்டிகள் ஏற்றிவிட்டு, அதில் உள்ள உணவுப் பொட்டலங்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பின்னால் வரும் அடுத்தப் பேருந்தை நிறுத்துவதற்கு இறங்கி ஓடினார்கள்.  வேண்டும் வேண்டாமென்று ஆளுக்கொரு உணவுப் பொட்டலம் மீண்டும் பரிமாறப்பட்டது.  அவைகளையும் வாங்கி சேமித்துக் கொண்டேன்.

ஹரத்தின் வாசலில் பேருந்து வந்து நிற்க, இறங்கி நடந்தோம். நடக்கும் வழி நெடுக, மீண்டும் உணவுப் பொட்டலங்கள், லபன் (தயிர்), குளிர் பானங்கள், பழங்கள் என்று பரிமாறப்பட்டன.  யார் இவைகளை கொடுக்கிறார்கள், அவர்கள் பெயரென்ன யாருக்கும் தெரியாது.  கொடுக்கும் பொட்டலங்களிலும் யாரும் தமது பெயரை அச்சடித்துக் கொள்வதுமில்லை. இறைவனுக்காக செய்யும்போது அதன் கணக்கு இறைவனிடத்தில் மட்டுமே பதிந்தால் போதும் என்ற உயரிய இறை அச்சத்தை மட்டும் பார்க்க முடிந்தது. முடிந்தவரை கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு ஹரத்தினுள் நுழையும் போது மணி ஏழை நெருங்கிவிட்டது.  கொண்டு வந்த உணவு பொட்டலங்களை, வயதானவர்கள், குடும்பத்துடன் அமர்ந்திருந்தவர்கள், பிள்ளைகள், நோன்பு திறப்பதற்கு வெறும் தண்ணீரும் பேரித்தம் பழம் மட்டும் வைத்திருந்தவர்களாக பார்த்து எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே கஃபாவின் உள்ளரங்கை நெருங்கினொம்.

ஹரத்தில் ஏறக்குறைய ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கக் கூடும்.  எங்கு பார்த்தாலும் மனிதர்கள்தான், உட்கார இடம் கிடைப்பதுகூட கடினமாக இருந்தது.  நாங்களும் ஒரு இடத்தை தேடிப்பிடித்து அமர்ந்தோம்.  பாங்கு சொல்வதற்காக காத்திருந்தோம்.  விடியுமுன் உணவருந்தி, இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஒரே அச்சத்தில் எதுவும் சாப்பிடாமல் இப்போது நோன்பு திறக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் மனிதர்களில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். 

உலகமெங்கிலும் என்னைப்போல் கோடான கோடி முஸ்லீம்கள் பாங்கின் ஓசைக்காக காத்திருப்பதை நினைத்துப் பார்த்தேன்.  எல்லோருடைய எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும், இறைவா! உனக்காக நோன்பு நோற்றென், ஏற்றுக் கொள் இறைவா! தெரிந்தும் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்துவிடு இறைவா! எனது பெற்றோர்களுக்கு மன்னிப்பு வழங்கு இறைவா! எனது வருங்கால சந்ததியர்களை நல்லவர்களாகவும், உனக்குப் பிடித்தவர்களாகவும் வாழ்த்வதற்கு வழிகாட்டு இறைவா! உன்னையே வணங்குகின்றோம், உன்னிடத்தில் மட்டுமெ உதவி தேடுகின்றொம் என்ற பிரார்த்தனைகளை மனதில் சுமந்தவனாக காத்திருந்தேன்.

பகலிருந்து இரவு பிரிந்தது.  சூரியன் எங்கோ தொலைந்துக் கொண்டிருந்தான்.  தினந்தோறும் நிகழும் அதியம், பகல் இரவு மாற்றம் ஆயத்தமானது.  இறைவனின் அத்தாட்சியாக நமது கண் முன்னே நிகழ்வதை புரிந்துக் கொள்ள முடியாமல் இறைவனை அலட்சியப்படுத்தும் இறை மறுப்பாளர்களை நினைத்துப் பார்த்தேன்.  கஃபாவின் பாங்கொலி முழங்கியது.  இன்றைய நோன்பு முடிவிற்கு வந்தது. அருகில் அமர்ந்திருக்கும் தெரியாத மனிதர்களிடம் ஒருவருக் கொருவர் இருப்பதை பகிர்ந்து உண்டோம். மனிதர்கள் மனிதர்களாகத் தெரிந்தார்கள்.  இலக்கு ஒன்றாக இருக்கும்போது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது,  அங்கு ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்தால் இலக்கை எட்டலாம் என்ற உதாரணம் அங்கு அரங்கேறியதைக் கண்டேன். அதிலும் இலக்கு இறைவனை நோக்கியதாக இருந்தால் வெற்றி எல்லோருக்கும் கிடைக்கும்.  இலக்கு மாறுபடும் பட்சத்தில், அவரவர்களின் இலக்குதான் சிறந்ததென்று மனிதர்கள் மாறுபடுகிறார்கள். மாறுபடுவதும் மட்டுமல்ல மனித வர்க்கங்களை கூறு போட்டு மனிதத்தை புதைத்தும் விடுகிறார்கள்.  மனிதம் புதைக்கப்படும் போது எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை.    

