Thursday, March 27, 2014

ஏமாறும் தமிழகம்

ஒரு முறை ஏமாறினால் அது இயல்பு.  தொடர்ந்து ஏமாறினால் அதன் பெயர் முட்டாள்தனம்.  தமிழக மக்களை அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.  அறிவை குத்தகைக்கு கொடுத்துவிட்டு உணர்ச்சிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வாழும் தமிழக மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகள் ஒன்றும் அல்லல்பட தேவையில்லை.

தமிழனின் வீரம், மானம், அறிவு மற்றும் திறமைகள் அனைத்தையும் உணர்ச்சிகளுக்கு இரையாக்கிவிட்டு தற்போது இட்டிலிக்கும் தோசைக்கும்; வடைக்கும் சாம்பாருக்கும்; ஆட்டிற்கும் மாட்டிற்கும்; ஆட்டுகல்லிற்கும் நூறுநாள் வேலைக்கும் அடிமைப்பட்டு யுத்துபோன சமுதாயமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

இமயத்தில் கொடிநாட்டியவனின் மரபிற்கு சொந்தக்காரர்கள், கடாரம் கொண்டானின் பரம்பரையில் வந்த தமிழர்கள், கங்கை கொண்டானின் உடன் பிறப்புகள், பாறைகளில் சிலைவடித்த மாமல்லனின் உற்றார்கள், மானம் காக்க வடக்கிருந்து உயிர்நீத்தவனின் வாரிசுகள், உலகப் பொதுமறையான திருக்குறள் படைத்தவனின் உறவினர்களான நாம் இப்போது நம்மால் வாக்களித்து அரசுக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்த நமது அரசியல் சேவகர்களை, எஜமானர்களாக மாற்றி அவர்களிடம் கையேந்தி நிற்கும் பரிதாபத் தமிழர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

அரசியலுக்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் வெள்ளித்திரையில் வீரம் பேசியவர்களை எல்லாம் கண்டு கைகொட்டி ஆர்ப்பரித்து சிற்றின்ப போதையில் நம்மை மட்டுமல்லாமல், நமது சந்ததிகளையும் அடிமையாக்கிவிட்ட நாற்சந்திக்கு சொந்தக்காரர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

எதை இழந்தோம், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தெரியாமல் சுயமரியாதை இழந்து மானம் கெட்ட வாழ்க்கையை வாழ்ந்துக் வருகின்றொம்.  ஒரு கலாச்சரத்தை, ஒரு சமுதாயத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால் முதலில் அம்மனிதனின் மொழியை சின்னபின்னா படுத்த வேண்டும்.  அதைத்தான் இந்த தமிழகம் தற்போது அனுபவித்து வருகின்றது.  
“ஐந்துதலை பாம்பெண்பான் அப்பன், ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார், நெடுங்காலம் பகைத்திடுவார்” என்ற பாரதியின் பாடலுக்கிணங்க நமது இயல்பில் ஊரிப்போன தற்பெருமையையும், ஆணவத்தையும் பயன்படுத்திக் கொண்டு தமிழனின் எதிரிகளான, தமிழால் வயிறு வளர்க்கும் தமிழக அரசியல் வித்தர்கள்களிடம் விலைபோனது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  தமிழர்களை ஒழிக்க தமிழர்களே பொதும்.  

அரசியல் என்றால் அசிங்கம்தான் என்று அசிங்கத்தையே கோட்டையாக்கி அதனுள் பிரவேசிக்கும் உரிமை சூடு சொரணை இல்லாத மானம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு மட்டுமெ என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள் நமது அரசியல் வாதிகள்.  இறை சேவையான அரசியலை வியாபரச் சேவையாக மாற்றி வாக்கு வங்கிகளை விலைக்கு விற்று கூட்டணி எனும் பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த அரசியல் வாதிகளின் கைகளில் நமது தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்துவிட்டு எத்தனை நாளைக்குத்தான் நாம் போலி வாழ்க்கை வாழப்போகின்றொம்.

தவறாகத் தீர்ப்பளித்து விட்டோம் என்ற காரணத்தினால் சபையில் உயிர்நீத்த பாண்டியனின் மரபில் வந்தவர்கள் நாம்.  முல்லைக்கு தேர் கொடுத்த சோழனின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.  அண்ணன் இருக்க தம்பிக்கு அரசுக் கட்டிலா என்று ஆவேசத்துடன் அரசியலை துறந்த சேரனின் உறவுக்காரர்கள் நாம்.  யாசகம் கேட்கப் பிறந்தவர்களல்ல நாம். 

தமிழர்களை காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கும் ஊழலுக்கும் நாற்பதாண்டு கால நெருக்கம்.  தன் மீது உள்ள நீதிமன்ற விசாரனையை சந்திக்க முடியாமால் தமிழர்களை பிச்சைக்காரர்களாகவும் குடிகாரர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்குகும் மாண்புமிகு அம்மா.  என்ன பேசுகிறோம் என்ற நிதானமில்லாமல் பேசிக் கொண்டிருக்கும் விஜயகாந்த். வாஜ்பாய் ஆட்சியில் தன்னை உள்ளே வைத்துவிட்டு ஆட்சிப் பதவியை அனுபவித்த தனது சகாக்களையும் பிஜெபியையும் மறந்துவிட்டு கூட்டணியின் பெயரில் முரண்படாக பேசிக்கொண்டிருக்கும் வைகோ. தமிழனுக்கு ஒரு புது அர்த்தத்தை மேடை தோறும் முழங்கியும், இல்லாததை இருப்பதாக சொல்லிக் கொண்டும், பொய்களை படிக்கட்டாக மாற்றி பதவியேறத் துடிக்கும் மோடியின் கட்சி (பிஜெபி என்ற பெயர் எப்போதோ போய்விட்டது).  பழமைக்கும் புதுமைக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு மக்களின் எதார்த்த நிலையை எதிர்கொள்ள முடியாமல் முரண்பட்டு நிற்கும் காங்கிரஸ்.  இன்னும் பூர்ஷ்வாக்களையும், லெனினையும், மார்க்ஸையும் பேசிக்கொண்டு மக்களின் அன்றாட பிரச்சனைகளை விட்டு தூரமாகிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.  எல்லா கட்சிகளும் பிற்போக்கு கொள்கையில் அல்லது மக்களைவிட்டு தூர விலகிக் கொண்டிருக்கின்றன.  இறைவனுக்குச் செய்யும் மிக உயரியச் சேவைதான் அரசியல் சேவை என்பதை முற்றிலும் மறந்துவிட்டன.      

நமக்குத் தேவை நல்லாட்சி.  மக்களின் வரிப்பணத்தை மக்களுக்காக செல்வு செய்ய நல்ல அரசாங்கம் தேவை.  நல்ல அரசாங்கத்தை நாம்தான் தேர்வு செய்ய முடியும், செய்ய வேண்டும்.  அதற்கு முதல் கட்டமாக, இருக்கின்ற எல்ல அரசியல் வாதிகளையும் நாம் நிராகரிக்க வேண்டும். 66 வருடங்களாக அனுபவித்தது போதும்.  அரசியலை சாக்கடையாக மாற்றிய அரசியல் வாதிகளை மாற்றதவரை சாக்கடைகளை ஒழிக்க முடியாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.  குப்பைகளை மட்டும் எத்தனை நாட்கள்தான் பெருக்கிக் கொண்டிருக்க முடியும்? குப்பை போடுபவர்களை ஒழித்தால்தான் குப்பைகள் இல்லாத நாட்டை உருவாக்க முடியும். அதற்கு ஓரே வழி, ஆம் ஆத்மி இயக்கத்தில் நம்மையும் நாம் இணைத்துக் கொள்வதுதான்.  

ஆம் ஆத்மி ஒரு கட்சியல்ல, அது ஒரு இயக்கம்.  அந்த இயக்கத்தின் குறிக்கோள், சாமனிய மனிதன் மானத்துடனும், மரியாதையுடனும், யாரிடத்திலும் கையேந்தி நிற்காமல் தன்னுடைய உரிமைகளை, உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.  சாமனிய மனிதனின் தேவைகள் ஒரு போதும் நிறைவேற்ற முடியாத கடினமானவைகள் அல்ல.  அதைச் செய்வதற்கு அரசாங்கம் ஒன்றும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் போக வேண்டியதில்லை.  இடைத்தரகர்களாக மாறிவிட்ட இன்றைய அரசியல் வாதிகளை ஓரங்கட்டினால் போதும்.  அரசு மக்களரசாக மாறிவிடும்.  இன்றைய அரசியல் குப்பைகளை ஓரங்கட்ட நமக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இந்த மக்களவைத் தேர்தல்.  

இந்தியா ஒன்றும் பொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லவில்லை.  எல்லா வளங்களும் நம்மிடம் உள்ளது.  ஆனால் அவைகளை முறையாக கையாளப்பட வேண்டுமென்றால், நல்லவர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள், மக்களுக்காக உழைக்கத் தயாராக இருப்பவர்களை தேர்தெடுத்து அனுப்புவது அவசியம். நல்லவர்கள் ஒன்று கூடினால் அங்கே நன்மை மட்டுமே மோலோங்கி நிற்கும், தீயவர்களை அனுப்பினால் அங்கு தீமைதான் ஆட்சி செய்யும்.  நிலையான ஆட்சி வேண்டுமென்றால், நல்லவர்களை நாம் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.

நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி இயக்கம் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.  ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் பிரதிநிதிகளாக வெற்றி பெரும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.  மாபெரும் சுதந்திர மாற்றத்திற்கு வித்தாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.  நமது வாக்குகள் ஒவ்வொன்றும், அரசியல் வாதிகளின் தலைகளில் ‘மாறுங்கள், இல்லெயன்றால் மாற்றுவோம்’ என்று ஒலிக்க வேண்டும்.  ஏமாறியது போதும் தமிழர்களே!  எழுந்திருங்கள்!  வீழ்ந்தது நாமக இருக்க வேண்டாம்!  அநீதத்தை இழைப்பவர்களும், அதற்கு துணைபோனவர்களும் வீழட்டும்.  வீழ்வது அநீதமாக இருக்கட்டும்.  வாழ்க தமிழகம்!  வாழ்க இந்தியா!       


No comments: