பொதுவாக வம் வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவ்வாறில்லை.
நம்மால் உருவாக்கப்பட்ட அல்லது விரும்பி ஏற்றுக் கொண்ட அல்லது நம்மீது திணிக்கப்பட்ட பழக்கங்களின் வழக்கங்களுக்குள் சிக்கிக் கொண்டு நடந்தேறும் அனிச்சை செயல்களின் குழம்பு தான் நம் வாழ்க்கை.
இதைத்தான் கர்ம வினைகள் என்ற கோட்பாடுகளுக்குள் உள்ளடக்கி இந்த வாழ்க்கையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் பிறப்பிற்கு முன்; இறப்பிற்கு பின் என்று இரண்டு தெரியாத மற்றும் புரியாத நிலைகளையும் சேர்த்து இரண்டிற்கும் பதில் கிடைத்ததாக நினைத்து வாழ்ந்து வருகிறோம்.
பிறப்பு, இறப்பு மற்றும் கர்ம வினைகளைப் பற்றி சில பெரிய மதங்கள் என்ன சொல்கின்றன?
வேதாந்த மார்க்கம் என்று அறியப்படும் சனாதன மார்க்கத்தின் பார்வையில் எல்லா விதமான செயல்களுக்கும் அதன் தன்மை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தொடர் மற்றும் எதிர்வினைகள் இருக்கும்.
அவைகளில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உண்டு. அவைகள் உடனே கிடைப்பதும் உண்டு அல்லது காலம் தாழ்ந்து கிடைப்பதும் உண்டு. அவைகளில் மனிதர்களுக்கு சில வெற்றிகளும் உண்டு தோல்விகளாகவும் உண்டு. தொடர் மற்றும் எதிர்வினைகளால் ஏற்படும் வெற்றி அல்லது தோல்விகள்; நன்மை அல்லது தீமைகள்தான் மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கான கிரியூக்கிகள். மனித வாழ்க்கை ஒரு தொடர். ஒவ்வொரு முடிவிலும் ஒரு ஆரம்பம் உண்டு. மரணம் ஒரு முடிவாக இருந்தாலும் அதிலும் ஒரு ஆரம்பம் உண்டு. இவைகள் அனைத்தும் கர்ம வினைகளின் பலன்கள். கர்ம வினைகள் பல ஜென்மங்களாக தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
இவைகளை மனிதர்கள் அனுபவித்துத்தான் தீரவேண்டும். நன்மைகளின் அளவிற்கு ஏற்ப மறுபிறப்பில் அவனது தரம் உயரவும் அல்லது தாழவும் செய்கின்றன. வாழ்க்கை முழுவதும் நன்மைகளாகவே செய்யும் போது மனிதர்களது பிறவித் தொடர் முற்று பெற்று அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு முக்தி நிலை அடைகின்றார்கள்.வாழ்க்கை முழுவதும் நன்மைகளாகவே இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் போராடியாக வேண்டும். போராட்டம் என்பது உலக வாழ்க்கையில் உள்ள அம்சங்கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து அதில் கிடைக்கும் அறிவு மற்றும் அனுபவங்களை படித்தரங்களாக மாற்றி அதில்தான் முக்திக்கான உயர்வைத் தேட வேண்டும். அல்லது வாழ்க்கையைத் துறந்து, உலக வாழ்க்கை நிராகரிப்பை கொள்கையாகக் கொண்டு வெற்றிடங்களில் பயணம் செய்து இறைவனை புரிந்து, அவனது ரகசியங்களை அறிந்து, அதற்கேற்ப உடல் மனம் இரண்டையும் வருத்தி, இறைவனை திருப்தி செய்து முக்தியை தேடிக்கொண்டால், பிறவித்தொடரை நிறுத்திக் கொள்ளலாம்.எனவே முக்தி அடைவதுதான் வாழ்வின் குறிக்கோள்.
முக்தி அடையும் வரை கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.
இறை நிராகரிப்பு அல்லது மறுப்பாளர்களின் பார்வையில் படைப்பினங்களில் முந்தியவைகள், இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவைகள் அல்லது பிறக்க இருப்பவைகள் அனைத்தும் இயற்கையில், இயற்கை மாற்றங்களால் மற்றும் பரிணாம வளர்ச்சிகளால் தற்செயலாக உருவானவைகள்.
இயற்கையில், இயற்கையாக ஏற்பட்ட அற்புதமான தற்செயல் மனித வர்க்கம். மனித வர்க்கம் பரிணாமங்களின் வளர்ச்சிகளில் இன்றுவரை ஏற்பட்ட மாற்றங்களில் முதல்நிலை வகிக்கின்றது.
மனிதர்களின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியைப் பற்றியெல்லாம் கணிக்க முடியாது அல்லது கணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் எல்லாமே தற்செயலாக ஏற்படுபவைகள். தற்செயலாகவே ஒரு நாள் மனிதனும் வேறொரு நிலைக்கு மாறிச் செல்வான்.
தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனித வர்க்கத்தின் சக்திக்கேற்ப செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளமுடியும். பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்வதுதான் தீர்வுகளின் முதல் நிலை. அதையும் தாண்டி ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மனிதன் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. காரணம் பிரச்சனைகளும் இயற்கையில் உருவான அமைப்புகள் தான். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் இலகுவாகவும் வாழலாம்.பூர்வ ஜென்மம் அல்லது மறுபிறப்பு என்றெல்லாம் எதுவும் கிடையாது. மனிதன் இயலாமையை மறைக்கவும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளவும், தோல்விகளை சமாளித்துக் கொள்ளவும், தற்பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் பூர்வஜென்மம், மறுபிறப்பு என்ற கற்பனையான ஒன்றை ஏற்படுத்தி திருப்தி அடைந்துக் கொள்கின்றான். அதற்கு விதி என்றும், விதி விட்ட வழி என்றும், கடவுளின் பிராப்தம் என்றும் பெயர் ஏற்படுத்தி இல்லாத ஒன்றின் மேல் பழிபோட்டுவிட்டு தப்பித்துக் கொண்டிருக்கின்றான். இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து வாழ்க்கையை சுமையாக்கிக் கொள்ளாதே. நேற்று என்பது மறைந்துவிட்டது, நாளை என்பது நிச்சயமில்லாத ஒன்று, இன்று என்பதே நிதர்சனம். இருக்கின்ற நிமிடங்களை தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் திருப்தி ஏற்படும் வகையில் வாழ்ந்துக் கொள்.
இஸ்லாமிய, யூத மற்றும் கிருத்துவ மார்க்கங்களின் பார்வையில் கர்மம், தொடர் மற்றும் எதிர்வினைகள் என்பதெல்லாம் உண்மைதான். விதி என்பதும் உண்மையே! எல்லா செயல்களுக்கும் பலன்கள் இருக்கின்றன, அவைகள் நன்மைகளாகவும் அல்லது தீமைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவைகள் அனைத்தும் இந்த உலக வாழ்க்கையுடன் முடிவுக்கு வருபவைகள். மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவைகள் உடனுக்குடனோ அல்லது தாமதப்பட்டோ அல்லது மறுமையிலோ மனிதர்கள் அடைந்துக் கொள்கின்றனர். மறுபிறப்பு இவ்வுலகில் கிடையாது. உலக வாழ்க்கையை பொறுத்தவரை மனிதர்களுக்கு ஒரு பிறப்பு மட்டுமே.
மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. மனிதன் கண்காணிக்கப் படுகின்றான். அவரவர்களின் செயல்கள், தரம், பொறுப்புகள், வழங்கப்பட்ட அல்லது சம்பாதித்த பொருளாதார மற்றும் வசதிகளுக்கேற்ப, வழங்கப்பட்ட அல்லது சம்பாதித்துக் கொண்ட அதிகாரத்திற்கேற்ப அனைத்தும் செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு மனிதர்கள் விசாரிக்கப்பட இருக்கின்றார்கள். மனிதர்களின் வெளிப்படையான செயல்கள் மட்டுமல்லாமல் அவனது உள்ளத்தில் மறைத்து வைத்தவைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இறப்பிற்குபின் மறுமை நாளில் எழுப்பப்பட்டு கேள்வி கணக்குகள் கேட்கப்பட இருக்கின்றான். அந்த நாளில் மனிதர்கள் உலகில் வாழ்ந்ததை மற்றும் செய்தவைகளைப் பொறுத்து அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையோ அல்லது மேன்மையோ கிடைக்கப்படலாம்.
மனிதப் படைப்புகள் அனைத்தும் இறைவனின் முன்னால் சமமானவைகளே. அறிவு என்பது இறைவனால் உருவாக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரி மனிதர்களின் மூலமாக மனித வர்க்கங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அமானிதம். என்வே இந்த உலக வாழ்க்கை என்பது வெறும் தற்செயலோ அல்லது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் விளைந்தவைகள் அல்ல. படைப்புகள் அனைத்தும் காரண காரியங்களுக்கு உட்பட்டவைகளே.
இயற்கை முதல், புழுக்கள் வரை, கோள்கள் முதல் புழுதிகள் வரை எல்லாமே இறைவனால் படைக்கப் பட்டவைகள். விதிகளின்படிதான் எல்லாம் நிகழ்கின்றன. விதி இறைவனால் வகுப்பட்டது. இறைவன் அருளிய வழியில் வாழ்ந்தால் விதிகளின் அமைப்புகள் எளிதாக இருக்கும். இறைவனுக்கு முரண்பட்டு வாழ்ந்தால் விதிகளின் பாதைகள் கரடு முரடாக இருக்கும். எல்லா படைப்புகளுக்கும் ஒரு கால அளவு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள், தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும், நன்மையானவைகளை அதிகப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். வாழ்க்கையை சரியான புரிதலுடன் இறைவனால் வழங்கப்பட்ட வழிமுறைகளுடன் வாழ்தல் அவசியம்.
முக்தி என்பது வாழ்க்கையை வாழ்ந்து அனுபவங்களை படிகளாக்கி உயர்வதன்மூலமே கிடைக்கும். வாழ்க்கையை வெறுத்து நிராகரித்து வாழ்வதன் மூலம் முக்தி அடைய முடியாது. உலக வாழ்க்கை என்பதை எல்லா மனிதர்களும் சுவைத்து வாழ வேண்டியது நிர்பந்தம். சுக துக்கங்களை அனுபவித்துதான் தீர வேண்டும். உலக வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு அலங்காரமாகவும், சோதனையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் எந்த மனிதனையும் துன்பத்திலோ அல்லது தன்னை வருத்திக் கொண்டு வாழ வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அதைப் புரிந்துக் கொண்டு தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து வாழ்வது அவசியம். மனிதன் மறுமையில் சொர்க்கத்தை ஆசை வைத்து வாழ வேண்டும். இந்த உலக வாழ்க்கையின் மாயையில் சிக்கி மறுமையில் நிரந்தரமாக கிடைக்க இருக்கும் சொர்க்கத்தை இழந்து விடக் கூடாது.
மேலே குறிப்பிட்ட மதக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி நமது அன்றாட சாதாரண செயல்பாடுகள் முதல் அசாதாரண செயல்பாடுகள் வரை எல்லாவற்றிர்க்கும் எதிர் வினைகள் மற்றும் தொடர் வினைகள் இருக்கின்றன. அவைகள் நிகழ்ந்தே தீரும். அதன் நன்மை தீமைகள்; லாப நஷ்டங்களை அனுபவித்தே தீர முடியும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் இவ்வினைகள் நம்மை அதிகம் பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் முழுக்கவும் நிகழ் காலத்தில் மட்டுமே வாழ வேண்டும். அப்போது தான் நாம் எதை எப்படி செய்கிறோம் என்ற சுய விழிப்புணர்வு நம்மிடத்தில் இருக்கும். காரண காரியங்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இல்லையென்றால் நமது வாழ்க்கை ஆட்டோ பைலட் மோடில் (Auto pilot mode) தான் பயணிக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் கொய்யோ முய்யோ என்று கூக்குரலிட்டு கடவுளை திட்டி அல்லது அடுத்தவர்களை குறை சொல்லி அல்லது விதியின்மேல் பழி போட்டு பிரயோசனமில்லை.
அதே நேரம் சில விஷயங்கள் நாம் என்னதான் முயன்றாலும் நமக்கு நடக்காது. இங்குதான் 'விதி' என்ற உண்மையான காஸ்மிக் (cosmic rule) வரையறைக்குள் நாமும் உட்பட்டவர்களே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் நமது செயல்பாடுகளின் தன்மைகள், அதன் மூலம் ஏற்படும் எதிர் மற்றும் தொடர் வினைகள் நம்மை மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
உலகின் பொதுப் பயணத்தில் (cosmic journey) தனிப்பட்ட மனிதர்களின் பயணத்தை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் அதாவது குறைந்த பட்சம் த்
மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நான் வேறுபட்ட முரண்பட்ட மனிதனாக கரடு முரடான வாழ்க்கை பயணத்திற்குள் சிரமப்பட நேரிடும்.