ஷெக் சுதைசி அவர்கள் மஃரிப் தொழுகையைத் தலைமையேற்று நடத்தினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய தலைமையில் தொழும் சந்தர்ப்பம் கிடைத்தது.  தொழுகை முடிந்து, மதாப் பகுதியில் கஃபாவின் மெற்கு பகுதியில் ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்து கொண்டுவந்த தேயிலை நீர் பருகினொம்.  எகிப்து நாட்டைச் சேர்ந்த வயதான மனிதர் ஒருவரும் எங்களுடன் தேநீர் பருக, இரவு மற்றும் தராவீஹ் தொழுகைக்கு மனம் தயரானது.

1987ல் முதன் முதலாக கஃபாவில் தராவீஹ் தொழுதேன். ஷெக் சுதைசி மற்றும் ஷெக் அப்துல்லா ஜாபர் அவர்கள் இருவரும் தலைமையேற்று நடத்துவார்கள்.  கஃபா அப்போது முற்றிலும் மாறுபட்ட உள்ளமைப்புகள் கொண்ட வளாகம்.  கூட்டமும் அதிகமிருக்காது.  மிகவும் ரசித்து ஆனந்தப்பட்டு தொழுதோம்.  அன்றைய அனுபவத்தில் தொழுகையில் மனம் ஈடுபட சுற்றுப்புற சூழலின் அமைதி அவசிமாக இருந்தது.  இப்போது சூழலின் தன்மை முக்கியமில்லை.  அன்றைக்கு நான் கேட்ட அனைத்து வேண்டுதல்களும் எனக்கு கிடைத்துவிட்டது.  இப்போதும் ஒரு முக்கியமான வேண்டுதலுடன் வாழ்வின் திருப்புமுனையாக அமைய வேண்டுமென்று இறைவனிடம் என்னை சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன்.

இஷாவின் தொழுகை அறிவிக்கப்பட்டு, ஷெக் சாலிஹ் அல் தாலிப் கணீரென்ற குரலில் எல்லோரின் மனதையும் இறை சிந்தனையை நோக்கி இழுத்தார்.  தொழுகை முடிவில் ஷெக் சுதைசி அவர்கள், லைலத்துல் கதிரின் மான்பையும், ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுவதின் அவசியத்தை ஹதீசின் மூலமாக விளக்கமளித்தார்.  தனது உரையில் சவுதி மன்னரின் சேவைகளையும் அவ்வப்போது சேர்த்துக் கொண்டார்.  பல ஆண்டுகளுக்குப்பிறகு, ஹரத்தில் சவுதி வாழ் மக்கள் அதிகமாக கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது.  வெளிநாடுகளிலிருந்து வரும் உம்ரா பயணிகள் குறைவாக இருந்ததுதான் பெரும் காரணம்.

ஷெக் அப்துல்லா ஜொஹனி முதல் பத்து தொழுகையையும், ஷெக் மாஹர் இரண்டாவது பத்து தொழுகையும் தலைமையேற்று நடத்தினார்கள். பதினொன்று பதினைந்திற்கு முடிவுற்ற தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து, யாரோ கொடுத்த பேரித்தம் பழத்தை எனது மகன் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகாமையில் எலோருக்கும் பகிரிந்து கொடுக்க மீண்டும் ஒரு தேநீரை அருந்திவிட்டு கியாமுல்லைல் தொழுகைக்கு தயாரனோம்.

ஷெக் ஷுரைம் அவர்களும் அவரைத் தொடர்ந்து ஷெக் சுதைசி அவர்களும் தலைமையேற்று தொழுகை வைத்தார்கள்.  ஷெக் அப்துல்லா ஜாபருக்கு பிறகு ஷெக் ஷுரைம் அவர்கள் சுதைசி அவர்களுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக தொழுகை வைத்து வருகிறார். இவ்விருவர்களின் ஓதுதலில் தொழும்போது ஒவ்வொருவரையும் உலக சிந்தனைகளிலிருந்து விடுவித்து இறை சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றலை இறைவன் வழங்கியிருக்கிறான்.

இரண்டு முப்பதிற்கு தொழுகை முடிந்து, குடும்பத்துடன் புறப்பட்ட நான், குதை பார்க்கிங்கிற்கு முடிந்தவரை வேகமாக சென்று சேரவேண்டுமென்று எத்தனித்து பேருந்து நிற்குமிடத்தை நோக்கி நடந்தேன்.  முன் கூட்டியே பயணச்சீட்டு வாங்கிவிட்டதால், நேராகச் சென்று பேருந்தில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான்.  சீட்டு வாங்கதவர்கள் கூட பயணம் செய்யலாம், யாரும் கேட்கப் போவதில்லை என்றாலும், குதை பார்க்கிங்கிற்கு அநாவசியமாக யாரும் பயணம் செய்ய மாட்டார்கள் என்று எந்த பரிசோதனையுமில்லை.  பேருந்து நிர்வாகத்திற்கு மனிதர்கள் மேல்தான் எத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யம் என்னவென்றால், மீண்டும் பேருந்து நிலைய பாதைகளில், சஹர் நேரச் சாப்பாடு பொட்டலங்கள் பரிமாறப்பட்டன.  இரண்டு வேன்களிலிருந்து கை நிறைய அள்ளிக் கொடுத்த காட்சி மறக்க முடியவில்லை.  எனக்கும் நான்கு பொட்டலங்கள் கிடைத்தது.  அரபி மந்தி சோறும் கறியும் கொண்ட பொட்டலம்.  ஒரு மனிதன் நன்றாக உண்ணலாம்.  இதை யார் கொடுக்கிறார்கள் என்று கேட்டேன்.  யாரோ ஒரு பெரும் தொழில் வர்த்தகர் கொடுக்கிறார், ஆனால் பெயர் தெரியவில்லை என்று சொல்ல, சுபுஹானல்லாஹ், இறைவன் தூய்மையானவன், இச்செயலை செய்யும் அந்த பெரிய மனிதன் இன்னும் அதிகமதிகம் செய்ய இறைவன் அருள் செய்யட்டும், இதை வாங்கிய நானும் உலகத்தின் ஏதாவதொரு இன்னொரு மூலையில் என்னால் இயன்றதை செய்ய இறைவன் எனக்கும் அருள் செய்யட்டும் என்று பிரார்த்தித்தவனாக நடந்தேன்.

இன்றைய இரவுத் தொழுகையில், ஷெக் சுதைசி அவர்கள் தொழுகை வைக்கும் போது இபுராஹீம் நபியவர்கள் மக்காவில் செய்த பிரார்த்தனையை, ஓதினார்கள், அந்த வசனம்:

“இந்த பட்டணத்தை பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு பலவகை கனி வர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக!

கஃபாவில் யாரும் பசியுடம் இந்த இரவை முடிக்கப் போவதில்லை என்று மட்டும் உறுதி.  எங்கிருந்தோ வந்தன, யாரோ விநியோகின்றனர், என்னை போன்றவர்கள் அதை வாங்கி இன்னொரு புறத்தில் கொடுத்துவிட்டு போகின்றனர்.  உணவளிப்பவன் நான்தான் என்று இறைவன் சொல்கின்றான்.  அதை எனக்கு மட்டுதான் என்று வாங்கி தனது தேவைகளுக்கு அதிகமானதை மறைத்து வைக்கும்போது எங்கோ யாரோ உணவின்றி பசியில் வாடுகின்றான்.  வழங்கப்படுகின்ற ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகின்றனர்.  மனிதர்கள் பேராசையில் அடுத்தவர்களுக்கு சேர வேண்டியதையும் சேர்த்து தான் மட்டும் அனுபவிக்கின்றனரா அல்லது இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்கின்றனரா என்ற சோதனை வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் நிகழ்கின்றது. அவன் இறைவனை நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் நடக்கின்றது.  நடகின்ற வழியில் மூன்று பேரித்தம் பொட்டலம் தரையில் கிடந்தது. எடுத்த நான் அடுத்த நிமிடத்தில் எதிரில் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பெண்மணி ஒருவரிடம் கொடுத்தேன்.  மகிழ்வுடன் பெற்றுக் கொண்டாள்.

நான் ஒரு காரணி, காரணம் இறைவனிடத்தில் உள்ளது. எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் உள்ளது.  எதுவும் எதிர்பாரமல் நிகழ்வதில்லை.  எல்லாம் ஒரு காரணத்துடன்தான் நடக்கின்றன. அது என்ன, எப்படி என்று விபரம் எல்லா நேரத்திலும் நமக்குத் தெரிவதில்லை. அதை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற தேடுதலில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நிகழும் சோதனைகளை புரிந்து கொள்ளாமல் தோற்றுக் கொண்டிருக்கின்றோம். சாதாரணமாக நமக்கு நடக்கும் சிறுசிறு செயல்களில் கவனம் செலுத்தாமல் எங்கே ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறொம். 

வீட்டைவிட்டு வெளியேறும் போது கொடுக்கத் தொடங்கினேன்.  கொடுத்ததைவிட பன்மடங்காக அன்றைய தினத்திலேயெ இறைவன் எனக்கு திருப்பிக் கொடுத்துவிட்டான். என்னுடைய வணக்கங்கள் இறைவனை ஒரு துளியும் உயர்த்தப் போவதில்லை.  நான் இறைவனை வணங்காவிட்டால் இறைவனின் தகுதியில் ஒரு அணுகூட குறையப் போவதில்லை.

என் வாழ்வின் திருப்புமுனையாக நான் கேட்ட வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொண்டான்.  உதவி செய் இறைவா, நான் வெற்றி பெற வேண்டும்.  உன்னை திருப்தி செய்தவனாக, நானும் திருப்தி கொண்டவனாக உன்னிடத்தில் திரும்ப வேண்டும்.
    

No comments: