Tuesday, July 21, 2020

பேசிக் கொண்டே இருப்பேன்.

அறையில் இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் இருள் விழுங்கிக் கொண்டிருந்தது. உயிரினங்கள் எல்லாம் ஒடுங்கிக் கொண்டிருந்தன.  இரவின் சாரலில் எழுந்த மன இச்சைகள் உடலின் தேவையை முன்னிருத்தி  மங்கையுடன் புணரும் மகிழ்ச்சிக்காக ஆன்மாவிடம் அனுமதிக் கேட்டு போராடிக் கொண்டிருந்தது.

இரவின் அமைதியில் இறைவனின் சிந்தனையைவிட இரண்டு நிமிட உடலின் தேவையா உனக்குப் பெரிது என்று ஆன்மா மறுத்துக் கொண்டிருந்தது.

இரண்டுமே தேவைதானே,  வேர்த்துக் கொண்டிருந்தது மனம்.  இரவின் நடுப்பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் வழக்கமான வேளையில 'இது விசாரனை நேரம்' என்ற அறிவிப்புடன் கூடிய மணியோசை மனதை கிழித்து எச்சரித்துவிட்டு சென்றது.

நான் இரட்டை மனிதானேன். என்னுள்ளே எல்லாமும் இரண்டிரண்டாய் உருவெடுத்தது. மனம் சரிபாதியாய் பிளந்து இயல்பும் நடப்பும் ஒரு பக்கமும், விருப்பமும் கொள்கைகளும் மறு பக்கமுமாய் அமர்ந்தன.  மூளையின் முகடுகளெல்லாம் திறந்துவிடப்பட்டு, இருந்ததும், இருப்பதும் மற்றும் இல்லாததும் எல்லாம் விசாரனைக்கு தயாராகி நின்றன. 

விசாரணை தொடங்கியது.

‘இங்கு வந்து எத்தனை காலமாகிறது’

‘ஐம்பது வருடங்கள்’

‘என்ன சாதித்தாய்?’

‘சாதனையா... அப்படி என்றால்?’

‘வெறுப்ப்புடன் பேசாமல் பதிலைச் சொல்’

‘வாழ்வதெ சாதனைதானே’

‘அதில்தான் என்ன கிழித்தாய்?’

‘அதைத்தான் சொன்னேனெ, வாழ்வதே சாதனைதான்’

‘அப்படியா... உன்னிடம் வாழ்வதைத் தவிர வேறு என்ன சாய்ஸ் உள்ளது.

‘மரணம்’

‘நீயாகத் தேடிக் கொள்வாயோ?’

‘நான் ஏன் தேட வேண்டும், அதுதான் தினம் தினம் நடக்கிறதே’

‘உயிரின் மரணத்தை பேசுகிறாயா? அல்லது உணர்வுகளின்..’

‘உயிரின் மரணம் என் கையில் இல்லை’

‘அப்படியா.. நீ எத்தனை முறை மரணமடைந்தாய்?’

‘எப்போதெல்லாம் பயந்தேனோ அப்போதெல்லாம்’

‘வாழ்வே சாதனையென்றாய்’

‘ஆமாம். உருமாறிய உணர்வுகளை எல்லாம் உள்ளப் பட்டறையில் அடித்து சரிசெய்து மீண்டும் வரவழைத்து’

‘மீண்டும் மரணமடைந்தாய்’

‘அதெப்படி சரியாகச் சொன்னாய்’

‘முகத்தைப் பார்த்தாலெ தெரிகிறது’

‘எது? ... அழியாத என் நம்பிக்கை வேர்களையா, அல்லது அழுகிய எனது சிந்தனை குப்பைகளையா?’

‘இரண்டும்தான். சரி இந்த உலகிற்கு ஏன் வந்தாய்?’

‘அனுப்பியவனை தேடுவதற்கு’

‘தேடினாயா?

'தேடிக் கொண்டிருக்கிறேன்'

'உன்னால் முடியவில்லை என்றால்... முடிந்ததைச் சொல்’

‘முடியாது என்று சொல்லாதே!’

‘நீ என்ன சக்தியா?’

‘இல்லை. சக்தியின் துகள்களில் ஒரு பகுதி’

‘தூசுகளின் அங்கம் என்று சொல்’

‘எப்படி வேண்டுமானலும் சொல்லிக் கொள். ஆனால் நானும் சக்தியின் ஒரு அங்கம்தான்’.

‘திமிராகப் பேசாதே. சக்திக்கு நீ அவசியமில்லை, உனக்குத்தான் அது அவசியம்’

‘இரண்டிற்குமெ இரண்டும் அவசியம். ஒன்றில்லாமல் மற்றொன்று வீண்’

‘மீண்டும் திமிராகப் பேசுகிறாய்... பரவாயில்லை. வீண் என்பதை விளக்க முடியுமா?

‘நான் ஒரு நகல். என்னைப்போல் உருவாக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள், இயற்கை படைப்புகளான காடு, மணல், கடல், நீர், நெருப்பு, மரம், செடி, கொடி இன்னும் என்னவெல்லாம் படைக்கப்பட்டுள்ளதோ அவைகளின் ஒருங்கிணைப்புதான் இந்த உலகம். இது அந்த சக்திக்கு அவசியம். எனவே நானும் அவசியம்'   

‘ஆனால் நீ அழிந்துவிடுவாய். சக்தி நிலையானது’.

‘நான் அழிய மாட்டேன்.  உயிர் மரணிக்காது’

‘அறிவு ஜீவி என்ற நினைப்பா?’

‘இருக்கலாம்.’

‘அறிவைக் கொண்டு உண்மையை தொடலாம், நீ தொட்டு விட்டாய். ஆனால் உணரவில்லை.’

'புரிகிறது, உணரவில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். உயிரின் மரணம் உலகிலிருந்து விடுபடும் ஒரு மாற்றம். மாற்றத்தின் முடிவில் அது மீண்டும் வரும். இறந்த உணர்வுகளில் சிறைபட்டு, ஒளிந்த மூளை முகடுகளை திரட்டி, மறைந்த எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். அப்போது நான் சக்தியுடன் உரையாடுவேன்'. 

‘அப்படியென்றால் உனக்கு முடிவே இல்லை என்கிறாயா?'

‘ஆம்.. ஒரு நீண்ட ஓய்விற்குப் பிறகு நான் நானாக வருவேன். அப்போது நாம் இரண்டாக இருக்க விரும்பவில்லை.  நான் ஒருவன்தான். என்னுள்ளெ பிளவுகள் இருக்கக்கூடாது.  இந்த தொல்லை தரும் தினசரி விசாரனையும் இருக்கக்கூடாது.'

‘நினைக்கவே இனிப்பாகத்தான் உள்ளது... ஆனால் இந்த தினசரி விசாரணைதான் உன்னை யார் என்று உனக்குத் தெளிவாக்கும் அறிவுப் பட்டறை. இறுதியாக நீ நீயாக, நம்முள்ளே இந்த பிளவுகள் இல்லாமல் ஒன்றாக வேண்டுமென்றானல் என்னை உன்னிலிருந்து பிரிக்க வேண்டும்.'

ஆம் என்னை நீ முழுதாக இழக்க வேண்டும். அல்லது என்னை நான் அழிக்க வேண்டும். ஒன்று நீ அல்லது நான்’

‘அதைத்தான் சற்று முன் கேட்டேன்... நீ என்ன சாதித்தாய் என்று.  இதைத்தான் சாதிக்க வேண்டும். இரண்டாக, மூன்றாக, இன்னும் பல நேரங்களில் பலவேறாக இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கும் நீ, இங்கே, இந்தப் பிறப்பிலே ஒன்றாக வேண்டும். இங்கே ஒன்றானால்தான் நீண்ட ஓய்விற்குபின் நீ நீயாக ஒற்றை மனிதனாய் விழிப்பாய். இல்லையென்றால் உன்னை முற்றிலும் இழந்த, சிதைந்த சீர்கெட்ட மனிதனாக எழுவாய்.

“எல்லா மனிதர்களும் மரணித்தவர்களே, அறிவுடையவர்களைத் தவிர்த்து. அறிவுடையவர்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்கிறார்கள், நற் செயல்கள் செய்பவர்களைத் தவிர்த்து. நற்செயல்கள் செய்பவர்கள் அனைவரும் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், உண்மையானவர்களைத் தவிர்த்து. உண்மையானவர்கள் அனைவரும் எந்நேரமும் கவலையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்” – இமாம் ஷாஃபியின் அறிவுரை மனதில் எல்லா மூலைகளிலும் எதிரொலித்தது.

விழிகளில் நீர் திரண்டன. இருளின் அமைதியில் மனம் அழுதது. சுகமான அழுகை. மனதின் கசடுகள் கண்ணீராய் வெளியேறியது. 

மௌனம் ஆட்கொள்ள மனம் அமைதியானது. நான் நானாக வேண்டும். அகமும் புறமும் ஒன்றாக வேண்டும்.  இருளிலும் வெளிச்சத்திலும் ஒரே மனிதனாக வாழ வேண்டும். என்னுள்ளெ தினமும் புதிது புதிதாய உருவாகும் பிளவுகளை நிறுத்த வேண்டும். உள்ளும் புறமும் ஒன்றை மட்டுமெ நினைக்கும், செய்யும் மனிதனாக வேண்டும். 

நான் நானாகும் முதல் முயற்சியில் ஆரம்பமாய்... என்னுள்ளெ இறைவன் கேட்டான்.  'எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?  நீர்ப்படலங்கள் விழிமணிகளை சுத்தம் செய்ய மனம் வெளிச்சத்தை தேடி இறைவனின் வார்த்தைகளுக்குள் சங்கமித்தது.

'நான் எங்கும் போகவில்லை இறைவா! பலவீனங்களின் கூடாராமாக என்னைப் படைத்து என்னிச்சைப்படி வாழும் பூமியையும் கொடுத்திருக்கிறாய். எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போல இருமாந்து இருக்கிறேன். ஆனால் என் இமை நொடிகள்கூட உனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.'

பேசுகிறேன். பேசிக் கொண்டே இருக்கிறேன். அவனும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.

இறைவனிடம் உரையாட மரணிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருநாள் அவனது குரலும் எனக்குக் கேட்கும்.

அதுவரை பேசிக் கொண்டே இருப்பேன்.